சம்பளக் கொள்ளை

 

இன்று நாடெங்கும் படித்த மக்களின் கஞ்சிக்கில்லாத் திண்டாட்டங்கள் நெஞ்சைப் பிளக்கின்றன. இக்காட்சி பாமர மக்கள் திண்டாட்டத்தைப் பார்க்கும் காட்சியைவிட மிக மிக பரிதாபகரமாகவே இருக்கிறது.

படித்த மக்களென்போரும், பாமர மக்களென்போரும் 100க்கு 90 பேர்கள் பார்ப்பனரல்லாதார்களாகவே இருக்கிறார்கள். பாமர மக்கள் என்பார்களிலாவது பலருக்கு பட்டினி கிடந்து பழக்கமுண்டு. பலர் இரண்டு நாள் மூன்று நாள்களுக்கு ஒருமுறை சமையல் செய்கின்றவர்களாகவும் ஒரு நாள் செய்த சமையலில் தண்ணீரை ஊற்றி வைத்து தினம் தினம் அந்தத் தண்ணீரை வடித்து அதில் உப்பைப் போட்டுக் குடித்துவிட்டு, மறுபடியும் தண்ணீரை ஊற்றிப் பாத்திரத்தை நிரப்பி வைத்து மறு நாளைக்கு அந்த மாதிரியே செய்பவர்களுமாவார்கள்.

ஆனால் படித்தவர்கள் நிலை என்பதோ அப்படி இல்லை. படிப்புக்கு செலவாக வேண்டிய நாள் கு.கு.ஃ.இ. ஆனாலும் குறைந்தது 11 வருஷம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

இதற்குப் பணமோ பட்டணவாசியானால் 1000 ரூ. முதல் 1500 ரூபாயுக்குக் குறையாமலும் கிராமவாசியானால் 2000 ரூ. முதல் 2500, 3000 ரூபாயுக்குக் குறையாமலும் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

பள்ளிப் பிள்ளையாய் இருக்கும்போது அவர்களது வாழ்க்கையோ அவர்களது வீட்டில் சாப்பாட்டுக்கும், உடைக்கும் எவ்வளவு கஷ்டமாய் இருந்தாலும் அதைக் கவனிக்காமல், பிள்ளைகளுக்கு வேளை வேளைக்குச் சாப்பாடு, நல்ல துணி, செலவுக்குக் காசு முதலியவைகள் தாராளமாய் உதவி, தரித்திரம் ஏழ்மை என்பது இன்னது என்றே தெரிய முடியாமல் செல்வவான் குழந்தைகளோடு ஒன்றாகப் பழக்கப்படுத்தப்படுகிறார்கள்.

இப்படிப்பட்ட பிள்ளைகள் பி.ஏ., எம்.ஏ., அல்லது வேறு காலேஜ் படிப்புகள் படிக்க ஆரம்பித்துவிட்டால், அவர்களது  குடும்பம் திண்டாடித் தெருவில் நின்று சுயமரியாதை அற்று வாழ்வதாய் இருந்தாலும், இந்தப் பிள்ளைகளுக்கு மாதம் 35, 40, 50, 60 ரூபாய்கள் வீதம் முக்கிய பட்டணங்களுக்கு அனுப்பி அங்கு ஜமீன்தார் வீட்டுப் பிள்ளைகளுக்கும் குடியானவன் வீட்டுப் பிள்ளைகளுக்கும் வித்தியாசமில்லாதபடி வாழ்க்கை நடத்திப் பழக்கப்பட்டவர்களாவார்கள்.

இந்த மாதிரி பிள்ளைகள் படித்து ஏதோ ஒரு வகையில் தேர்ச்சியோ பட்டமோ பெற்றுவிட்டால் பிடித்தது “”சனியன்”கள். கிழிந்த வேஷ்டிகளையும் கிழிந்த சொக்காய்களையும் உடுத்திக் கொண்டு கதவு வைத்த வீட்டு வாசல்களிலெல்லாம் காத்துக் காத்துச் சலித்து இவர்களுக்கு வேலை கொடுக்காதவர்களையும் சிபார்சுக் கடிதம் கொடுக்காதவர்களையும் வைதுவிட்டுப் போவதோடல்லாமல் “”ஜஸ்டிஸ் கட்சி ஒழிந்து பார்ப்பனர் கட்சி (காங்கிரஸ்) ஆட்சிக்கு வந்தாலாவது உத்தியோகம் கிடைக்கு”மென்றும், “”இந்த கவர்ன்மெண்டு ஒழிந்து சுயராஜ்ஜிய கவர்ன்மென்டானால் உத்தியோகம் வரும்” என்றும், “”பணக்காரர்கள் ஒழிந்து விட்டால் யாதொரு குறையும் ஏற்படா”தென்றும், “”பிரிட்டிஷ் ஆதிக்கமே இருந்தால் கட்டாயம் வேலை கிடைத்திருக்கும்” என்றும், இன்னும் எப்படி எப்படியோ உளரிக் கொண்டு திரிவதும், அவர்களது வீட்டார் “”இந்தப் பிள்ளை பாஸ் பண்ணிவிட்டு வந்தவுடன் பெரிய உத்தியோகத்துக்கு வந்து கலெக்டர்களாகி, ஜட்ஜுகளாகி, மந்திரிகளாகி 4000, 5000 சம்பள மேற்பட்டு ஆயிரக் கணக்காய் வளித்து கொட்டிக் கொள்ளலாம்” என்று கருதி இருந்தவர்கள் ஏமாற்றமடைந்து சிபார்சு கடிதம் வாங்க சிபார்சு பிடிப்பதற்கு ஆளைத் தேடிக் கொண்டு தெருத் தெருவாய் திரிவது ஒரு புறமும்,

மற்றொரு புறம் உத்தியோகத்துக்கு ஆள்கள் தேவை என்கின்ற விளம்பரங்களைக் கண்டு  பிடிக்க பூதக்கண்ணாடி வைத்து பத்திரிகைகளைத் தேடித் தேடி கண்களைப் போக்கிக் கொண்டு திரிவதும்,

இவற்றையெல்லாம் விட மிக மிகக் கொடுமை என்று சொல்லும்படியாக உத்தியோக வினியோகத்துக்காக, சர்க்காரால் ஏற்படுத்தப்பட்ட பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்கு விண்ணப்பம் போட விளம்பரங்கள் பார்த்து, விண்ணப்பம் தயார் செய்து 16 ரூ. கொடுத்து டாக்டர் சர்ட்டிபிக்கேட் பெற்று 5 ரூபாயோ, 10 ரூபாயோ விண்ணப்பத்துடன் சேர்த்து அனுப்புவதும், அவர்கள் நேரில் பார்க்க வேண்டுமென்று சொல்லிவிட்டால் மேல் கொண்டு 10 ரூ, 20ரூ சில ஊர்களிலிருந்து போக 30 ரூ வீதம் செலவழித்துக் கொண்டு போய் வெறுமையாய் திரும்பி வருவதுமான கோரக் காட்சிகள் நெஞ்சை உருக்குகின்றன.

வாழைக் குருத்து போன்ற இளம் வாலிபர்கள்  தங்களுடைய உள்ளத்தை வீரத்துடனும், சுயமரியாதையுடனும் வளர்க்கப்பட வேண்டியவர்கள்  ஒவ்வொருவரும் லெனின் போலவும், ஸ்ட்டாலின் போலவும், புரட்சி வீரர்களாகவும், சர்வாதிகார சூரர்களாகவும் ஆக வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட வேண்டியவர்கள். இந்த மாதிரியாக அலைந்து திரிந்து மனம் உடைந்து காங்கிரசில் சேர்ந்து எலக்ஷன் கூலிப் பிரசாரம் செய்வோமா, ஜஸ்டிசில் சேர்ந்து காங்கிரசின் யோக்கியதையை வெளியாக்கும் கூலிப் பிரசாரம் செய்வோமா, சுயமரியாதையில் சேர்ந்து சிபார்சு கடிதம் பெறும் கூலிப் பிரசாரம் செய்வோமா என்று எவ்விதக் குறிப்பும் இல்லாமல், வாரத்துக்கு ஒரு கட்சி சார்பாய்ப் பேசி 10 நாளைக்குக் கூட ஒரே கட்சியில் இருந்து பார்ப்போம் என்கிற பொறுமை கூட இல்லாமல், மாறி மாறி உளறிக் கொண்டு திரிவதுமான இழிவான நிலைமையில் அவதிப்பட்டுக் கொண்டிருப்ப தானால், இந்த நாட்டுக்கோ ஆட்சித் திறத்துக்கோ என்ன பெருமை இருக்கின்றது என்பது நமக்கு புலப்படவில்லை.

படித்த பிள்ளைகளின் பெற்றோர்கள் படும்பாட்டை இவ்வளவு அவ்வளவு என்று உள்ளபடி எடுத்துச் சொல்ல நமக்குச் சிறிதுகூட சக்தி இல்லை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கின்றது.

இன்று ஜஸ்டிஸ் கட்சி தூற்றப்படுவதும் அதை பல பார்ப்பனரல்லாத வாலிபர்கள் குறை கூறிக் கொண்டு திரிவதும் அரசாங்கத்தைப் பற்றி கண்டபடி உளறிக் கொட்டி வைத்து பாமர ஜனங்களுக்கு அதனிடத்தில் வெறுப்புண்டாகும்படி துஷ்டப் பிரசாரம் செய்யப்படுவதுமான  காரியங் களுக்கு முக்கிய காரணம் என்ன என்று பார்த்தோமானால் உத்தியோகம் இல்லாமல் திண்டாடப்படுபவர்களால் ஏற்பட்ட கிளர்ச்சி என்று சொல்லுவதற் கில்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்?

படித்துவிட்டு உத்தியோகமில்லாமல் திரியும் வாலிபர்களுடைய ஆத்திரமும், கஷ்டமும், கொடுமையான வாழ்வும் ஒருபுறமும் பாமர மக்களில் வேலை இல்லாமல் திண்டாடும் கஷ்டமும், தரித்திரமும், கொடுமையான வாழ்வும் மற்றொரு புறமும் சேர்ந்துவிட்டது.

பாமர மக்கள் படும் கஷ்டம் என்னும் நெருப்புக்குப் படித்தவர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் என்னும் நெய்யைப் பார்ப்பனர்கள் என்கின்ற யாக கர்த்தாக்கள் ஆகுதியாக்கிவிட்டு கிளர்ச்சி என்னும், ஓமம் வளர்த்தி நாட்டில் எங்கும் சமாதானம் இல்லாமை என்னும் பலனை உண்டாக்கி வருகிறார்கள். இக் கிளர்ச்சிக்கு பார்ப்பனர்களே முக்கிய ஆதாரக்காரர் என்றாலும் உத்தியோகமின்மையில் ஏமாற்றமடைந்த அறிஞர் சி.ஆர். ரெட்டி போன்ற சில பார்ப்பனரல்லாதார்களும் அவர்களை ஆதரிக் கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

இக் கிளர்ச்சிக்கு யார் காரணமாய் இருந்தாலும், அவர்கள் சுயநலத்தோடு செய்கிறார்களா, பொதுநல  நோக்கத்தோடு செய்கிறார்களா என்பது ஒருபுறமிருந்தாலும், இக் கிளர்ச்சிக்கு இடம் கொடுக்கும் வேலை யில்லாத் திண்டாட்டத்தை எப்படியாவது ஒழிக்க வேண்டியதே இன்றைய அரசாட்சியுடையவும் அரசாங்கத்தின் ஆதிக்கம் பெற்றிருப்பவர்களுடையவும் கடமையாகும் என்பதை நாம் வலியுறுத்திச் சொல்லித்தான் தீருவோம்.

நமது மாகாண ஆட்சியின் ஒரு பாகத்திற்கு ஆதிக்கம் செலுத்துபவர் களாகச் சொல்லப்படும் ஜஸ்டிஸ் கட்சியார் பார்ப்பனர் தொல்லையால் போதிய பலமின்றி இருக்கிறார்கள் என்பதோடு அவர்களால் ஏதாவது செய்யக் கூடுமானாலும் செய்ய ஆசைப்பட்டாலும் அதையும் செய்யவொட்டாமல் பல சூட்சிகளைச் செய்து ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகளைக் கட்டிப் போட்டு பாமரஜனங்களிடம் வசவு கேட்பதற்கு சவுகரியமாய் இருக்கும்படி செய்து வருவதால் அவர்கள் மீதே நாம் எவ்விதப் பழிகளையும் சுமத்த முடியவில்லை.

ஆனால் சர்க்காரார் இந்த மாதிரியான வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க எவ்வித நல்ல முறையையும் கையாடினார்கள் என்றோ கவலை எடுத்துக் கொண்டு செய்தார்கள் என்றோ சொல்ல முடியாமைக்கு வருந்துவதோடு அரசாங்கமும் இந் நிலைமைக்கு முழுவதும் பொறுப்பானது என்று சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.

நமது வீட்டு வாசல் எப்பொழுது பார்த்தாலும் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் கஷ்டப்படுவோர்களாலேயே நிரப்பப்பட்டிருப்பதுடன் நமது வேலையைக்கூட சரிவரச் செய்ய முடியாமல் இக்கூட்டத்தாராலேயே அசௌக்கியப்படுகின்றோம்.

நிஷ்காரணமாய் அநேகருடைய விரோதத்துக்கும் நிஷ்டூரத்துக்கும் எதிர்ப்புக்கும் ஆளாக வேண்டியும் ஏற்படுகின்றது. இந்த நிலைமையை எப்படி சமாளிப்பது? எப்படிப் போக்குவது? என்கின்ற கவலை எடுத்துக் கொள்ள வேண்டியது நமது அரசாங்கத்தின் முக்கியமான கடமையாகும் என்று வலியுறுத்திக் கூற ஜனநாயக ஆட்சி செலுத்துகின்றோம் என்று சொல்லிக் கொள்ளும் ஆட்சியில் உள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமை உண்டு.

இது விஷயமாய் நமது அரசாங்கத்தில் இப்போது நடந்து வரும் காரியம் எல்லாம் சரியானது என்று சொல்ல முடியவில்லை.

ஏனென்றால் அவசியமில்லாமல் தங்கள் உத்தியோகஸ்தர்களுடைய சம்பளங்களை உயர்த்தி உயர்த்தி மக்களுக்கு உத்தியோக ஆசையும், உத்தியோகப் போராட்டமும் ஏற்படும்படி செய்கிறார்கள். இது அவர்கள் வேண்டுமென்றே செய்யவில்லை என்று சொல்லப்படுமானாலும் அவர்களது நடத்தை இப்பயனை விளைவிப்பதற்கு அனுகூலமாகவே இருக்கிறது என்றாவது சொல்லித் தீர வேண்டும்.

உதாரணமாக இரண்டொரு காரியங்களைக் குறிப்பிடுகின்றோம். இக்காரியத்துக்கு ஜஸ்டிஸ் கட்சி மந்திரியும் ஆதரவாயிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டதற்கு வருந்தாமல் இருக்க முடியவில்லை.

அதாவது ஜில்லா போர்ட் ஆசிரியர்களுக்கு சம்பள கிரேடு ஏற்படுத்தி ஒரு உத்திரவு பிரப்புவித்திருக்கிறார்கள். அதில் ஆ.அ., ஃ.கூ. உபாத்தியாயர்களுக்கு 65 முதல் 100 வரை சம்பளம் ஏற்படுத்தி இருக்கிறார்கள். இது மிகவும் அதிகமான சம்பளம் என்றும் 40 முதல் 60 ரூ. வரை இருந்தாலே படிக்க வேண்டிய மக்களால் தாங்க முடியாததும் வேண்டுமென்றே அதிகமாய் கொடுக்கப்படுவதாகவும் கருதி வந்திருக்கிறோம்.

முதலாவது, இவர்களால் சொல்லிக் கொடுக்கப்படும் படிப்பானது மக்களுக்குப் பயன்படாதது என்று தோழர்கள் டாக்கூர், ராய், போஸ் முதல் அனேக கல்விக் கடல்களும் கலா ஞானிகளும் சொன்ன உண்மையாகும்.

மற்றும் நமது நாட்டு அரசியல் கிளர்ச்சிக்காரர்களும் தோழர்கள் காந்தி முதல் சத்தியமூர்த்தியார் வரை உள்ள காங்கிரஸ்காரர்களும் ஒப்புக் கொண்டதாகும். இந்தப் படிப்பு படித்த மக்களும் 100க்கு 90 பேர்கள் சொந்தப் புத்தி இல்லாதவர்களாகவும், பிறத்தியார் புத்தியைக் கேள்ப்பதற்கு யோக்கியதை அற்றவர்களாகவும் இருந்து வருகிறார்கள்.

இரண்டாவது@ பி.ஏ., எல்.டி.கள் மாதம் 1க்கு 30 ரூ, 35 ரூ சம்பளத்துக்கு வருவதற்கு அநேகப் பேர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்!

அது மாத்திரமல்லாமல் கவர்ன்மெண்டாரால் இவ்வளவு பேர்கள் தான் ஃ.கூ. படிக்க முடியும் என்று நிர்ப்பந்தப்படுத்தி இருந்தும் இனி மேலும் சுலபத்தில் யாரும் ஃ.கூ. படிக்க முடியாதபடி பல தடைகள் அதாவது “”உபாத்தியாயர்களாய் இருந்தவர்கள் தான் ஃ.கூ. வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்” ஆனால் “”ஃ.கூ. பாஸ் செய்தவர்கள் தான் உபாத்தியாயர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்” என்று திருவாழ்தான் குதிரைக்கு புல்லுப் போட்ட மாதிரியான உத்திரவு போட்டு சுலபத்தில் ஃ.கூ. படிக்க முடியாதபடி தடுத்து இருந்தும், அவர்கள் 30 ரூ, 35 ரூ உத்தியோகத்துக்கு வர கெஞ்சுகிறார்கள் என்பதோடு இந்தச் சம்பளத்துக்கும் தள்ள முடியாததும் சுலபத்தில் சபலத்தை உண்டாக்கக் கூடியதுமான சிபார்சுகள் கொண்டு வரப்படுகின்றன.

தாராளமாய் மக்களை ஃ.கூ. படிக்கவிட்டு வகுப்புக்கு பிள்ளைகள் 40, 45 என்று இருப்பதை 20, 22 என்று ஆக்கி சம்பளத்தையும் 35 முதல் 50 என்று ஆக்கினோமானால் கல்வியில் இப்போது இருப்பதைவிட இன்னமும் இரண்டு பங்கு அதிகம் பிள்ளைகள் பட்டம் பெரும்படியாகச் செய்யலாம்.

சாதாரணமாக ஒரு வக்கீல் தொழிலுக்கும், உபாத்தியாயர் தொழிலுக்கும் அனேக வித்தியாசமுண்டு. வக்கீல்கள் பெருத்தால் வழக்கு பெருக்கும், வக்கீல்கள் பலரிடம் ஒழுக்கம் இல்லை என்பதோடு அவர்கள் சமாதானத்துக்கு பங்கமானவர்களாகவும் இருக்கிறார்கள். வக்கீல் தொழிலில் ஒரு மனிதன் உண்மைக்கும் மனச்சாட்சிக்கும் விரோதமாக வியாபாரிகள் போலும் பொது மக்கள் போலும் நடக்க உரிமை உண்டு என்பார்கள். அப்படிப்பட்ட தொழில் கல்வியை கற்க எவ்வித நிபந்தனையும் இல்லை, பி.ஏ. படித்த எவரும் வக்கீல் ஆகலாம் என்பது சர்க்கார் விதியாகும்.

ஆனால் உபாத்தியாயர் தொழிலில் அப்படி இல்லை, அவர்களால் நாட்டுக்கு எவ்வித தீங்கும் இல்லை, அதிகம் பேர்கள் உபாத்தியாயர் களானால் அதிகம் பேருக்கு படிப்புச் சொல்லிக் கொடுக்கத்தான் வசதி ஏற்படலாமே ஒழிய வக்கீல்களைப் போல் தீமைகளை விளைவிக்க மாட்டார்கள். அப்படி இருக்க, வக்கீல் தொழிலுக்கு வரைமுறை இல்லாமல் யாரையும் படிக்கச் செய்துவிட்டு வாத்தியார் தொழிலுக்கு வரையரை நிர்ப்பந்தங்கள் தடைகள் ஏற்படுத்துவது என்றால் அதில் ஏதாவது இரகசியம் இருக்கத்தான் வேண்டும் என்று நினைக்க இடமேற்படுகின்றது.

தவிர, உபாத்தியாயர் படிப்புக்கு வேறுவிதமான கஷ்டமும் இருப்பது அர்த்தமற்றதாகும். அதாவது ஒரு பி.ஏ. படித்தவர் உபாத்தியாயர் படிப்புக்கு விண்ணப்பம் போட 3 ரூபாய் கட்ட வேண்டும். 180 கேண்டிடேட்டுகளே சேர்க்கப்படுவார்கள் என்றால் 1500 பேர் 2000 பேர் விண்ணப்பம் போடுகிறார்கள். ஒவ்வொருவரிடமும் 3 ரூ வீதம் 5000 அல்லது 6000 ரூ. வசூலிக்கப்படுகின்றது. தெரிந்தெடுத்து சேர்த்துக் கொண்ட கேண்டிடேட்டுகள் போக மீதி பேர்கள் அடுத்த வருஷத்துக்கு விண்ணப்பம் போட வேண்டு மானால் மறுபடியும் 3 ரூபாயுடன் போட வேண்டுமாம்.

இது எவ்வளவு கஷ்டமான காரியம் என்பதை அரசாங்கம் கவனிக்க வில்லை என்றால் அது மிகவும் பரிதபிக்க வேண்டிய காரியமல்லவா? இப்படியிருக்க உபாத்தியாயர்களுக்கு இவ்வளவு சம்பளம் கொடுத்தும் 100க்கு 30 பிள்ளைகள் 40 பிள்ளைகள்கூட பாஸ் செய்வதில்லை. இதுவும்கூட அந்த வகுப்பின் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கையில் வடிகட்டி பகுதி பேர்கள் முக்கால்வாசி பேர்களை நிறுத்தி அனுப்பியும் இந்த கதி அடைகின்றன என்றால் இன்னும் சில பள்ளிகளில் 100க்கு 20 வீதம் 25 வீதமே பாசாக்கப்படுகிறார்கள் என்றால் இந்தக் கல்வி நிலைக்கும், பொருப்பற்ற நிலைக்கும் யார் பொறுப்பாளி என்பது ஒருபுறமிருக்க இதை ஏன் மாற்றியமைக்கக் கூடாதென்று கேட்கின்றோம்.

மற்றும் உலகில் மற்ற எல்லாத் தொழிலுக்கும் ஒரு நிபந்தனை உண்டு.

வக்கீலுக்கு எத்தனை கேசு ஜெயிக்கப்படுகிறது? என்பதும் போலீசுக்கு எத்தனை குற்றம் கண்டுபிடிக்கப்படுகிறது? என்பதும் ஜட்ஜிக்கு எத்தனை அபீல்களில் தீர்ப்பு மாறுதல் அடையவில்லை? என்பதும் இப்படியே பல வேலைகளுக்கும் யோக்கியதாம்ச பரீøக்ஷ உண்டு.

உபாத்தியாயர்களுக்கு ஒரு பரீøக்ஷயும் கிடையாது. ஒரு பொறுப்பும் கிடையாது. பையன் பாஸ் செய்தால் வாத்தியாயர் கெட்டிக்காரர். பெயில் ஆகிவிட்டால் பையன் முட்டாள் என்பதுடன் பொறுப்பு தீர்ந்து விடுகிறது.

நிற்க, இந்த செலவுகள் ஏழைப் பெற்றோர்களின் தலையிலேயே சுமரும்படி வைத்திருப்பதால், இதனால் படிக்க முடியாமல் ஏற்படும் கஷ்டம் எவ்வளவு என்பதைக் கவனிக்க வேண்டியதும் அரசாங்கத்தின் கடமை அல்லவா என்று கேட்கின்றோம்.

இப்படி ஏற்பட்டதற்குக் காரணம் எல்.டி. படித்த உபாத்தியாயர்கள் 100க்கு 90 பேர்கள் பார்ப்பனர்களாய் இருப்பதால் கல்வி இலாக்காவில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் இருந்து வந்ததால் என்பதல்லாமல் வேறு என்ன காரணம் என்பது விளங்கவில்லை.

உபாத்தியாயர்கள் சுகமாய் கவலையற்று சாப்பிடும்படியான சம்பளம் கொடுக்கப்பட வேண்டாமா? என்று கேட்கலாம். ஆனால் பிள்ளைகளின் தகப்பனாரின் நிலை, அவர்களின் வரவு, படிக்க வேண்டிய சௌகரியம் ஆகியவைகளைக் கவனிக்க வேண்டாமா என்று கேட்கின்றோம்.

ஒரு நல்ல குடும்பத்துக்கு மாதம் 40, 50 ரூபா போதாதா?

ஆடுகளின் பாதுகாப்புகளைக் கவனித்தால் நரிகளின் கதி என்ன ஆவது என்ற கேள்வி நியாயமானதாகுமா? என்று கேட்கின்றோம்.

கல்வியை அதிகப்படுத்த வேண்டுமென்கின்ற கூக்குரலுக்கு மத்தியில் 100க்கு 8 பிள்ளைகளே படித்திருக்கிறார்கள் என்கின்ற நாட்டில், இம்மாதிரியாக கல்விக்குத் தடை ஏற்படும்படியான காரியங்கள் சர்க்காரால் செய்யப்பட்டால்  ஸ்தல ஸ்தாபனங்களுக்கு நிர்ப்பந்தம் ஏற்படுத்தப் படுமானால் கல்வியைப் பற்றிய சர்க்கார் எண்ணத்தை எப்படிப் பாராட்ட முடியும் என்று கேட்கின்றோம்.

நிற்க, மற்ற இலாக்காக்களிலும் சம்பளங்கள் மனம் பதறும்படியாகவும் சுலபத்தில் சபலமடையக்கூடிய பலவீனத்தைக் கொடுக்கக்கூடியதாகவும் இருக்கின்றது. ஏன் இச் சம்பளங்களைக் குறைக்கக் கூடாது என்பதற்கு சர்க்கார் சரியான சமாதானம் சொல்லவே இல்லை.

வெளிநாட்டில் இருந்து வரும் வெள்ளைக்கார அதிகாரிகளின் சம்பளம் இந்தியர்கள் சம்பளத்தைவிடக் கொஞ்சம் அதிகமாய் இருக்க வேண்டும் என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகிறோம். ஆனால் அவர்கள் அத்தனை பேரும் எப்பொழுதுமே வந்துதான் ஆக வேண்டுமா? என்ற கேள்விக்குச் சரியான விடை இல்லாமல் தான் இருந்து வருகின்றது.

இது ஒருபுறமிருக்க, சில உத்தியோகங்களுக்கு வெள்ளைக்காரர்கள் சம்பளமே இந்தியர்களுக்கும் ஏன் கொடுக்கப்பட வேண்டும்? என்பது விளங்கவில்லை. கோடிக்கணக்கான மக்கள் வேலை இல்லாமல் பட்டினி கிடந்து திண்டாடவும் பத்து லட்சக்கணக்கான படித்த நாகரீகம் பெற்ற மக்கள் என்பவர்கள் உத்தியோகம் இல்லாமல் திண்டாடவும் இவர்களால் நாட்டில் சமாதானம் இல்லாமல், பல தீங்குகளும், தொல்லைகளும் விளையும்படியான காரியங்கள் தொடர்ந்து நடைபெறவுமாய் இருக்கிறதுமான காரியம் ஒரு நாகரீக ஆட்சிக்கு அழகாகும் என்று எப்படிச் சொல்ல முடியும்.

மந்திரிகள் சம்பளம் மிக மிக அக்கிரமமானதோடு அது கிரிமினல் என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால் அச்சம்பளமே இந்தியாவில் நல்ல அரசாட்சிக்கு இடமில்லாமல் செய்து வருகின்றது.

நாய்கள் எச்சில் இலைக்கு சண்டை போட்டுக் கொள்வதுபோல் ஏழை மக்கள் தினம் 2 அணா 3 அணா கூலி வேலைக்கு சண்டை போட்டுக் கொண்டு பட்டினி கிடக்கும் போது, ஜனத் தலைவர்கள், தேச பக்தியாளர்கள் N 4000, 5000 ரூ. உத்தியோகங்களுக்கு சண்டை போட்டுக் கொண்டு அரசாங்கமும் சரிவர நடத்தப்பட முடியாமல்  ஏழைகளின் உண்மையான நிலையும் இன்னதென்று அரசாங்கம் அறிய முடியாமல் செய்யப்பட்டால் இக் கொடுமைகளை எப்படி எடுத்துச் சொல்லாமல் வாய் மூடிக் கொண்டு இருக்க முடியும் என்று கேட்கின்றோம்.

சம்பளக் கொள்ளை ஆட்சியின் பயன் என்று சொல்ல இடமிருக்கக் கூடாது என்பதே நமது ஆசை. சம்பளம் குறைந்தால் ஏழைப் பணக்காரத் தன்மை ஏராளமாய் குறைந்து விடும்.

கொஞ்சம் கொஞ்சமாக தொழில் முறைகள் விர்த்தியாகி, விவசாய முறைகள் விர்த்தியாகி ஜனங்களுக்கு சௌக்கியமும் தாராளமாய் வேலையும் கிடைக்கக்கூடும்.

கேவலம் ஒரு மணிக்கு ஒரு காசுகூட கிடைக்க வழியில்லாததும், கைத்தொழில் முறையையும் ஏழைகள் முற்போக்கடைவதையும் கொலை செய்வதற்கு ஒப்பானதுமான ராட்டினப் பிரசாரத்தில் எவ்வளவு மக்கள் தங்கள் புத்தியை இழந்து மயங்கிக் கிடக்கிறார்கள் என்று பார்த்தால் உண்மையாக பயன்படுவதான காரியங்களான தொழில்முறைகளை சர்க்கார் செய்து வந்தால் எவ்வளவு நன்மையும், நல்ல எண்ணமும் புகழும் நமது சர்க்காருக்கு ஏற்படக் கூடும் என்பதை சிறிது யோசித்தாலும் விளங்காமல் போகாது.

ஆகவே, அரசாங்கத்தார் அரசாங்க சம்பளங்களைக் குறைத்தாலல்லாது இன்று இந்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்க முடியாது என்பதோடு மாத்திரமல்லாமல், மனித சமூகத்தில் இருந்து வரும் அனேக கொடுமைகளை ஒழிக்கவும் முடியாது என்று சொல்லுவோம்.

சம்பளத்தைக் குறைத்தால் சம்பளம் குறைந்த பணம் மீதியாவதோடு அனேக நிர்வாக உத்தியோகங்களையும் குறைக்கலாம். எப்படி எனில், சம்பளத்தால் குறைக்கப்பட்ட பணங்களைக் கொண்டு ஆங்காங்கு தொழிற்சாலைகளை அரசாங்கத்தார் ஏற்படுத்தலாம். அதனால் அநேகருக்குத் தொழில் ஏற்பட்டுவிடும். இதனால் மக்கள் தொழில் இல்லாமலும் ஜீவனத்துக்கு மார்க்கமில்லாமலும் இருப்பதினால் செய்யப்படும் திருட்டு, கொள்ளை, சமாதானக் கேடான குற்றங்கள், கிளர்ச்சிகள் முதலியவைகள் தானாகவே அடங்கிவிடும். ஆதலால் நிர்வாகக் கோர்ட்டுகளோ சமாதானத் துக்கும் சமாதான பங்கத்தை அடக்கி வைப்பதற்குமாக செய்யப்படும் செலவுகளோ மாத்திரமல்லாமல் ஏழை மக்கள் கவனிக்கப்பட இடமே இல்லாமல் போனதற்கு காரணமான இச்சம்பளக் கொள்ளை சண்டையும் இல்லாமல் போய்விடும்.

ஆகவே படிப்புக்கு இடையூறாகவும், ஏழை மக்களுக்கு வேலை கிடைப்பதற்கும் அவர்கள் பட்டினி கஷ்டப்படாமல் இருப்பதற்கும் ஏற்ற தொழில்களுக்கு இடையூறாகவும், மக்களின் சமாதானத்துக்கு இடையூறாகவும் இருந்துவரும் சம்பளக் கொள்ளை ஒழிக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமான காரியங்களில் ஒன்றாகும்.

இக் குற்றத்துக்கு யார் பொறுப்பாளி என்று பார்ப்போமேயானால் இச் சம்பளங்கள் பெரும்பாலும் காங்கிரசினாலும், காங்கிரஸ் கிளர்ச்சியினாலும் தேசாபிமானிகள் தேச பக்தர்கள் என்றவர்களாலும் நிர்ணயிக்கப் பட்டு கிளர்ச்சி செய்யப்பட்டு ஏற்பட்ட துன்பமான காரியம் என்றுதான் சொல்லவேண்டுமே ஒழிய, சர்க்காரையோ ஜஸ்டிஸ் கட்சியாரையோ முழுதும்  பொறுப்பாளிகளாக்கிவிட  முடியாது  என்பது  நமது  அபிப்பிராயம்.  ஏனென்றால் காங்கிரஸ்காரர்கள் பெரும் பெரும் சம்பளத் திட்டங்கள் ஏற்படுத்திக் கிளர்ச்சி செய்யும் பொழுது இச் சம்பளங்கள் முழுவதும் தாங்களே அடைவோம் என்று கருதி இருந்தார்கள்.

மற்றபடி வேண்டுமானால் இப்படி சம்பளம் ஏற்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட விளைவை  சர்க்காரும், ஜஸ்டிஸாரும் அனுபவிக்கிறார்கள் என்று சொல்லலாம். அதற்கு யார் என்ன செய்ய முடியும்?

சம்பள நிலை இப்படி உள்ள வரையில் அரசியல் கிளர்ச்சி என்னும் பேரால் பெரியதொரு தொல்லையும், சமாதானக் கேடும், வகுப்புத் துவேஷமும், வகுப்புத் துரோகமும், வகுப்புத் துவேஷங்களைக் கிளப்பி விடும் முயற்சிகளும், சுயநலங்களும் உத்தியோகத்துக்காக எந்தக் காரியத்தையும் செய்ய ஆசையும், துணிவும் என்பவைகள் எல்லாம் ஏற்பட்டுத்தான் தீரும் என்பதோடு அது வளர்ந்தும், நிலைத்தும் இருந்து கொண்டும்தான் வரும் என்றும் உறுதியாய்ச் சொல்லுவோம்.

இப்படிச் சொல்லுவதால் அதிக சம்பளம் வாங்கிப் பிழைக்கும் நபர் களுக்கு நாம் விரோதியாகக் காணப்படலாம். ஆனால் பாமர ஜனங்களுக்கு துரோகியாக ஆகி இக் கூட்டத்தார்களின் முகமனுக்கு ஆளாகி தேசபக்தராவதை விட ஈனமான காரியம் வேறு இல்லை என்று கருதுவதால் நாம் நமக்கு சரி என்று பட்டதையும் இன்று முக்கியமாய் செய்யப்பட வேண்டிய காரியம் இன்னது என்று உணர்வதையும்  வெளிப்படுத்தி விடுகிறோம்.

குடி அரசு  தலையங்கம்  25.08.1935

You may also like...