மே விழாவும் ஜூபிலி விழாவும்

 

 

மே மாதம் முதல் தேதியில் மே தினக் கொண்டாட்டமும், மே மாதம் 6ந் தேதி மன்னர் ஜூப்பிலியும் தமிழ்நாட்டில் ஏறக்குறைய ஒன்று போலவே எங்கும் கொண்டாடப்பட்டிருக்கும் விஷயம் தினசரிப் பத்திரிகைகளில் பரக்கக் காணலாம்.

மே தின விழாவானது உலகம் பாடுபட்டு உழைக்கும் மக்களின் ஆட்சியின் கீழ் வர வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டாடுவதாகும்.

ஜூப்பிலி விழா இன்று ஆட்சி புரியும் அரசரின் ஆட்சியைப் பாராட்டியும் அவரது ஆட்சிக்கு கால் நூற்றாண்டு ஆயுள் ஏற்பட்டதை பற்றி ஆனந்தமடைந்தும் இனியும் நீடூழி காலம் இவ்வாட்சி நீடிக்க வேண்டும் என்று ஆசைபட்டும் கொண்டாடியதாகும்.

இந்தியாவின் பிரதிநிதித்துவ சபை என்று சொல்லப்படும் இந்திய தேசீயக் காங்கிரசானது மேற்கண்ட இரண்டு தத்துவங்களுக்கும் விரோதமான மனப்பான்மையைக் கொண்டது.

எப்படியெனில் முறையே (சூத்திரர்) தொழிலாளி, (பிராமணர்) முதலாளி அல்லது அடிமை எஜமான் என்கின்ற இரண்டு ஜாதிகள் பிறவியின் பேரிலேயே இருக்க வேண்டும் என்றும், அன்னிய ஆட்சி என்பதான பிரிட்டிஷ் ஆட்சி கூடாது என்றும் சொல்லும்படியான கொள்கைகளைக் குறிக்கோளாகக் கொண்டதென்று சொல்லிக் கொள்ளும் ஸ்தாபனமாகும்.

ஆனால் இந்திய மக்கள் இந்த இரண்டு கொள்கைகளைக் குறிக்கோளாகக் கொண்ட காங்கிரசை சிறிதும் மதிக்கவில்லை என்பதை இந்த இரண்டு விழாவும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் எடுத்துக்காட்டி விட்டது.

காங்கிரசானது வெளிப்படையாக இந்த இரண்டு விழாக்களையும் எதிர்க்க யோக்கியதை இல்லையானாலும் மனதிற்குள் தனக்கு உள்ள அதிர்ப்தியை பல வகைகளில் காட்டியது போலவே நடித்துக் கொண்டது. ஒரு பயங்கொள்ளித் தீர்மானத்தையும் போட்டு விளம்பரப்படுத்திற்று. என்ன செய்தும் ஜபம் சாயவில்லை.

இந்த இரண்டு விழாவும் இது வரை நடந்ததைவிட பல மடங்கு அதிகமாகவே கொண்டாடப்பட்டுவிட்டது.

இந்த நாட்டில் தேசீய அபிலாசைகளுக்கு சர்வாதிகாரிகளாகவும், ஒரே பாஷ்யக்காரர்களாகவும், இருந்து வந்தவை இந்து, சுதேசமித்திரன் பத்திரிக்கைகள்.

அவைகள் தங்களுக்கு இஷ்டப்பட்டபோது அரசரை விஷ்ணுவின் அம்சம் என்று பூஜிப்பதும் தங்களுக்கு இஷ்டமில்லாதபோது அரசர் மாளிகைக்குள் யாராவது சென்று வந்தால் அவர்களை தேசத் துரோகிகள் என்றும், தேசத்தைக் காட்டி கொடுப்பவர்கள் என்றும் சொல்லுவதுமாய் மக்களை ஏய்த்து ஆட்சியையும் மக்களையும் தங்களுக்கு அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தி வந்தன.

இந்த இந்து, சுதேசமித்திரன் சூட்சிகளையும் அவர்கள் கூட்டத்தினர் களின் மோசங்களையும் கண்டபின் இந்திய மக்கள் பெரும்பான்மையோர் அன்னியர் ஆட்சியாலேயேதான் இக் கூட்டத்தாரின் சூட்சிகளிலும் கொடுமை களிலிருந்தும் விடுதலை பெற முடியும் என்பதைத் தெரிந்து கொண்டார்கள்.

இதை உணர்ந்த இந்து, சுதேசமித்திரன் கூட்டம் இப்பொழுது ராஜபக்திக்குப் போட்டி போட ஆரம்பித்து விட்டன.

அதாவது கொஞ்சகாலத்துக்கு முன்பு இந்நாட்டுக்கு விஜயம் செய்த இளவரசர் அவர்களை என்னஎன்னமோ பொருத்தமில்லாத வீம்புகளையும், வீரியங்களையும் எடுத்துச் சொல்லி பஹிஷ்காரம் செய்யத் தூண்டிய கூட்டம் இன்று நொண்டிச் சமாதானங்களைச் சொல்லிக் கொண்டு நிபந்தனையற்ற சரணாகதி போல் வாழ்த்துப் பாடி இருக்கின்றன.

அதாவது “”மாட்சிமை” தங்கிய ஐந்தாம் ஜார்ஜ் அரசர்,

“”வெள்ளி விழா கொண்டாடும் இந்த சுபதினத்தில் மன்னர் பிரானை நாம் மனப்பூர்வமாகப் பாராட்டுவதோடு அவர் ஆரோக்கியமாக திடகாத்தரராக நீடூழி வாழ்ந்துவர வேண்டுமென்று நாம் பிரார்த்திக்கிறோம்”.

“”அவருடைய இந்தியப் பிரஜைகளுக்கு அவரிடத்தில் பூரண நல்லுணர்ச்சி இருந்து வருமென்பதில் சந்தேகமில்லை”.

“”மனமார வாழ்த்துக் கூறுகிறோம்” என்று எழுதி இருக்கின்றன.

இந்த வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் நாம் ஆ÷க்ஷபிக்க வரவில்லை. இந்தியா ஒட்டுக்குமே பஹிஷ்காரம் செய்த சைமன் கமிசனை வரவேற்று உண்மையை எடுத்துரைத்தவர்களுக்கு அரசரிடத்தில் மனஸ்தாபம் கொள்ள எவ்வித காரணமும் இருக்காதல்லவா. ஆனால் தேசீயப் பித்தலாட்டத்தின் யோக்கியதையை வெளிப்படுத்த இதை எழுதுகிறோம்.

நிற்க, இன்று இந்தியாவில் பிரிட்டிஷ் அரசராலோ, அரசாங்கத்தாராலோ ஏதாவது காரியங்கள் ஆக வேண்டி இருக்குமானால் அது பழய அரசர்களைப் போல் பிராமணர்களைக் காப்பாற்றுவதோ சுதேச அரசர்களுக்கும் ஜமீன்தாரர்களுக்கும் பாதுகாப்புகள் அளிப்பதோ வியாபாரிகளுக்கும் வட்டிக் கடைக்காரர்களுக்கும் கொள்ளை லாபம் உண்டாகும்படி நீதி செலுத்துவதோ அல்ல. இந்தக் கூட்டங்கள் ஏற்கனவே உச்ச ஸ்தானத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தையும் கைக்குள் போட்டுக் கொண்டு சுபீக்ஷமாக ஒன்று பத்தாக அக்ஷயமாக வாழ்ந்து வருகின்றன.

எனவே அரசர் கருணையும் அரசாங்க நீதியும் ஏழை மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அடிமைப்படுத்தப்பட்ட பெண்களுக்கும் ஏதாவது விமோசனம் செய்வதற்குப் பயன்பட வேண்டியதே முக்கியமாகும். இந்தத் துறைகளில் இதுவரை இந்த ஆட்சி ஏழை மக்களுக்கு ஒரு விதாயமும் செய்ததாகத் தெரியவில்லையானாலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பெண் மக்களுக்கும் இதுவரை இந்தியாவில் இருந்த எந்த அரசும் ஆட்சியும் செய்திராத காரியத்தை ஒரு அளவுக்காவது செய்திருக்கிறது என்பதை நாம் தைரியமாய்ச் சொல்லுவோம்.

மற்றும் வேறு யாராவது குறை சொல்வதாய் இருந்தாலும் இத்துறைகளில் இதுவரை செய்தது போதாது என்றுதான் சொல்ல முடியுமே யொழிய ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லிவிட முடியாது.

ஆதலால் நமது மன்னர் அவர்களும் அவரது ஆட்சியும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களால் பாராட்டக் கூடியதே என்பதோடு இந்த ஆட்சியை நீடூழி காலம் நிலவ வேண்டும் என்றும் அவர்களால் வேண்டப்படுவதுமாகும்.

ஏழை மக்களுக்குச் செய்ய வேண்டிய தொண்டு என்பது மாயத்தி னாலும் மந்திரத்தினாலும் சாத்தியப்படக் கூடியதல்ல.

பலர் ஊரைக் கொள்ளையடித்து குதிரில் கொட்டிக் கொண்டு 10 மூட்டை அரிசியை வேக வைத்து நொண்டி, முடம், கூன், குருடு, சோம்பேறி களுக்குப் போட்டுவிட்டால் ஏழை மக்களுக்குப் பெரிய உபகாரம் செய்துவிட்டதாக நினைக்கிறார்கள். இந்த முறை இந்த ஜூபிலியிலும் மே விழாவிலும் கூட பல இடங்களில் கையாளப்பட்டிருக்கிறது.

சிலர் சத்திரமும் சாவடியும் கட்டி சோம்பேறிகளுக்கும் சோதாக்களுக்கும் அன்னமளித்து உறங்க இடம் கொடுத்தால் போதும் என்று நினைக்கிறார்கள். இது ஏழை மக்களை ஏமாற்றுவதேயாகும். இதனால் யாதொரு பலனும் ஏற்படப் போவதில்லை. சோம்பேறிகளும் காலிகளும் தான் இன்னமும் அதிகமாவார்கள்.

சிலர் பார்ப்பனர்களுக்குச் சாப்பாடு, கல்வி, கல்யாணம், சாந்தி முகூர்த்தம் செய்வித்தல் ஆகியவைகளைச் செய்து விட்டால் அதுவே ஏழைகளுக்குச் செய்ய வேண்டிய, பெரிய தருமம் செய்து விட்டதாக எண்ணுகிறார்கள். இவர்களைப் போல கண்காட்சிக்கு அனுப்பக் கூடிய ஞான சூனியர்களைக் காண்பது அரிது என்றுதான் சொல்ல வேண்டும்.

எனவே ஏழைகளுக்கு உதவி செய்வது என்பது ஏழ்மைத் தன்மை மனித சமூகத்தில் இல்லாமல் இருக்கும்படி செய்வதே ஒழிய இங்கொரு வனுக்கு அங்கொருவனுக்கு சோறு போடுவதால் அல்ல என்பதே நமது அபிப்பிராயம்.

ஏழ்மைத் தன்மை என்பது மனித சமூகம் ஒட்டுக்கே அவர்களது சாந்தமான வாழ்க்கைக்கே ஒரு பெரும் தொல்லையும் அசௌகரியமுமான காரியம் ஆகும்.

ஆதலால் மன்னர்பிரான் இந்த ஏழ்மைத் தன்மையை அடியோடு ஒழிப்பதற்கு சென்ற 25 ஆண்டு மாத்திரம் அல்லாமல் இன்னும் 50 ஆண்டும் அல்லாமல் 100 ஆண்டு ஆள வேண்டும் என்றும் ஆசைப்படு கின்றோம். அவரது வெள்ளி விழா, மே விழாவை ஒட்டி வந்திருப்பதாலும், மே விழா வெள்ளி விழாவை விட உலக முழுவதும் சுதந்திரத்தோடும் குதூகலத்தோடும் உணர்ச்சியோடும் கொண்டாடப் பெற்றிருப்பதாலும் இதுவே உலக பாட்டாளி மக்களின் அபிலாசையைக் காட்ட ஒரு சாதனமாய் இருப்பதாலும் அடுத்த விழா அதாவது அரசரின் தங்க விழா சமதர்ம விழாவாக மக்கள் எச்சாதியினராயினும், எம்மதத்தினராயினும், எத்தேசத்தவராயினும் பேதமற்று ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் எங்கும் இல்லாமல் இருக்கும்படியாகச் செய்த தினத்தைக் கொண்டாடும் விழாவாக கொண்டாடப்பட வேண்டும் என்பதே நமதபிப்பிராயமும் ஆசையுமாகும்.

மே திருவிழா விஷயத்தில் தமிழ்நாட்டு மக்கள் நாம் எதிர்பார்த்ததற்கு  மேலாகவே நடந்து காட்டியதற்கு மகிழ்ச்சியோடு பாராட்டுவதுடன் இனி கொண்டாடப் போகும் மே விழாக்கள் மற்றவர்களைப்போல் நாம் ஆக வேண்டுமென்று ஆசைப்படும் திருவிழாக்களாக இல்லாமல் நம்மைப் பார்த்துப் பிறர் பின்பற்ற வேண்டும் என்று ஆசைப்படும் திருவிழாவாக நடைபெற வேண்டுமென்றும் ஆசைப்படுகின்றோம்.

குடி அரசு  தலையங்கம்  12.05.1935

You may also like...