ஏழைகளை வதைக்கும் காங்கிரஸ்காரர்கள்

 

உப்பு வரியும் அரிசி வரியும்

இப்பொழுது உப்பு வரி மணங்குக்கு ஒரு ரூபாய் நாலு அணாவாகும். இதைப் பனிரண்டு அணாவாகக் குறைக்கும்படி காங்கிரஸ்காரர்கள் இந்தியா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். இத்தீர்மானம் அரசாங்கத்தாரால் ஒப்புக் கொள்ளப்படுகிறதா? அல்லது வைசிராய் பிரபுவின் “”வீட்டோ” அதிகாரத்தினால் தள்ளப்படுகிறதா? என்பது வேறு விஷயம். அதைப் பற்றி நாம் இப்பொழுது முடிவு கட்டப் போவதில்லை.

இந்தத் தீர்மானம் நிறைவேற்றியவுடன், காங்கிரசுக்கு ஜே போட்டு வயிறு பிழைக்கும் பத்திரிக்கைகளுக்குத் தலைக்கனம் தாங்க முடியவில்லை. தலைகால் தெரியாமல் கொட்டை எழுத்துக்களில் பிரசுரித்துக் காங்கிரஸ் வாலாக்களின் வீரப்பிரதாபங்களை புகழ்ந்து துள்ளிக் குதிக்கின்றன. இதனால் காங்கிரஸ்காரர்கள் என்பவர்களின் பத்திரிகைகள் ஏழைகளின் பொருளாதார நிலையை விருத்தி செய்து அவர்களைக் “”குபேரர்கள்” ஆக்கிவிட்டதாகக் கும்மாளம் போடுகின்றன. பொது ஜனங்களை எந்த விஷயத்தைச் சொன்னாலும் உண்மையென்று நம்பக்கூடிய “”சோணகிரிகள்” என்று உறுதியாக நம்பி இருப்பதனாலேயே இவைகள் இம்மாதிரி செய்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை.

காங்கிரஸ் ஏழை மக்களுக்குச் செய்த பெருந் துரோகத்தை எந்த தேசியப் பத்திரிகையும் கண்டிக்க முன்வரவில்லை. அது தான் அரிசிக்கு வரி போட்ட விஷயமாகும். அரிசிக்கு வரி போடுவதனால் பணக்காரர் களுக்குக் கொழுத்த லாபமும், ஏழை மக்களுக்குச் சோறு கிடைக்காத திண்டாட்டமும் ஏற்படும் என்ற விஷயத்தை நமது குடிஅரசு அப்பொழுதே அப்பட்டமாக விளக்கியெழுதி இருந்தது. பல தொழிலாளர் சங்கங்களும் சுயமரியாதைச் சங்கங்களும் கண்டித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றியிருந்தன.

உப்புக்கு ஒரு மணங்குக்கு 8 அணா குறைந்ததினால் ஏழை மக்களுக்கு எவ்வளவு லாபம் ஏற்படும். அரிசிக்கு வரி போட்டதின் பயனாய் மூட்டை 2 ரூபாய் 3 ரூபாய் ஏறியதனால் ஏழை மக்களுக்கு ஆள் 1க்கு எவ்வளவு நஷ்டம்? என்ற கணக்கைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் காங்கிரஸ்காரர்கள் பணக்காரர்களின் கூலிகள் என்பதும் அவர்களது மாயாஜாலங்களும் நன்றாய் விளங்கிவிடும்.

அந்தக் கணக்கைக் கொஞ்சம் கவனியுங்கள். 6 பேருக்கு ஒரு வருஷத்துக்குச் சுமார் ஒரு மணங்கு உப்புதான் செலவாகிறது என்று பொருளாதார நிபுணர்கள் கணக்குப் போட்டிருக்கிறார்கள். இந்த ஒரு மணங்குக்கு 8 அணா குறைவதால், ஆள் 1க்கு வருஷம் 1க்கு 1 அணா 4 பை லாபமாகிறது. ஆனால் அரிசிக்கு அதிக வரி போட்டதினால் குறைந்தபடியாக ஆள் ஒன்றுக்கு வருஷம் ஒன்றுக்கு குறைந்த பக்ஷம் 6 ரூபாயாவது அதிக செலவு ஏற்படும் என்பதை மறுக்க முடியாது. ஆகவே ஆள் 1க்கு வருஷத்துக்கு 6 ரூபாய் அதிகச் செலவு. அதாவது அதிக வரி போடும்படி செய்துவிட்டு, வருஷம் 1க்கு 1 அணா 4 பை செலவு. அதாவது வரி குறையும்படி செய்துவிட்டு நாங்கள்தான் ஏழைகளின் பாதுகாவலர்கள் என்று கூறுபவர்களைப் பற்றி என்ன சொல்லுவதென்றே நமக்கு விளங்கவில்லை.

இந்த யோக்கியர்கள் தங்களைப் பொருளாதார நிபுணர்களென்றும் கூறிக் கொள்கின்றார்கள். உண்மையில் இவர்களுக்குப் பொருளாதார சாஸ்திரம் தெரியவில்லையா? அல்லது ஏழை மக்கள் பொருளாதார சாஸ்திரம் அறியாதவர்கள் என்ற தைரியத்தினால் அவர்களை ஏமாற்று கிறார்களா என்று கேட்கின்றோம்.

பணக்காரர்களின் கைக்கூலிகளாக இருந்து இந்தக் காங்கிரஸ் யோக்கியர்கள் ஏழை மக்களின் ஜீவாதாரமான உணவுப் பொருளான அரிசிக்கு வரி விதித்து விலை உயரும்படி செய்து விட்டு, உப்புக்கு வரி குறைக்கும்படி செய்து விட்டோம் என்று வெட்கமில்லாமல் கூறுவது எவ்வளவு யோக்கியப் பொறுப்பற்ற தன்மை என்பதை யோசித்துப் பார்க்கும்படி கூறுகிறோம்.

குடி அரசு  கட்டுரை  07.04.1935

You may also like...