காங்கிரஸ் கொள்கை நாடகம்

 

பழைய காங்கிரஸ்காரன்

காங்கிரஸ் உத்தியோகமேற்கும் விஷயத்தில் அபிப்பிராய பேத மேற்பட்டதற்காக சர்தார் சாதுல்சிங் அவர்கள் காங்கிரஸ் கமிட்டியிலிருந்து ராஜினாமாச் செய்து விட்டாராம்.

காங்கிரஸ்காரர்கள் சட்டசபைக்குச் செல்வதை பற்றியோ காந்தியார் சம்மதித்து விட்டார்.

அந்தப்படி பலர் சட்டசபைக்குச் சென்றும் விட்டார்கள்.

சர்க்காரார் காக்காய் கருப்பு என்றால் காங்கிரஸ்காரர்கள் வெள்ளை என்று சொல்லிச் சர்க்காருக்குத் தொந்திரவு கொடுத்து அவர்களுடைய தீர்மானங்களையெல்லாம் எதிர்ப்பதே தங்கள் வேலை என்றால் இனி மாகாண சட்டசபைகளில் அந்த ஜபம் சாயாது.

இந்த மாதிரி முன் காங்கிரஸ்காரர்கள் நடந்து கொண்ட விஷமத்தனமான காரணத்தாலேயே அரசாங்கம் நல்ல அரசாட்சிப் புரிய வேண்டும் என்னும் காரணத்துக்காக அனேக பாதுகாப்புகளை ஏற்படுத்திக் கொண்டது.

எவ்வளவு தீர்மானங்களைத் தோற்கடித்தாலும் அவை குப்பைத் தொட்டிக்குத்தான் போகுமே ஒழிய தீர்மானத்தால் ஒன்றும் செய்துவிட முடியாது.

ஆகவே அரசாங்கத்தைப் பல தீர்மானங்களில் தோற்கடித்துவிட்டதாகக் காங்கிரஸ்காரர்கள் கணக்குப் போட்டுக் கொண்டு இருக்க வேண்டியதும், “”பொறுப்பில்லாத சட்டசபை மெம்பர்கள் செய்த காரியத்தைச் சர்க்கார் லட்சியம் செய்யாமல் தோற்கடித்த அத் தீர்மானங்களைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு நல்ல அரசாட்சிக்கு வேண்டியபடி பாதுகாப்பு அதிகாரங்களைக் கொண்டு திருத்திக் கொண்டோம்” என்று சொல்லி அரசாங்கத்தார் சர்ட்டிபை செய்து காங்கிரஸ்காரர்கள் முகத்தில் கரியைப் பூசுவதும், காங்கிரசுக்காரர்கள் வெட்கமில்லாமல் பிரயாணப்படி கிடைத்தால் போதுமென்று மறுபடியும் மறுபடியும் அதே ஸ்தானத்தில் அமர்ந்து அதே வேலையைச் செய்து கொண்டு இந்திய சுயமரியாதையைப் பாழாக்குவதற்கு ஆளாகி இருப்பதும் தான் முடியும்.

இந்த உண்மை காங்கிரசுக்காரர்களுக்குத் தெரியாது என்று யாரும் நம்ப முடியாது.

எப்படியாவது உளரிக் கொட்டிப் பாமர மக்களை ஏமாற்றிச் சட்டசபைக்குள் நுழைந்து விட்டால் அப்புறம் சவுகரியப்படி நடந்து கொள்ளலாம் என்கின்ற சூழ்ச்சி எண்ணத்தின் மீதே ஆளுக்கொரு அபிப்பிராயம் சொல்லி வருகிறார்களே ஒழிய வேறில்லை.

உதாரணமாகச் சட்டசபைக்குள் நுழைந்து விடுவதினாலும் உத்தியோகங் களைக் கைப்பற்றிக் கொள்ளுவதினாலும் அரசாங்கத்தைக் கடுகளவுகூட அசைக்க முடியாது என்பதும் இதுவரையும் யாரும் எந்த  ஒரு துறையிலும் சிறிது பாகத்தையாவது அசைக்க முடியவில்லை என்பதும் அரசியல் ஞானமுள்ள யாவரும் அறிந்த காரியமாகும்.

சாதாரணமாய் மக்களை ஏமாற்றச் சட்டசபையில் அதிகப் பிரசங்கத் தனமாகவும், பலாபலனைப் பற்றி லட்சியமில்லாமலும், கூப்பாடு போடலாம். அப்படிப்பட்ட கூப்பாட்டிற்கு வட்டியும் முதலுமாகச் சேர்த்து அரசாங்கத்தார் திருப்பி நல்ல சூடும் கொடுக்கலாம். அது மாத்திரமல்லாமல் அதன் பயனாய் பொது ஜனங்களுக்கு பல நிர்ப்பந்தங்களையும், அதிக வரியையும் ஏற்படுத்திச் சட்டசபை மெம்பர்களின் தொல்லைகளைச் சமாளிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம்.

இவற்றைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? அல்லது இதுவரை முடிந்தது என்ன? என்று பார்த்தால் விளங்கும்.

தென் இந்திய மக்கள் என்ன செய்தாவது பார்ப்பனர்கள் செல்வாக்கில் இருந்த அரசியல் ஆதிக்கத்தை ஒழிப்பது என்று கங்கணம் கட்டி எவ்வளவோ பழிப்புக்கும், எதிர்ப்புக்கும், தொல்லைக்கும் ஆளாகி ஒரு அளவுக்குப் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்கும் வழி திறக்கப் பட்டிருக்கிறது.

இனி, அதை எந்த விதத்திலும் 100 மகாத்மாக்கள் அல்ல, 500 ராஜாஜிகள் அல்ல, அவர்கள் பாட்டன் பூட்டன்களான ரிஷிகள் அல்ல, இனியும் எவராலும் அதைத் தடுக்க முடியாது. வேண்டுமானால் தென்னாட்டு மூட மக்களிடம் பணம் பறிக்கலாம். அதைக்கொண்டு பார்ப்பனரல்லாதாரர்களில் சில கூலிகளைப் பிடித்து காலித்தனம் செய்யச் செய்யலாம்.

இதன் பலனாக எல்லாம் பார்ப்பனர் என்னாளும் நிரந்தரமாகத் தலை எடுக்காமல் இருக்கும்படியான நிலையை கெட்டியாக ஏற்படுத்திக் கொள்ளத்தான் முடியுமே ஒழிய பழைய ஆதிக்கத்தைக் கனவிலும் நினைக்க முடியாது என்பது உறுதி. இந்தப் பார்ப்பனர்களுடைய யோக்கியதையும் அவர்களது கூலிகளின் காலித்தனத்தையும் கண்ட பிறகு, பிரிட்டிஷ் ஆட்சி அல்லது அன்னிய ஆட்சி என்பதால்தான் இந்தியாவுக்கு என்றாவது சமதர்ம ஆட்சி ஏற்படலாமே ஒழிய, மற்றபடி இந்தப் பார்ப்பனர்கள் கூறும் சுயராஜ்யம் என்னும் பார்ப்பன ஆதிக்க ஆட்சியினால் ஒரு நன்மையும் ஏற்படாததோடு, இன்னும் காட்டுமிராண்டித்தனத்துக்கும், அடிமைத்தனத்துக்கும்தான் நம்நாடு போகக் கூடும் என்று முடிவு கட்ட வேண்டியிருக்கிறது.

காங்கிரசின் பொருளாதார ஞானம் கதருடன் நின்றுவிட்டது.

காங்கிரசின் கிராமப் புனருத்தாரண ஞானம் கருப்பட்டியுடனும், வெல்லக் கட்டியுடனும், கைகுத்து அரிசியுடனும் நின்றுவிட்டது.

காங்கிரசின் சமுதாய சீர்திருத்த ஞானம் மதத்தையும், பழைய கலைகளையும் காப்பாற்றுவது என்பதுடன் முடிவு பெற்றுவிட்டது.

ஆகவே இப்படிப்பட்ட திட்டங்களைக் கொண்ட சுயராஜ்ஜியத்தில் இந்திய மக்கள் வாழ வேண்டியிருந்தால் அவர்களது வாழ்க்கை நிலை, முற்போக்கு, சுதந்திரம், விடுதலை ஆகியவைகளைப் பற்றி நாம் ஒன்றும் யோசிக்க வேண்டியதே இல்லை. பிரிட்டிஷ் அரசாங்கம் என்பது இப்படிப்பட்ட பொருளாதாரம், கிராமப்புனருத்தாரணம், சமூக பாதுகாப்புத் திட்டம் ஆகியவைகளைக் கொண்டதல்ல என்பது மாத்திரம் உறுதி.

ஆனால், இந்நாட்டு மேல் ஜாதிக்காரரும், செல்வவான்களும் அனுபவிப்பதைத் தாங்கள் ஏன் அனுபவிக்கக் கூடாது என்று பிரிட்டிஷ் அரசாங்கம் கேட்கிறது.

இப்படிக் கேட்பதில் அருத்தம் இல்லாமல் இல்லை.

அதாவது இந்த நாட்டுப் பழனி ஆண்டவர் தலையில் கொட்டி வீணாக ஜலதாரைக்குப் போகும் பாலை நாங்கள் வாங்கிக் கொண்டு போய் அங்குள்ள இளங் குழந்தைகளுக்கு கொடுக்கிறோமே என்கின்றது.

அதுபோலவே இந்த நாட்டுச் சோம்பேறிக் கூட்டங்களான பார்ப்பனர் முதலியவர்கள் பாடுபடாமல் அனுபவிக்கும் செல்வத்தை எங்கள் நாட்டுக்குக் கொண்டு போய் அங்குள்ள ஏழை மக்கள், தொழிலாள மக்கள் ஆகியவர்களுக்குப் பயன்படும்படி செய்கிறோமே என்கின்றது. இதில் தப்பு என்ன என்று கேட்கின்றோம்.

நம்நாட்டு நாட்டுக் கோட்டையார் பணம், ஜமீன்தாரர்கள் பணம், மிராசுதாரர்கள் பணம், மில் முதலாளிகள் பணம், கப்பல் வியாபாரிகள் பணம் எல்லாம் மற்றும் அவர்கள் லட்ச லட்சமாய்ச் சம்பாதிக்கும் லாபம் எல்லாம் என்ன கதி அடைகிறது?

இதை மாற்ற அடக்க ஒடுக்க முடியாத சுயராஜ்ஜியத்துக்கும் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்துக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கின்றோம்.

எவ்வளவுதான் ஜீவகாருண்யத்துக்குச் சட்டமிருந்தாலும் நாய்களை அடித்துக்  கொல்ல அனுமதி இருந்துதான் வருகிறது. கசாப்புக்கடைகளில் தினம் லட்சக்கணக்கான ஆடு, மாடு, கோழி, பன்றி முதலியவை கொல்லப்பட்டு, விற்கப்பட்டு, தின்னப்பட்டுத்தான் வருகிறது.

எவ்வளவுதான் ஜீவகாருண்யமும் பசுவைத் தெய்வமென்று கொண்டாடும் தன்மையும் இருந்தாலும் காலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை மாடுகள் செக்கில் சுற்றுவதும் பாரம் இழுப்பதும் குதிரைகள் ஜட்கா வண்டிகளில் ஓடுவதும் மேல் தோல் எழும்படி பட்டை வாங்குவதும் அனுமதிக்கப்பட்டுத்தான் வருகிறது.

அது போலவே இந்திய ஏழை மக்களைப் பற்றி எவ்வளவுதான் கண்ணீர் வடித்துப் பரோபகாரம் பேசினாலும் அவர்களது சுயமரியாதையும் அறிவும் பாடுபட்ட கூலியும் பாழாகும்படியான காரியங்கள் சுயராஜ்யத் திட்டத்திலும், மதத் திட்டத்திலும் இருந்துதான் வருகிறது.

ஆகவே, “”சுயராஜ்யம்” ஜஸ்டிஸ் ராஜ்யத்தை விட  ஏன்? பிரிட்டிஷ் ராஜ்யத்தைவிட எப்படி மேலானது என்பது மாத்திரமல்லாமல் எப்படித் தேவையானதாகும் என்று கேட்கின்றோம்.

குடி அரசு  கட்டுரை  22.09.1935

You may also like...