எனக்கு வீரசொர்க்கத்தில் நம்பிக்கை கிடையாது”

110க்கும் மேற்பட்ட தலைப்புகளில் பெரியாரின் எழுத்தும் பேச்சும் இடம் பெற்றுள்ள தொகுதி இது. ஜஸ்டிஸ் கட்சி சட்டசபை தேர்தலிலும் சில உள்ளாட்சி தேர்தல்களிலும் தோல்வியைத் தழுவியதால், சுயமரியாதை இயக்கத் தோழர்கள் சிலர் காங்கிரசில் சேர துடித்த காலத்தில், ஒருவன் “வெற்றி பெற்ற” காங்கிரஸ் என்பதில் இருக்கும் அவமானத்தைவிட “தோற்றுப்போன” ஜஸ்டிஸ் கட்சி என்பதில் இருப்பது அவமானமாகாது பெரியார் இடித்துரைக்கிறார். இத்தொகுதியில் அடங்கியுள்ள “ஜஸ்டிஸ் கட்சியும் சுயமரியாதை இயக்கமும்” என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள பெரியாரின் சொற்பொழிவில்,சுயமரியாதை இயக்கத்தின் மீது சில ஜஸ்டிஸ் கட்சியினர் முன் வைத்த குற்றச்சாட்டு களுக்கு பெரியார் தெளிவாக பதில் அளிக்கிறார். “ஜஸ்டிஸ் கட்சியில் பட்ட துன்பம் கொஞ்சமல்ல. இந்த மாகாணத்திலே எனக்கு மாத்திரம் தான் சி.அய்.டி. தொல்லை. கடிதங்களை உடைத்துப் பார்ப்பது, பத்திரி கையை ஒழிக்க நினைத்து அடிக்கடி ஜாமீன் கேட்பது முதலிய காரி யங்கள் நடக்கின்றன. இவைகள் அக்கட்சியை குறைகூறக் காரணங்க ளாகாது. அக்கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் ஆகியவர்களின் கையாலாகாதத்தனமாகும்” என்று பெரியார் குறிப்பிடுகிறார்.

ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கைகளை உறுதியாக ஆதரிக்கும் பெரியார், அதே நேரத்தில் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களின் சுயநலம் சந்தர்ப்பவாதங்களை வெளிப்படையாக விமர்சிக்கத் தயங்கவில்லை என்பதை அவரது எழுத்து பேச்சுகளில் காண முடிகிறது. புகழ் மாலைகளை சூட்டுவதே ஆதரவு காட்டுவதற்கான அணுகுமுறை என்பதிலிருந்து பெரியார் முற்றிலும் மாறுபட்டு நிற்கிறார்.

“காங்கிரசும் வாலிபர்களும்” என்ற தலையங்கம் காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் போராட்ட வரலாறுகளை சித்தரிக்கிறது.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் “தமிழ்த் திருநாள்” கூட்டத்தில் பெரியார் நிகழ்த்திய தமிழ்மொழி பற்றிய மிகச் சிறப்பான சொற்பொழிவு இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளது. “நான் தமிழ் பேசுவதும் எழுதுவதும் தமிழைக் கொலை புரியும் மாதிரியானாலும் நான் பல பத்திரிகைகள் நடத்துவதும், சுமார் 50, 60 புத்தகங்கள் வெளியிட்டதும் தலைவர் கல்யாணசுந்தர முதலியார் அவர்கள் தமிழ் பாஷையில் “தேச பக்தன்”, “நவசக்தி” முதலிய பத்திரிகைகளின் தொண்டேயாகும்” என்று குறிப்பிடும் பெரியார், “தமிழையும் மதத்தையும் பிரித்துவிட வேண்டும்; தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். கடைசியாக தோழர்களே! தமிழ் முன்னேறும் என்பது பற்றி எனக்கு அறிகுறிகள் தென்பட்டுவிட்டன. அதென்னவென்றால், என்னை இங்கு உள்ளேவிட உங்களுக்கு தைரியம் ஏற்பட்டுவிட்டது ஒன்றே போதுமான ஆதாரமாகும்” என்று குறிப்பிட்டு சொற்பொழிவை முடிக்கிறார்.

திருத்துறைப்பூண்டியில் “தஞ்சை ஜில்லா சுயமரியாதை மாநாட்டில்” பெரியார் நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளது. சுயமரியாதை இயக்கம் பொதுவுடைமை கொள்கையை கைவிட்டு விட்டது என்று குற்றம்சாட்டி, தோழர்கள் ஜீவா, சிங்காரவேலு போன்றோர் இயக்கத்தை விட்டு வெளியேறியதற்கு பெரியார் இந்த சொற்பொழிவில் பதிலளித்துள்ளார். சுயமரியாதை இயக்கம் சந்தித்த அரசின் பல்வேறு அடக்குமுறைகளை பட்டியலிடும் பெரியார், சுயமரியாதைக் கொள்கையிலேயே சமதர்மமும் பொதுவுடைமையும் அடங்கியுள்ளது என்று விளக்குகிறார். “இந்த இயக்கம் எந்த தனிப்பட்ட மனிதனும் வீரனாவதற்கும், வீர சொர்க்கம் போய்ச் சேரவும் ஏற்பட்டதல்ல. எனக்கு வீர சொர்க்கத்தில் நம்பிக்கை கிடையாது” என்று கூறுவதோடு “புகழ் பெறுவதற்கு எவ்வளவு அயோக்கியத்தனம் செய்ய வேண்டுமென்பது நான் நன்றாய் அறிவேன். அத்துறையில் இருந்து பார்த்துவிட்டுத்தான் இந்த “இழிவு” பெறும் வேலைக்கு மனப்பூர்த்தியாகவே வந்தேன்” என்று குறிப்பிடுகிறார்.

தீண்டாமை ஒழிவதற்கு வழி வகுக்கக்கூடிய ஒரே மதம் இஸ்லாம் மதம் மட்டுமே என்று பெரியார் வலியுறுத்துகிறார். எந்த மதத்திலும் நம்பிக்கை இல்லாத ஒருவர் இஸ்லாம் மதத்தை ஆதரிக்கலாமா என்று கூட்டம் ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு, “நான் இஸ்லாம் மதத்தில் தீண்டப்படாதவர்கள் சேர்ந்து கொள்வதை ஆதரிப்பது முஸ்லீம் கடவுள் இந்துக் கடவுள்களைவிட மேலான கடவுள் என்றோ, முஸ்லீம் மோட்சம் இந்து மோட்சத்தைவிட மேலானதென்றோ கருதியில்லை. அவற்றைப் பற்றி எனக்கு நம்பிக்கையுமில்லை; கவலையுமில்லை” என்று பதிலளிக் கிறார். தீண்டாமை ஒழிப்புக்கு மட்டுமல்லாது, தேச விடுதலைக்கும்கூட தாழ்த்தப்பட்ட மக்கள் முஸ்லீம்களாக வேண்டும் என்று வலியுறுத்தும் பெரியார் அதற்கான காரணங்களையும் விளக்குகிறார்.

“ஈ.வெ.ரா. விளக்கம்” எனும் தலைப்பில் பெரியார் தன்னைப் பற்றி எழுதி வெளிவந்துள்ள மற்றொரு தலையங்கம் இவ்வாறு கூறுகிறது. (பெரியார்) காரிய வீரரே தவிர, கொள்கை வீரரல்ல. கொள்கை சொல்பவர்கள் வண்டி வண்டியாக இருக்கிறார்கள். கொள்கைகளைக் கொண்ட புத்தகங்களும் ஏராளமாய் இருக்கின்றன. சிறிது காரியமா வது செய்ய சௌகரியமா யிருந்தால், செய்து விட்டுப் போவதுதான் மேலே ஒழிய, கொள்கைகளை மாத்திரம் சொல்லிவிட்டு ஜெயிலுக்குப் போவது மேலானது ஆகிவிடாது என்ற கருத்தும் கொண்டவர். ஆகவே காரியத்தில் சாத்தியமானதையே எவ்வளவோ எதிர்ப்புக்கும் தொல்லைக்கும் இடையில் செய்ய முயற்சிக்கிறார். இதற்குப் பெயர் கோழை என்றாலும் துரோகம் என்றாலும் அவருக்கு கவலை இல்லை. கோழை என்பது செய்வதற்குச் சவுகரியமுள்ள காரியங்களை விட்டு ஓடுவதேயாகும்; துரோகம் என்பது மக்களுக்குத் தொல்லை கொடுத்து விட்டுச் சுயநலத்துக்காகப் பின்வாங்குவதாகும்” என்று குறிப்பிடுகிறார்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் “மே” தினத்தைக் கொண்டாடுமாறு பெரியார் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

ஜஸ்டிஸ் கட்சியை நீங்கள் ஏன் ஆதரிக்கிறீர்கள் என்று தளவாய்புரத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், பெரியாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பெரியார் “ஜஸ்டிஸ் கட்சியை நான் ஒரு அரசியல் கட்சியாக மதிக்கவில்லை. அது ஒரு சமுதாய சீர்திருத்தக் கட்சியாகும். ஜஸ்டிஸ் கட்சியானது சமூக சுதந்திரத்திற்காகவே ஆட்சி இன்னவிதமாய் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறதே ஒழிய, இன்னார்தான் ஆட்சி புரிய வேண்டும் என்று சொல்லவில்லை” என்று பதிலளிக்கிறார்.

பார்ப்பானும் இருக்கக்கூடாது; தீண்டப்படாதவர்களும் இருக்கக் கூடாது என்று கூறும் பெரியார், பார்ப்பனர்களையும், தீண்டப்படாதவர் என்ற பிரிவையும் ஒழித்து விட்டால், சூத்திரர்கள் தானாக ஒழிந்து விடுவார்கள் என்று கூறுகிறார். “அதுதான் எங்கள் சுயராஜ்யம்; அதுதான் எங்கள் அரசியல்; அதுதான் எங்கள் மூச்சு என்பதை உணருங்கள்” என்று இளைஞர்களுக்கு அழைப்பு விடுகிறார்.

1924 இல் வைக்கத்தில் பெரியார் நடத்திய தீண்டாமை எதிர்ப்புப் போராட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திருவாங்கூர் தேவஸ்தானத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தன. ஈழவ சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் முதன்முதலாக நீதிபதியானார். “தேவதாசி முறை” ஒழிந்தது. கடல்தாண்டி பயணம் செய்த சாதி இந்துக்கள் கோயில்களில் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது. அரசின் ராணுவத்தில் நாயர்கள் மட்டுமே சேர முடியும் என்ற தடை நீங்கியது. எல்லாவற்றுக்கும் மேலாக திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அனைத்து சாலைகளிலும், சத்திரங்களிலும், பள்ளிக்கூடங் களிலும் சாதி, மத வேறுபாடு இன்றி அனைவரும் செல்ல முடியும் என்ற உத்தரவை திருவிதாங்கூர் மகாராசா பிறப்பித்தார்.

இந்து மதத்தை விட்டு வெளியேறுவதற்கு முடிவு செய்த ஈழவர்கள் அதற்காக கொச்சியில் கூட்டிய மாநாட்டில் பெரியாரின் “பிரசங்கம்” இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. “சுயமரியாதை சமூகமாக, மதம் இல்லாமல், ஜாதி இல்லாமல் இருக்கலாம் என்று சிலர் சொல்லுகிறார்கள். தலைவர் அய்யப்பன் (ஈழவர் சமூகத் தலைவர்) அபிப்பிராயமும் அதுவேயாகும். அது சாத்தியமானால் எனக்கும் அதுவே சம்மதம். அது சாத்தியமில்லை என்று காணப்படுவதானால் அதற்கும் தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கூறும் பெரியார், “ஒரு மத வேஷம் பூண்டால்தான் தீண்டாமையும் தெருவில் நடக்காமையும் ஒழிகிறது… அடியோடு தீண்டாமை ஒழிய இஸ்லாம் மத வேஷம் போட்டுக் கொள்வது மேல்” என்று கூறுகிறார்.

குற்றாலத்தில் நடைபெற்ற ஒரு சுயமரியாதை திருமணத்தில் பெரியாரோடு ராஜகோபாலாச்சாரியும் பங்கேற்று மணமக்களைப் பாராட்டிப் பேசிய செய்தி இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. “இத் திருமண முறையை ஆச்சாரியார் ஆதரித்துவிட்டதால், எனக்கு எவ்வளவோ தைரியம் ஏற்பட்டுவிட்டது. இத் திருமண முறைக்கு ஒரு பொது ஆமோதிப்பு ஏற்பட்டுவிட்டது” என்கிறார் பெரியார்.

அதே குற்றாலத்தில் மீண்டும் ஒரு முறை பெரியாரும் ராஜகோபலாச்சாரியும் சந்தித்துப் பேசிய செய்தி பத்திரிகைகளில் பரபரப்பாக வெளி வந்ததைத் தொடர்ந்து சந்திப்பில் என்ன நடந்தது என்பதை விளக்கி பெரியார் எழுதியுள்ள தலையங்கமும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. அதில் ஆச்சாரியாருக்கும் தனக்கும் உள்ள ஆழமான நட்பை மனம் திறந்து பதிவு செய்திருக்கிறார்.

“காங்கிரசாரின் சீர்திருத்த எதிர்ப்பு” என்று பல்வேறு தலையங்கங்களில் பெரியார் குறிப்பிடும் சீர்திருத்தம் என்பது, 1935 ஆம் ஆண்டு பிரிட்டிஷார் கொண்டு வந்த புதிய சீர்திருத்த சட்டத்தையே ஆகும். சக்லத்வாலா மறைவிற்கு “குடி அரசு” இரங்கல் தலையங்கம் தீட்டியுள்ளது.

சக்லத்வாலா குஜராத்திலிருந்து லண்டனில் குடியேறியவர்; சீரிய பொதுவுடைமையாளர்; இங்கிலாந்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்; பெரியாரின் இங்கிலாந்துப் பயணத்தின்போது, பெருந் துணை புரிந்தவர்.

– பதிப்பாளர்

You may also like...