மொக்கைப் பேச்சு அமித்ஷா!
அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட இந்திராகாந்தியின் காலம் உண்மையில் “இருண்ட காலம்” தான்.
தமிழ்நாட்டில் திக, திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் மிசா, ஒடுக்குமுறை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். சென்னை சிறையில் தாக்கப்பட்டனர்.
விடுதலை, முரசொலி, தீக்கதிர் நாளேடுகள் கொடூரமான தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டன. அக்ரஹார அதிகாரவர்க்கம் விடுதலை நாளேட்டை ஒவ்வொரு நாளும் தணிக்கை செய்த காலத்தில் நான் ‘விடுதலை’யில் பணியாற்றினேன் அடக்குமுறை சூழலை எதிர் கொண்டோம்.
திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இன்றைய நிலைப்பாடும் அது ‘இரண்ட காலம்’ என்பதுதான்.
ஆனால் `அமித்ஷாக்கள்’ இப்போது காங்கிரஸ் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு இதைப் பயன்படுத்த தீவிரம் காட்டுகிறார்கள். சொல்லப்போனால் மோடியின் ஆட்சி அறிவிக்கப்படாத அவசரநிலை அடக்குமுறை ஆட்சியாகத் தான் நடந்து கொண்டிருக்கிறது.
மோடியின் ஒற்றை சர்வாதிகாரத்தை நோக்கி நாட்டை இழுத்துச் செல்ல அரசியல் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகளை சீர்குலைத்து கருத்துரிமையைப் பறித்து எதிர்க்கட்சிகளை அழித்து ஒழிக்கும் அனைத்து முறைகேடுகளும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
அவசரநிலை காலத்து காங்கிரஸ் கட்சிதான் இப்போது உள்ள காங்கிரஸ் கட்சியா? நிச்சயமாக இல்லை. அன்றைய காங்கிரஸ் இட ஒதுக்கீடு கொள்கையை எதிர்த்தது! சோனியா தலைமையில் காங்கிரஸ் கட்சி வந்ததற்குப் பிறகு கட்சிக்குள்ளேயே அனைத்து சமூகப் பிரிவினருக்கும் அதிகாரத்தை பகிர்ந்து அளித்தது. ராஜீவ் காந்தி மண்டல் பரிந்துரையை எதிர்த்தார்.
ஆனால் அதே காங்கிரஸ் கட்சி தான் சோனியா தலைமையில் வந்த பிறகு மண்டல் பரிந்துரையின் மற்றொரு முக்கிய பிரிவான கல்வியில் இட ஒதுக்கீட்டு உரிமையை செயல்படுத்தியது.
மாநில உரிமை, மதவாத எதிர்ப்பு, சமூக நீதி என்ற திராவிட இயக்கத்தின் குரலை ராகுல் காந்தி உரத்து முழங்கி வருகிறார். ஆர்.எஸ்.எஸ் மனுவாதத்தை தோலுரிக்கிறார். இந்த பண்பு மாற்றத்தை இயங்கியல் பார்வையில் சிந்திக்கும் அறிவு அமித்க்ஷாவுக்கு கிடையாது.
அதனால்தான் எமர்ஜென்சியைக் கொண்டு வந்த காங்கிரசை திமுக ஆதரிக்கலாமா என்று கேள்வி கேட்கிறார். இப்போது ஊசலாட்டத்தில் தடுமாறும் பாஜக கூட்டணியில் உள்ள அஇஅதிமுக அவசர நிலையை ஆதரித்தது அமித் ஷாவுக்கு தெரியுமா?
ஆதரவு கடிதத்தை இந்திராவிடம் நேரில் சென்று கையளித்தவர் எம்ஜிஆர். மாநிலக் கட்சிகளை தடை செய்யக்கூடும் என்ற அச்சத்தில்தான் அதிமுக பெயரோடு அகில இந்திய என்ற சொற்றொடரையும் ஒட்ட வைத்தார்.
எமர்ஜென்சியை கொண்டு வந்ததற்காக கடற்கரை பொதுக்கூட்ட மேடையில் இந்திரா காந்தியை மன்னிப்பு கேட்க வைத்த பிறகுதான் திமுக, காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துக் கொண்டது.
அரசியல் களத்தில் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு முடிவுகள் எடுக்கப்படுகின்றன, கூட்டணிகள் மாறுகின்றன. ஆனால் இந்த மாற்றங்களை சமூக அரசியல் சூழலோடு பொருத்திப் பார்க்க வேண்டும்.
அவசர நிலை காங்கிரஸ் சமூக நீதிக்கு எதிரானது. கருத்துரிமையைப் பறித்து அடக்கு முறையை திணித்தது. அதை எம்ஜிஆரின் அதிமுக ஆதரித்தது. சோனியா, ராகுலின் கால காங்கிரஸ் அதிலிருந்து வேறுபட்டு சமூக நீதியையும் மதச்சார்பின்மையையும் பேசுகிறது.
வேதகால சமஸ்கிருத உளவியலில் புதையுண்டு கிடக்கும் அமித்ஷாக்களிடம் இந்த சமூக அறிவியல் சிந்தனைகளை எதிர்பார்க்க முடியாது. அதிமுக, பாஜக அணிகளுக்காக தொலைக்காட்சிகளில் பேசுவோரும் இப்படி அமித்ஷாக்களைப் போல மொக்கையாகவே பேசுவதை மக்கள் பார்த்து நகைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
– விடுதலை இராசேந்திரன்
முகநூல் பதிவு
பெரியார் முழக்கம் 03072025இதழ்
