தேச மக்களே உஷார்!

வரப்போகும் அரசியல் சீர்திருத்தம் இந்தியர் விரும்பும் அளவுக்கு முற்போக்கானதாயில்லை; மற்றும் பல குறைபாடுகளும் அதில் அடங்கி யுள்ளன. எனினும் அரசியல் ஞானமுடையவர்கள் அதை ஒப்புக்கொண்டு அனுதாபத்துடன் அமல் நடத்தினால் மக்களுக்குப் பல நன்மைகள் செய்ய முடியுமென்றும் மேற்கொண்டு அதிகப்படியான உரிமைகள் பெற அடிகோலலாமென்றும் அனுபவ ஞானமுடைய அரசியல்வாதிகள் கூறுகிறார்கள். காங்கிரஸ்காரர் மதிப்பைப் பெற்றவரும் அசம்பிளியில் காங்கிரஸ் பெற்ற “வெற்றி மேல் வெற்றி”களுக்கு உதவி புரிந்தவருமான தோழர் ஜின்னாவின் அபிப்பிராயமும் அனேகமாக இதுவேயாகும். ஆனால் பூரண சுயேச்சை வாதிகளும் “கலப்பற்ற தேசபத்தி”யுடையவர் களுமான காங்கிரஸ்காரர்களோ, வரப்போகும் சீர்திருத்தம் வேண்டவே வேண்டாம் என்று கண்ணை மூடிக்கொண்டு கூறுகிறார்கள். அவ்வாறு அவர்கள் கூறுவதற்கு, மாகாண கவர்னர்களுக்கும் வைசிராய்க்கும் அதிகப்படியான விசேஷ அதிகாரங்கள் அளிக்கப்பட்டிருப்பதே காரணமாம். எவ்வளவு திறமையுடைய மந்திரிகளுக்கும் அந்த விசேஷ அதிகாரங்களை மீறி உருப்படியான வேலை செய்யவே முடியாதாம். ஆனால் வரப்போகும் சீர்திருத்தத்தில் அமோகமான விசேஷ அதிகாரங்கள் புகுத்தப்பட்டதற்கு காங்கிரஸ்காரர்களே காரணம் என்று ஸர்.டெஜ் பகதூர் சாப்ரு போன்ற விஷயமறிந்த அநுபவ அறிவாளிகள் கூறுகிறார்கள். அதன் உண்மை நிலை எப்படி இருந்தாலும் சரி; விசேஷ அதிகாரங்கள் அதி பயங்கரமானவை என்பதை காங்கிரஸ்காரர் எல்லாம் ஒப்புக்கொள்ளத்தான் செய்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தோழர் சத்தியமூர்த்தியோ வேறுவிதமாக அபிப்பிராயப்படுகிறார். அவர் இந்திய அரசியல் சட்டத்தை மிக ஜாக்கிரதையாகப் படித்துப் பார்த்தாராம். விசேஷ அதிகாரம் வெறும் ஓலைப்பாம்பாம். அதைக்கொண்டு ஒன்றுமே செய்ய முடியாதாம். சமஷ்டி அரசியல் ஏற்பட முடியாதபடி காங்கிரஸ்காரர் முட்டுக்கட்டை போடுவதைத் தடுக்க அந்த விசேஷ அதிகாரங்களுக்கு சக்தியே இல்லையாம். அப்படியானால் விசேஷ அதிகாரங்களைப் பார்த்து காங்கிரஸ்காரர் ஏக கூச்சல் போடக் காரணம் என்னவென்று சாமானிய ஜனங்கள் கேட்கலாம். இந்தக் கேள்விக்கு விடையளிக்கு முன் வேறொரு பம்பாய் காங்கிரஸ்வாதியான தோழர் கே.எம். முன்ஷி என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம். “எவ்வளவு சக்தி வாய்ந்த தேசீயக் கட்சிக்கும் அரசியல் திட்டத்தை உடைக்க முடியாது. அதாவது சர்க்காரைத் திக்குமுக்காடச் செய்யவோ அரசியல் ஆர்ப்பாட்டமான மாறுதல்கள் செய்யவோ முடியாது. அந்தக் கட்சி ஆர்ப்பாட்ட மாறுதல்கள் செய்யும் ஆசையை அடக்கிக் கொண்டு உருப்படியான வேலைகளைச் செய்ய முற்பட வேண்டும். சக்தி சேகரிக்க வேண்டும். ஸ்திரத் தன்மையை வளர்க்க வேண்டும். அரசியலில் அன்றாட வேலைகளைச் செய்வதோடு கொஞ்சம் கொஞ்சமாக இலாக்காக்களைச் சீர்திருத்த வேண்டும். சிவில் சர்வீஸ்களைச் சமாளித்துக் கொண்டு கவர்னரை வெறும் பாவையாகப் பண்ணிவிட வேண்டும். இது சிரம சாத்தியமான காரியம். ரொம்பப் பொறுமையும், உழைப்பும் காட்ட வேண்டிய வேலை” என தோழர் முன்ஷி கூறுகிறார். தோழர் சத்தியமூர்த்தி ஆர்ப்பாட்டப் பேச்சுகளுக்கும் தோழர் முன்ஷியின் புத்திசாலித்தனமான வார்த்தைகளுக்கும் எவ்வளவு வித்தியாசமிருக்கிறது பாருங்கள். சட்ட சபைக்குள் புகுந்து அரசியலை உடைத்து விடுவதாகக் கூறுவது ஒரு செம்புக்காசும் விலை பெறாத பைத்தியக்காரப் பேச்சு. பாமர மக்கள் அப்பேச்சைக் கேட்டு ஏமாறலாம்; வியப்படையலாம்; மூர்த்தி கூட்டத்தாரைக் கொண்டாடலாம். ஆனால் விவேகிகள் ஆதரிக்கவே மாட்டார்கள். அதனாலேயே, “மந்திரி பதவி ஒப்புக்கொண்டு அரசியலை உடைத் தெறிவோம் என்று கூறுவது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் வித்தை” என காங்கிரஸ் தலைவர் பண்டித ஜவஹர்லால் கூறுகிறார்.

மற்றும் சென்ற அசம்பிளித் தேர்தலின் போது சத்தியமூர்த்தி கோஷ்டியார் என்ன சொன்னார்கள். “சட்டசபைக்குள் புகுந்து அரசியலைக் கவிழ்த்து பிரதிநிதித்துவ சபை கூட்டி எதிர்கால அரசியலை அமைப்போம்” என்று அவர்கள் சொன்னார்கள். ஆனால் அவர்கள் சட்டசபைக்குள் புகுந்து சுமார் இரண்டு வருஷமாயிற்று. பிரதிநித்துவ சபையைப் பற்றிய பேச்சையே காணவில்லை. இப்பொழுது தோழர் சத்தியமூர்த்தி என்ன சொல்லுகிறார் என்றால் “புதிய அரசியலை அமல் செய்வது அசாத்தியமாகும்படி செய்ய முடியாவிட்டாலும் மிகச் சங்கடமாகும்படியான தோரணையில் சர்க்கார் நிர்வாகத்தை மந்திரிகள் நடத்தி, பரஸ்பர சம்மதத்தின் பேரில் புதிய அரசியல் திட்டம் ஒன்றைத் தயாரிக்கும் நிர்ப்பந்தமான ஓர் நிலைமையை மந்திரிகள் உண்டாக்கிவிட முடியும்” என தோழர் சத்தியமூர்த்தி வழவழ வென்று பேசி மழுப்பப் பார்க்கிறார்.

தோழர் சத்தியமூர்த்தி மழுப்பலை நினைக்கும் போது சாமானியர் இல்லங்களில் பிரதி தினமும் நடைபெறும் புருஷன் பெண்டாட்டி சண்டைதான் நமது ஞாபகத்துக்கு வருகிறது. புருஷன் பசியோடு வீட்டுக்கு வருகிறான். சாப்பாடு தயாரில்லை. சீறி விழுந்து பெண்டாட்டியை அடிக்கிறான். அவள் கோபித்துக்கொண்டு தாய்வீடு செல்லப் புறப்படுகிறாள். அவள் தாய்வீடு சென்றால் வீடு குட்டிச்சுவர்தான். வேறுகதியில்லை. புருஷனே மனைவியைக் கெஞ்சி மன்றாடி சமாதானம் கூறி இருவரும் மறு நிமிஷம் ராஜியாய்ப் போய்விடுகிறார்கள். மந்திரி பதவி ஒப்புக்கொண்டு இம்மாதிரி கவர்னருடன் புருஷன் பெண்டாட்டிச் சண்டை போட்டு காங்கிரஸ்காரர் விரும்பும் பூரண சுயேச்சையை வெகு சுளுவில் பெற்று விடலாமென்று சாது சத்தியமூர்த்தி மனப்பால் குடிக்கிறார். அவரது இந்த பைத்தியகாரப் பேச்சுக்கு எவ்வளவு தூரம் மதிப்புக் கொடுக்கலாம் என்பதை தேச மக்களே நிதானம் செய்து கொள்ளட்டும்.

முன்னுக்குப்பின் முரணாகவும் சந்தர்ப்பத்துக்குத் தக்க படியும் பேசுவதில் காங்கிரஸ்காரரைப் போன்ற சமர்த்தர்கள் இல்லவே இல்லை. அசம்பிளித் தேர்தலின் போது வரப்போகும் அரசியல் சீர்திருத்தத்தைக் கண்ணெடுத்தும் பாரோம்; கையாலும் தொடோம் என்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அசம்பிளியில் அரசியல் சீர்திருத்தத்தைக் கண்டித்து கத்து கத்தென்று கத்தினார்கள். அவ்வாறு கத்தியவர்களில் தோழர் சத்தியமூர்த்தியும் ஒருவர். இப்பொழுது அவர் மந்திரி பதவியைக் கைப்பற்ற தவங்கிடக்கிறார். அவருடைய பேச்சு வங்காள காங்கிரஸ் தலைவர் தோழர் சரத்சந்திர போசுக்குக்கூடப் பிடிக்கவில்லை. “புதிய அரசியல் திட்டத்தைப்பற்றி டில்லி அசம்பிளியில் சத்தியமூர்த்தி பேசியிருப்பதைப் போல் நான் பேசியிருப்பே னாயின் புதிய அரசியல் திட்டத்தின் கீழ் பதவி ஏற்பது அவசியமென்று ஒரே ஸ்தாயியில் பேச நான் மிகவும் வெட்கப்பட்டிருப்பேன்” என அவர் கூறுகிறார். ஆனால் சத்தியமூர்த்தி கோஷ்டியாரிடம் வெட்கத்தையும் மானத்தையும் ரோஷத்தையும் எதிர்பார்க்க முடியாதென்பதை தோழர் சரத்சந்திர போஸ் அறியார் போலும்.

காங்கிரஸ்காரர் மந்திரி பதவி ஒப்புக்கொள்வதை நாம் ஆட்சேபிக்க வில்லை. மந்திரிபதவி ஒப்புக்கொண்டு அரசியலைக் கவிழ்த்து விடுவோம், மலையைப் பொடியாக்கிவிடுவோம், கடலை மடுவாக்கி விடுவோம் எனப் புலம்புவதையே நாம் ஆட்சேபிக்கிறோம். காங்கிரஸ்காரர் கடுகத்தனையாவது யோக்கியப் பொறுப்புடையவர்களானால், அசம்பிளித் தேர்தல் காலத்தில் ஆர்ப்பாட்டம் செய்தபடி, அரசியலைக் கவிழ்த்து பிரதிநிதித்துவ சபை கூட்டி எதிர்கால அரசியலை நிர்ணயம் செய்ய முற்பட வேண்டும். அவ்வாறு செய்ய ஆற்றலில்லாதவர்கள் மந்திரி பதவி ஒப்புக்கொண்டு ஏதேதோ சாதிக்கப் போகிறதாகக் கூறுவது வெறும் ஹம்பக் பேச்சாகும். காங்கிரஸ்காரருக்கு அரசியல் ஞானமும் இல்லை; திடமான கொள்கையுமில்லை, பாமர மக்களை ஏமாற்றி அவர்களுடைய ஆதரவைப் பெறும் பொருட்டு பகட்டாகவும், ஆடம்பரமாகவும் ஏதாவது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருப்பார்கள். “சட்ட சபைகள் மூலம் நாட்டுக்கு நன்மை செய்ய முடியும் என்று உணர நமக்கு 16 வருஷம் பிடித்தது” என தோழர் பிரகாசமே பிரலாபிக்கிறார். இதனால் காங்கிரஸ்காரருக்கு அனுபவ ஞானம் கிடையாது என்பது புலனாகவில்லையா?

1920 முதல் நாளிது வரை காங்கிரஸ்காரர் கூறியுள்ளவைகளில் ஒரு சின்னக் காரியத்தையாவது சாதித்திருக்கிறார்களா? காந்தி இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டதைப் பற்றி அவர்கள் வெகு பிரமாதமாகப் பேசிக் கொள்கிறார்கள். சூது வாதறியாத பாமர மக்கள் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சை நம்பி சட்ட மறுப்பில் ஈடுபட்டுப் பாழாய்ப்போவதைப் பார்க்கப் பொறாத ஒரு “நல்லெண்ணமுடைய வைஸ்ராய், பாழும் சட்ட மறுப்பை நிறுத்துவதற்காகச் செய்த ஒரு யுக்தியே காந்திஇர்வின் ஒப்பந்தம். அதனால் இந்திய அரசியல் அமைப்பில் ஒரு சுள்ளாணி கூட மாற்றப்பட வில்லை. மக்கள் உப்புக்காய்ச்சும் சுதந்திரமும் பெற்றுவிடவில்லை. 1920ல் இருந்த நிலைமையிலேயே இந்தியா இன்று இருந்து வருகிறது. இதைப்பற்றி ராசீபுரம் மகாநாட்டுத் தலைவர் தோழர் சௌந்திரபாண்டியன் அவர்கள் தலைமையுரையில் வெகு ஆணித்தரமாக எடுத்துக்காட்டி யிருக்கிறார். ஆகவே இனி பொதுமக்கள் காங்கிரஸ்காரரை நம்பினால் மேலும் கீழான நிலைமையையே இந்தியா அடையும். எனவே அரசியல் ஆர்ப்பாட்டக்காரரின் மாய வலையில் சிக்காமல் தேசமக்கள் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

குடி அரசு தலையங்கம் 28.06.1936

You may also like...