பொதுக் கூட்ட மேடையில் மாநாடுபோல் நடந்தது இந்துமதி-நிர்மல் குமார் ஜாதி தாலி மறுப்பு மணவிழா
கழகத் தோழர்கள் நிர்மல்குமார்-இந்துமதி ஆகியோரின் ஜாதி-சடங்கு மறுப்பு திருமண விழா தாலியின்றி, கிணத்துக்கடவுவில் மே 17 அன்று பொதுக்கூட்ட மேடையில் நடந்தது. இந்த புரட்சிகர மணவிழாவுக்கு கழகத் தோழர்கள் ஏராளமாக திரண்டிருந்தனர். பொதுக் கூட்ட மேடையில் திருமணம் நடத்துவதற்கு காவல் துறை அனுமதி மறுத்தது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்று இந்தப் புரட்சிகர மணவிழா நடந்தது, இதன் மற்றொரு சிறப்பாகும். மணவிழா நிகழ்வு பற்றிய செய்தித் தொகுப்பு:
தோழர்கள் இந்துமதி-நிர்மல் குமார் ஆகியோரின் ஜாதி-தாலி-சடங்கு மறுப்பு திருமண விழா, மடத்துக்குளம் வெ.ஜோதி, திராவிடர் வாழ்வியல் பண்பாட்டு உறுதி மொழியை வாசிக்க, தோழர்களோடு பொது மக்களும் இணைந்து உறுதியேற்றனர். விழாவிற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றிட, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தோழர் ரஞ்சிதா வரவேற்புரையாற்றிட, பொள்ளாச்சி மாவட்ட கழகத் தலைவர் விஜயராகவன், சட்ட எரிப்புப் போராளி ஆனைமலை ஏ.கே. ஆறுமுகம் அவர்களை அறிமுகப்படுத்தினர். தொடர்ந்து காவல்துறை ஏற்படுத்திய தடைகள் குறித்தும் வழக்கறிஞர் களின் முனைப்பான பணியின் காரணமாக அனுமதி பெற்றது குறித்தும், தந்தை பெரியாரின் பெரும் பணி காரணமாக திராவிடர்கள் பெற்ற கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நீதி ஆகியவற்றை பிற மாநிலங்களைவிட தமிழகம் முன்னணியில் இருப்பது குறித்தும் பேசினார். முனைவர் ஆ.புரட்சிக் கொடி, மருத்துவர் பெரியார் செல்வி, பூங்குழலி, தமிழ்நாடு அறிவியல் மன்றம் வீ.சிவகாமி ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர்.
மணமகள் இந்துமதி – இசை ஆசிரியர் ஆவார். ‘பெண்ணே பெண்ணே போராடு’ என்ற பாடலை உணர்ச்சிப்பூர்வமாகப் பாடினார். தடையை நீக்க உயர்நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி மணமக்களை வாழ்த்திப் பேசினார். வழக்கறிஞருக்கு பொள்ளாச்சி மாவட்டக் கழகத்தின் சார்பில் ‘பெரியார்-சுயமரியாதை-சமதர்மம்’ நூல் மற்றும் ஆங்கில நூல் ஒன்றும் நிகழ்வின் நினைவாக வழங்கப்பட்டது.
சென்னிமலை ஒட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த இணையர் ஜோதிமணி-தேவராஜ் ஆகியோரின் மகள் கவிப்பிரியாவுக்கும், ஈரோடு தெற்கு மாவட்ட கழகத் துணைச் செயலாளரும், சென்னிமலை பசுவபட்டி திருவள்ளுவர் நகரைச் சார்ந்த இணையர் செல்வராஜ்-பழனியம்மாள் ஆகியோரது மகன் இசைக்கதிர் ஆகியோரின் வாழ்க்கைத் துணையேற்பு மேட்டூரில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி இல்லத்தில், கடந்த 7.5.2015 அன்று கழகத் தோழர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்வாழ்க்கைத் துணையேற்பை இந்த மேடையிலேயே கொளத்தூர் மணி அறிவித்து, இணையர்கள் கவிப்பிரியா-இசைக் கதிர் ஆகியோரை பொது மக்களுக்கு அறிமுகப் படுத்தினார். இணையர்கள் நிகழ்வின் நினை வாக கழக வளர்ச்சிக்கு ரூ.5000 நன்கொடையாக கழகத் தலைவரிடம் வழங்கினர்.
திருப்பூர் மாவட்டச் செயலாளர் முகில்ராசு-அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர்
வீ. சிவகாமி ஆகியோரது மகள் கனல்மதியின் பிறந்த நாளை முன்னிட்டும், இணையேற்பு விழா மகிழ்வுக்காகவும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர்.
பின்னர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இணையர்களுக்கு உறுதி மொழியை ஏற்கச் செய்து விளக்கமாக உரையாற்றினார். மணமக்கள் மாலை அணிவித்துக் கொள்ளாமல் கைகுலுக்கிக் கொண்டனர்.
மணவிழாவின் தொடக்கத்தில், ‘காட்டாறு’ மாத இதழுக்கான 1117 சந்தாக்களுக்காக திரட்டப்பட்ட ரூ.2,23,400/-ஐ கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் கொளத்தூர் குமார், தோழர்களுடன் வழங்கினார்.
சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகத்தைச் சேர்ந்த அ.ப.சிவா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மணமக்கள் சார்பில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு ரூ.1000/-மும், ‘காட்டாறு’ இதழுக்கு ரூ.1000/-மும் நன்கொடை வழங்கப்பட்டது.
பெரியார் முழக்கம் 04062015 இதழ்