பெண்கள் நிலையம்

 

பெண்கள் நிலையம் என்பது பற்றி தோழர் இராகவன் அவர்கள் ஒரு அறிக்கை குடி அரசில் வெளியிட்டிருந்தார்.

அதைப் பற்றி பல தோழர்கள் நம்மை நேரிலும், கடித மூலமாகவும் கட்டுரைகள் மூலமாகவும் பல கேள்விகள் கேட்டு இருப்பதோடு தங்கள் தங்கள் அபிப்பிராயங்களையும், ஆதரவுகளையும் தெரிவித்து இருக்கிறார்கள். அதற்காக மிகுதியும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில் பெண்கள் விடுதலையும், பெண்கள் முன்னேற்றமும் ஒன்று என்பது இயக்கத்தை அறிந்த தோழர்கள் யாவரும் உணர்ந்ததேயாகும்.

இயக்கத்தின் நோக்கத்தைக் குறிப்பிடும் போதெல்லாம் இதை தெரிவித்தே வந்திருக்கிறோம்.

இந்திய நாட்டில் பெண்கள் சகல துறையிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்து வரும் கஷ்டத்தையும், இழிவையும், அடிமைத்தனத்தையும்விட அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள்.

இக்கொடுமைகளாலும், குறைபாடுகளாலும் பெண்கள் சமூகத்துக்கு ஏற்படும் கெடுதியைவிட ஆண்கள் சமூகத்துக்கே அதிகக் கெடுதி ஏற்பட்டு வருகின்றது.

பெண்களை அடிமையாக வைத்து இழிவாய் நடத்துவதின் பயனாய் ஆண்களுக்கு ஒரு அளவு நன்மை இருக்கின்றது என்று மேலெழுந்தவாரியாய் தெரிகின்றதே தவிர, உண்மையாக ஆண்களுக்கு அதனால் அநேக பொருப்புகளும் கவலைகளும் அதிகமாகி வாழ்க்கையில் நிம்மதி என்பது இல்லாமலும், ஆண்கள், மக்கள் பிராயத்தில் அடைய வேண்டிய அறிவு, கல்வி, வீரம் முதலியவைகளை அடைவதற்கில்லாமலும் வளர்க்கப்பட வேண்டியவர்களாகி விடுகிறார்கள்.

மேல்நாட்டு ஆண் மக்களுக்கு இருக்கும் அறிவு, கல்வி, வீரம் முதலிய குணங்களுக்கும், நம் நாட்டு ஆண் மக்களுக்கு இருக்கும் அறிவு, கல்வி, வீரம் ஆகிய குணங்களுக்கும் உள்ள வித்தியாசங்களுக்கு முக்கிய காரணம் என்னவென்றால் மேல் நாட்டு ஆண் மக்கள் அடிமையாய் வைத்து இழிவாய் நடத்தப்படாத பெண்மணிகளால்  உலக அனுபவமும் கல்வி, அறிவு, சுதந்திர உணர்ச்சியும் உள்ள பெண்மணிகளால் பெற்று வளர்க்கப்படுகிறார்கள்.

நம் நாட்டு  ஆண் மக்கள் என்பவர்கள் அடிமையாகவும், இழிவாகவும் நடத்தப்படும் பெண் யந்திரங்களால்  கல்வி  அறிவு  சுதந்திரம் ஆகியவை அடியோடு அற்ற பெண் உருவங்களால் பெற்று வளர்க்கப்படுகிறார்கள்.

இந்த தாரதம்மியமானது பெண்களை அடிமை கொண்டு நடத்துவதால் ஆண்களுக்கு எவ்வளவு லாபமும், சுயநலமும் இருந்தாலும் அவற்றிற் கெல்லாம் எத்தனையோ பங்கு அதிகமாய் நஷ்டமும் கெடுதியும் உண்டாகி வருகின்றது.

அன்றியும் ஆண்கள் பெண்களை அடிமையாய்  அறிவற்றவர்களாய் வைத்திருப்பதனால் ஆண்களுக்கு பெண்களைக் காப்பாற்ற வேண்டிய பொருப்பும், பாதுகாக்க வேண்டிய பொருப்பும் அவர்களால் தாங்கள் “”சுயமரியாதை”க்குக் கேடும் வராமல் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கவலையும், அவர்கள் மூலம் பெறப்பட்ட பிள்ளை குட்டிகளின் வளர்ப்பையும், கல்வியையும், சௌகரியத்தையும், தேவைகளையும் கவனிக்க வேண்டிய பொருப்பும் அதிகமாவதோடு பொருளாதாரத் துறையில் சகல பாரமும் தாங்களே ஏற்றுக் கொள்ள வேண்டியதுமாகி விடுகின்றது.

ஆகவே பெண்களை அடிமை கொண்டு இழிவாய் நடத்தித் திருப்தி அடைவதோ, லாபம் அடைவதோ என்பது ஒரு மூடநம்பிக்கையிலும், மூடப் பழக்க வழக்கங்களிலும் பட்டதே தவிர உண்மையில் அதனால் எவ்விதத் திருப்தியையோ, சாந்தியையோ, லாபத்தையோ ஆண்கள் அடைவதாக நமக்குத் தோன்றவில்லை.

கல்வி அறிவு, சுதந்திர உணர்ச்சி இல்லாத பெண்களிடம் அதாவது அடிமை கொண்ட பேதைப் பெண்ணிடம் அனுபவிக்கும் இன்பத்துக்கும், கூட்டு வாழ்க்கைக்கும், சுதந்திர உணர்ச்சியும், கல்வி அறிவும் உள்ள பெண்ணிடம் அனுபவிக்கும் இன்பத்துக்கும், கூட்டு வாழ்க்கைக்கும் மலைக்கும் மடுவுக்கும் போன்ற வித்தியாசம் உண்டு. ஆதலால் பெண் மக்களை அடிமைத் தன்மையில் இருந்து விலக்கி அவர்களுக்கு சுதந்திர உணர்ச்சியும், உலக ஞானமும், கல்வி அறிவும், கூட்டு வாழ்வில் சம பொருப்பும் ஏற்படும்படி செய்து விட்டோமேயானால் மனித சமூகத்தின் நன்மைக்கு செய்ய வேண்டிய காரியங்களில் பெரும் பாகத்தைச் செய்தவர்களாவோம். இதனாலேதான் சு.ம. இயக்கம் இதுவரையில் பெண்கள் விஷயத்தில வெகு அதி தீவிரமான திட்டங்களை வலியுறுத்தி வந்திருக்கின்றது; வருகிறது.

ஆகவே பெண்கள் விஷயத்தில் செய்கையில் செய்ய வேண்டியதற்கு அநேக காரியங்கள் இருக்கின்றன. இது வரையில் நாம் ஏதோ அங்கொன்றும், இங்கொன்றுமாக செய்து வந்திருக்கின்றோமே ஒழிய ஒரு நிலையான நிர்மாணமான காரியம் செய்து விட்டதாக சொல்லிக் கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றோம்.

அந்தப்படி அவ்வளவு பெரிய மாறுதலான காரியத்தை நிலையான தாகவும், நிர்மாணமானதாகவும் நம்மால் செய்து விட முடியுமா என்று சிலர் கேட்கலாம். நமக்கு ஒரு சமயம் அவ்வளவு பெரிய சக்தி இல்லை என்றே வைத்துக் கொண்டாலும், சிறிது செய்வதாயிருந்தாலும் சுயமரியாதைக் காரர்களாகிய நம்மால் தான் இது செய்ய முடியுமே ஒழிய மற்றபடி வேறு எவராலும் செய்ய முடியாது என்றுதான் சொல்ல வேண்டியதிருக்கிறது. ஏனெனில் பெண்கள் விடுதலை விஷயத்தில் சுதந்திர விஷயத்தில் கல்வி ஞானம் சுதந்திரம் கொடுக்க வேண்டிய அளவு விஷயத்தில் நமது திட்டத்தில் ஒரு சிறு பாகமாவது ஒப்புக் கொள்ளுகின்றவர்களிடத்தில் தானே ஏதாவது கொஞ்சமாவது நாம் எதிர்பார்க்கலாம். அப்படிக்கில்லாமல் அதற்கு எதிரிகளாய் உள்ளவர்களிடத்தில் எதை எதிர்பார்க்க முடியும்? ஆதலால் சுயமரியாதைக்காரர்கள் அல்லாதவர்கள் பெண்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்க ஒப்புக் கொள்வதைக் காண முடியவில்லை.

எனவே இவ்விஷயத்தில் கவலை எடுத்துக் கொள்ள வேண்டியவர்களும், சிறிதாவது செய்யக் கூடியவர்களும் நாமாகவே இருப்பதால் நம்மால் முடியுமோ முடியாதோ என்பது ஒரு பக்கம் இருந்தாலும், முடிக்கக் கூடியவர்கள் வேறு யாரும் இல்லை என்கின்ற காரணத்தால் அந்த பொருப்பை எப்படியாவது நாம் தான் தலையில் போட்டுக் கொண்டு கூடிய அளவாவது செய்ய வேண்டியவர்களாய் இருக்கின்றோம். இதைப் பற்றி 4, 5 வருஷகாலமாகவே சுயமரியாதைத் தோழர்களுடன் பல சந்தர்ப்பங் களில் கலந்து பேசி வந்திருக்கின்றேன்.

1929 ம் ஆண்டில் எமது வீட்டில் ஒரு சங்கம் ஏற்படுத்தி வாரா வாரம் பெண்களுக்கு ஒருவிதப் பயிற்சிக் கொடுத்தும் வந்தேன். சில காரணங்களால் அது அடைபட்டுப் போயிற்று. ஆன போதிலும் மறுபடியும் அது விஷயமாய்க் கவலையுடன் யோசித்தே வந்திருக்கிறேன்.

பெண்களுக்கென்று ஒரு நிலையம் இருக்க வேண்டும் என்பதும், அவர்களில் ஒரு கூட்டத்தைப் பிரசாரத்துக்கு தர்ப்பித்தி செய்ய வேண்டும் என்பதும் அவசியம் செய்து தீர வேண்டிய காரியம் என்பதில் எனக்கு யாதொரு ஆ÷க்ஷபனையும் கிடையாது. ஆனால் அதற்கு தக்க நிர்வாகமும் வேண்டிய சாதனங்களும் மிகவும் அவசியமானது. அதற்கு இது வரையில் சந்தர்ப்பமும், சௌகரியமும் இல்லாமலே  இருந்து வந்திருக்கிறது. என்னைப் பொருத்த வரை பத்திரிகை பொருப்பும் பிரசார காரியமும் எதிரிகளோடு மாரடிக்க வேண்டிய தொல்லை, விஷமப் பிரச்சாரத்துக்கு மார்பைக் கொடுக்கவேண்டிய கஷ்டமும் பகுத்தறிவு நூற்பதிப்பு மேல் பார்வையும் ஆகிய காரியங்கள் போதுமானதாகவே இருந்து வருகின்றது.

பொருளாதார விஷயத்தில் யாரிடமும் எவ்வித உதவியும் எதிர்பாராமலே இவ்வளவு காரியமும் இந்த 10, 15 வருஷ காலமாய் செய்யப்பட்டும் வந்திருக்கிறது.

இந்நிலையில் புரோகித மறுப்புச் சங்கம் என்னும் பேரால் ஏதோ ஒரு அளவுக்கு திருச்சியில் ஒரு ஸ்தாபனம் வேலை செய்து கொண்டும் வருகின்றது. அதுபோலவே இந்த ஸ்தாபனத்தையும், அதாவது தமிழ் நாட்டு பெண்கள் நிலையத்தின் முக்கிய பொருப்பையும் யாராவது ஏற்று நிர்வகிப்பதாயிருந்தால் மற்றப்படி என்னால் கூடிய உதவியை செய்யத் தயாராய் இருக்கிறேன்.

பெண்கள் நிலையமானதாலும் தீவிரமான திட்டங்களோடு நடத்தப்பட வேண்டியதானதினாலும் மிக மிக ஜாக்கிரதையுடனும், பொருப்புடனும் நடத்தப்பட வேண்டிய காரியமாகும்.

ஆரம்பத்தில் எதிரிகளின் விஷமப் பிரசாரங்களுக்குக் கூடுமான வரை இடம் கொடுக்காமல் நடந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான காரியமாகும்.

சுயமரியாதை இயக்கத் தொண்டர்கள் பலரின் மனோ நிலை நாம் அறிந்திருக்கிறோம். ஆனதினாலேயே எதிரிகளுக்கு இடங் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

பிறத்தியார் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று சொல்லுவார்கள் என்று நினைப்பவர்களால் ஒரு காரியமும் செய்ய முடியாது என்பது ஒரு அறிவு வாக்கியம் தான். ஆனால் அந்த வாக்கியம் பிறத்தியாருடைய மனதில் சில அபிப்பிராயங்களையும், கொள்கைகளையும் ஏற்ற வேண்டிய சந்தர்ப்பத்திலும் பயன்படுத்திக் கொள்ளக் கூடியதல்ல என்பது எனது அபிப்பிராயம்.

ஆதலால் மிகவும் பொருப்புடனும், கவலையுடனும் இந்தக் காரியம் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொண்டு அப்படிப்பட்ட ஒரு நிலையத்தை வெகு ஆர்வத்தோடு வரவேற்கிறேன்.

குடி அரசு  கட்டுரை  28.04.1935

You may also like...