அதிகார மமதையில் ஆணவக் குரல்கள்!

வானத்தை வில்லாக்குவேன்; மணலைக் கயிறாக்குவேன் என்ற தொனியில் மக்களிடம் தேர்தலுக்கு முன்பு மோடி பேசினார். ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. அதிகாரத்துக்கு வந்தவுடனே நாட்டை பார்ப்பன மயமாக்க வேகவேகமான அறிவிப்புகள் வரத் தொடங்கின. இவற்றிற்கு எதிர்பாராத இடங்களிலிருந்துகூட எதிர்ப்புகள் வரத் தொடங்கின. சில அறிவிப்புகளை பின் வாங்கிக் கொண்டார்கள். சிலவற்றை நடைமுறைப்படுத்துகிறார்கள். அவ்வப்போது அதிகார மமதையில் பார்ப்பன ஆணவக் குரல்கள் காதைத் துளைத்துக் கொண்டே இருக்கின்றன. அது குறித்த ஓர் தொகுப்பு இது:
• மோடி பிரதமரானவுடன் இந்தி மொழியில் மட்டுமே பேசுவார் என்று அரசு அறிவிப்பு வந்தது.
• சமூக வலை தளங்களில் மத்திய அரசு அதிகாரிகள் இந்தியிலேயே கருத்துகளைப் பதிவிட வேண்டும் என்று அரசு அறிவித்தது. எதிர்ப்பு வந்த வுடன் இந்தி பேசாத மாநிலங் களுக்கு இது கட்டாயமில்லை என்று குரலை மாற்றிக் கொண் டார்கள்.
• தமிழ் நாளேடுகளில் தொடர் வண்டித் துறை இந்தியில் மட்டுமே விளம்பரத்தை வெளி யிட்டது (8.7.2014 ‘தினத்தந்தி). அதே நாளில் மத்திய அரசின் வருமான வரித்துறையின் விளம்பரம் தமிழில் வந்தது. (அரசுக்கு வரக்கூடிய வருமானம் என்பதால் – தமிழில்)
• தொடர்வண்டி நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு ஒரு சில நாள்கள் முன் பயணிகள் கட்டணத்தை 14.2 சதவீதமும், சரக்குக் கட்டணத்தை 6.5 சத வீதமும் உயர்த்தி விட்டார்கள்.
• மத்திய அரசின் சி.பி.எ°.ஈ. பள்ளிகளில் ‘சம°கிருத வாரம்’ கொண்டாடி, சம° கிருதத்தில் போட்டிகள், விழாக்கள் நடத்த மத்திய மனித வளத்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியது.
• அனைத்து மாநிலங்களிலுள்ள பள்ளி களிலும் சம°கிருதத்தைக் கட்டாயப் பாட மாக்க வேண்டும் என்று பா.ஜ.க. நாடாளு மன்ற உறுப்பினர் ஓம்பிரகாஷ் என்பவர் நாடாளுமன்றத்தில் தனியார் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். செயல்படுத்தாத பள்ளிகளின் அங்கீகாரத்தை நீக்க வேண்டும் என்று அம்மசோதா கூறியது. (ஜூன் 7, 2014)
• நாடு முழுதும் பசு, எருது, காளைகளை வெட்டத் தடை செய்யவும், மாட்டுக்கறி விற்றால் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வும் வலியுறுத்தும் தனி நபர் மசோதாவை பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் யோகி ஆதித்யா நாத் தாக்கல் செய்தார். (ஜூன் 25, 2014)
• இங்கிலாந்து நாட்டுக்காரர்கள் இங்கிலாந்துக் காரர்களாக தங்களைக் கூறுவதுபோல், ஜெர்மன் நாட்டுக்காரர்கள் அனைவரும் ஜெர்மானியர்கள் என்று கூறுவதுபோல், அமெரிக்காவில் பிறந்தவர்கள் அனைவரும் அமெரிக்கர்கள் என்று கூறுவதுபோல், இந்து°தானத்திலேயே பிறந்த அனைவருமே தங்களை இந்துக்கள் என்று ஏன் கூறக் கூடாது என்று ஆர்.எ°.எ°. தலைவர் மோகன் பகவத் பேசினார். (இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியர்கள் என்று கூற வேண்டும் என்று இந்த ‘ஒரிஜினல் தேச பக்தர்கள்’ கூறுவதற்குத் தயாராக இல்லை)
• ‘இந்து’ நாடாக இருந்து, பிறகு மதச்சார்பற்ற நாடாக மாறிய, நேபாளத்துக்கு மோடி, காவி உடை, சந்தனப் பொட்டு, உருத்திராட்ச மாலையுடன் அங்குள்ள ‘பசுபதி நாதன்’ கோயிலுக்குப் போனார். புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசும் போது சட்டத்தை வேதங்கள், உபநிஷத்து களுக்கு இணையாக மதிக்க வேண்டும் என்று மதக் கண்ணோட்டத்தையே முன்வைத்தார்.
• ‘ஆசிரியர் நாளை’ பள்ளிகளில் ‘குரு உத்சவ்’ நாளாக வேதகால பண்பாட்டின் வழி நடத்திட மத்திய மனித வளத் துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியது. எதிர்ப்பு வந்தவுடன் ஆசிரியர் நாளை அப்படி மாற்றக் கூறவில்லை; ‘குருஉத்சவ்’ பெயரில் கட்டுரைப் போட்டிகள் நடத்துவதே நோக்கம் என்று நிலையை மாற்றிக் கொண்டார்கள்.
• நாக்பூரில், ஆர்.எ°.எ°. நடத்திய தசரா விழாவையும் அதன் தலைவர் மோகன் பகவத் உரையையும் அரசு தொலைக்காட்சி நிறுவனமான ‘தூர்தர்ஷன்’ நேரடி ஒளிபரப்பு செய்தது. பகவத் தனது உரை முழுவதிலும், சுமார் 60 முறை ‘இந்தியா’ என்ற சொல்லைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக ‘பாரத்’ என்ற சொல்லை மட்டுமே பயன்படுத்தினார்.
• இந்தியாவின் தேசிய நூலாக ‘இந்து’ மத நூலான ‘பகவத் கீதை’ அறிவிக்கப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டெல்லியில் பேசினார் (டிச.7, 2014).
• அகில இந்திய வானொலி, தமிழ் ஒலிபரப்பில் 7 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள், இந்தி திரைப்பாடல்களை ஒலி பரப்பி வருகிறது.
• மோடி போலி அறிவியலை, அறிவியல் என்று அம்பானி தொடங்கிய மருத்துவ மனை மற்றும் ஆய்வு மய்யத்தில் பேசினார். புராண காலத்தில் கர்ணன், தனது தாயின் கர்ப்பப் பையிலிருந்து பிறக்கவில்லை. இது மரபணு விஞ்ஞானம். வினாயகன் தலையில் யானைத் தலை ஒட்டியிருப்பது, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, என்றெல்லாம் மோடி பேசியதை, விஞ்ஞானிகள் எள்ளி நகையாடினர்.

பெரியார் முழக்கம் 11062015 இதழ்

You may also like...

Leave a Reply