தலையங்கம் – அதிகார உச்சத்தில் பார்ப்பனர்கள்!
பார்ப்பனர்கள் சமூக-அரசியல்-பொருளாதாரத் துறைகளில் தொடர்ந்து ஆதிக்க சக்திகளாகவே நிலைப்படுத்திக் கொண்டு வருகிறார்கள். ஆனாலும் பார்ப்பனர்கள் ஏதோ விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டதுபோல எழுதவும் பேசவும் தொடங்கியிருக்கிறார்கள். ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் சேஷாத்திரி என்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர், பார்ப்பனர்கள் புறக்கணிக்கப்படுவதாக எழுதியிருக்கிறார்.
சமுதாயத்தை இப்போதும் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி தங்களின் மேலாண்மையைத் திணித்துக் கொண்டிருப்பது பார்ப்பனர்கள்தான். சிற்பி உருவாக்கிய ‘கடவுள் சிலைக்கு’, சக்தியூட்டக் கூடிய தங்களின் மந்திரம் தான் என்கிறார்கள். கட்டி முடிக்கப்பட்ட கோயிலானாலும், புனரமைக்கப்பட்ட கோயிலானாலும் அதன் தீட்டுகளை கழித்து தூய்மைப்படுத்தும் ‘கும்பாபிஷேக’ உரிமை, தங்களுக்கு மட்டுமே உண்டு என்பதை நிலைப்படுத்திக் கொண்டுள்ளார்கள். கோயிலுக்குள் கர்ப்பக்கிரகம் வரை நுழைந்து கடவுளை நெருங்கவும், அந்தக் கடவுளிடம் தங்களது சம°கிருத மொழியிலேயே உரையாடவும் தாங்கயே உரிமைக்குரியவர்கள் என்று மார்தட்டுகிறார்கள்.
திருமணமானாலும், வீடு திறப்பு என்றாலும் 60ஆம் திருமணமானாலும் இறந்தவர்களுக்கு ‘திதி’ என்றாலும் அதற்கு வேத மந்திரங்களை ஓதி கடவுள்களை ஏற்கச் செய்யும் ‘காப்பீட்டு உரிமைகள்’ தங்களுக்கே உண்டு என்கிறார்கள். இவை மட்டுமா?
இப்போது கருநாடக மாநிலத்திலிருந்து ஒரு செய்தி வந்திருக்கிறது. அந்த மாநிலத்திலுள்ள பல கோயில்கள் ‘மடே °நானம்’ என்ற பெயரில் ‘உருளும் சேவை’ என்ற சடங்கு நடக்கிறது. பார்ப்பனர்கள் சாப்பிட்டு வீசிய எச்சில் இலையில் படுத்து உருண்டால் ‘பாவங்கள்’, ‘பிரச்சினைகள்’ ‘நோய்கள்’ தீர்ந்து விடும் என்று, “சூத்திரர்”களை நம்ப வைத்து பார்ப்பனர்கள் அதை செயல்படுத்தி வருகிறார்கள். இந்தக் காட்டுமிராண்டி சடங்குக்கு கருநாடக அரசு தடை விதித்தது. உடனே பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
“எங்களுடைய எச்சில் இலையின் புனிதத்தை தடை செய்வதா?” என்று கொதித்தெழுந்து, கருநாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 500 ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் இந்த ‘புண்ணிய சடங்குக்கு’ தடைபோடும் உரிமை கிடையாது என்று தீர்ப்பு வழங்கி, “தாராளமாக பார்ப்பான் வீசிய எச்சில் இலையில் விழுந்து புரளும் உரிமை பக்தர்களுக்கு உண்டு” என்று தீர்ப்பளித்துவிட்டது. இதை எதிர்த்து தலித் மற்றும் பழங்குடி கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. பார்ப்பனர்கள் தங்களின் எச்சில் இலை மீது உருளுவதால் பக்தர்கள் ‘வேண்டுதல்’ நிறைவேறுவதாகவும் நோய்கள் குணமடைந்து வருவதாகவும், எனவே இதைத் தடை செய்யக் கூடாது என்றும் வழக்கறிஞர் வழியாக பார்ப்பனர்கள் வாதிட்டுப் பார்த்தனர்.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் பி. லோகூர் மற்றும் பானுமதி (இவர் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்), “பழமையான சடங்கு என்பதால் கண்மூடித்தனமாக ஏற்க முடியாது. தீண்டாமைகூட பழங்கால வழக்கம்தான்; அதற்காக ஏற்க முடியுமா?” என்று கேட்டு, “எச்சில் இலை உருளுதலுக்கு” தடை விதித்துள்ளனர். செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக் கோள் அனுப்பும் காலத்திலும் பார்ப்பனர்கள் தங்களின் எச்சில் இலையில்கூட ‘புனித;மை’ அடங்கியிருக்கிறது என்று உச்சநீதிமன்றம் வரை சென்று இறுமாப்புடன் வாதாடுகிறார்கள்.
கர்ப்பகிரகங்களை தனி உரிமைகளாக்கிக் கொண்ட இந்தப் பார்ப்பனர்கள், கோயிலுக்குள் நுழைவதற்கு தங்களுக்கு மட்டும் தனியாக வழி அமைத்துக் கொண்டுள்ள அவலம் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்குள் நிகழ்ந்து வருகிறது. (அர்ச்சகர் – சங்கர் ராமன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கோயிலும் இதுதான்)இந்தக் கோயிலுக்குள் ‘மணவாள மாமுனி’ சன்னிதிக்குள் நுழைவதற்கு பார்ப்பனர்களுக்கு மட்டும் தனி வழி! பார்ப்பனரல்லாதவர்கள், அவர்கள் அர்ச்சகராக இருந்தாலும் ‘வேறு வழி’யைத் தான் பயன்படுத்த வேண்டும் என்ற ‘தீண்டாமை’யை திணித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் ‘பாகுபாட்டை’ எதிர்த்து 2008இல் மாதவ இராமானுஜதாசர் என்ற பார்ப்பனரல்லாத அர்ச்சகர் வழக்கு தொடர்ந்தபோது, நீதிமன்றம் இந்த “தீண்டாமை பாகுபாட்டுக்கு” எதிராக தீர்ப்பளித்தது. ஆனால், தீர்ப்பை பார்ப்பனர்கள் மதிக்கத் தயாராக இல்லை. அறநிலையத் துறையும் கண்டுகொள்ளவில்லை. மீண்டும் கடந்த செப்டம்பர் மாதம், அறநிலையத் துறையின் கவனத்துக்கு கொண்டு சென்றபோது, உறக்கத்திலிருந்து விழித்த அறநிலையத்துறை, ‘தனி வழிப் பாகுபாட்டைப்’ பின்பற்றக் கூடாது என்று கோயில் பார்ப்பனர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறதாம். ஆனாலும், பார்ப்பனத் தீண்டாமை முடிவுக்கு வரவில்லை என்றே செய்திகள் வருகின்றன.
அமெரிக்காவைச் சார்ந்த மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தின் சமூகப் பொருளாதார ஆய்வு மய்யம், இந்திய மனிதவள மேம்பாட்டு மய்யத்துடன் இணைந்து – இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்கள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்தியாவில் தீண்டாமையை மிக அதிகமாக கடைபிடிப்பவர்கள் (54 சதவீதம்) பார்ப்பனர்கள்தான் என்று கூறும் இந்த ஆய்வு “பார்ப்பனர் வீட்டில் பிறக்கும் ஒருவனுக்கு, அவனை வளர்க்கும் முறையிலேயே தீண்டாமை உடன் பிறந்ததாக மனதளவில் ஊட்டப்படுகிறது. இதனால் பொது வெளியிலும் இவர்கள் தீண்டாமையை பின்பற்றுகிறார்கள்” என்று கூறுகிறது. இந்த ஆய்வு இந்தியாவில் நான்கில் ஒருவர் ‘தீண்டாமை’யை கடைப்பிடிப்பதாக கூறுகிறது.
இப்படி, சமுதாயத் துறையில் மட்டுமல்ல; அதிகாரத் துறையும் பார்ப்பனர்களின் ‘இரும்புக் கரங்களுக்குள்’ தான் சிக்கிக் கிடக்கின்றன. இதோ, ஒரு உதாரணம்: “இந்தியாவில் உள்ள தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களில் 9052 இயக்குனர் பதவிகள் உள்ளன. இதில் பார்ப்பனர், உயர் ஜாதியினர் மட்டும் 8387 (92.6 சதவீதம்), பிற்படுத்தப்பட்டோர் 346 பேர் மட்டுமே (3.8 சதவீதம்), தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் 319 மட்டும் தான் (3.5 சதவீதம்).
(தகவல் : ‘எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ 11.8.2012)
மோடியின் காபினட் அமைச்சர்களில் 30 சதவீதம் பேர் பார்ப்பனர்கள் என்பதை இதே பகுதியில் ஏற்கனவே எழுதியிருக்கிறோம். நிதித் துறை, இராணுவத் துறை, வெளிநாட்டுத் துறை, தொடர்வண்டித் துறை, தொழில் துறை, மருத்துவத் துறை, உரம் மற்றும் இரசாயனத் துறை, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை என முக்கியத் துறைகள் அனைத்துக்குமே பார்ப்பனர்கள்தான் அமைச்சர்கள். மோடியின் பாதுகாப்பு ஆலோசகர், பொருளாதார ஆலோசகர், ரிசர்வ் வங்கி ஆளுநர் உயர் அதிகாரம் கொண்ட பதவிகளிலும் பார்ப்பனர்கள்தான். தேர்தல் ஆணையமும் ‘அவாள்’ வசம்தான்!
நாடாளுமன்றத்தின் 120 துறை செயலாளர்களில் தாழ்த்தப்பட்டவரோ, பிற்படுத்தப்பட்டவரோ இல்லை. அத்தனையும் பார்ப்பனர்களும் உயர்ஜாதியினரும்தான். இப்போது அமைச்சரவை செயலாளராக இருப்பவர் அஜித்குமார் சேத் எனும் பார்ப்பனர். 2011 ஆம் ஆண்டு அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட இவரின் பதவிக் காலம் ஏற்கனவே முடிந்து, பலமுறை பதவி நீட்டிப்புத் தரப்பட்ட நிலையில் இப்போது மோடி ஆட்சியும் அவருக்கு பதவி நீட்டிப்புக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. நிதித் துறை செயலாளராக உள்ள இராஜிவ் மெஷ்ரிஷி; பெட்ரோலியத் துறை செயலாளர் சவுராஷ்சந்த்ரா, எரிசக்தித் துறை செயலாளர் பி.கே. சின்ஹா போன்ற பார்ப்பன உயர்ஜாதியினர் அமைச்சரவை செயலாளருக்காக முயன்று பார்த்ததாக செய்திகள் கூறுகின்றன. இந்திய உளவுத் துறையின் (அய்.பி.) தலைவர் பதவியில் எப்படியோ அதிசயமாக ஒரு மு°லிம் (சையத் ஆசித் இப்ராஹிம்) அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நியமிக்கப்பட்டு இப்போது அவர் பதவி ஓய்வு பெற்றவுடன் தினேஷ்வர் சர்மா என்ற பார்ப்பனரை மோடி ஆட்சி நியமித்துவிட்டது.
அதுமட்டுமல்ல, பார்ப்பனர்கள் ‘புரோகிதர்’ வேலைகளையும் கார்ப்பரேட் கலாச்சாரத்துக்கு உயர்த்தி விட்டார்கள். ஒரு காலத்தில் ‘பிராமணன்’ கடல் தாண்டுவது ‘பாவம்’ என்று கூறிக் கொண்டிருந்தவர்கள். இலண்டன் வட்ட மேஜை மாநாட்டில் பங்கேற்கச் சென்ற இந்து மகாசபை பார்ப்பனர் மதன் மோகன் மாளவியா, கடல் தாண்டும் ‘பாவத்தைப் போக்க’ இந்தியாவிலிருந்து மண்ணையும் கங்கையிலிருந்து நீரையும் எடுத்துச் சென்றார். இப்போது பார்ப்பனர்கள் கடவுள்களையே கடல்தாண்டி கடத்திக் கொண்டிருக்கிறார்கள். 1970இல் அமெரிக்காவில் இருந்த இந்து கோயில் ஒன்றே ஒன்று. இப்போது 700 இந்து கோயில்கள் வந்துவிட்டன. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்த இந்துக் கோயில்களுக்கான அறங்காவலர்களையும் அர்ச்சகர்களையும் அனுப்பி வைக்கும் வேலையை காஞ்சி சங்கர மடம் செய்து கொண்டிருக்கிறது. இதற்காகவே ‘மக்கள் தொடர்பு அதிகாரி’ என்ற பதவியில் அமர்த்தப்பட்டுள்ள சந்திரசேகர் எஸ்.மேத்தா எனும் பார்ப்பனர் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டுக்கு (டிசம்பர் 14, 2014) அளித்த பேட்டியில், “இளம் அர்ச்சகர்கள் மிகவும் ஆர்வத்தோடு வெளிநாட்டுக்குப் போய் கார், பங்களாக்களை வாங்கிக் கொண்டு வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். 2012-2013 ஆம் ஆண்டுக்கிடையில் 930லிருந்து 1,149 அர்ச்சகர்களுக்கு அமெரிக்க கோயில்களில் ‘அர்ச்சனை’ செய்ய விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார். அர்ச்சகர்களுக்கு சம°கிருத மந்திரம் மட்டும் தெரிந்தால் போதாது. ஆங்கிலமும் தெரிந்திருக்க வேண்டும் என்ற அடிப்படை யில் முன்னுரிமை தரப்படுகிறது என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒரு காலத்தில் ஆங்கிலத்தை ‘மிலேச்ச பாஷை’ என்று தூற்றியவர்கள் இவர்கள் தான்! அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆகமத்தில் இடமில்லை என்று அடம்பிடிக்கும் இதே கூட்டம்தான் அர்ச்சகர் தொழிலை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து அதை கார்ப்பரேட் கலாச்சாரங்களாக்கிக் கொண்டிருக் கின்றன.
இப்படி சமூக-பொருளாதார- அரசியல்களை நிர்ணயிக்கும் ஆதிக்க சக்திகள் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளால் எல்லாவற்றையும் இழந்து “நடுத்தெரு நாராயணன்களாக” நிற்பதாக எழுதுவதில் ஏதேனும் துளியாவது உண்மை உண்டா என்று கேட்கிறோம்!
“பார்ப்பனர்கள் ஆதிக்கம் இப்போதெல்லாம் இல்லை சார்” என்று சாய்வு நாற்காலியில் ஆடிக் கொண்டு சமூகத்தை மதிப்பிடுவோரும் இந்த உண்மைகளை கண்திறந்து பார்க்கட்டும்!
பெரியார் முழக்கம் 18122014 இதழ்