மாட்டுக்கறி சாப்பிட்ட விவேகானந்தர்!
மகாராஷ்டிரா, அரியானாவில் பா.ஜ.க. ஆட்சிகள், மாட்டுக்கறி விற்பதோ சாப்பிடுவதோ தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டம் கொண்டு வந்துவிட்டன. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா முழுமையும் மாட்டுக்கறிக்கு தடை விதிக்கும் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கூறுகிறார். மகாராஷ்டிராவில் பார்ப்பன முதல்வர் தலைமையில் நடக்கும் பா.ஜ.க. ஆட்சி, பசுக்களை காளைகளை மட்டும் வெட்டக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறது. எருமைகளுக்கு இது பொருந்தாது. ‘எருமை’ சூத்திர, பஞ்சமப் பிரிவைச் சார்ந்தது. ‘பசு’, பிராமண, சத்திரியப் பிரிவு. பார்ப் பனர்கள் எப்போதும் எருமை மாடுகளை வளர்ப்பது இல்லை. பசு மாட்டைத்தான் வளர்ப்பார்கள். பார்ப் பனர்கள் மாட்டுக்கறியை சுவைத்து சாப்பிட்டதை, ஏராளமான சுலோகங்கள் வழியாக வேதங்கள் உறுதிப்படுத்துகின்றன. யாகங்கள் என்ற பெயரால் ஆரியர்கள் ஆடு மாடுகளை தீயில் போட்டுக் கொளுத்தியதாலும், அந்த உணவை விரும்பி சாப்பிட்டதாலும் விவசாயத்துக்குத் தேவையான கால்நடைகள் கிடைக்காமல் போயின. இந்த நிலையில்தான் புத்தர், யாகங்களுக்கும், ஆரிய பார்ப்பனர்களுக்கும் எதிராக மக்களை திரட்டினார். புத்த மார்க்கம் செல்வாக்குப் பெற்றதால், பார்ப்பனர்களின் வேத மதம் கடும் நெருக்கடிகளை எதிர் கொண்டது. இந்த நிலையில் புத்த மார்க்கத்தில் ஊடுருவி, அழித்த ஆரிய பார்ப்பனர்கள், புத்த மார்க்கம் வலியுறுத்திய மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த கொள்கைகளை தங்கள் வசமாக்கிக் கொண்டனர். பார்ப்பனர்கள் மாட்டிறைச்சியை சாப்பிடாமல் நிறுத்தியதும் இந்தக் காலகட்டத்தில் தான். அம்பேத்கர் உள்ளிட்ட பல வரலாற்று ஆசிரியர்கள் இதைப் பதிவு செய்துள்ளனர். மாட்டுக் கறி உணவுப் பழக்கத்தை கைவிட முடியாமல் திணறியதால்தான் அதன் நினைவாக பார்ப்பனர்கள் மாட்டுப் பாலையும், மாட்டு ‘மூத்திரத்தை’யும் (கோமியானம்) உணவாக்கிக் கொண்டனர் என்று அம்பேத்கர் கூறுகிறார். பயன்படக்கூடிய எந்த விலங்கையும் எவரும் வெட்ட மாட்டார்கள். அவை பயன்படாத நிலையில் உணவுக்காக வெட்டப்படு கிறது. மாடுகளை வெட்டக் கூடாது என்று சட்டம் போடுகிறவர்கள் பயன்படாமல் போகும் அடி மாடுகளை எந்த வழியில் பாதுகாப்பது என்பது குறித்து கவலைப்படவில்லை. ஆங்காங்கே இந்த மாடுகள் கவனிப்பாரற்று, நோய்க்குள்ளாகி வீதிகளில் செத்து விழும் நிலைதான் உருவாகும். குடும்பத்தில் முதியவர்களையே புறக்கணிக்கும் சமூகம் இது; பயன்படாத மாடுகளையா பாதுகாக்கப் போகிறது?
சங்பரிவாரங்கள் போற்றும் இந்துமதத் துறவி விவேகானந்தர், மாட்டிறைச்சிப் பற்றிய தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். ‘இராமன்-சீதை’ மாட்டிறைச்சியை விரும்பி உண்டனர் என்று கூறும் விவேகானந்தர், மாட்டிறைச்சி உணவை நிறுத்தி யதால்தான், இந்த நாடு ஆண்மை இழந்து போனது என்றும் கூறுகிறார். 19ஆம் நூற்றாண்டு இறுதியில் வடமாநிலங்களில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பஞ்சத்தில் மனிதர்கள், கால்நடைகள் ஏராளமாகப் பலியானபோது பார்ப்பனர்கள் பசு மாட்டைக் காப்பாற்ற ‘கோ ரக்ஷன் சமிதி’ என்ற அமைப்பை உருவாக்கி, விவேகானந்தரிடம் உதவி கேட்க வந்தனர். மனிதர்களைக் காப்பாற்றாமல் மாடு களைக் காப்பாற்ற வந்துவிட்டீர்களா? என்று கடுமை யாகப் பேசி அவர்களை விரட்டினார், விவேகானந்தர்.
விவேகானந்தரே மாட்டுக்கறி சாப்பிடுவதை எதிர்க்கவில்லை.
“உடலை வருத்தி உழைக்கும் மக்கள் மாட்டுக் கறியை சாப்பிட அனுமதிக்க வேண்டும். அதே நேரத்தில் பக்தர்களாக வாழ விரும்புவோர் மாட்டுக்கறி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்” (விவேகானந்தர் உரை தொகுப்பு-தொகுதி 4).
“ஒரு காலத்தில் ‘பிராமணர்கள்’ மாட்டுக்கறி சாப்பிட்டார்கள். ‘சூத்திரர்’களை திருமணம் செய்து கொண்டார்கள். ‘பிராமணர்’களுக்கு சூத்திரர்கள் மாட்டுக்கறி உணவை சமைத் தார்கள்” (விவேகானந்தர் உரை தொகுப்பு-தொகுதி 9).
“நான் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். நமது பழங்கால பழக்க வழக்கத்தின்படி மாட்டுக் கறியை சாப்பிடாதவன் நல்ல இந்துஅல்ல.” (He is not a good Hindu who does not eat beef) – (தொகுதி-3 – அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ‘ஷேக்°பியர் கிளப்பில்’ பிப்.2, 1900 அன்று ஆற்றிய உரை).
– இப்படி ஏராளமான சான்றுகளை அடுக்கிக் காட்ட முடியும். இவை எல்லாவற்றையும்விட விவேகானந்தரே மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
அமெரிக்காவில், ‘உலக மதங்களின் நாடாளு மன்றம்’ என்ற அமைப்பு செயல்பட்டது (1893). அந்த அமைப்பில், விவேகானந்தர் ஆற்றிய உரையைத்தான் சங்பரிவாரங்கள் சிலாகித்துப் பெருமை பேசுகின்றன. இந்த நாடாளுமன்றத்தின் தலைவராக இருந்தவர் டாக்டர் ஜான் ஹென்றி பாரோ° எனும் பாதிரியார். அவர் எழுதிய ‘ஆசியாவில் கிறி°தவர்களின் ஆக்கிரமிப்பு’ என்ற நூலில், கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“மதங்களுக்கான நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு முடிந்த பிறகு, நான் விவேகானந்தருடன் உணவு விடுதிக்கு சாப்பிடச் சென்றேன்; அந்த உணவு விடுதி, நிகழ்ச்சி நடந்த ‘ஆர்ட் இன்° டிடியூட்’ என்ற நிறுவனத்தின் தரைதளத்தில் இருந்தது. ‘என்ன சாப்பிடுகிறீர்கள்? என்று கேட் டேன். ‘எனக்கு மாட்டிறைச்சி கொடுங்கள்’ என்று விவேகானந்தர் கேட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் மட்டுமல்ல, சேரன்மாதோவி குருகுலத்தில், ‘பிராமணர்’களுக்கு மட்டும் தனி இடத்தில் சாப்பாடு போட்டு, பெரியாரின் எதிர்ப்பைச் சந்தித்த வ.வே.சு. அய்யர், இலண்டனுக்கு படிக்கச் சென்றபோது, பொருளாதார சிக்கனம் கருதி, ‘மாட்டிறைச்சி’யை சாப்பிட்டதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். வைதீகத்தில் ஊறித் திளைத்தப் பார்ப்பனர்கள்கூட, தங்களின் நலன் என்று வரும்போது எந்த சா°திர மீறலுக்கும் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால், உழைக்கும் மக்களின் உணவை, அவர்களின் தொழிலை தடைப்படுத்துகிறார்கள்.
இந்த நிலையில், அரசியல் சட்டத்தின் வழிகாட்டு நெறிகளில் (Directive Principles of State Policy) 48ஆவது பிரிவு – பசுக்களையும் கன்றுகளையும் வதை செய்யக் கூடாது என்று குறிப்பிட்டிருப்பதாக மாட்டுக்கறி தடையை நியாயப்படுத்தும் ‘சங் பரிவாரங்கள்’ கூறுகின்றன. ‘தினமணி’ நாளேடும், தனது தலையங்கத்தில் இதை குறிப்பிட்டுள்ளது. வழிகாட்டும் நெறி என்பது எதிர்காலத்தில் அரசுக்கான கொள்கை வழிகாட்டி! அதில்கூட ‘வதை செய்யக்கூடாது’ என்ற சொற்றொடரைத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மையில் பசு, இந்துக்களால் வணங்கப்படும் தெய்வம் என்ற கண்ணோட்டத்தில் வழிகாட்டும் நெறி இதைக் குறிப்பிடவில்லை. அத்துடன், பசு மாட்டை மட்டுமே தான் வெட்டுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கூறவில்லை. இந்த வரலாற்று உண்மைகளை சங்பரிவாரங்களும் பார்ப்பன ஊடகங்களும் திட்டமிட்டு மறைத்து வருகின்றன.
இந்தப் பிரச்சினை குறித்து அரசியல் நிர்ணய சபையில் 14.11.1949 அன்று விவாதிக்கப்பட்டது. இந்த விவாதங்கள் குறித்த பதிவுகள் அரசியல் நிர்ணய சபை விவாதங்களின் 11ஆவது தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. 48ஆவது பிரிவில் இடம் பெற்றுள்ள வாசகம் இதுதான். “வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புக்கு நவீன அறிவியல் முறை குறித்து முயற்சி மேற்கொள்ளப்படவேண்டும். குறிப்பாக உயர்ரக கால்நடைகளை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் பசுக்கள், கன்றுகள் மற்றும் பால் தரும் விலங்குகள், பாரம் இழுக்கும் கால் நடைகள் ஆகியவற்றைக் கொல்வதை தடுப்பதற்கும் வேண்டிய முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும்” என்று 48ஆவது பிரிவு கூறுகிறது. கால்நடைகள் பாரம் இழுக்கும் விலங்குகள் உள்பட. அனைத்து பயன்படக்கூடிய விலங்குகளுக்குமான பாதுகாப்பு குறித்துதான் இந்தப் பிரிவு பேசுகிறது. ஆனால், அரசியல் நிர்ணய சபையில் இடம் பெற்றிருந்த சில மதவாதிகள், மதத்தின் கண்ணோட்டத்தில் ‘பசு’வை தெய்வமாகக் கருதி அதை வெட்டக் கூடாது என்ற கருத்தை இந்த பிரிவுகளுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று விரும்பினார்கள். எனவே இந்த வாசகங்கள் மதத்தின் கண்ணோட்டத்தை ஏற்காமல் நீர்த்துப் போகச் செய்துவிட்டன என்று தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து, இரண்டு உறுப்பினர்கள் இதற்கு திருத்தங்களைக் கொண்டு வந்தனர். ஒருவர் பேராசிரியர் சிவன்லால் சக்சேனா; மற்றொருவர் சேக்கோவிந்ததா°. இந்துக்கள் புனித தெய்வமாகக் கருதும் பசுக்களை கொல்லக் கூடாது என்ற சொற்றொடரை இணைக்க வேண்டும் என்று சேக் கோவிந்ததா° கொண்டு வந்த திருத்தத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்கவில்லை. இப்படி ஒரு பிரிவை சேர்த்ததே – உறுப்பினர்கள் விரும்புவது போல மதக் கண்ணோட்டத்தில் அல்ல; பயன் பாட்டுக் கண்ணோட்டத்தில்தான் என்று அரசியல் நிர்ணய சபை இதற்கு விளக்கமளித்தது.
“We have particularly substituted this article for, the article which other members wanted from a religious point of views; It is now simply a utilitarian measure”-என்பதுதான் அரசியல் நிர்ணய சபை தந்த விளக்கம்.
அதனால்தான் விவசாயத்துக்கு பயன்படாமல், பால் கறப்பது நின்று போன பயன்படாத அடி மாடுகளை வெட்டி உணவாக்கலாம் என்ற பயன்பாட்டுக் கண்ணோட்டத்தில் (ரவடைவையசயைn அநயளரசந) உணவாகவும் ஏற்றுமதிப் பொருளாகவும் பயன் படுத்தப்படுகிறது. ஒட்டுமொத்த கால்நடைகளிலும், ‘பசு’ மட்டுமே ‘புனிதம்’ என்றும் அதை வெட்டக் கூடாது என்றும் மதவாதக் கண்ணோட்டத்தில் சட்டம் போடும் ‘இந்துத்துவா’ ஆட்சியாளர்கள், இதற்கு நேர்மாறாக பயன்பாட்டுக் கண்ணோட்டத் தில் உருவான வழிகாட்டு நெறியின் 48ஆவது பிரிவை தங்களுக்கு ஆதரவாக எடுத்துக் கூறுவது மிகப் பெரும் மோசடி ஆகும். பயன்படக்கூடிய கால்நடைகளை நோயிலிருந்து காப்பாற்றத் தேவையான மருத்துவ உதவிகளை மருத்துவ வல்லுனர்களின் துணையோடு வழங்கிட வேண்டும் என்று அரசியல் சட்டத்தின் 7ஆவது அட்டவணையில் மாநிலங்களுக்கான அதிகாரப் பட்டியலின் 15ஆவது பிரிவு கூறுகிறது.
ஒட்டுமொத்த பயன்தரத்தக்க கால்நடைகளை பாதுகாப்பது வேறு; பயன்படாத நிலையிலும் பசு மாட்டை மட்டுமே வெட்டக் கூடாது; அது இந்துக் களில் புனித தெய்வம் என்று கூப்பாடு போடுவது வேறு; ஜாதி கவுரவம் என்ற பெயரில், வேறு ஜாதி இளைஞரை காதலித்த அல்லது திருமணம் செய்த “குற்றத்துக்காக” பெற்ற மகளையே வெட்டிப் பலியிடும் ‘மனித வதைகள்’இங்கே நடக்கின்றன. இதைச் செய்பவர்களும் இந்துக்கள்தான்! இதைத் தட்டிக் கேட்பதற்கோ, தடைச் சட்டம் கொண்டு வரு வதற்கோ குரல் கொடுக்காத ‘பார்ப்பன பரிவாரங்கள்’, பசுமாடுகளை வெட்டக் கூடாது; சாப்பிடக் கூடாது; விற்கக் கூடாது என்று சட்டம் கொண்டு வரு கிறார்கள். இந்த அவமானகரமான இழிவுகள், இந்தப் ‘புண்ணிய’ பூமிகளில் மட்டுமே நடக்கும்.
பெரியார் முழக்கம் 09042015 இதழ்