க. முகிலன் இந்துத்துவ அரசியல்-ஒரு வரலாற்றுப் பார்வை (2) சீர்திருத்தங்களை எதிர்த்த திலகர்
முஸ்லிம் அல்லாதவர்களில் மிகப் பெரும்பான்மையினரையும், வருணாசிரம அமைப்புக்கு வெளியில் இருந்த தாழ்த்தப்பட்டவர்களையும், பழங்குடியினரையும் இந்துக்கள் என்ற வரையறைக்குள் கொண்டுவந்து அவர்கள் எல்லாருக்கும் பொதுவான இந்து உரிமை இயல் சட்ட நெறிகளை (மனுஸ்மிருதி) முதலானவற்றின் அடிப்படையில், ஆங்கிலேயே ஆட்சி 1860இல் உருவாக்கியது. 1860க்கு முன்பு வரை, இந்தியாவில் ஒரே சீராக எல்லா இடங்களுக்கும் எல்லாருக்கும் எல்லா சமயங்களிலும் பொருந்துகிற, பொதுவான சித்தாந்த உள்ளடக்கத்தைக் கொண்ட இந்துச் சட்டம் (ழேைனர உடினந) என்று ஏதும் இருந்ததில்லை. ஆனால் சங்பரிவாரங்கள் வேதகாலம் முதல் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி இருந்து வந்தது போலவும், அதை மீண்டும் நிலைநாட்டுவதே இந்தியர்களின் – இந்திய நாட்டின் சுயமரியாதையை மீட்டெடுப்பதாகும் என்றும் கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆங்கிலேயரின் ஆட்சியாலும் கருத்துகளாலும் இந்து மதம் பல அறைகூவல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வேதகாலம் முதல் பார்ப்பனியம் காலத்துக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொண்டு, தன் ஆதிக்கத்தை நீடிக்கச் செய்யும்...