ஒரே நேரத்தில் நடந்த இரு பயிலரங்குகள்
குடியாத்தம் அருகே உள்ள இராமாலை கிராமத்தில் மாவட்ட கழக அமைப்பாளர் சிவாவின் முயற்சியால் அவருக்கு சொந்தமான தோப்பில் கழக சார்பில் பெரியார்-அம்பேத்கர் பயிலரங்கம், மே 26, 27 தேதிகளில் நடைபெற்றது. ஒரே நேரத்தில் சிறுவர் சிறுமியர்களுக்கு தனியாகவும், தோழர்களுக்கு தனியாகவும் பயிற்சிகள் நடந்தன. கழகத் தோழர் ஆசிரியர் ஈரோடு சிவக்குமார், சிறுவர் சிறுமி யருக்கு பெரியார் குறித்தும், ஜாதி, கடவுள், மதம் குறித்தும் மிக எளிமையாக குழந்தைகளுக்கு புரிந்திடும் வகையில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பேசி கலந்துரையாடினார். இரண்டு நாள்களிலும் காவை இளவரசன், ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சிகளை குழந்தைகளுக்கு நடத்தி பகுத்தறிவு அறிவியல் கருத்துகளை விளக்கினார். குழந்தைகள் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்றனர். தோழர்களுக்காக நடந்த பயிலரங்கத்தில் – முதல் நாள் விடுதலை இராசேந்திரன், ‘அம்பேத்கர்-பெரியார் தேவையும்- அவசியமும்’ என்ற தலைப்பிலும், எழுத்தாளர் அழகிய பெரியவன், ‘அடிப்படை வாதமும் ஜனநாயகம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியும்’ என்ற தலைப்பிலும், கொளத்தூர் மணி, ‘அம்பேத்கரும் இந்துமதமும்’...