விநாயக சதுர்த்தியை சைவர்கள் கொண்டாடக் கூடாது: மறைமலை அடிகள்
விநாயகனை வழிபடுவது சைவர்களுக்கு அவமானம்; அது பார்ப்பான் கட்டிய கற்பனைக் கதை என்கிறார், மறைமலை அடிகளார். அன்பர்களே! இக்கதை எவ்வளவு அருவறுக்கற்பாலவான மாறுபாடுகள் நிறைந்ததாய் இருக்கின்றது. எல்லாம் வல்ல இறைவியான உமைப்பிராட்டியார் வினை வயத்தால் பிறக்கும் நம்போல் ஊனுடம்பு உடையரல்லர். அவர்தம் திருமேனி சொல் லொணா அருள் ஒளி வீசித் துலங்குவதென்று ‘தேனோபநிடதம்’ நன்கெடுத்து மொழியா நிற்க, அவ்வறிவு நூலுக்கும் கடவுளிலக் கணத்துக்கும் முற்றும் மாறாக அம்மையார் திருமேனியில் அழுக்கு நிரம்பி இருந்ததென்றும் அவ் வழுக்கினைத் திரட்டி எடுத்து பிள்ளையாரைச் சமைத்தனள் என்றும் கூறும் அழுக்குப்புராணம் சிவமகா புராணமெனப் பெயர் பெறுதற்குத் தகுதி யுடையதாமோ? ஆராய்ந்து கூறுமின்கள்! ஊனுடம்பு படைத்த மக்களும் அழகும் நாகரிகமும் தூய்மையும் வாய்ந்தார் சிலரின் உடம்புகள் அழுக்கில்லாதனவாய் மினு மினுவென்று மிளிரா நிற்கத் தூய அருட் பேரொளி வடிவாய் விளங்கும் அம்மையின் திருமேனி அழுக்குடையதாயிருக்குமோ சொன்மின்கள்! மேலும், “தம் மனைவியாரைத் தேடிக்கொண்டு வந்த சிவபிரான் தமக்குப்பிள்ளையென்று அறியாமல் அதன் தலையை...