சட்டத்தில் `கடவுள்’ சொல்லை இணைக்க மறுத்த அம்பேத்கர்

“அம்பேத்கரின் முகப்புரை: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இரகசிய வரலாறு” எனும் தலைப்பில் ஆகாஷ் சிங் ரத்தோ எழுதிய ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை ‘எதிர் வெளியீடு’ வெளியிட்டுள்ளது. இந்த நூலை திறனாய்வு செய்து ம.கி எட்வின் பிரபாகரன் ஜூலை 12.07.2025 அன்று நடைபெற்ற 28வது நிமிர்வோம் வாசகர் வட்டத்தில் நிகழ்த்திய உரையின் சுருக்கம்:

அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை (preamble) எழுதியது யார்? என்ற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக, ஆய்வாளர் ஆகாஷ் சிங் ரத்தோர் ஆங்கிலத்தில் எழுதிய Ambedkar’s preamble: A secret history of the constitution of India என்ற புத்தகத்தை, எழுத்தாளர் ச.வின்சென்ட் தமிழில் மொழிபெயர்த்து, “அம்பேத்கரின் முகப்புரை: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் இரகசிய வரலாறு” எனும் பெயரில் நூலாகக் கொண்டு வந்துள்ளார். சந்தர்ப்பசாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு, வேறு யாரும் இதனை எழுதியிருக்க வாய்ப்பில்லை என்பதை நிறுவுவதற்கான தரவுகளையும் மேற்கோள்களையும் தொகுத்தளித்து, அதன்மூலம் அம்பேத்கர்தான் முகப்புரையை எழுதினார் என்பதை நிறுவியுள்ளார்.

இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் போது, அரசியலமைப்புச் சபைக்கு வழிகாட்டும் ஆவணமாக, நேரு குறிக்கோள்கள் தீர்மானத்தை(1946) முன்மொழிந்தார். 1947-இல் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த தீர்மானத்திற்கும், பின்னாளில் அம்பேத்கர் எழுதிய முகப்புரைக்கும், நிறைய பொருத்தங்கள் உண்டு. நேருவின் தீர்மானத்திலும் அம்பேத்கரின் முகப்புரையிலும், பலச் சொற்கள் ஒன்றாகவே இருப்பதைக் காண முடிகிறது. Sovereign republic (இறையாண்மை கொண்ட குடியரசு), மக்கள் (அதிகாரம், சக்தி), நீதி (சமூகப் பொருளாதார, அரசியல்), சமத்துவம் (அந்தஸ்து, வாய்ப்பு), சுதந்திரம் (சிந்தனையிலும், அதனை வெளிப்படுத்துவதிலும், நம்பிக்கையிலும், வழிபாட்டிலும்) ஆகிய சொற்கள் அப்படியே பொருந்திப் போகின்றன.

இவற்றுள் “சமவாய்ப்பு” என்ற சொல்லை, பெரியார் தன் எழுத்தில் “சமஅனுபவம்” என்ற சொல்லின் மூலம் குறித்துள்ளார். பொதுவுடைமையா சமஅனுபவமா?, பொதுவுடைமையா? ஜாதி ஒழிப்பா? எதற்கு முன்னுரிமை தர வேண்டும்? எனும் கேள்வி எழுந்த பொழுது, பெரியார் சமஅனுபவத்தின் பக்கமும், ஜாதி ஒழிப்பின் பக்கமும் நின்றார். அதேபோல நம்பிக்கையிலும் வழிபாட்டிலும் முழுச்சுதந்திரம் என்ற போர்வையில் சூத்திரர்கள் இழிவு செய்யப்படுவதால் பெரியார் இயக்கம் சட்டத்தின் மத சுதந்திரப் பிரிவை ஏற்றுக்கொள்வதில்லை. அதனால்தான் ஜாதியைப் பாதுகாக்கும் சில சட்டப்பிரிவுகளை, பெரியார் தொண்டர்கள் தீயிட்டுக் கொளுத்தினர்.

சட்டத்தில் ‘மதச்சார்பின்மை’ என்ற சொல் இடம்பெறவில்லை இந்திரா காந்தி அவசரநிலை காலத்தில்தான் அது சேர்க்கப்பட்டது என்று சங் பரிவாரங்களும் ஒன்றிய அமைச்சர்களும் இப்போது பேசுகிறார்கள். எனவே அரசியல் சட்டத்தில் இருந்து “மதச்சார்பின்மை, சோசலிசம்” என்ற சொற்றொடர்கள் நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள். சட்டத்தின் நோக்கம் மதச்சார்பின்மையையும் சோசியலிசத்தையும் வலியுறுத்துவது தான். இதற்கு அரசியல் சட்ட அவையில் நடந்த விவாதங்கள் சான்றுகளாக இருக்கின்றன.

“எல்லாம் வல்ல கடவுள் பெயரால்” என்ற சொற்றொடரை சட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று ஷிபான்லால் சன்சேனா வலியுறுத்தினார். “முதன்மை உயிரான பரமேஸ்வரன்” என்றச் சொல்லை சட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கோவிந்த் மாளவியா வற்புறுத்தினார். இந்த இரண்டு கருத்துகளையும் அம்பேத்கர் ஏற்க மறுத்துவிட்டார். அரசியல் சட்டத்திற்குள் கடவுளுக்கோ மதத்துக்கோ இடமில்லை என்று மறுத்து இது மதச்சார்பற்ற தேசம் என்பதை அம்பேத்கர் உறுதிப்படுத்தினார்.

அதேபோல் சோசியலிசம் என்பதும் சட்டத்தில் இடம்பெறவில்லை. இதற்கும் அரசியல் சட்ட குழுவில் நடந்த விவாதங்கள் சான்றுகளாக நிற்கின்றன. நேரு கொண்டு வந்த பொருளாதாரம் பற்றிய தீர்மானத்தில் பொதுவுடைமை என்ற சொல் இடம் பெறவில்லை. அம்பேத்கர் இந்த தீர்மானத்தை கடுமையாக விமர்சித்தார். “சமூகப் பொருளாதார நீதியை நிலை நாட்டுவதற்கு தொழிற்சாலைகளும் நிலமும் தேசிய மயமாக்கப்பட வேண்டும். நேருவின் தீர்மானம் இதை வெளிப்படையாகவே கூறியிருக்க வேண்டும் அப்படி இந்த தீர்மானம் கூறாதது எனக்கு ஏமாற்றத்தை தருகிறது. எதிர்வரும் அரசின் கொள்கை சோஷலிச பொருளாதாரமாக இல்லாவிட்டால் சமூகப் பொருளாதார நீதிகளை எப்படி சாத்தியமாக்க முடியும்” என்று அம்பேத்கர் கேள்வி கேட்டார். இதன் மூலம் சோசியலிசமே சட்டத்தின் குறிக்கோள் என்பதை அரசியலமைப்பு அவையில் நடந்த இந்த வாதங்களும் உறுதிப்படுத்துகின்றன.

இந்தியா ஒற்றுமையை அரசியல் சட்டம் வலியுறுத்துகிறது. ஆனாலும் கூட இந்தியா ஒரு தேசமாக உருவாகவில்லை என்பதையும் அம்பேத்கர் அரசியலமைப்பு அவையில் தெளிவாக விளக்குகிறார். ஒற்றுமைப் பாதையில் மக்களை பயணிக்கச் செய்வதற்கு ஒவ்வொரு கட்சிக்கும் கடமை இருக்கிறது, ஒற்றுமைப் பாதையில் இணைய மறுப்பவர்களை இந்த பாதைக்கு திருப்பி கொண்டு வரும் ராஜதந்திர நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் எடுக்க வேண்டும். ஒற்றுமைக்கு உடன்பட மறுப்போரின் விருப்பு வெறுப்புகளை அங்கீகரிக்க வேண்டும் என்றார் அம்பேத்கர். ஒற்றுமைப் பாதையில் அழைத்து வருவதற்கான முயற்சிகளை அவர் வலியுறுத்துவது வழியாக இந்தியா இன்னும் ஒரே தேசமாக உருவாகவில்லை என்ற உண்மையை உறுதிசெய்தார்.

அரசியலமைப்புச் சட்டத்தில் அம்பேத்கர் புகுத்த நினைத்த, பல பகுத்தறிவுபூர்வமான மாற்றங்களை, ஏற்கும் பக்குவம் இந்தியச் சமூகத்துக்கும் அதன் தலைமைப் பீடத்தில் அமர்ந்திருந்த பார்ப்பனச் சனாதன சக்திகளுக்கும் இல்லை.

விரக்தியின் உச்சத்திற்கே சென்ற அம்பேத்கர் தன்னுடைய சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். (1951). “நான் கேட்டுக்கொள்ளப்பட்டதைச் செய்தேன் என்னுடைய விருப்பத்திற்கு எதிராக; நான் வாடகை குதிரையாக பயன்படுத்தப்பட்டேன்; My pen was moved by brahmins, I did much against my will,” என்றார். மேலும், “அரசியலமைப்புச் சட்டம் என்னுடையதல்ல”, “அரசமைப்புச் சட்டம் பேய்கள் குடியிருக்கும் அழகான கோயில். அதை எரிக்கும் முதல் ஆளாக நான்தான் இருப்பேன்” என்று கடுமையாகச் சாடினார். இன்றைக்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ஆம் நாளை, அரசியலமைப்புச் சட்ட நாளாகக் கொண்டாடும் போது அரசமைப்புச் சட்டம் குறித்த அம்பேத்கரின் இந்த கருத்துகளையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் 1956-ல் இலட்சக்கணக்கான தொண்டர்களுடன் அம்பேத்கர் புத்தம் தழுவினார். பெரியாரையும் புத்தம் தழுவ அழைத்தார். மதம் மாறினால் இந்து மதத்தை விமர்சிக்ககூடிய அந்த வாய்ப்பை இழந்து விடுவோம் என்பதால், பெரியார் மதம் மாற மறுத்தார். அதே வேளையில், அம்பேத்கர் உள்ளிட்ட பலர் மதம் மாறுவதை பெரியார் ஆதரித்தார். அம்பேத்கர் மறைவுக்குப் பின், 1957 இல் அம்பேத்கர் சொன்னதை பெரியார் செய்தார். ஆம்! அரசியலமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் சில உட்பிரிவுகளை, பெரியார் தொண்டர்களை வைத்து , தீயிட்டுக் கொளுத்தச்செய்தார். ஒருவேளை அம்பேத்கர் அப்போது உயிருடன் இருந்திருந்தால், அவரும் அரசியலமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டத்தில், பெரியாருடன் கைகோர்த்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட தண்டனைச் சட்டத்தில், ஒருவர் தீண்டாமையைக் கடைபிடித்தால் எப்படி தண்டனைக்கு உள்ளாவாரோ அதேபோல, ஜாதியைக் கடைப்பிடித்தாலும் தண்டனைக்கு உள்ளாகும்படியான சட்டத்திருத்தங்களை மேற்கொண்டால் மட்டுமே, ஜாதியை முற்றுமுழுதாக அழிக்க முடியும் என்பது பெரியார் இயக்கப் பார்வை. அதற்கான வழிவகைகள் அரசியலமைப்புச் சட்டத்திலும் சேர்க்கப்பட வேண்டும் என்பதே நம் கோரிக்கை.

இந்தப் பார்வை ஒருபுறம் இருந்தாலும் கூட, இன்றைய அரசியல் சூழலில் நம்முடைய நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றைக்கு ஆர்எஸ்எஸ் பாஜக வலதுசாரி கும்பல்கள், அரசியல் சட்டத்தில் இருக்கக்கூடிய செக்யூலர், சோசியலிஸ்ட் ஆகிய இரண்டு சொற்களை நீக்குவதற்கு பல சதித்திட்டங்களைத் தீட்டி, அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில், அரசமைப்புச்சட்டத்தை எதிர்க்கிறேன் என்ற பெயரில், வலதுசாரிகள் செய்யும் செயலை நாமும் செய்ய முற்படுவது சூழலுக்குப் பொருந்தாது என்பதால், இன்றையச் சூழலில் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நமக்கு விமர்சனங்கள் இருந்த போதிலும், அதிலுள்ள மதச்சார்பின்மையையும் பொதுவுடைமைச்சார்பையும் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அந்த கடமையை கருத்தில் கொண்டு, ரத்தோர் சிங் எழுதியிருக்கும் இந்நூல், ஆழமான வாசிப்பிற்குரிய ஆவணமாகும்!”

“கொளத்தூர் நாத்திக விழா சிந்தனை” தொடர்
அடுத்த இதழில் வெளிவரும்.
பெரியார்முழக்கம்இதழ்07082025

You may also like...