தமிழர்களின் கடவுள் மறுப்பு மரபு சங்க இலக்கியத்திலிருந்து சுயமரியாதை இயக்கம் வரை முனைவர் க.நெடுஞ்செழியன்
நாத்திகம் என்பது வடசொல், இச்சொல்லிற்கு மறுப்பது என்பது பொருள். ஒருவர் கொள்கையை மற்றவர் ஏற்காத போது அல்லது அதனை மறுக்கின்ற போது அப்படி மறுக்கின்றவர் அக் கொள்கையைப் பொருத்த மட்டில் நாத்திகராவார். மாணிக்கவாசகர். ஆத்திகர் மானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர் எனக் குறிப்பதில், நாத்திகம் எனும் சொல், சிவனை முழுமுதற் கடவுளாக ஏற்காத தன்மையைச் சுட்டக் காணலாம். ஆயினும் நாத்திகர் எனும் சொல் கடவுள் கோட்பாட்டை – வைதிகப்பண்பாட்டைமறுத்தவர்களைகுறித்தே வழங்கப்பட்டுள்ளது. வடமொழி அறநூல்களில் நாத்திகர்களாகக் குறிக்கப் பெறுபவர்கள் பேச்சுக் கலையிலும் தருக்கவியலிலும் வல்லவர்களாகத் திகழ்ந்துள்ளனர். இதனை, உலகத்துப் பொருள்களின் தோற்றக் கோடுகள், இயற்கையாக நிகழ்வனவெனவும், அவற்றிற்கு ஒரு கருத்தா வேண்டாமையின் கடவுள் இல்லை எனவும் அக்கடவுள் முதலிய பொருள்களைப் பற்றிக் கூறும் வேதனங்கள் (வேதங்கள்) பிரமாணமாகாவெனவும் துணிந்து, யுக்தி வன்மையைக் கடைப்பிடித்து நிகழ்வது நாத்திகமாகும். என சுக்கிர நீதி குறிக்கும். இந் நூற்பாவிற்கு விளக்கம் அளிக்கும் தேவிபிரசாத்...