தெய்வ வரி
நம் தேசத்தில் நாம் கொடுக்கும் வரிக்கு அளவே இல்லை. அரசாங்க சம்பந்தத்தில் பூமிவரி, வருமானவரி, கள்ளுவரி. துணிவரி, சாமான் வரி முதலியவைகளோடு முனிசிபாலிடி வரி, போர்டுவரி, லஞ்ச வரி, மாமூல் வரி என்று இவ்வாறாக அநேக வரிகள் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதல் லாமல் தெய்வத்திற்காகவும், மதத்திற்காகவும் கொடுத்துவரும் வரி அளவுக்கு மீறினவைகளாய் இருப்பதோடு நமக்கு யாதொரு பிரயோஜனத்தையும் கொடுக்காமல் மேற்சொல்லிய அரசாங்க சம்பந்த வரிகளின் அளவைவிட ஏறக்குறைய அதிகமாகவே கொடுக்கப்படுகிறது. அன்றியும், இவ்வரிகளால் தத்துவ விசாரணையும் நாம் கொஞ்சமும் செய்வதற்கில்லாமல் செய்து, நமது மூடநம்பிக்கையால் பிழைக்க வேண்டிய சிலரின் நன்மைக்காக அவர்கள் எழுதி வைத்ததையும் சொல்வதையும் நம்பி நாம் கஷ்டப்பட்டு வரி செலுத்து வதல்லாமல், வேறு என்ன உண்மை லாபம் அடைகிறோம்? தெய்வத்தை உத்தேசித்தோ, °தலத்தை உத்தேசித்தோ, தீர்த்தத்தை உத்தேசித்தோ, நமது பிராயணச் செலவு எவ்வளவு? பூஜை, பூசாரி காணிக்கை, பிரார்த்தனை முதலியவற்றுக்காக ஆகும் செலவு எவ்வளவு? சாதாரணமாய் திருப்பதி...
