நம்பிக்கையில்லாத் தீர்மானமும் 70000 ரூபாயும்

 

பார்ப்பன சூழ்ச்சிக்குச் சாவு மணி

சென்னை ஜஸ்டிஸ் கட்சி மந்திரி சபையின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்தும் மூன்று மாத காலமாக தெருத் தெருவாய் திரிந்து அலைந்து கட்டாதவர்கள் கால்களையெல்லாம் கட்டியும், கெஞ்சாதவர்கள் கைகளை இழுத்தெல்லாம் கெஞ்சியும், தொடக்கூடாதவர்கள் என்று கருதியிருந்தவர்களின் கால் தூசிகளையெலாம் பஞ்சாட்சரமாக நெற்றியில் தானே அணியும்படி செய்தும், போடாத கரணமெல்லாம் போட்டும், செய்யக்கூடாத அயோக்கியத் தனங்களை எல்லாம் செய்தும், காசு பெறாத அயோக்கியர்களையெல்லாம் ஆப்த நண்பர்களாகக் கொண்டு அலைந்தும் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானமானது கடைசியில் கொண்டு வந்தவர்களையே நாட்டுக்கும் மனித சமூகத்துக்கும் நம்பிக்கையில்லாதவர்களாக ஆக்கிவிட்டது.

“குரங்கு தான் கெட்டதுமல்லாமல் வனத்தையும் கெடுத்தது’

என்று சொல்லும் பழமொழிபோல், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முயற்சி செய்த தோழர் முத்தைய செட்டியார், தான் கெட்டதுமல்லாமல் தோழர் சுப்பராயன் அவர்களையும் இழிவுபடுத்தி, அவருக்குக் கொஞ்சம் நஞ்சம் இருந்த மரியாதையையும் கெடுத்து அவரை இன்னும் வெகு நாளைக்குத் தலைதூக்க முடியாமலும் செய்து விட்டார். ஐயோ பாவம்! உன்னால் நான் கெட்டேன்  உன்னால் நான் கெட்டேன் என்று ஒருவருக்கொருவர் பாடும்படி செய்துவிட்டார். இந்த நம்பிக்கை யில்லாத் தீர்மானத்தின் பலனாய் பணத்தினால் எதுவும் செய்து விடலாம் என்னும் அயோக்கியத்தனத்துக்குத் தோல்வி ஏற்பட்டதோடு சமயத்துக்குத் தகுந்தபடி கரணம் போடுவதன் மூலம் எதையும் சாதித்துக் கொள்ளலாம் என்கின்ற இழி குணத்துக்கும் பக்கா தோல்வி ஏற்பட்டு விட்டது.

அதோடு மாத்திரமல்லாமல் உள்ளுக்குள்ளிருந்தே காட்டிக் கொடுத்துக் குடியைக் கெடுத்துக் குச்சு முறித்துவிட்டு நாட்டை பாழாக்கித் தங்கள் கூட்டத்தின் சுயநலத்தையே பெரிதாகக் கருதி வந்த பார்ப்பனீய நாடு மாறித் தனத்துக்கும் சரியான சாவுகுறி கண்டுவிட்டது.

தோழர் நாட்டுக்கோட்டை முத்தைய செட்டியார், தாம் ஜஸ்டிஸ் கட்சிக்குச் செய்த துரோகத்துக்காக என்று தம்மை அக்கட்சியார் ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து விலக்கி விட்டதற்கு உண்மையான பரிகாரம் தேட வேண்டுமென்று யோக்கியமாய்க் கருதியிருப்பாரானால் அவர் அப்போதிருந்த தன்னுடைய நெருக்கடியான நிலைமையை ஜஸ்டிஸ் கட்சிக்கு எடுத்துச் சொல்லி, தான் இனிமேல் யோக்கியமாக நடந்து கொள்வதாக வாக்களித்து, இப்போது செலவு செய்த தொகையில் ஒரு பகுதியையாவது அக்கட்சி பண்டுக்கு அபராதமாகக் கொடுத்து யாருக்கும் தெரியாமல் பழயபடி “”நல்ல பிள்ளை” போலவே ஆகியிருக்கலாம்.

அதை விட்டுவிட்டு கொஞ்சமாவது, தானும் தன் குடும்பமும் இந்த யோக்கியதைக்கு வந்ததற்குக் காரணம் என்ன?

தங்களுக்குப் பட்டம் பரிவட்டம் அதிகாரம் பதவியெல்லாம் எப்படி கிடைத்தது?

வட்டிக்கடை வைத்திருந்தவர் பரம்பரை ராஜா பட்டம் பெற எப்படி முடிந்தது?

அது மாத்திரம் அல்லாமல் தனக்கும் சென்னைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லாத ஒரு பெரிய பட்டணத்திற்கு நகரசபைத் தலைவராகிற பதவி எப்படிக் கிடைக்க முடிந்தது?

இன்னும் எவ்வளவோ காரியம் செய்து விட்டும் தப்பித்துக் கொண்டு “”பெரிய மனிதர்” கூட்டத்திலேயே இருக்க எப்படி சாத்தியமாயிற்று என்பவைகளையெல்லாம் சிறிதும் யோசியாமல் சரீரத்தில் உள்ள நன்றியறிதல் என்கின்ற அவயவத்தையே அடியோடு அறுத்து எறிந்து விட்டது போல் அடியோடு மறந்துவிட்டு, மறந்தது மாத்திரம் அல்லாமல் தங்கள் பெருமைக் கெல்லாம் ஆதரவாயிருந்த கட்சியையே 4 கோடி மக்களுடைய சமூக நன்மைக்கே ஆபத்துண்டாகும்படி குழி தோண்டிப் புதைக்க முனைந்தா ரென்றால் இதற்கு என்ன பெயர் சொல்லுவது என்பது நமக்கே விளங்க வில்லை. அகராதியிலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

தோழர் ஷண்முகம் செட்டியார் தேர்தலில், தோழர் முத்தையா செட்டியார் அவர்கள் நடந்து கொண்டதை சுத்தமான பார்ப்பனரல்லாத ரத்தம் ஓடுகிற ஒருவன் எப்படி மறந்துவிட முடியும்? இந்த நடவடிக்கைக்கும் வீட்டில் படுத்திருந்த ஒருவன் கழுத்தை அறுத்து அவன் மடியில் இருந்த  பணத்தை எடுத்துக் கொண்டு அவனைப் புறக்கடையில் புதைத்து விட்ட காரியத்துக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிக்கக் கூடும்? அதை நினைக்கும்போது இப்படிப்பட்ட ஒரு குற்றத்தை மன்னிப்பதைவிட நாமிறந்து போவதே மேல் என்றுதான் தோன்றுகிறதே தவிர ஐயோ பாவம்! என்று நினைக்க கொஞ்சம்கூட மனம் வருவதில்லை.

தோழர் ஷண்முகம் அவர்கள் இந்த மாதிரியான சதிமோசங்களால் எல்லாம் அசைக்கப்படக் கூடியவர் அல்லாதவராயிருந்ததனாலேயே, இவ்வளவு பெரிய சதியும் அவரை ஒன்றும் அசைக்க முடியவில்லை. அன்றியும், இவர் சதியினால் பார்ப்பனரல்லாத சமூகமும் ஒன்றும் அடியோடு அழிந்து போகும்படியான நிலையும் ஏற்பட்டுவிடவுமில்லை. ஆனால் தோழர் முத்தைய செட்டியார் அவர்களுடைய எண்ணத்தையும், எதிரிகளுக்கு உள் உளவாய் இருந்த குணத்தையும் நினைக்கிறபோது வயிறு பற்றி எரிகிறது. நெஞ்சம் குமுறுகிறது. இன்னும் என்னென்னமோ எழுத நம்மையும் மீறிக் கொண்டு கை ஓடுகிறது.

இந்த நிலையில் இதை மக்கள் சீக்கிரம் மறந்துவிடும்படியாக தோழர் முத்தைய செட்டியார் அவர்கள் முயலாமல், மேலும் மேலும் பெருக்கிக் காட்டும்படியாக எண்ணெய்யை விட்டு எரித்து நெருப்பை வளர்த்துக் கொண்டிருப்பது தோழர் முத்தைய செட்டியாரின் யோசித்துப் பார்க்காத தன்மை என்று சொல்லுவதற்கு வருந்துகிறோம்.

இந்தக் காலத்தில் பரம்பரை ராஜாக்கள் ஜமீன்தாரர்கள் ஆகியவர் களுடைய ஆட்சியே ஒழிய வேண்டும் என்று ஜனங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு வட்டிக் கடைக்காரர், அதிலும் சிறிதும் நெஞ்சிரக்கமற்ற வஞ்சகர்களாகிய சில பார்ப்பனர்களுடைய அடிமையும், அடிமையாய் இருந்தாலொழிய வாழ முடியாத நிலைமையும் கொண்ட வட்டிக் கடைக்காரர் ஆட்சியை ஜனங்கள் விரும்புவார்களென்று தோழர் முத்தைய செட்டியார் அவர்கள் எதிர்பார்த்தது மிகமிக பைத்தியக்காரத்தன மென்று தான் நாம் சொல்லுவோம். இந்த மாதிரியான மக்கள் கையில் நம் நாட்டு ஆட்சி முறையின் தலையெழுத்து இருக்குமானால் இதைவிட வெள்ளைக்காரர்கள்  ஐரோப்பியர்கள்  பிரிட்டிஷ்காரர்கள்  ஆங்கிலேயர்கள் கையில் நமது ஆட்சியின் தலையெழுத்து இருப்பது மேல் என்று ஆயிரந் தடவை சிறிது கூட வெட்கமில்லாமல் சொல்லுவோம். தேசீயப் பத்திரிகைக் காரர்களும், பார்ப்பனர்களும் வேண்டுமானால் வட்டிக்கடைக்காரர் ஆட்சியை விரும்பட்டும், வாழ்த்தட்டும், யாகம் செய்யட்டும்.

சுதந்திரம் வேண்டும், பணக்காரர் ஆட்சி ஒழிய வேண்டும், சோம்பேறிகள் ஆட்சி அழிய வேண்டும் என்பவைகளில் நமக்குச் சிறிதுகூட சந்தேகமோ, தயவு தாட்சண்யமோ இல்லை. ஆனால் தோழர்களான ராஜகோபாலாச்சாரியார் கவர்னராகவும், முத்தைய செட்டியார் மந்திரி யாகவும், சத்தியமூர்த்தி சாஸ்திரியார் சீப் செக்ரட்டரியாகவும் இருக்கும் அல்லது இருக்கப் போகும் ஒரு ஆட்சியின் கீழ் இருப்பதைவிட கடும் புலி வாழும் காடு மேல் என்றே நினைக்கின்றோம்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு முன் ஒரு வார காலமாக தோழர் ராஜகோபாலாச்சாரியாருடையவும் மற்றும் பார்ப்பன வக்கீல்களுடையவும் மூளைகளுமே, தோழர் முத்தைய செட்டியார் அவர்களுடைய வீட்டில் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தன என்று சொன்னால், தமிழ் மக்கள் இனி முத்தைய செட்டியாரை எப்படி நம்ப முடியும்  எப்படி மதிக்க முடியும் என்பதை அவர்களுக்கே விட்டுவிட்டு தீர்மானத்தைப் பற்றிச் சில வார்த்தைக் கூறி முடிக்கிறோம்.

பொப்பிலி ராஜா அல்லது அவரது மந்திரிக் கட்சியின் மீது ஏற்பட்ட குற்றம் என்ன? அவர் நாட்டுக்கு ஏதாவது கெடுதியான காரியங்கள் செய்தாரா? கட்சிக்கு ஏதாவது துரோகமான காரியம் செய்தாரா? ஏழை மக்களுக்குக் கெடுதியான காரியம் ஏதாவது செய்தாரா? சுயநலத்துக்காக ஏதாவது சூழ்ச்சியோ, மற்றவர்களுக்குத் துரோகமோ செய்தாரா? அல்லது அவருடைய கூட்டு மந்திரிகள் ஏதாவது குறைவோ, குற்றமோ செய்திருக் கிறார்களா? என்பதைப் பற்றி நம்பிக்கை யில்லாத தீர்மானம் கொண்டு வந்தவர்களால் ஒரு வார்த்தைகூட எடுத்துச் சொல்லப்படவில்லை.

பொப்பிலி ராஜா மந்திரி ஸ்தானம் பெற்றது முதல் நாளது வரையில் பார்ப்பனர்கள் உட்பட எதிர்க்கட்சியார் என்று சொல்லப்படுபவர்கள் உட்பட பொப்பிலியின் நிர்வாகத்தைப் புகழ்ந்தும், அவருடைய வீரத்தையும், தீரத்தையும், உறுதியையும் பாராட்டியும் பேசியிருக்கிறார்களே ஒழிய ஒரு குற்றமும் ஒரு குறையும் இதுவரை யாரும் சொல்லி வந்ததேயில்லை.

இரண்டாவது பொப்பிலி ராஜா அவர்கள் பணம் சம்பாதிப்பதற் காகவோ, பெருமை சம்பாதிப்பதற்காகவோ அல்லது அவருடைய ஏதாவதொரு கஷ்டமான நிலைமையிலிருந்து தப்பித்துக் கொள்ளுவதற் காகவோ மந்திரி வேலைக்கு வந்திருக்கிறார் என்றாவது இதுவரை யாரும் சொல்லவுமில்லை.

அல்லது ஜஸ்டிஸ் கட்சியினுடைய கொள்கைக்கோ, மற்றபடி பொப்பிலியினுடைய கொள்கைக்கோ அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த கட்சிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்பவர் களுடைய கொள்கைக்கோ ஏதாவது வித்தியாசம் இருக்கிறது என்றோ அதன் தாரதம்மியம் இன்னதென்றோ ஏற்பட்டுவிடவுமில்லை. ஆகவே,

தோழர் முத்தைய செட்டியாருக்கு எதற்காக ஒரு தனிக்கட்சி? அந்தக் கட்சிக்கு என்ன கொள்கை? அவருடைய கட்சியைச் சேர்ந்த அங்கத்தினர்கள் யார்? அவர்கள் எப்படி என்ன காரணத்தினால் இவருடைய கட்சியில் சேர்க்கப் பட்டார்கள்? அவர்களிடத்தில் ஜனங்களுக்குள்ள மதிப்பு என்ன? என்பதும்,

அதுபோலவே தோழர் சுப்பராயன் அவர்களுக்கு எதற்காக ஒரு தனிக்கட்சி? அவர் கட்சிக்கு என்ன கொள்கை? அவருடைய கட்சியில் சேர்ந்திருக்கும் அங்கத்தினர்கள் யார்? அவர்கள் எப்படி என்ன காரணத்தினால் இவருடைய கட்சியில் இருந்து கொண்டு இருக்கிறார்கள்? அவர்களிடத்தில் ஜனங்களுக்கு உள்ள மதிப்பு என்ன? என்பதும்,

மற்றும் இவர்களை முன்னே தள்ளித் தூண்டிவிட்டு உள்ளே இருந்து விஷமஞ் செய்து விட்ட பார்ப்பனர்கள், காங்கிரஸ்காரர்கள் என்பவர்களின் கட்சி என்ன? அவர்களது லட்சியமும், கொள்கையும் என்ன? எதற்கு இந்த கூட்டம் தேசீய நாடகம் நடிக்கின்றது. இவர்களது முன்பின் நடவடிக்கை என்ன? நாணையம் என்ன? இவர்களை நம்பினவர்கள் யாராவது முன்னுக்கு வந்து இருக்கிறார்களா? என்பதும்,

மற்றும் இந்த கூட்டத்தாரை ஆதரிக்கும் இந்து, சுதேசமித்திரன், தினமணி, ஜெயபாரதி, இந்தியன் எக்ஸ்பிரஸ் முதலிய தேசீய பத்திரிகைக் காரர்களின் யோக்கியதை என்ன? அவர்களின் கொள்கை என்ன? அந்த பத்திரிகைக்காரர்களின் அந்தஸ்து என்ன? அவர்களுடைய லட்சியம் என்ன? அவர்களது பத்திரிகைகளின் ஜீவனம் எப்படி நடந்து வருகிறது? இந்த பத்திரிகைக்காரர்கள் இதுவரையிலும் எப்படி நடந்து வந்திருக்கிறார்கள்? என்கின்றவைகளையெல்லாம் ஒரு அறிவாளி பார்த்தால் இன்றைய மந்திரிசபையின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து ஒரு சமயம் அது நிறைவேறி, இப்பொழுது இருக்கும் மந்திரிசபை கலைத்து வேறு மந்திரிகள் நியமிப்பதாயிருந்தால் நம் மக்கள் கதி என்னவா யிருக்கும்? என்பது நாம் சொல்லாமலே விளங்கும் என்று நினைக்கிறோம்.

மந்திரி சபையைக் கலைப்பதற்குச் செலவழித்த பணங்களும், அதற்கு ஆள் சேர்ப்பதற்காக ஒவ்வொருவருக்கும் வாக்களித்த வாக்குத் தத்தங்களும், எதிலிருந்து எப்படிப்பட்ட முறையில் பரிகாரம் செய்யப்படும் என்பதையும் நினைத்தால் இப்படிப்பட்ட பிரதிநிதித்துவ ஆட்சியின் கீழ் இருப்பதற்கும், பழய கால ஆட்சி என்று சொல்லப்படும் பாளையக்காரர், கொள்ளைக்காரர், மலைவாசிகள், காட்டுமிராண்டிகள் என்பவர்களின் ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் என்பது நமக்கு விளங்கவில்லை.

நமது ஓட்டர் ஜனங்கள் மிகவும் பாமர மக்களாயிருப்பதால் பத்திரிகைக்காரர்கள் தங்களுடைய வயிற்றுப் பிழைப்புக்காகவும் கூலி களுக்காகவும் தங்கள் பிள்ளை குட்டிகள் குடும்பத்தார்கள் முதலியவர்களின் உத்தியோகங்களுக்காகவும் இப்படிப்பட்ட அயோக்கியத்தனமான காரியங்களை ஆதரித்து எழுதி ஜனங்களை மயக்கி நாட்டைப் பாழ்படுத்தி வருகிறார்கள். இந்த உண்மையை என்று ஜனங்கள் உணருகிறார்களோ அன்று தான் ஒரு யோக்கியமான ஆட்சிக்கு ஏற்ற பிரதிநிதித்துவம் ஏற்படவும், ஏழைகளுடையவும், தாழ்த்தப்பட்ட மக்களுடையவும் கஷ்டங்கள் நீங்கவும் வழி ஏற்படுமே தவிர வேறு இல்லை.

நிற்க, பொப்பிலி ராஜா அவர்கள் இவற்றையெல்லாம் சிறிதும் லட்சியம் செய்யாமலும், மந்திரிப் பதவியை சிறிதாவது மதிக்காமலும், எப்படிப்பட்டவர்களுடைய கூப்பாட்டுக்கும், மிரட்டலுக்கும், சூழ்ச்சிக்கும், துரோகத்துக்கும் அஞ்சாமலும், தனக்குச் சரி என்று தோன்றியதை தைரியமாய்ச் செய்துவருவதனால் தான் இது சமயம் கட்சியானது இவ்வளவு பெருமையில் இருந்து வர முடிகின்றது.

மந்திரி சபையின் மீது பொறாமை கொண்ட கனவான்கள் பலரும் தங்களுக்கு மந்திரி ஸ்தானம் கிடைக்கவில்லையென்ற நியாயமான ஏமாற்றமடைந்த சிலரும் எதிர்க்கட்சியில் சேராததற்குக் காரணம் என்னவென்றால், இந்த மந்திரி சபை கலைந்தால் வேறு யார் மந்திரியாய் வருவார்கள் என்ற கவலையாலும், பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்குத் தலைவர் என்று சொல்லுவதற்கு யோக்கியமான ஒருவர் வேறு யார் கிடைப்பார் என்கின்ற கவலையாலும், இந்த இரண்டு வருஷ காலத்தில் பொப்பிலி ஆதிக்கத்தில் யாதொரு நியாயமான தவறுதல்களும் இல்லையே என்கின்ற திடமான அபிப்பிராயத்தாலுமே தவிர மற்றபடி எதிர்க்கட்சியாரைப் போல் ஓட்டு ஒன்றுக்கு 4000, 5000 விலை கொடுத்து வாங்கியதினால் அல்ல என்பது நமக்கு நன்றாய் தெரியும்.

எதிர்க்கட்சிக்கு ஆள் சேர்ப்பதற்குத் தோழர்கள் முத்தையாச் செட்டியார், ராஜகோபாலாச்சாரியார், சுப்பராயன் முதலியவர்கள் பணம், தந்திரம், சூழ்ச்சி, விஷமப் பிரசாரம் ஆகியவைகளுடன் இரவும் பகலுமாய் ஒரு வாரம் அலைந்து கொண்டு இருக்கும் போது, பொப்பிலி அவர்கள் தைரியமாக சுருட்டை பிடித்துக் கொண்டு, பங்காவின் கீழ் உட்கார்ந்து ரேடியோ, கிராமப்போன் கேட்டானந்தித்துக் கொண்டிருந்தாராம். அது சமயம் ஒரு தோழர் ராஜாவைப்பார்த்து, “”என்ன உங்கள் கட்சி கொள்ளை போகிறதே, நீங்கள் ஒன்றும் கவனிப்பதில்லையா” என்று கேட்டதற்கு, “”நான் கட்சியில் உள்ள நாணையக் குறைவுகளையும், அயோக்கியத் தனங்களையும் ஒழித்துப் பரிசுத்தமாக்குவதற்கு இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஒரு சந்தர்ப்பமாகக் கொண்டிருக்கிறேன். போகிறவர்கள் போகட்டும். மந்திரி பதவிகள் போவதாயிருந்தாலும் போகட்டும். நாணயமான  யோக்கியமான யாரோ நாலு பேரை வைத்துக் கொண்டு என்னால் கூடியதைக் கட்சிக்கும் பொது ஜனங்களுக்கும் செய்யக் காத்திருக்கிறேன். ஆதலால் நான் இப்பொழுது ஆள் பிடிக்கவோ கவலைப்படவோ அவசியம் இல்லை” என்று சுருட்டைப் பிடித்துக் கொண்டே சொன்னாராம்.

அதற்கு ஏற்றது போலவே அனேகர்கள், இது சமயம் எதிர்க்கட்சியார் களுடைய பணத்தை லட்சியம் செய்யாமல் தங்கள் நாணயத்தைக் காப்பாற்றி பொப்பிலிக்குத் தைரியத்தையும், உற்சாகத்தையும் ஊட்டியதை நாம் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

ஆகவே ஜஸ்டிஸ் கட்சி, பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஆகியவை தோற்றுப் போய் விட்டதென்றும், சீர்குலைந்து விட்டதென்றும், சபையின் நம்பிக்கை இழந்துவிட்டதென்றும், பொது ஜனங்களின் ஆதரவு இல்லை யென்றும் சொல்லி விஷமப் பிரசாரம் செய்து காங்கிரஸ் பார்ப்பனர்கள், எல்லாப் பத்திரிகைகள், பார்ப்பனரல்லாதாரில் பெரும் பணக்காரர்கள், ஜமீன்தாரர்கள், மந்திரிகளாக இருந்தவர்கள் என்கின்ற கூட்டத்தார் எல்லோரும் ஒன்று சேர்ந்து லட்சக்கணக்கான ரூபாய்களுடன் சகலவித தந்திரங்களையும் செலவு செய்து பாடுபட்டும் கடைசியாக ஜஸ்டிஸ் கக்ஷிக்கு 80 ஓட்டும் எதிரிகளுக்கு  பார்ப்பனர்களுக்கு 42 ஓட்டும் என்கின்ற முறையில் பெரிய தோல்வியை அடைந்து, இந்த எதிரிகளெல்லோரும் முக்காடு போட்டுக் கொண்டு வீடு போய்ச் சேரத்தான் முடிந்தது.

பணத் திமிருக்கும், பார்ப்பன சூழ்ச்சிக்கும் “”நாளை சாகப்போகும் ஜஸ்டிஸ் கட்சி” என்று கொட்டை எழுத்துக்களில் போட்டுக் குதூகலித்த பார்ப்பனப் பத்திரிகைகளுக்கும் இனியாவது நல்ல புத்தியும், மானமும் வராதா? என்று எதிர்பார்க்கிறோம்.

முடிவாய் நம்பிக்கையில்லாத் தீர்மானம் விஷயமாக தோழர்கள் ஆர்.கே. ஷண்முகம் அவர்களும், சி.எஸ். ரத்தினசபாபதி முதலியார் அவர்களும், டி.எம். நாராயணசாமி பிள்ளை அவர்களும் மற்றும் இரண்டொரு தோழர்களும் எடுத்துக் கொண்ட முயற்சியும் நடந்து கொண்ட மாதிரியும் தமிழ் மக்களால் மிகவும் பாராட்டத்தக்கதும் நன்றி செலுத்தத் தக்கதுமாகும்.

குடி அரசு  தலையங்கம்  17.03.1935

You may also like...