‘பால்ய விவாகம்’: அன்றும் இன்றும்!

பார்ப்பனியம் சமூகத்தில் திணித்த பல கொடுமைகளில் ‘பால்ய விவாகம்’ என்ற குழந்தைத் திருமணமும் ஒன்று. 5 வயது, 6 வயதிலேயே திருமணம் செய்யும் கொடுமை பார்ப்பனர்களால் திணிக்கப்பட்டது. பார்ப்பனக் குடும்பங்களில் இது அதிகம் நடந்தது. இதனால் பெண் குழந்தைகள் மரணமும் இளம் விதவைகள் எண்ணிக்கையும் அதிகரித்தது.  “பெற்றோர்களும் தாங்களாகவே முன் வந்து திருமண  வயதை உயர்த்த உறுதி ஏற்கவேண்டும்” என்று, பூனா பார்ப்பனரும், ‘சீர்திருத்தவாதி’யுமான ராணடே வேண்டுகோள் விடுத்தார். இந்து தர்ம சாஸ்திரங்களில்  அதற்கு இடமில்லை என்று சங்கராச்சாரிகளும் வைதீகப் பார்ப்பனர்களும் மறுத்து விட்டனர். திருமண வயதை உயர்த்தி சட்டம் போடுவதைத் தவிர வேறு வழியில்லை  என்று பிரிட்டிஷ் ஆட்சி முயற்சித்தபோது சுதந்திரப்  போராட்ட வீரராக சித்தரிக்கப்பட்ட மராட்டிய பார்ப்பனர் திலகர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.  “நமது சமூகப் பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளை ஒழுங்குபடுத்தும் வேலையில் அரசாங்கம்  இறங்குவதை நாங்கள் விரும்பவில்லை” என்று தான்  நடத்தி வந்த ‘மராட்டா’ பத்திரிகையில் எழுதினார்.

அப்போது குஜராத்தைச் சார்ந்த கவிஞரும்  சீர்திருத்தவாதியுமான பி.எம். மலபாரி என்ற பார்சிக்காரர் வைஸ்ராய் ரிப்பன் பிரபுவிடம் இந்த பால்ய விவாகம், விதவைக் கொடுமைகள் பற்றிய ஒரு விரிவான  அறிக்கையை 1884இல் சமர்ப்பித்தார்.  அந்த அறிக்கையை பிரிட்டிஷ் ஆட்சி பல்வேறு  பிரமுகர்களுக்கு அனுப்பி கருத்து கேட்டது.

அப்போது மராட்டிய சமூகநீதிப் புரட்சியாளர்  ஜோதிபாபுலே பால்ய விவாகத்துக்கு தடைபோட வேண்டும் என்று உறுதியாகக் கூறினார். கவிஞர்  மலபாரி, இங்கிலாந்துக்கே சென்று இந்தச் சட்டத்துக்கு  ஆதரவு திரட்ட முயன்றபோது, திலகருக்கு கோபம் வந்துவிட்டது. “இவர் ஒரு பார்சிக்காரர். இவர் எப்படி  இந்து மதப் பிரச்சினைகளில் தலையிடலாம்?” என்று  தனது ‘கேசரி’ப் பத்திரிகையில் எழுதினார். கடும் எதிர்ப்புகளுக்கிடையே பெண்களின் திருமண வயதை  10லிருந்து 12ஆக உயர்த்தி ஒரு மசோதா வந்தது.  12 வயதுக்குட்பட்ட பெண்களிடம் உடலுறவு கொள்வது  சட்டப்படி குற்றமாக்கப்பட்டது. 1909லிருந்து பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை 16ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைள் வலுத்து  வந்தாலும் – பார்ப்பன எதிர்ப்புக்கு பிரிட்டிஷ் ஆட்சி பயந்துபோய் ஒதுங்கியே நின்றது; 20 ஆண்டுகளுக்குப்  பிறகு 1929இல்தான் பெண்களுக்கான திருமண வயதை 14 ஆக நிர்ணயிக்கும ‘சாரதா சட்டம்’ வந்தது. ‘சுதந்திர’ இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18ஆக  உயர்த்தப்பட்டது. ‘பால்ய விவாகத்தை’ சமூகத்தில்  திணித்த பார்ப்பனர்கள், இப்போது அதை கைகழுவி  விட்டார்கள். ஆனால், பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட  ஜாதியிரிடையேயும் பழங்குடி மக்களிடையேயும் இந்த சமூகக் கொடுமை நீடிக்கிறது.

தமிழ்நாட்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி, ஈரோடு  மாவட்ட மலைப் பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள்  நடக்கின்றன. கோவை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கடநத 6 ஆண்டுகளில் சராசரியாக 20  சதவீத குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன. தங்களது  பெண் குழந்தைகளின் உடல்நலன், எதிர்கால வாழ்க்கைக் குறித்து கவலைப்படாத அளவுக்கு அவர்களின்  பழமைவாத சிந்தனைகள் தடுக்கின்றன.

கல்வி அறிவு இல்லாததும் பாதுகாப்பு இல்லாமல்  போய்விடுமோ என்ற அச்சமும் அவர்களை இந்த  சிந்தனைக்கு தூண்டுகின்றன. இது குறித்து ஆய்வு  செய்த ‘யுனிசெஃப்’ நிறுவனம் இவ்வாறு கூறுகிறது.  மக்கள் தொகை இந்தியாவில் ஆண்டுக்கு 8 சதவீதம் உயருகிறது. ஆனால் குழந்தைத் திருமணங்கள் ஒரு  சதவீதம்தான் குறைகிறது. 2020ஆம் ஆண்டுக்குள்  இந்தியாவில் 2 கோடியே 30 இலட்சம் குழந்தைத்  திருமணங்கள் நடக்கும்” என்கிறது அந்த ஆய்வு.  தமிழ்நாட்டிலேயே இந்த நிலை நீடிப்பதுதான்   கவலைக் குரியதாகும்.  குழந்தைத் திருமணங்களை அதிகாரிகள் தடுத்து  நிறுத்தும் செய்திகள் வருகின்றன. அதைவிட முக்கியம் இந்த மக்களிடம் இது குறித்த சமுதாய விழிப்புணர்வையும் அறிவியல் சிந்தனையையும் உருவாக்குவதுதான்! பார்ப்பனியம் திணித்த கொடுமையை இப்போது பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட சமூகம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பது தான் மிகப் பெரும் அவலம்!

பெரியார் முழக்கம் 28072016 இதழ்

You may also like...