கழகத் தோழர்கள் உடனடி எதிர்ப்பு எதிரொலி: வானொலியில் இந்தி திணிப்பு நிறுத்தம்

அகில இந்திய வானொலி தமிழ் ஒலிபரப்பில் நாள்தோறும் 7 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதற்கான சுற்றறிக்கையை மோடி அரசு அனுப்பியது. இந்த செய்தி வந்தவுடன் கழகத்தினர் செயலில் இறங்கினர். தொலைக்காட்சி ஒன்று இந்த செய்தியை ஒளிபரப்பியவுடன் கழக வழக்கறிஞர்கள் துரை. அருண், திருமூர்த்தி மற்றும் சென்னை மாவட்ட கழகச் செயலாளர் உமாபதி, தலைவர் பா.ஜான், விழுப்புரம் அய்யனார் உள்ளிட்ட 15 தோழர்கள், தபசி குமரன் தலைமையில் 25.10.2014 பகல் 11 மணிக்கு வானொலி நிலைய இயக்குனரை சந்தித்து, கீழ்க்கண்ட கோரிக்கை மனுவை அளித்தனர். கழகத் தோழர்கள் வரவிருக்கும் செய்தியை உளவுத் துறை வழியாக அறிந்த காவல்துறையினர் ஏராளமாகக் குவிக்கப்பட்டிருந்தனர். கோரிக்கை மனு விவரம்:
“இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அந்தந்த மாநில மக்களின் தாய்மொழிக்கென உள்ள உரிமையைப் பறிக்கும் வகையிலும், தென்னிந்தியாவில் அலுவல் மொழிச் சட்டத்தின் அட்டவணை ‘சி’ பிரிவில் கூறியுள்ள மாநில மொழி தமிழும் தொடர்பு மொழி ஆங்கிலமும் என வரையறுக்கப்பட்டிருக்கும் நிலையிலும், தமிழகத்தில் வழங்கி வரும் வானொலியின் தமிழ்மொழிச் சேவையில் இந்திய அரசு இப்போது இந்தித் திணிப்பை புகுத்த திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தி மொழிக்கென தனி அலைவரிசை இயங்கி வரும் வேளையில் தமிழ் மக்களுக்கென தமிழ் மொழிச் சேவையில் இந்தியை குறைந்தது 4 மணி நேரம் எனத் துவங்கி 7 மணி வரை உயர்த்த இந்திய அரசு  முயலுமானால் அதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்திய அரசு இது தொடர்பாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என கேட்டுக் கொள்வதோடு இது தொடருமானால் பல்வேறு கட்சிகள் இயக்கங் களைத் திரட்டி போராட்டங்கள் நடத்த வேண்டிவரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”
மனுவைப் பெற்றுக் கொண்ட இயக்குனர், மேலிடத்துக்கு அனுப்புவதாக தெரிவித்தார். அடுத்த நாள் இந்தி ஒலிபரப்பு நிகழ்ச்சி இல்லை என்று வானெலி நிலைய இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். கழகத்தினர் உடனடியாக மேற்கொண்ட நடவடிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது.

பெரியார் முழக்கம் 30102014 இதழ்

You may also like...

Leave a Reply