விநாயக சதுர்த்தியை சைவர்கள் கொண்டாடக் கூடாது: மறைமலை அடிகள்

விநாயகனை வழிபடுவது சைவர்களுக்கு அவமானம்; அது பார்ப்பான் கட்டிய கற்பனைக் கதை என்கிறார், மறைமலை அடிகளார். அன்பர்களே! இக்கதை எவ்வளவு அருவறுக்கற்பாலவான மாறுபாடுகள் நிறைந்ததாய் இருக்கின்றது. எல்லாம் வல்ல இறைவியான உமைப்பிராட்டியார் வினை வயத்தால் பிறக்கும் நம்போல் ஊனுடம்பு உடையரல்லர். அவர்தம் திருமேனி சொல் லொணா அருள் ஒளி வீசித் துலங்குவதென்று ‘தேனோபநிடதம்’ நன்கெடுத்து மொழியா நிற்க, அவ்வறிவு நூலுக்கும் கடவுளிலக் கணத்துக்கும் முற்றும் மாறாக அம்மையார் திருமேனியில் அழுக்கு நிரம்பி இருந்ததென்றும் அவ் வழுக்கினைத் திரட்டி எடுத்து பிள்ளையாரைச் சமைத்தனள் என்றும் கூறும் அழுக்குப்புராணம் சிவமகா புராணமெனப் பெயர் பெறுதற்குத் தகுதி யுடையதாமோ? ஆராய்ந்து கூறுமின்கள்! ஊனுடம்பு படைத்த மக்களும் அழகும் நாகரிகமும் தூய்மையும் வாய்ந்தார் சிலரின் உடம்புகள் அழுக்கில்லாதனவாய் மினு மினுவென்று மிளிரா நிற்கத் தூய அருட் பேரொளி வடிவாய் விளங்கும் அம்மையின் திருமேனி அழுக்குடையதாயிருக்குமோ சொன்மின்கள்! மேலும், “தம் மனைவியாரைத் தேடிக்கொண்டு வந்த சிவபிரான் தமக்குப்பிள்ளையென்று அறியாமல் அதன் தலையை வெட்டிவிட்டனரென்பது” விநாயக சதுர்த்தியை சைவர்கள் கொண்டாடக் கூடாது: மறைமலை அடிகள் கடவுள் இலக்கணத்திற்கு எவ்வளவு முரண்பட்டதாய் இருக்கின்றது. எல்லா உயிர்க்கும் உயிராய் அறிவுக்கு மறிவாய் எல்லா உலகங்களிலும் எல்லா காலங்களிலும் நிகழும் நிகய்ச்சிகளை எல்லாம் ஒருங்கே உணரும் பெருமான் தம் பிள்ளையைத் தாமே அறியாமல் வெட்டினாரென்றால் அஃது அறிவுடை யோரால் ஒப்பத் தகுந்ததாமோ? இன்னும் பாருங்கள்! வெட்டுண்ட பிள்ளையைத்தலையும் உடம்பும் பொருத்தி உயிரோடு எழுப்பி விடலாகாதா? வெட்டுண்ட தலையை விடுத்து வேறொரு யானைத் தலைய வருவித்துப் பொருத்தினனென்பது எவ்வளவு தகாத செயலாய் இருக்கின்றது. இத்துணைத் தகாததொன்றை இறைவன் செய்தனனென்பது கடவுளிலக்கணத்துக்கு அடுக்குமா? உண்மையாய் நோக்குங்கால் சிவபிரானையும் அருள்வடிவான  பிராட்டியையும், ஓங்கார ஒலி வடிவில் விளங்கும் இறைவனையும் இழித்துப் பேச விரும்பிய எவனோ ஓர் ஆரியப்பார்ப்பனன் இக்கதையைச் சிவமகாபுராணமென்னும் பெயரால் கட்டி விட்டான் என்பது வெள்ளிடைமலை போல் விளங்கா நிற்கும். இப்பொல்லாத பார்ப்பன சூய்ச்சியை ஆராய்ந்து பார்க்கும் அறிவு மதுகை இல்லாத குருட்டுச் சைவர்கள் இவ்வழுக்குப் புராணத்தைச் சிவமகா புராணமெனக் கொண்டாடிச் சைவசமயத்துக்குக் கேடு சூய்வது பெரிதும் வருந்தற்பாலதாயிருக்கின்றது.

 

விநாயகன் ஆபாசம்: பொதுவுடைமைத் தலைவர் ‘ஏ.எஸ்.கே.’ விளாசல்

மறைந்த இந்திய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ஏ.எஸ்.கே., ‘பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈவெ.ரா’ என்ற தனது நூலில் ஆபாச விநாயகன் பிறப்பை அலசுகிறார்.

பிள்ளையார் பற்றிய கதையை விளக்க வேண்டியது அவசியம். இந்த உண்மையை உணர்ந்தபின் பிள்ளையார் கடவுள்தானா – பிள்ளையார் பொம்மையை உடைத்ததினால் பெரியார் அ வர்கள் என்ன அடாத செயலைச் செய்துவிட்டார் என்பதைத் தெளிவாக உணர முடியும்! புராணக் கதைகளில் கணபதியின் பிறப்பே பல்வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது. எது உண்மை என்பதை யாரும் கூற முடியாது. ஆனால் ஒன்று தெளிவு – கற்பனையின் விளைவே கணபதி. கீய்க்கண்ட பல்வேறு கதைகள் இதைத் தெளிவாக நிரூபிக்கின்றன. கணபதி பெண்ணில்லாமல் ஆணிற்குப் பிறந்தவரென்றும், இதற்கு நேர்மாறாக ஆணில்லாமல் பெண்ணுக்குப் பிறந்தார் என்றும் கூறப்படுகின்றன. புராணக் கதையில் கணபதியின் பிறப்பு அசிங்கமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. பார்வதி தன் உடல் அழுக்கை உருண்டையாக்கி விளையாடிக் கொண்டிருந்தாளாம். உருண்டையின் மீது அன்பு சொரிய அதற்கு அவள் உயிர் கொடுத்து அதைத் தன் மகன் என்று அழைத்தாளாம்.

மற்றொரு கதை கணபதியின் பிறப்பை வேறு விதமாகச் சித்தரிக்கிறது. பார்வதி தன் உடல் அழுக்கைக் கழுவி அதை கங்கா நதியின் முகத்துவாரத்தில் உள்ள யானைத் தலை இராட்சசி மாலினியைக் குடிக்க வைத்தாளாம். இதன் விளைவாக மாலினி கர்ப்பம் தரித்து பிறகு ஒரு குழந்தையைப் பெற்றாளாம். அக்குழந்தையைப் பார்வதி எடுத்துச் சென்று விட்டாளாம். மேற்கூறிய கதைகள் எதுவும் கணபதிக்கு யானைத் தலை ஏன் வந்தது என்பதைத் தெளிவுபடுத்தவில்லை. பிரம்ம வைவர்த்த புராணத்தில் ஒரு கதை கூறப்பட்டுள்ளது. கணபதி பிறந்த நேரத்தில் சனிப் பார்வை தோஷத்தால் தலை இல்லாமல் பிறந்தாராம். கணபதியின் தாய் தன் குழந்தைக்குத் தலை இல்லையே என்று தேம்பித் தேம்பி அழ, விஷ்ணு பகவான் ஒரு யானைத் தலையை ஒட்ட வைத்தாராம். ஆனால் ஸ்கந்த புராணம் இதை மறுக்கிறது. கணபதி தன் தாயின் வயிற்றில் இருந்தபோது சிந்தூரா என்ற இராட்சசி வயிற்றில் புகுந்து குழந்தையின் தலையைக் கடித்துத் தின்று விட்டாளாம். பிறந்த குழந்தைக்குத் தலை இல்லாமல் போகவே அக்குழந்தை யானைத் தலையைக் கொண்ட கஜாசூரன் என்ற இராட்சசன் தலையை வெட்டித் தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டதாம். தலையும் கண்ணும் இல்லாத இக் குழந்தை தனக்குத் தலை இல்லை என்று எங்ஙனம் உணர்ந்தது? கஜாசூரனின் யானைத் தலையை எப்படி வெட்டித் தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டது என்பதை விகந்த புராணம் தெளிவுபடுத்தவில்லை.

பெரியார் முழக்கம் 01092016 இதழ்

You may also like...