வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்

 

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்றால் நம் பார்ப்பனர்களுக்கு இழவு சேதிகள் போல் காணப்படுகின்றது என்பது நமக்குத் தெரியும்.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைக் கோருவதே பார்ப்பனரல்லாத சமூகங்களின் (ஜஸ்டிஸ் கட்சி) அரசியல் கிளர்ச்சியாகவும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எதிர்ப்பதையே பார்ப்பன சமூக (காங்கிரஸ் கட்சி) அரசியல் கிளர்ச்சியாகவும் இருந்து வருகின்றது என்பதை அனேக ஆதாரத் துடன் எடுத்துச் சொல்லலாம்.

இன்று இந்நாட்டில் மதங்களின் பேரால் உள்ள ஸ்தாபனங்களான இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ, சீக்கிய ஸ்தாபனங்களும்,

வகுப்புகளின் பேரால் உள்ள மேல் ஜாதி, நடு ஜாதி, கீழ் ஜாதிகள் என்று சொல்லப்படும் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லப்பட்ட வகுப்பு ஸ்தாபனங்களும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையே கண்ணாகக் கொண்டு கிளர்ச்சிகள் செய்வதை யாரும் மறுக்க முடியாது.

அன்றியும், வெள்ளையாய்ச் சொல்ல வேண்டுமானால் காங்கிரஸ், ஜஸ்டிஸ், சுயமரியாதை, மிதவாதம் முதலாகிய கட்சிகள் என்பவைகளில் சிலது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எதிர்த்தும், சிலது ஆதரித்தும், கிளர்ச்சி செய்வதைத்தான் முக்கியமாகவும் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகவும் கருதி வந்திருக்கின்றன, கருதியும் வருகின்றன.

இவ்வளவோடு மாத்திரமல்லாமல் இவைகளில் பெரும்பான்மையான ஸ்தாபனங்கள்,

“”வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை இருப்பதாய் இருந்தால் பிரிட்டிஷ் ஆட்சியே ஏகபோகமாய் இருக்கட்டும்” சிலதுகள் “”வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை இல்லாமலிருப்பதினால் பிரிட்டிஷ் ஆட்சியே என்றென்றும் இருப்பது நலம்” என்றும் கூப்பாடு போடுவதைப் பெரும் பெரும் தேசாபிமானிகள் முழுச் சுதந்திரவாதிகள், சமதர்மவாதிகள் என்பவர்கள் வாயாலேயே காது செவிடு பட கேட்டு வருகிறோம்.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்காகவே ஏற்பட்ட கட்சியாகிய ஜஸ்டிஸ் கட்சியானது, அதை ஏற்படுத்தியவர்கள் எவ்வளவோ பெரிய தன்னல மறுப்புள்ளவர்களாகவும், தேசாபிமானமுள்ளவராகவும், சமூகாபிமான முள்ளவராகவுமாய் இருந்தும், பார்ப்பனர்களும் அவர்களது ஆதிக்கமுள்ள காங்கிரசும் அந்த (ஜஸ்டிஸ்) ஸ்தாபனத்தை எதிர்த்து, அதன் தலைவர்களைப் பற்றி விஷமப்பிரசாரம் செய்து அத்தலைவர்கள் மீது பாமர மூட ஜனங்களுக்கு ஆத்திரமும் துவேஷமும் ஏற்படும்படியாகச் செய்துவிட்டதோடு அத்தலைவர் களைக் கண்ட கண்ட இடத்தில் வையவும், அடிக்கவும் அவர்களது வீடுகளுக்குள் புகுந்து கலகங்கள், பலாத்காரமான காரியங்கள், கொள்ளைகள் முதலிய காரியங்கள்கூட செய்யும்படியாகவும் செய்து விட்டதால் அக்கட்சித் தலைவர்கள் மாத்திரம் அல்லாமல் மற்ற அபிமானிகளும், ஆதரவாளிகளும் சர்க்காருடைய தயவை எதிர்பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது என்பதோடு, சர்க்கார் சம்மதப்பட்டால்தான் பார்ப்பனர்கள் எதிர்ப்பை சமாளித்து தாங்கள் கோரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையைப் பெற்று சமதானத்தோடு வாழலாம் என்கின்ற நிலைமை பார்ப்பனரல்லாத தலைவர்களுக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும் ஏற்பட்டுவிட்டதால், சர்க்கார் தயவாலேயே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை பெற்று சமாதானமாய் வாழ வேண்டியதாய்விட்டது.

இன்றும் நாளையும் ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி குறையாகக் கூறப்படும் குற்றமெல்லாம் “”ஜஸ்டிஸ் கட்சியார் சர்க்கார் தயவு பெறப்பாடுபடு கிறார்கள்” “”சர்க்காருக்கு அனுகூலமாக இருக்கிறார்கள்” “”சர்க்கார் தாசர்களாக இருக்கிறார்கள்” என்று சொல்லுவதைத் தவிற வேறு ஒன்றும் முக்கியமாய் காணப்படவில்லை.

இப்படிச் சொல்லப்படுவதால் ஜஸ்டிஸ் கட்சியாரோ, அல்லது அவர்களை ஆதரிக்கும் சுயமரியாதை இயக்கத்தார்கள் முதல் மற்ற எந்தக் கட்சியாரோ, வருத்தப்பட வேண்டியதில்லை என்பதோடு, அவமானமாகக் கருதவோ அல்லது அதை மறுக்கவோகூட யாரும் முயற்சிக்கவும் வேண்டியதில்லை என்பதே நமதபிப்பிராயம்.

ஏனெனில் இந்த நாட்டில் ஒரு மனிதன் அல்லது மனித உடல் பெற்ற எந்த ஜீவனும் பார்ப்பானுக்கோ, பார்ப்பன மதத்துக்கோ, பார்ப்பன சாஸ்திரத்துக்கோ, பார்ப்பனர்களால் கற்பிக்கப்பட்ட கடவுளுக்கோ அடிமையாய்  ஆதரவாளியாய்  அனுதாபியாய் இருந்து கொண்டு உயிர் வாழ்வதைவிட, சர்க்கார்க்கு அரசாங்கத்திற்கு அனுகூலியாகவோ, தாசராகவோ இருப்பது கீழானதோ, இழிவானதோ ஆன காரியம் அல்ல என்பதோடு பல பங்கு மேலானது என்று கூடச் சொல்லலாம்.

இன்றைய தேச பக்தர்  காங்கிரஸ் பக்தர்  பிராமண பக்தர்  மத பக்தர் ஆகியவர்கள் வாழ்வைவிட அரசாங்க பக்த வாழ்வு ஒரு விதத்திலும், நாணையமற்றதாகவோ சுயமரியாதை அற்றதாகவோ, யோக்கியமற்ற தாகவோ ஒரு இடத்திலும் நாம் ஒரு நாளும் காண முடியவில்லை.

இன்றைய உலக, சமுக வாழ்வு முறையில் ஒரு மனிதன் ஒரு அரசாட்சியின் கீழ் பிரஜையாய் இருப்பது எவ்வளவு அவமானகரமான வாழ்வு அல்லவோ அது போல்தான் ஒழுங்குக்கு கட்டுப்பட்ட எந்த அரசியல்வாதியும் ஒரு அரசாங்கத்துக்கு அனுகூலமாகவும் அதனுடைய சட்டதிட்டங்களுக்கு அடங்கினவனாகவும், அரசாங்க விஸ்வாசனாகவும், அரசாங்க பதவியாளனாகவும் இருப்பது குற்றமில்லை என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லுவோம்.

ஆனால் பார்ப்பனர்களுக்கு அடிமையாக, பார்ப்பன தாசராக, பார்ப்பனர்களையும், அவர்களது ஆதிக்கம் நிலைநிற்கத்தக்க கொள்கைகளையும் ஆதரிக்கும் குலாமாக, தாசராக இருப்பது என்பது மாத்திரம் ஒரு நாளும் நீதியோ, சுயமரியாதையோ, வீரமோ, பரிசுத்த ரத்த ஓட்டமுள்ள சரீரம் கொண்ட ஜீவத் தன்மையோ ஆன காரியமாக ஆகவே ஆகாது.

இன்று பார்ப்பனர்கள் பின்னால் அவர்கள் தயவால் பிழைப்பை ஏற்படுத்திக் கொண்ட காரணத்தால் அவர்களது வாய்களாய், உதடுகளாய், அடிமைகளாய், அவர்களைச் சுவாமி என்று கூப்பிட்டுக் கொண்டு, முன்னோடும் பிள்ளைகளாய் திரியும் மானங்கெட்ட மக்கள் எத்தனையோ பேர், சிறிதும் வெட்கமில்லாமல் தங்களைத் தேசபக்தர்கள்  தேசீயவாதிகள் தேசீய வீரர்கள் என்று சொல்லிக் கொண்டு வயிறு வளர்க்கும் அவமானத்தைவிட இழிவைவிட அரசாங்கத்துக்கு தாசராய் இருந்து வயிறு வளர்ப்பதோ, பெருமை பெறுவதோ ஒரு நாளும் ஒரு கடுகளவும் இழிவான  அவமானமான காரியம் ஆகாது என்பதுடன் அதற்காக எந்தப் பார்ப்பனரல்லாதாரும் பின் வாங்கவோ மறுக்கவோ முயற்சிக்க வேண்டியதில்லை என்றும் சங்கநாதம் செய்வோம்.

பிழைக்க வேறு வழியில்லாமலும், மானம் ஏற்படக் கூடிய ரத்த ஓட்ட மில்லாமலும் திரிகின்ற அனேக காலிகள் தங்களுக்குப் பேச சக்தி இல்லாத காரணத்தாலும், நியாயமான காரணங்களைச் சொல்லி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் முதலிய பார்ப்பனரல்லாதார் கட்சிக் கொள்கைகளை மறுக்க யோக்கியதை இல்லாததாலும் “”ஜஸ்டிஸ் கட்சி சர்க்கார் தாசர் கட்சி, அரசாங்க குலாம் கட்சி, வெட்கங் கெட்ட கட்சி, மானம் கெட்ட கட்சி” என்று மடத்தனமாகவும், அயோக்கியத்தனமாகவும் குறைக்கிறார்கள். இவர்களது குறைப்புகளை கிராமப்போனில் பிடித்து மெஷின்களில் வெளியிடுவது போல் பார்ப்பனப் பத்திரிகைகள் விளம்பரப்படுத்தி பார்ப்பனரல்லாத கட்சியார் மீது துவேஷத்தை உண்டாக்கி அதன் பயனை அனுபவிக்கின்றன.

இந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் காரணமாக தோழர்கள் காந்தியார், டி. பிரகாசம், சி. ராஜகோபாலாச்சாரி முதலிய பார்ப்பன தாசரும், பார்ப்பனரும் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியைவிட, பிரிட்டிஷ் கவர்ன்மெண்ட் ஆட்சியே மேலானது என்று சொல்லி “”அரசாங்கத்தாசராகவும், குலாம்” களாகவும் ஆவதே மேல் என்று கருதி காங்கிரஸ் பக்தர்களை “”குலாம்” வேலைக்குப் போக இன்று உசுப்படுத்தி விட்டிருக்கவில்லையா?

இனிமேல் இக்கூட்டத்தார் எவ்வளவு விஷமம் செய்தாலும், எவ்வளவு சூழ்ச்சி செய்தாலும் அரசாங்கத்துக்கு எவ்வளவு அடி பணிந்தாலும் அவை ஒரு சிறிதும் பயன்படப் போவதில்லை என்பது நமது உறுதி. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கை என்பது இனி நம் நாட்டில் இராமாயணக் கதையில் “”வாலியை எதிர்ப்பவனுடைய பலம் எல்லாம் வாலிக்கே வந்து சேரும்” என்று சொல்லப்பட்டது போல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எவ்வளவுக்கு எவ்வளவு எதிர்க்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அக் கொள்கைக்கு பலமும் செல்வாக்கும் பலப்பட்டுக் கொண்டேதான் வருகிறது.  வந்து கொண்டேதான் இருக்கப் போகிறது.

தங்களைத் தவிர சமதர்மத்துக்கு வேறு பாஷியக்காரர்கள் இல்லை என்று கருதிக் கொண்டிருக்கிற ஏட்டுச்சுரக்காய் வாதிகளுக்கு வேண்டுமானால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தப்பாக காணப்படலாம். ஆனால் அந்தக் கட்சி கூச்சலளவோடு சரி என்றும், பார்ப்பனர் கொடுக்கும் சபாஷ் பட்டத்தோடும் சரி என்றுதான் சொல்லலாமே தவிற மற்றபடி வகுப்புவாரி முறை சமதர்மத்தில் கல்லெழுத்துப் போல் இடம் பெறத்தான் போகிறது.

மேலும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கையானது சென்னை மாகாணத்தில் தமிழ்நாட்டில் மாத்திரமல்லாமல், கர்நாடக நாடு என்னும் மைசூர் ராஜியத்தில் வெகு நாளைக்கு முன்பே ஏற்பட்டு விட்டது. சென்ற வாரத்துக்கு முந்தின வாரத்தில் திருவாங்கூர் ராஜ்ஜியத்திலும் வகுப்புவாரி முறை ஏற்படுத்தப்பட்டாய்விட்டது.

இனி கொச்சி சமஸ்தானத்திலும் அதற்கு வேண்டிய எல்லாக் காரியமும் செய்யப்பட்டாய் விட்டது. புதுக்கோட்டை சமஸ்தானத்திலும் விதை ஊன்றியாய்விட்டது.

இவை தவிர, இதர மாகாணங்களாகிய டெல்லி, பஞ்சாப் முதலிய மாகாணங்களிலும், விதை விதைக்கப்பட்டாய்விட்டது. அரசியல் சீர்திருத்தச் சட்டத்திலும் கிளர்ச்சியோடு பலமாக இடம் பெற்றுவிட்டது.

உலகில் அமெரிக்கா முதலிய குடியரசு நாடுகளிலும் மற்றும் மதம், ஜாதி, தொழில் ஆகியவைகளால் பிரிக்கப்பட்ட நாடுகளிலும் வகுப்புவாரி முறை செல்வாக்குப் பெற்றுவிட்டது.

இனி, இந்தப் பார்ப்பனர்கள் இதற்காக பாடுபடுவது என்பது தங்கள் யோக்கியதையைக் கெடுத்துக் கொள்வதற்காக செய்யப்படும் முட்டாள் தனமான காரியம் என்பதல்லாமல் வேறில்லை.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைக் குறை கூற நாளாவட்டத்தில் அது விரிவடைகிறதே தவிற இனி ஒரு நாளும் அடங்கப் போவதில்லை.

சென்ற மாதத்தில் நமது மாகாணத்தில் ஸ்தல ஸ்தாபனங்களுக்கும், ஸ்தல ஸ்தாபன பள்ளிக்கூடங்களுக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறைப்படி சிப்பந்திகள் நியமிக்க உத்திரவு வந்துவிட்டது.

இனி சர்க்கார் சகாயம் பெரும் பள்ளிக்கூட உபாத்தியாயர்களுக்கும், சிப்பந்திகளுக்கும்கூட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ விகிதப்படி சிப்பந்திகள் நியமிக்கப்பட முயற்சிகள் நடக்கிறது. அது கிடைக்கும் வரை யாரும் சும்மா இருக்கப் போவதில்லை.

அவ்வளவு மாத்திரம் தானா என்று பார்த்தால், பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்படும் பிள்ளைகளும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ விகித எண்ணிக்கைபடிதான் சேர்க்கப்பட வேண்டும் என்கின்ற நிலை ஏற்பட்டா லொழிய சாந்தி ஏற்படும் என்பதாக நாம் நினைக்கவில்லை.

ஏனென்று கேட்கப்படுமானால் கேவலம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கேட்பதற்காக இந்நாட்டுப் பூர்வீக மக்களும் 100க்கு 90 பாகம் அரசாங்கத்துக்கு வரி செலுத்தும் மக்களும், இந்நாட்டு பார்ப்பன மக்கள் முழுவதும் உயிர் வாழ்வதற்கும் அவர்களது பஞ்சாங்க தர்ப்பைப் புல் தொழிலும் பல்லைக் கெஞ்சிக் கெஞ்சி பிச்சை வாங்கிப் பிழைக்கும் தொழிலிலும் மற்றும் எவ்வளவோ ஈனத் தொழில்களும் ஒழிந்து, இன்று ராஜாக்கள், பிரபுக்கள், மடாதிபதிகள் போல் வாழ்க்கை நடத்துவதற்கு அனுகூலமாய் இருந்து உழைத்து உழைத்து அழுத பார்ப்பனரல்லாத ஏழைப் பாட்டாளி மக்களைக் கெடுக்கவும், இழிவு படுத்தவும், அவர் என்றும் தலை எடுக்காதபடி அழுத்தி வைக்கவும், அவர்களது ஸ்தாபனங்களுக்குத் தொல்லை கொடுக்கவும், அவர்களது தலைவர்களை ஒழிக்கவும், துணிந்து விட்டார்கள் என்றால், இந்த நன்றி விஸ்வாசமில்லாத கூட்டத்தை பழையபடி பஞ்சாங்கம் தர்ப்பைப்புல் பிழைப்புக்குக்கூட இடமில்லாமல் செய்வதில் என்ன குற்றம் என்று கேட்கின்றோம்.

தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்களின் சொந்த யோக்கியதையும், பொது யோக்கியதையும் இந்த மாகாணத்தில் யாருக்குத் தெரியாது? அப்படிப்பட்ட அவர் இன்று இந்த மாகாணத்து மக்களுக்கு ஏன்? இந்திய 35 கோடி மக்களுக்கு அரசியல் தலைவராக்கப்பட்டு அவரால் நாக்கில் நரம்பில்லாமலும், ரத்தத்தில் சொரணை இல்லாமலும், நெஞ்சில் பயமில்லாமலும் பேசப்பட்டு, பார்ப்பனரல்லாத மக்கள் இழிவுபடுத்தப் படுவதென்றால் அப்படிப்பட்டவர்கள் விஷயத்தில் அப்படிப்பட்டவர்களுக்கு ஆதரவளித்து வாழ விரும்புகிறவர்கள் விஷயத்தில் ஏன் தாக்ஷண்யம் பார்க்க வேண்டும் என்பது நமக்கு விளங்கவில்லை.

இன்றைய தினம் பார்ப்பனர்களை எதிர்க்கவும் அவர்களது யோக்கியதை வெளியாக்கவும் நமக்குத் தக்க சந்தர்ப்பமும், சௌகரியமும் ஏற்பட்டு வருவதற்கு ஆதாரமாய் இருப்பது பார்ப்பனர்கள் நமது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமையை எதிர்ப்பதும் அதன் காரணமாகவே நம் ஸ்தாபனங்களையும், தலைவர்களையும் இழிவுபடுத்துவதும், நம் ஆட்களையே கூலிக்கமர்த்தி நம் மீது ஏவி விடுவதுமேயாகும். ஆகையால் இந்த நிலை, அதாவது இப்பார்ப்பனர்கள் கிளர்ச்சியும் அவர்களது கூலிகளுடைய குலைப்பும் இனியும் நிலைத்திருக்க வேண்டும் என்றே விரும்புகின்றோமே ஒழிய இது அடங்கிவிட வேண்டுமென்று நாம் உண்மையாகவே ஆசைப்படவில்லை.

நிற்க, இன்று அமுலில் இருக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ விகிதம் ஏற்படுத்தப்பட்டு 5, 6 வருஷ காலமாகிவிட்டதால் இனியும் அந்த விகிதமே பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்பவர்களுக்கு போதுமா என்று கேட்கின்றோம். இது மிகுதியும் நியாயமற்றதும், போறாததுமானது என்பது நமது அபிப்பிராயம்.

ஏனெனில், 100க்கு மூன்று பேராய் உள்ள பார்ப்பனர்களுக்கு 100க்கு 16லீ ஸ்தானங்கள் அளிக்கப்பட்டிருக்கிறது. மீதி உள்ள ஸ்தானங்களில் மகமதியர்களுக்கு 12, கிறிஸ்தவர்களுக்கு 6 ஸ்தானங்கள் போக மீதி 62 ஸ்தானங்களே 100க்கு 75 பேர்களுக்கு மேல் உள்ள சமுதாயமாகிய பார்ப்பனரல்லாத இந்துக்கள் ஆதி திராவிடர்கள் என்கின்ற இரு சமூகத்துக்கும் கொடுக்கப்பட்டிருப்பது என்றால் இது எப்படி நியாயமாகும்.

இந்த முறை ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் இதற்காக என்னதான் சமாதானம் சொல்லப் பட்டிருந்தாலும் 5, 6 வருஷம் பொருத்தும் இப்போதும் அந்த முறையே இருக்க வேண்டும் என்பதற்கு என்ன அவசியம் என்று கேட்கின்றோம். இந்த 5, 6 வருஷ காலமாய் இந்த முறைப்படி வினியோகிக் கப்பட்டு வந்தும், இன்று கணக்குப் பார்த்தால் அதற்கு முன் இருந்த நிலைமையைக் குறிப்பிட வேண்டிய ஒரு சிறு அளவுக்குக்கூட அசைத்ததாகத் தெரியவில்லை. மொத்தம் இந்து சமூகத்தில் கிட்டத்தட்ட 100க்கு 25 விகிதம் உள்ள ஆதி திராவிட சமூகத்துக்கு 100க்கு 6 ஸ்தானம் என்பது எவ்வளவு கொடுமையான விகிதம் என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.

ஆகையால் பார்ப்பனர்களுக்குள்ள 16 ஸ்தானங்களை இனியும் கொஞ்ச காலம் வரை 10 ஸ்தானமாகவாவது ஆக்கிவிட்டு, அதை தாழ்த்தப் பட்ட மக்கள் என்பவர்களுக்கும், பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்பவர் களுக்குமாகப் பகிர்ந்து கொடுத்துவிட வேண்டும் என்றே சொல்லுகின்றோம்.

எந்தக் காரணத்தை முன்னிட்டும் பார்ப்பனர்களுக்கு 100க்கு 16லீ ஸ்தானம் வழங்குவதும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 100க்கு 6 ஸ்தானமே வழங்குவதும் இனி அரை நாழிகை கூட பொருத்துக் கொண்டிருக்கக்கூடிய காரியம் அல்ல என்றே கூறுவோம்.

நமது பார்ப்பனரல்லாத சட்டசபை அங்கத்தினர்களில் பெரும் பகுதிப் பேர் பார்ப்பனரல்லாத சமூகத்துக்குப் பிரதிநிதிகள் என்று சொல்லுவது சுத்த முட்டாள்தனமே யாகும். அவர்களில் பெரும் பகுதி பேர் பார்ப்பனர்கள் பிரதிநிதிகள் என்றும், பார்ப்பனர்கள் அடிமைகள் என்றும் சொல்லக் கூடியவர்கள் என்றுதான் சொல்ல வேண்டி இருப்பதற்கு வருந்துகிறோம்.

நமது மந்திரிமார்களும் இவ்விஷயத்தில் போதிய உணர்ச்சி அற்றவர்கள் என்று சொல்ல வேண்டியிருக்கிறதற்கு வருந்துகிறோம்.

ஆகையால், அடுத்து கூடப் போகும் சட்டசபைக் கூட்டத்தில், இந்த வகுப்புவாரி முறை விகிதத்தை மாற்றி பார்ப்பனரல்லாதாருக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பார்ப்பனர்களுக்குள்ள ஜனத் தொகை விகிதாச்சாரத்தில் 3ல் ஒரு பங்கு வீதமாவது ஜனத் தொகைக்குத் தகுந்தபடி ஏற்படும்படியாக முயற்சி செய்யப்பட வேண்டும் என்பதோடு மற்றும் பல துறைகளுக்கும் இம்முயற்சியை விரிவாகச் செய்ய வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

குடி அரசு  தலையங்கம்  01.09.1935

You may also like...