‘ஜோக்கர்’ : சமூக இயக்கங்கள் ஆதரிக்க வேண்டிய அற்புத திரைக் காவியம்
ஜோக்கர் – தமிழ்த் திரைப்பட வரலாற்றில் புதிய மைல் கல். ராஜு முருகன் எழுத்து இயக்கத்தில் உருவாகி யுள்ள இத்திரைப்படம், இன்றைய சமூகத்தின் சமூக அரசியல் பொருளாதார அவலங்களை சமரசமின்றி சாட்டையால் அடிக்கிறது. பயன் கருதாமல் சமுதாயத் தின் மீதான கவலையோடு போராடும் இயக்கங்களுக்கான படம் என்றே கூற வேண்டும். சாதி வெறிக்கு, மதவாதத்துக்கு எதிராகவும் இயற்கை வளச் சுரண்டல் களுக்கு எதிராகவும், மனித உரிமைக் காகவும் எந்த பொருள் வசதியும் இல்லாத இயக்கங்கள் போராடினாலும் சரி, விளக்கக் கூட்டங்களை நடத்தினாலும் சரி, துண்டறிக்கைகளை வழங்கினாலும் சரி, அதை கேலிப் பேசவும், ‘வேறு வேலை இல்லாத கூட்டம்’ என்று அலட்சியப் படுத்தவும் செய்யுமளவுக்கு சமூகத்தின் பொதுப் புத்தி சீழ் பிடித்து கிடக்கிறது. இந்த புறச் சூழல் எதிர்ப்பை புறந்தள்ளி, களத்தில் நிற்கும் இயக்கங்களுக்கு தன்னம்பிக்கையையும் உந்து சக்தியையும் தருகிறது ‘ஜோக்கர்’. அதுவே இப்படத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்ச மாகும். ஜாதி-மத-ஓட்டு...