தென் மாவட்டங்களில் ஜாதிவெறி: துணைபோகும் காவல்துறை

தென் மாவட்டங்களில் ஜாதி வெறி தலைதூக்கி ஆடுகிறது; கொலைகள் தொடர் கதையாகின்றன. காவல்துறையில் அந்தந்த பகுதி ஆதிக்க ஜாதியினரை அதிகாரிகளாக நியமிக்கக் கூடாது என்று திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கழகத்தின் கருத்தை உறுதி செய்து, காவல்துறையே ஜாதி உணர்வோடு செயல்படுவதை விளக்குகிறது இக்கட்டுரை.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மறுபடியும் இரத்தச் சகதியில் மிதக்கின்றன. கடந்த ஏழு மாதங்களில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் நடந்திருக்கும் கொலைகளின் எண்ணிக்கை 100; தூத்துக்குடியில் 70. ஒவ்வொரு நாளும் கொலையோடு தான் விடிகிறது. தென் தமிழக மாவட்டங்களில் பதற்ற நிலை பரவிக் கொண்டிருக்கிறது.
நடந்திருக்கும் கொலைகளில் சரி பாதிக்குக் காரணம்… ஜாதி. ஆனால், அந்தக் காரணங்கள் அனைத்தும் மிக அற்பமானவை. நாங்குநேரி அருகே இருக்கிறது பானாங்குளம், கரந்தநேரி ஆகிய இரு கிராமங்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பானாங்குளத்தைச் சேர்ந்த இரண்டு பேர் டி.வி. பழுதுபார்க்க கரந்தநேரிக்குச் சென்றுள்ளனர். இருவரும் இரு சக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றதாகவும், கரந்தநேரியைச் சேர்ந்தவர்கள் இதைக் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக எழுந்த வாய்த் தகராறு, அடிதடியானது. இரு ஊர்களிலும் வசிப்பது வேறு வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்தச் சில்லறைத் தகராறு, ஊர்ப் பகையாக மூண்டது. விளைவு… பானாங் குளத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று, ஊர் எல்லையில் உள்ள இரயில்வே கேட் ஓரத்தில் மறைந்து கொண்டு, கரந்தநேரியைச் சேர்ந்த யார் அந்தப் பக்கமாக வந்தாலும் வெட்டியது. வேல்சாமி என்கிற கட்டடத் தொழிலாளி கொடூரமாக வெட்டிக் கொல்லப் பட்டார். இரவில் வண்டியில் வீடு திரும்பிய ஜெயப் பிரகாஷை வளைத்துப் பிடித்து வெட்ட, இரத்தம் சொட்டியபடி அவர் தப்பி ஓடினார். கணேசன் என்பவர் வெட்டப்பட்டு கீழே சரிய, அடுத்து வந்த மாரிக்கனி என்பவரைக் கழுத்தை அறுத்துக் கொன்றது அந்தக் கும்பல். அடுத்த நாள் அவரது தலை இல்லாத உடல் ஓர் இடத்திலும், தலை வேறு ஓர் இடத்திலும் கண்டறியப்பட்டன. இப்படியாக இரண்டு பேர் உயிரைப் பறித்து, இரண்டு பேரைக் குற்றுயிராகப் போட்டுச் சென்றார்கள். சில வாரங்கள் கழித்து, இதற்குப் பழிக்குப் பழியாக, பானாங் குளத்தைச் சேர்ந்த கொம்பையா என்பவரின் உணவு விடுதியைச் சூறையாடி, அவரை வெட்டிப் போட்டு விட்டுச் சென்றது ஒரு கும்பல்.
வள்ளியூர் பக்கம் நம்பியான் விளைக்காரர் டேவிட் ராஜா, ஒரு பொறியியல் மாணவர். பைக்கில் கல்லூரிக்குச் சென்ற இவரை, பின்னாலேயே இரண்டு வண்டிகளில் துரத்திச் சென்ற கும்பல் வழி மறித்து நிறுத்தி வெட்டிக் கொன்றது. ஏழு பேர் இந்த விவகாரத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலம் பயங்கரம். “பள்ளியில் படிக்கும் போதிருந்தே எங்களுக்குள் பிரச்சினை. டேவிட் ராஜா நண்பர்களுக்கும் எங்களுக்கும் அடிக்கடி சண்டை வரும். டேவிட் ராஜா எங்கள் பகுதிக்கு வந்து எங்கள் ஜாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை சைட் அடித்தார். இது எங்களுக்குப் பிடிக்கவில்லை. அவரை எச்சரித்த போது, அவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து எங்களை அடித்து உதைத்தனர். இதற்குப் பழி வாங்குவதற்காகத்தான் கொலை செய்தோம்” என்பது அவர்களின் வாக்குமூலத்தின் சாரம். பள்ளிக்கூட தகராறு படுகொலை வரை போயிருக்கிறது.
உண்மையில் இப்போது நெல்லை, தூத்துக்குடி பகுதியில் நடந்து கொண்டிருப்பவை ‘நம்பர் கொலைகள்’. யார் பக்கம் அதிகம் உயிர்ச்சேதம் ஆகிறது என்பதுதான் போட்டி. கொலை செய்பவர் களுக்கும் கொலை செய்யப்படுபவர்களுக்கும் எந்தவிதமான முன்விரோதமோ, முன் அறிமுகமோ கிடையாது. பெயர்கூடத் தெரியாது. குறிப்பிட்ட ஊரைச் சேர்ந்தவர்; குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர் என்ற காரணங்களே, கொலை செய்வதற்குப் போதும்.
நாங்குநேரி அருகே ஆடு மேய்க்கும் பெரியவரைக் கொலை செய்தது இப்படித்தான். இப்போது இந்தப் பகுதி கிராம மக்கள், வெளியில் நடமாடுவதற்கே அஞ்சும் அளவுக்குப் பதற்றமான சூழல். பானாங் குளத்திலும் கரந்தநேரியிலும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் போலீ° பாதுகாப்புடன்தான் தேர்வு எழுதுகின்றனர். திருமணங்கள், போலீ° பாதுகாப்புடன்தான் நடைபெறுகின்றன.
காரணமற்ற கொலைகள்!
சாத்தான்குளத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்கிற 56 வயது பெரியவர், ஏதோ வேலையாக தூத்துக்குடிக்கு வந்திருக்கிறார். தாகமாக இருக்கிறதே என ஒரு வீட்டின் கதவைத் தட்டி, தண்ணீர் கேட்டிருக்கிறார். அவரை திருடன் என நினைத்து வீட்டில் உள்ளவர்கள் அடிக்க, மயங்கிச் சரிந்து மரணம் அடைந்தார். தாகத்துக்குத் தண்ணீர் கேட்டது ஒரு குற்றமா? திருடன் என நினைத்து அடித்தாலும்கூட சாகும் அளவுக்கா அடிப்பார்கள்? அந்தப் பெரியவருக்கும் அடித்தவர்களுக்குமான அறிமுகம் சில நிமிடங்கள்கூட இருக்காது. அவர்களால் இவரது உயிர் பறிக்கப்பட்டுவிட்டது. இதைவிடக் கொடூரமானது கீழே உள்ள சம்பவம்.
சங்கரன்கோயில் அருகே உள்ள அழகனேரியைச் சேர்ந்தவர் செல்வா. 25 வயது இளைஞரான இவர், தனியார் பேருந்து ஒன்றின் நடத்துனர். கங்கை கொண்டான் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி நோக்கி பேருந்து புறப்பட்டது. அங்கு ஏறிய நான்கு பேர் குடிபோதையில், பேருந்தின் படியில் தொங்கிக் கொண்டு வந்தனர். ‘போதையில் கீழே விழுந்து செத்துத் தொலைத்தால், நம்ம உயிரை எடுப்பார்களே’ என நினைத்த செல்வா, அவர்களை உள்ளே வருமாறு எச்சரித்தார். அவர்கள் மறுக்க, பேருந்தை நிறுத்தி, நான்கு பேரையும் இறக்கிவிட்டு விட்டுக் கிளம்பினார். இறங்கிய நான்கு பேரும் வெறிகொண்ட நிலையில் அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் சென்று பாட்டில் நிறைய பெட்ரோல் வாங்கினார்கள். ஒரு ஆட்டோவைப் பிடித்து பாயைங்கோட்டை பேருந்து நிலையத் துக்குச் சென்றார்கள். அங்கு நடத்துனர் செல்வா, பயணிகளை இறக்கிவிட்டு அடுத்த ட்ரிப் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். பட்டப்பகலில், ஒரு பேருந்து நிலையத்தின் மையத்தில் உடல் எங்கும் தீ பற்றித் துடித்துக் கதறினார் செல்வா. அருகில் இருந்த கடைக்காரர்கள் தண்ணீர் ஊற்றி அணைத்தனர் என்றாலும் அவரது உடலின் முக்கால்வாசி பகுதி எரிந்துவிட்டது.
இப்படி, இதற்குத்தான் என கணக்கு வழக்கு ஏதும் இல்லாமல், கொலைகள் விழுகின்றன. இப்படி கொலைகள் செய்வோரை, ஊரும் உறவுகளும் கைவிடுவதும் இல்லை; பழிச்சொல் கூறுவதும் இல்லை. மாறாக, அரவணைக்கின்றனர்; பாதுகாக் கின்றனர். பல கொலைகளில் சம்பந்தப்பட்ட ஜாதிச் சங்கத் தலைவர்கள் உடனடியாக நேரில் வந்து ஆறுதல் சொல்வதன் பெயரால், தூபம் போடு கின்றனர். குற்றவாளிகளைக் காவல் துறையிடம் இருந்து பாதுகாக்கின்றனர்.
காவல்துறை என்ன செய்கிறது?
எ°.பி.யை மாற்றுவது, ஏட்டய்யாவை மாற்றுவது என காவல்துறை தன்னால் முடிந்ததை செய்துதான் பார்க்கிறது. ஆனால், கொலைகள் குறைந்தபாடு இல்லை.
“பல கொலைகளுக்கு காவல் துறைதான் உடந்தையாக இருக்கிறது. கொலையாளி தன் ஜாதியைச் சேர்ந்தவன் என்றால், பாதுகாக்கிறது. இந்தப் பகுதியின் காவல் நிலையங்களில் அதிகபட்சம் இருப்பது பெரும்பான்மை ஜாதியைச் சேர்ந்த போலீஸார்தான். அவர்கள் காக்கிச் சட்டை அணிந்திருந்தாலும், உள்ளே ஜாதி வெறியர் களாகவே இருக்கிறார்கள் அல்லது ஜாதி வெறியர் களுக்கு சல்யூட் அடிக்கிறார்கள். மேல்நிலை அதிகாரிகளை அடிக்கடி டிரான்°ஃபர் செய்வதைப் போல, அடிமட்ட காவலர்களையும் அடிக்கடி டிரான்°பர் செய்ய வேண்டும். அப்போதுதான் இது குறையும்” என்கிறார், மனித உரிமை மீறல்கள் குறித்த இலவசச் சட்ட உதவி மையத்தின் அமைப்பாளரான வழக்குரைஞர் கிரிநிவாச பிரசாத்.
ஓர் ஊரில் ஜாதிப் பிரச்சினை நடக்கிறது என்றால், சம்பந்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த அதிகாரியையே அங்கே அனுப்பி நிலைமையைச் சமாளிப்பதை ஒரு டெக்னிக்காக காவல்துறை பின்பற்றுகிறது. முள்ளை முள்ளாலேயே எடுக்கிறார்களாம். சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் சாதிப் பற்றைப் பயன் படுத்திக் கொள்ளும் இந்தப் போக்கு, அந்த நேரத்துப் பதற்றத்தைத் தற்காலிகமாகத் தணிக்கலாம். ஆனால், அது ஊரின் ஜாதிப் பகையை இன்னும் இன்னும் இறுக்கமாக்கி, மேலும் மோசமாக்கவே உதவும்.
கையில் கட்டும் கயிறு கூறும் ஜாதி அடையாளம்
மின்சாரக் கம்பத்தில் அவரவர் ஜாதிக் கட்சியின் நிறத்தை வரைந்து வைக்கிறார்கள். அதில் அடுத்த தெரு நாய் சிறுநீர் கழித்தாலே, விவகாரமாகி தகராறு, கைகலப்பு, கத்திக்குத்து, பள்ளி, கல்லூரி மாண வர்கள் பே°புக்கில் தன் ஜாதிக்கு எனத் தனித்தனி குழுக்கள் தொடங்கி, அதில் ‘ஆண்ட பரம்பரை’ பெருமை பேசுகிறார்கள். மற்ற ஜாதியினருக்குச் சவால் விடுகின்றனர். பள்ளிகளுக்கு தன் ஜாதிக் கட்சியின் நிறத்தில் கயிறு அணிந்து செல்கிறார்கள் மாணவர்கள். கையில் இன்ன நிறக் கயிறு அணிந்தால், அவன் இன்ன ஜாதிக்காரப் பையன் என அடை யாளமாம். அரசியல் ஆட்கள், அவரவர் தலைவர்/தலைவியின் படத்தை சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொள்வதுபோல, இது ஓர் அடையாளம்.
“பயங்கர விளைவுகளை, விபரீதங்களை உண்டாக்கும் ஜாதி உணர்வு, இப்படி பள்ளி, கல்லூரிகளிலேயே வளர்க்கப்படுவது வேதனை யானது. சில ஆசிரியர்கள் அவர்கள் செய்யும் தவறுக்காகத் தண்டிக்கப்படும்போது, மாணவர்களை ஜாதிய ரீதியில் தூண்டிவிட்டுத் தப்பிக்க முயற்சிக்கிறார்கள். ஜாதி அடிப்படையில் அணி திரளும் மாணவர்களை ஜாதிய அமைப்புகள் எளிதாகக் கையில் எடுத்துக் கொள்கின்றன. “அவ்வளவு பெரிய தலைவர் தன்னிடம் நெருக்கமாக இருக்கிறாரே” என்கிற மனநிலையில் மாணவர்கள் இதை ஒரு ஹீரோயிசமாக கருதிக் கொள்கின்றனர்” என்கிறார் வழக்குரைஞர் பிரம்மா.
வீட்டின் நல்லது – கெட்டதுக்கு உள்ளூர் கேபிள் டி.வி.யில் விளம்பரம் தந்தால், அதில், தன் ஜாதியின் பெருமையைப் பேசும் சினிமா பாடலை ஒளிபரப்புகின்றனர். ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு பாடல் தேசிய கீதம்போல இருக்கிறது. அதேபோல ஒவ்வொரு ஜாதியினரும் தங்கள் வீட்டின் காதுகுத்து, திருமணத்துக்கு போ°டர் அடிக்கும்போது, தன் ஜாதியை சார்ந்த நடிகரின் புகைப்படத்தைத் தவறாமல் அதில் அச்சிடுகின்றனர். இவர்கள் அச்சடிப்பதைப் பார்த்துதான், இன்ன நடிகர் இன்ன ஜாதியைச் சேர்ந்தவர் என்பதே நமக்கு தெரிய வரும். அந்த அளவுக்கு எல்லாவற்றிலும் கண்ணும் கருத்துமாக ஜாதி பார்க்கின்றனர்.
நன்றி: ‘ஆனந்தவிகடன்’ 1.4.2015

பெரியார் முழக்கம் 16042015 இதழ்

You may also like...

Leave a Reply