தலையங்கம் ‘இராஜா’க்களின் மிரட்டல்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் என்ற பதவியில் இருக்கும் எச்.ராஜா, “மோடியை கடுமையாக விமர்சித்தால் அவர் செல்லும் இடங்களில் பேசிவிட்டு வைகோ பாதுகாப்பாக திரும்ப முடியாது” என்றும், “வைகோ நாக்கு தடித்து பேசி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றும் எச்சரிக்கை செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. மோடி அதிகாரத்தில் இருக்கிறார் என்ற ஆணவம்தான், இவர்களை இப்படியெல்லாம் பேச வைக்கிறது போலும்! மோடி அப்படி ஒன்றும் விமர்சனத்துக்கு அ ப்பாற்பட்டவரும் அல்ல. சார்க் மாநாட்டில் பல்வேறு நாட்டின் அதிபர்கள் பங்கேற்கும் மாநாட்டில், “இராஜபக்சே மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்” என்று மோடி, ‘தேர்தல் அரசியலை’ப் பேசியிருப்பது சரியா?
தமிழர்களை இனப்படுகொலை செய்தவர் இராஜபக்சே. ‘மனித உரிமை மீறல்’ குற்றத்தின் கீழ் விசாரிக்கப்பட வேண்டியவர் என்று அய்.நா.வின் கண்டனத்துக்கு உள்ளாகி நிற்கும் மனிதர். அவருக்கு மோடி வாழ்த்துக் கூறுவது பற்றி இந்த ‘இராஜா’க்களுக்கு ஆத்திரம் வரும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. இவர்கள் தமிழினத்தின் எதிரிகள். ஆனால், வைகோவுக்கு இயல்பாகவே கோபம் வெடிக்கிறது. காரணம் அவர் தமிழர்.
பார்ப்பனர்களுக்கென்று இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் கிடையாது. ‘அவாள்’களின் சம°கிருதம் எந்த ஒரு மாநிலத்துக்கும் தாய்மொழியும் கிடையாது. ‘இந்திய தேசியம்’ என்ற போலி கட்டமைப்புக்குள் பதுங்கிக் கொண்டு நிற்கும் இவர்கள், அவ்வப்போது, தமிழின உணர்வுகள் வெளிப்படும்போது நடுங்கிச் சாகிறார்கள். மத்தியில் ஆட்சி அதிகாரம் வந்த பிறகு, தங்களின் பூணூல்களுக்கு குண்டு துளைக்காத துப்பாக்கிக் கவசம் கிடைத்து விட்டதாக குதூகலிக்கிறார்கள்.
சுப்ரமணியசாமியும் இப்படித்தான் தன்னை ‘பிராமணர்’ என்றும், மோடி எனும் இராஜாவுக்கு தானே ‘குரு’வாக இருப்பதாகவும் கூறிக் கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாகவும் மரண தண்டனைக்கு எதிராகவும் பேசி வரும் தமிழர்களை ‘தேச துரோகிகள்’ என்றும், தமிழ்நாட்டில் ‘மாவீரர் நாள்’ நடத்துவோரை தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் பிதற்றுகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக இராஜபக்சேவுக்கு இந்தியா ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்றும் வெளிப்படையாக பேசுகிறார்.
எச். ராஜா-சுப்ரமணியசாமி போன்ற பார்ப்பனர்கள், இப்படி வெளிப்படையாக பார்ப்பன ‘நஞ்சை’ கக்குவதை நாம் வரவேற்கிறோம். அப்போதுதான் “இப்போதெல்லாம் பார்ப்பனர்கள் எதிரிகள் இல்லை” என்று குதர்க்கம் பேசுவாரின் கண்கள் திறக்கும் என்று கருதுகிறோம். ஒரு காலத்தில் தங்களின் ‘அக்கிரகாரத்தில்’ பிற சமூகத்தினர் நடப்பதற்கே தடைபோட்ட கூட்டம் இது. அகில இந்திய காங்கிர° கட்சி மாநாடுகளிலே தங்களுக்கென தனி சாப்பிடம் இடம் வேண்டும் என்று கேட்டவர்கள். பிரிட்டிஷ்காரன் தொடர் வண்டியை அறிமுகப்படுத்தியபோது, ‘பிராமணர்களுக்கு’ மட்டும் தனிப்பெட்டி ஒதுக்க வேண்டும் என்று மனு போட்டவர்கள். இந்த ‘பிறவி இறுமாப்பு’ இப்போது அதிகாரம் வந்துவிட்டது என்ற நினைப்பில் மீண்டும் தலைதூக்குவதையே இவர்களின் பேச்சுகளில் எதிரொலிக்கிறது.
குஜராத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்தவர்தான் இந்த மோடி என்பதை எவரும் மறந்துவிட முடியாது. இஸ்லாமியர் இனப்படுகொலையை தடுக்காத மோடியை “ரோம் பற்றி எரியும்போது பிடில் வாதித்த நீரோ மன்னருடன்” உச்சநீதிமன்றமே ஒப்பிட்டதை “இராஜா”க்கள் மறந்துவிட வேண்டாம்.
தமிழ்நாட்டில் தமிழர்களுக்காக இயக்கம் நடத்திக் கொண்டு, தமிழினத்துக்காகவே உழைக்கின்ற தலைவர்கள் வரிசையில் வைகோவுக்கு முக்கிய இடம் உண்டு. அரசியலில் மாறுபாடுகள் இருக்கலாம்; ஆனால், சுப்ரமணியசாமி, எச்.ராஜா போன்ற அன்னிய இனத்தவர் மிரட்டினால் தமிழினம் கட்சி மாறுபாடுகளைத் தூக்கி எறிந்துவிட்டு ஒரே களத்தில் வந்து நிற்கும்.
எச். ராஜாக்களின் ஈனக் குரலுக்கு எதிராக தமிழகத் தலைவர்கள் பலரும் வெளியே வந்து கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள். இதுதான் பெரியாரின் தமிழ்நாடு என்பதை இந்த அரைவேக்காட்டுப் பார்ப்பனர்கள் புரிந்து கொள்ளட்டும்.
பார்ப்பனரல்லாத தமிழர்கள் பார்ப்பன எதிர்ப்பு நீரோட்டத்தில் தடம் புரளாமல் பயணிக்க இத்தகைய பேச்சுகளை இந்தப் பார்ப்பனர்கள் அவ்வப்போது உதிர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அப்போதுதான் அண்ணா கூறியதுபோல் ‘விதைக்காது விளையும் கழனிகளின்’ உண்மை முகம் பச்சையாக வெளியே தெரியும்!

பெரியார் முழக்கம் 04122014 இதழ்

You may also like...

Leave a Reply