சென்னை தோழர்களின் ஜாதி எதிர்ப்புப் பரப்புரைப் பயண எழுச்சி 6 மாவட்டங்கள்; 10 நாள்கள்; 40 கூட்டங்கள்

“பறிபோகிறது எங்கள் நிலம்; கொள்ளைப் போகிறது கனிம வளம்; ஒழிகிறது வேலை வாய்ப்பு ஓங்கி வளருது ஜாதி வெறி; எனவே எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” என்ற பரப்புரைப் பயணம், சென்னை மண்டல திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் திருவள்ளூர், சென்னை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் எழுச்சியுடன் நடைபெற்றது. இது சென்னை மண்டலம் நடத்தும் இரண்டாம் கட்டப் பரப்புரையாகும். பயணத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மார்ச் 20ஆம் தேதி சென்னை பெரம்பூர் பொதுக் கூட்டத்தில் தொடங்கி வைத்தார். பயணம் குறித்த செய்தி தொகுப்பு:
பொன்னேரி : 21.3.2015 காலை 10 மணியளவில் பொன்னேரி பெரியார் சிலை அருகிலும், பிற்பகல் 12 மணியளவில் மீஞ்சூர் மார்க்கெட் அருகிலும், மாலை 4 மணியளவில் மணலி அண்ணா சிலை அருகிலும், மாலை 5.30 மணியளவில் திருவொற்றியூர் பெரியார் சிலை அருகிலும் பரப்புரை நடைபெற்றது. பொன்னேரியில் திராவிடர் கழகத்தைச் சார்ந்த பன்னீர்செல்வம், வெள்ளைச்சாமி, ரகுபதி ஆகியோர் பங்கேற்று தோழர்களுக்கு தேநீர் வழங்கினர். மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கு துரை, ஏசுகுமார் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். திருவொற்றியூரில் புரட்சிகர தொழிலாளர் முன்னணியைச் சார்ந்த தாமரை பங்கேற்று உரை நிகழ்த்தினார். அதே அமைப்பைச் சார்ந்த மா.சேகர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
திருவான்மியூர்: 22.3.2015 அன்று காலையில் திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகில் தொடங்கிய பரப்புரைப் பயணம், பிற்பகல் 12 மணியளவில் கேளம்பாக்கம் கடைவீதி அருகில் நடைபெற்றது. மதிய உணவைத் தொடர்ந்து மாலை 3.30 மணியளவில் திருப்போரூர் பேருந்து நிலையம் அருகிலும், மாலை 6 மணியளவில் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகிலும் நடைபெற்றது. காலை உணவு குமரன் ஏற்பாடு செய்தார். இரவு உணவு ம.தி.மு.க. தோழர் சங்கர் ஏற்பாடு செய்தார். மதிய உணவு, மறுநாள் காலை உணவுக்கு இராயப் பேட்டை தோழர் சபரி ஏற்பாடு செய்தார். மாமல்ல புரத்தில் வழக்கறிஞர்கள் துரை அருண், திருமூர்த்தி பங்கேற்று உரை நிகழ்த்தினர். கு. அன்பு தனசேகர், மோகன், பிரகாசு, வேழவேந்தன் ஆகியோர் பயணக் குழுவினரோடு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இரவு தோழர்கள் தங்குவதற்கு சபரி ஏற்பாடு செய்தார்.
அனுமந்தபுரம் : 23.3.2015 காலை 10 மணிளவில் அனுமந்தபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் பயணம் தொடங்கியது. அனுமந்தபுரத்தில் இதுபோன்ற பரப்புரையை தொடர்ந்து நடத்துங்கள் என்று பலரும் கேட்டுக் கொண்டனர். காலை 11.30 மணியளவில் கல்பாக்கம் பேருந்து நிலையம் அருகிலும், மாலை 3.30 மணியளவில் கடப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகிலும், மாலை 6 மணியளவில் அம்பேத்கர் சிலை அருகிலும் பரப்புரை நடை பெற்றது. அம்பேத்கர் சிலைக்கு பயணக்குழுவினர் மாலை அணிவித்தனர். விடுதலை சிறுத்தைக் கட்சியைச் சார்ந்த நாவரசு, தயாளன் ஆகியோர் பங்கேற்றனர். மதிய உணவுக்கு கல்பாக்கம் முருகேசன் ஏற்பாடு செய்தார். தேம்பாக்கம் அப்பு, ஸ்ரீதர் ஆகியோர் தேனீர் வழங்கினர். பெருங்குடி பாலாஜி ரூ.1000 நன்கொடை வழங்கினார். இரவு உணவு மற்றும் தோழர்கள் தங்குவதற்கும், மறுநாள் காலை உணவுக்கும், புதுவை தி.வி.க. தலைவர் லோகு அய்யப்பன் ஏற்பாடு செய்தார்.
கடலூர் : 24.3.2015 காலை 10 மணியளவில் கடலூரில் பரப்புரை தொடங்கியபோது, காவல் துறை பரப்புரை நடத்த அனுமதி மறுத்தது. பொது மக்களிடம் துண்டறிக்கைகள் மட்டும் வழங்கப் பட்டன. கழகத் தோழர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து, பரப்புரைக்கு அனுமதி மறுத்ததை எடுத்துக் கூறி, தொடர்ந்து பரப்புரை தடையின்றி நடந்து வருவதை சுட்டிக் காட்டினார். காவல்துறை கண்காணிப்பாளர், பரப்புரைக்கு அனுமதி தந்தார். மாலை 5 மணியளவில் புதுசத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் பரப்புரை திட்ட மிட்டபடி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு பரங்கிப்பேட்டை மார்க்கெட் அருகிலும், இரவு 8 மணிக்கு சிதம்பரம் காந்தி சிலை அருகிலும் பரப்புரைகள் நடந்தன. மதிய உணவு மற்றும் இரவு உணவை பெரியாரியல் முன்னணி ஒருங்கிணைப் பாளர் புதுச்சேரி தீனா ஏற்பாடு செய்தார். அந்த அமைப்பைச் சார்ந்த தீனா, கருணா, பரத், ஜெய்சங்கர், செந்தில் உள்ளிட்ட தோழர்கள் ஒருநாள் முழுதும் நிகழ்ச்சியில் பங்கேற்று குழுவினருடன் இணைந்து துண்டறிக்கைகளை வழங்கினர்.
மனம் மாறிய பா.ஜ.க. தலைவர்
புவனகிரி : 25.3.2015 அன்று காலை 10 மணி யளவில் புவனகிரி எம்.ஜி.ஆர். சிலை அருகில் பரப்புரை தொடங்கியது. 11.30 மணியளவில் சேத்தியாதோப்பு பேருந்து நிறுத்தம் அருகிலும், மாலை 4 மணியளவில் வடலூர் நான்குமுனை சாலையிலும் நடைபெற்றது. (இந்த இடத்தில் பா.ஜ.க. மாவட்ட செயலாளர் வைரகண்ணன் என்பவர், பரப்புரைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆதர வாளர்களை அலைபேசி வழியாக அழைத்தார். எவரும் வரவில்லை. பிறகு ஓரமாக நின்று கூட்டத்தைக் கேட்டார், தோழர் அய்யனார் – பயணத்தின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசியதைக் கேட்டார். இறுதியில் கருத்துகளைப் பாராட்டி கை குலுக்கினார். ரூ.100 நன்கொடையும் வழங்கினார். மாலை 6 மணியளவில் நெய்வேலி பேருந்து நிலையம் அருகில் பரப்புரை நடைபெற்றது. இங்கு நைனார் குப்பம் சு.சிலம்பு என்ற தோழர், பயணக்குழுவினரை சந்தித்துப் பேசினார். அந்த ஊரில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஜாதி வெறியர்களால் 8 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தை தோழர்களிடம் விளக்கினார். தன்னுடன் 20 தோழர்கள் கழகத்தில் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தார். காலை உணவுக்கு நாகை மாவட்ட செயலாளர் மயிலாடுதுறை மகேஷ் ஏற்பாடு செய்தார். இரவு தங்குவதற்கும், மதிய உணவு, இரவு மற்றும் மறுநாள் காலை உணவு அனைத்தும் வடலூர் கழகத்தோழர் கலியமூர்த்தி ஏற்பாடு செய்தார்.
மங்களம் : 26.3.2015 அன்று காலை 10 மணியளவில் மங்களம் கிராமத்தில் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. 11.30 மணியளவில் விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகில் பரப்புரை நடைபெற்றது. மாலை 3.30 மணியளவில் திட்டக்குடி பேருந்து நிலையம் அருகிலும், 5.30 மணிக்கு தொழுதூர் நான்கு முனை சாலை அருகிலும் பரப்புரை நடைபெற்றது. மதிய உணவுக்கு கடலூர் மாவட்ட அமைப்பாளர் பாரதிதாசன் ஏற்பாடு செய்தார். இரவு உணவுக்கு வெற்றிவேல், மதியழகன் ஏற்பாடு செய்தனர். இரவு தங்குவதற்கு தமிழ்வாணன் அவரது மகன் இராவணன், தனது பெரியார் பள்ளியில் ஏற்பாடு செய்தனர். கடலூர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பாலமுருகன் பரப்புரையில் பங்கேற்றார்.
வேப்பூர் : 27.3.2015 அன்று காலை 10 மணியளவில் வேப்பூர் மேம்பாலம் அருகிலும், காலை 11.30 மணிக்கு அடரி பேருந்து நிறுத்தம் அருகிலும் பரப்புரைப் பயணம் நடைபெற்றது. மாலை 4 மணியளவில் மாங்குளம் துவக்கப் பள்ளியில், மாணவ மாணவிகளிடையேயும், மாலை 6 மணியளவில் சிறுப்பாக்கம் பேருந்து நிலையம் அருகிலும் பரப்புரை நடைபெற்றது. சிறுப்பாக்கம் வழக்கறிஞர் திருமூர்த்தி அவர்களின் சொந்த கிராமம் ஆகும். எனவே அவர் பயணக்குழுவுக்கு உதவிட சிறுப்பாக்கம் வந்திருந்தார். சிறுபாக்கத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் திருமூர்த்தி ஆகியோர் உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் சென்னை தோழர்கள் குகானந்தன், மோகன், பிரகாசு, வழக்கறிஞர் துரை. அருண் ஆகியோர் பங்கேற்றனர். தோழர்கள் இரவு தங்குவதற்கும் மதிய உணவு, இரவு மற்றும் மறுநாள் காலை உணவுக்கும் வழக்கறிஞர் திருமூர்த்தி ஏற்பாடு செய்தார். காலை நிகழ்ச்சியில் தி.மு.க. தோழர்கள் ஜி.வெங்கடாசலம், எ.பாபு ஆகியோர் தோழர்களுக்கு தேநீர் வழங்கினர்.
நைனார்பாளையம் : 28.3.2015 அன்று காலை 10 மணியளவில் நைனார்பாளையம் கடைவீதி அருகிலும் 11.30க்கு சின்னசேலம் பேருந்து நிலையம் அருகிலும் பரப்புரை நடைபெற்றது. 4 மணிக்கு கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகிலும், மாலை 6 மணியளவில் மூரார்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகிலும் பரப்புரை நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் திருமூர்த்தி, விழுப்புரம் மாவட்டத் தலைவர் வெற்றிவேல், க. இராமர் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். மதிய உணவுக்கு கல்லை ஆசைத்தம்பி ஏற்பாடு செய்தார். இரவு உணவு கழக ஆதரவாளர் அர.சண்முகம் ஏற்பாடு செய்தார். இரவு தங்குவதற்கும் மறுநாள் காலை உணவுக்கும் கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்தனர்.
தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆதரவு
சங்கராபுரம் : 29.3.2015 அன்று காலை 10 மணியளவில் சங்கராபுரம் அண்ணாசிலை அருகில் விடுதலைக் கலைக் குழுவினரின் பறை முழக்கத்துடன் துவங்கிய பயணம் காலை 11.30க்கு பகண்டை கூட்ரோட்டில் நடைபெற்றது. மாலை 4.30 மணியளவில் மூங்கில் துறைப்பட்டு சர்க்கரை ஆலை அருகிலும், மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை காமராசர் சிலை அருகிலும் பரப்புரை நடைபெற்றது. மதிய உணவுக்கு மூங்கில் துறைப்பட்டு பன்னீர்செல்வம் ஏற்பாடு செய்தார். இரவு உணவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த பாலசுந்தரம் ஏற்பாடு செய்தார். இரவு தங்கல் மற்றும் மறுநாள் காலை உணவுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செஞ்சி மஸ்தான் ஏற்பாடு செய்தார். இரண்டு நிகழ்விலும் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ச. பெரியார் வெங்கட், மாவட்ட அமைப்பாளர் செ.நாவாப்பிள்ளை, மாவட்டத் துணைத் தலைவர் கோ.சாக்ரடீசு, மா. நாகராஜ், மா.குமார், குப்புசாமி உள்பட தோழர்கள் பலரும் பங்கேற்றனர்.
க. இராமர் உரை நிகழ்த்தினார்.
சேத்துப்பட்டு-வந்தவாசி : 30.3.2015 அன்று காலை 9 மணியளவில் தி.மு.க. வடக்கு மாவட்டச் செயலாளர் செஞ்சி மஸ்தான் பயணக் குழுவை வரவேற்று, தோழர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். காலை 10.30 மணிக்கு சேத்துப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகிலும், பிற்பகல் 12 மணி யளவில் வந்தவாசி தேரடி வீதியிலும், மாலை 3 மணியளவில் உத்திரமேரூர் பேருந்து நிலையத்திலும் நடைபெற்ற பரப்புரைப் பயணம், மாலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடைந்தது. தாம்பரம் நிறைவு விழா பொதுக் கூட்டத்துக்கு காவல்துறை கடைசி நேரத்தில் அனுமதி மறுத்ததால் நீதிமன்றத்தில் அனுமதி கோரி வழக்கு தொடரப் பட்டுள்ளது. கூடுவாஞ்சேரியில் கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்த மாட்டுக்கறி உணவை முடித்துக்கொண்டு, பயணக்குழுவினர் சென்னை திரும்பினர்.
செய்தி தொகுப்பு: விழுப்புரம் அய்யனார்

பெரியார் முழக்கம் 09042015 இதழ்

You may also like...

Leave a Reply