தலையங்கம் – தீர்ப்பு வந்துவிட்டது!
19 ஆண்டுகாலம் இழுத்தடிக்கப்பட்ட ஒரு வழக்கை இரண்டே நிமிடங்களில் தீர்ப்பளித்து தீர்வு கண்டுவிட்டது கருநாடக உயர்நீதிமன்றம். ஜெயலலிதா மற்றும் அவரது குழுவினரான சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்பட எவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து ஏதும் சேர்க்கவில்லை என்பதே நீதிமன்றத்தின் தீர்ப்பு. ஆம்! இப்போது இவர்கள் சட்டப்படி ஊழல் ஏதும் இழைத்திடாத குற்றமற்றவர்கள்!
“நான் புடம் போட்ட தங்கமாக மீண்டு வந்துவிட்டேன்” என்று ஜெயலலிதாவும் அறிவித்திருக்கிறார். அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்களும் அந்த கட்சியினரும் வெற்றியைக் கொண்டாடி மகிழும்போது எதிர்கட்சிகளோ வியப்பிலும் அதிர்ச்சியிலும் மூழ்கியுள்ளன.
எப்போதுமே இந்த ‘பாரத புண்ணிய பூமி’யில் ஊழல் இரண்டு முகம்களைக் கொண்டிருக்கிறது. ஒன்று ‘பிராமண’ ஊழல்; மற்றொன்று ‘சூத்திர’ ஊழல். குற்றம் செய்தவர்கள் பார்ப்பனர்களாக இருந்தால், அவர்களை தண்டிக்கக் கூடாது என்று மனுசா°திரம் கண்டிப்பாக கூறிவிட்டது. அந்த ‘மனு’ இப்போது வேறு வடிவங்களில் இயங்கிக் கொண்டு இருக்கிறது.
இதற்கு அண்மைக்கால உதாரணங்களே உண்டு. லல்லுபிரசாத், ஓம்பிரகாஷ் சவுதாலா, கனிமொழி, அ.இராசா போன்ற ‘சூத்திரர்கள்’ ஊழல் வழக்கில் சிக்கினால், அவர்கள் பிணையில் வருவதற்குக்கூட சுமார் ஓராண்டுகாலம் சிறையில் இருந்தாக வேண்டும். ஜெயலலிதா, காஞ்சி ஜெயேந்திரன் போன்ற உயர்குடிப் பார்ப்பனர்கள் குற்றம்சாட்டப்பட்டால், அவர்கள் பிணையில் வெளி வருவதற்கு ஒரு மாதம்கூட சிறையில் இருக்கத் தேவையில்லை. உடனே பிணை கிடைத்து விடும். காஞ்சி ஜெயேந்திரனுக்கு பிணை வழங்கும்போதே உச்சநீதிமன்ற பார்ப்பன நீதிபதி, “அவர் குற்றமற்றவர்” என்று தீர்ப்பையும் சேர்த்து எழுதி, புதிய ‘வரலாறு’ படைத்தார்.
இப்போது ஜெயலலிதா வழக்கிலும்கூட பல ‘அதிசயமான’ திருப்பங்கள் நடந்திருக்கின்றன. இந்த சொத்துக் குவிப்பு வழக்கைக்கூட தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, தனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஊழல் இலஞ்ச ஒழிப்புத் துறை வழியாக தனக்கு எதிராக தானே நடத்திக் கொண்டிருந்தார். 70 சாட்சிகள் பிறழ் சாட்சிகளாயினர். ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கை நடத்துவதற்கு ஜெயலலிதா ஆட்சியிடமிருந்தே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில்தான் வழக்கு பெங்களூருக்கு மாற்றம் செய்யப்பட்டது. தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தொடர்ந்த வழக்கினால் நிகழ்ந்த மாற்றம் இது. பெங்களூருக்கு மாற்றப்பட்ட பிறகும்கூட ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடும் வழக்கறிஞரை – அவரது ஆட்சியே அரசு செலவில் நியமித்துக் கொண்டது. (வாதாடியவர் பவானி சிங்) பிறகு உச்சநீதிமன்றம் தலையீட்டிற்குப் பிறகு ‘பவானி சிங்’ வாதம் தள்ளுபடியானது.
1999இல் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் அ.இ.அ.தி.மு.க.வைச் சார்ந்த தம்பிதுரை, மத்திய சட்ட அமைச்சராக இருந்தார். அவர்தான் தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட மூன்று சிறப்பு நீதிமன்றங்களை கலைத்து உத்தரவிட்டார். அப்போதும் உச்சநீதிமன்றம் தலையிட்டு அந்த உத்தரவை நீக்கம் செய்து வழக்குகளை வழமையான நீதிமன்றங்களில் விசாரிக்க உத்தரவிட்டது. இப்படி ஊழல் வழக்குகளிலிருந்து விடுதலை பெறுவதற்கு ‘அதிகாரங்கள்’ பல்வேறு கட்டங்களில் முறைகேடுகளாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு பார்ப்பன ஜெயலலிதாவுக்குத்தான் கிடைத்திருக் கிறது. எந்த ‘சூத்திர’ குற்றவாளிக்காவது இப்படி வாய்ப்புகள் கிடைத்துவிடுமா?
ஜெயலலிதாவை விடுதலை செய்துள்ள கருநாடக உயர்நீதிமன்ற நீதிபதி, 66.6 கோடி ரூபாய் சொத்துக்களை துல்லியமாக பிரித்துப் பிரித்து ஆராய்ந்து, கூட்டல் கழித்தல்களை எல்லாம் போட்டு இறுதியாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதாவும் அவரது குழுவினரும் சேர்த்துள்ள சொத்துக்கள் 8.12 சதவீதம் மட்டும்தான். ஆகவே இது சட்டப்படி குற்றமாகாது என்று நீதிபதி கூறிவிட்டார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் ஊழலில் கூட விதிவிலக்குகள் உண்டு. இப்படி ஒரு விதி விலக்கை ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தின் வழியாக கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி என்ற ‘பிராமணர்’ வாங்கி வைத்திருக்கிறார். இவரது வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக 10 சதவீதம் வரை சொத்து சேர்க்கலாம் (அதாவது ஊழல் புரியலாம்) என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அது மட்டுமல்ல, ஆந்திர மாநில அரசு வருமானத்துக்கு அதிகமாக 20 சதவீதம் வரை சொத்து சேர்ப்பது குற்றமாகாது என்று ஒரு சுற்றறிக்கையும் விட்டிருக்கிறதாம். இந்த சுற்றிக்கையும் இப்போது நீதிபதியின் தீர்ப்புக்கு வலிமை சேர்த்திருக்கிறது.
குற்றம்சாட்டப்பட்ட ஒரு ‘பிராமணர்’ வழக்கை சந்திப்பதற்கும் ஒரு ‘சூத்திரர்’ வழக்கை சந்திப்பதற்கும் உள்ள வேறுபாடுகளை சுட்டிக்காட்டவே இவற்றை எடுத்துக் காட்டினோம்.
கடவுளுக்கும் புரோகிதருக்கும் ‘காணிக்கை’, ‘தானம்’ வழங்குவதுகூட ‘ஊழல்’ தான் என்றாலும் அதற்கு பார்ப்பனியம், ‘தெய்வீகத்தன்மை’யை வழங்கி யிருக்கிறது. அதன் காரணமாகத்தான். ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுதலைபெற அவரது அமைச்சர்கள் ‘காணிக்கை’, ‘தானங்களை’, ‘புரோகிதர்களுக்கும்’, ‘கடவுள்களுக்கும்’ வழங்கி வேண்டுதல்களை நிகழ்த்தினர். அந்த ‘வேண்டுதல்களுக்கு’ ஜெயலலிதாவும் நன்றி கூறியிருக்கிறார்.
இவையெல்லாம் ‘பிராமண’ ஊழல் வழக்குகளுக்குக் கிடைக்கக்கூடிய தனித்த சிறப்புரிமைகள். இனி அடுத்து என்ன நடக்கும்?
வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் பேசத் தொடங்கியுள்ளன. அப்படியே மேல்முறையீடு செய்து அந்தத் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு மற்றொரு 19 ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டி யிருக்கும்! காரணம், இது “பிராமண” ஊழல் வழக்கல்லவா?
பெரியார் முழக்கம் 14052015 இதழ்