தலையங்கம் – பாராட்டுகிறோம்; ஆனால்…

இது உண்மைதானா என்று வியக்க வைக்கும், ஒரு செய்தி வந்திருக்கிறது. தமிழக காவல்துறையும் கல்வித் துறையும் இணைந்து, ஜாதி, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக, தமிழகம் முழுதும் வீதி நாடகங்கள் உள்ளிட்ட கலை வடிவங்களில் பரப்புரை நடத்துகிறது என்பதுதான் அந்த செய்தி. தமிழகக் காவல்துறைக்கு இப்படி ஓர் அரிய ஆலோசனை எங்கிருந்து வந்தது என்று நமக்குத் தெரியவில்லை. இப்படி ஒரு திட்டத்தை காவல்துறையும் கல்வித் துறையும் உருவாக்கி, களமிறங்கியதற்காக நாம் மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். காரணம், இந்த அடிப்படையான பிரச்சினையை தனது தோளில் சுமந்து, பல ஆண்டுகளாகவே களத்தில் நிற்கும் அமைப்பு திராவிடர் விடுதலைக் கழகம். பெரியார் திராவிடர் கழகமாக இருந்தபோதே இந்தத் திட்டங்கள் தொடங்கப்பட்டன.
தேனீர்க் கடைகளில் இரட்டைக் குவளை, முடிவெட்ட மறுத்தல், செருப்பு அணிய, சைக்கிள் ஓட்ட, அலைபேசி பேச தடை என்று பல்வேறு வடிவங்களில் தீண்டாமைகள் தொடருகின்றன. இவற்றின் விவரங்களைத் தொகுத்தும் இரட்டைக் குவளை முறைகளை பின்பற்றும் தேனீர்க் கடை உரிமையாளர்கள் – கடைகள் குறித்த முகவரிகளைத் திரட்டியும், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழில் பட்டியல் வெளியிட்டோம். கிராமங்கள் தோறும் பரப்புரை இயக்கங்களை நடத்தி, இறுதியில் ‘இரட்டை தம்ளர்’ உடைப்புப் போராட்டங்களையும் நடத்தினோம். அப்போது பல இடங்களில் ஆதிக்க ஜாதியினரிடமிருந்து எதிர்ப்புகள் வந்தபோது, காவல்துறை ஆதிக்க ஜாதியினரின் பக்கம்தான் நின்றது என்பதே உண்மை. தீண்டாமையை சுட்டிக்காட்டிப் போராடிய கழகத்தினர்தான் கைது செய்யப்பட்டார்களே தவிர, தீண்டாமையைப் பின்பற்றும் ‘குற்றவாளிகள்’ மீது சட்டங்கள் பாயவில்லை.
கிராமங்களில், கட்சிகள் வேறுபட்டு, அரசியலில் மோதிக் கொண்டாலும், தீண்டப்படாத மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளில் கைகோர்த்துக் கொண்டு விடுகிறார்கள். காவல்துறையும் இவர்களைச் சார்ந்து நிற்கிறது.
ஜாதி எதிர்ப்பு இயக்கங்களின் தொடர்ச்சியாக இளைய சமுதாயத்தினரிடம் ஜாதி தீண்டாமைகளுக்கு எதிராக ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ என்ற பரப்புரை இயக்கத்தை திராவிடர் விடுதலைக் கழகம் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. நல்ல சிந்தனை கொண்ட காவல்துறையின் சில உயர் அதிகாரிகளே, இன்றைய சூழலில் இது அவசியமான இயக்கம் என்று உற்சாகப்படுத்தினர். ஆனால், நகரம், கிராமங்களில் பரப்புரைகள் நடந்தபோது ஆதிக்க ஜாதியினரும் மதவெறி சக்திகளும் இணைந்து பரப்புரைக்கு எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். அதைக் காரணம் காட்டி பரப்புரைக் கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்தது.
சென்னை தாம்பரத்தில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரைப் பயணத்தின் பொதுக் கூட்டத்திற்கு காவல்துறை கடைசி நாளில் அனுமதி மறுத்தது. அதேபோன்று மேட்டுப் பாளையத்தில் நடந்த ஜாதி எதிர்ப்புப் பயண விளக்கக் கூட்டங்களுக்கும் இரண்டு முறை ஒரே காரணத்தைக் கூறி, காவல்துறை அனுமதி மறுத்தது. கிணத்துக் கடவு கூட்டத்துக்கும் அனுமதி மறுத்தார்கள். ஒவ்வொரு முறையும் உயர்நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்து, நீதிமன்றங்களின் அனுமதி பெற்ற பிறகே ஜாதி எதிர்ப்புக் கூட்டங்களை நடத்த வேண்டிய நிலையை காவல்துறை உருவாக்கிவிட்டது. இந்த நிலையில், காவல்துறையே ஜாதி எதிர்ப்புப் பரப்புரையை மாவட்டந்தோறும் ஒரு மாவட்டத்தில் 20 இடங்களில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறது என்ற செய்தி நம்மை ஆச்சரியப் படுத்தாமல் எப்படி இருக்கும்?
தமிழ்நாட்டில் சமூக ஒற்றுமையை குலைத்து, மக்களை வன்முறைக்கு எளிதில் தூண்டிவிடும் ஜாதிய-தீண்டாமைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பது காவல்துறை யின் உண்மையான கவலையாக இருக்குமானால் உடனடியாக செய்ய வேண்டியது என்ன?
1. ஒரு மாவட்டத்தின் ஆதிக்க ஜாதியாக உள்ள பிரிவுகளைச் சார்ந்தவர்களை அம்மாவட்டத்தின் காவல்துறை அதிகாரிகளாக நியமிக்கக் கூடாது.
2. ஜாதி-தீண்டாமை எதிர்ப்புப் பரப்புரை இயக்கங்களுக்கு தடைபோடக் கூடாது.
3. தலித் மக்கள், தங்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் தந்தால், வழக்கைப் பதிவு செய்யாமல் சமரசம் பேசி, ஜாதி ஒடுக்குமுறையாளர்களைக் காப்பாற்றத் துடிக்கக் கூடாது.
4. தீண்டாமைக் குற்றங்களைத் தடுப்பதற்காக செயல்பட வேண்டிய காவல்துறை யின் சமூக நீதிப் பிரிவு, புகார் வரும்வரைக் காத்துக் கொண்டிருக்காமல், தீண்டாமைக் குற்றங்களைக் கண்டறிந்து தாமாகவே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. தீண்டாமைக் கொடுமைகளைத் தடுக்கத் தவறும் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களை இடை நீக்கம் செய்து, துறை சார் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ‘ஆறுமுகம் சேர்வை’ வழக்கில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பதை செயல்படுத்திட முன் வரவேண்டும்.
6. ஜாதிகளைக் கடந்து, காதல் திருமணம் செய்ய விரும்புவோரைக் கொலை செய்து பழி தீர்க்கத் துடிக்கும் ஜாதி வெறியர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க முன்வரவேண்டும்.
சட்டங்களை கண்டிப்பாக நிறைவேற்றுவதற்கு மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்குதலே மிகவும் அடிப்படையானது. ஜாதிக்கு எதிராக இத்தகைய விழிப்புண்hவு இயக்கங்களை தங்களின் உழைப்பு, நேரம், பொருளை செலவழித்து, ஒரு இயக்கம் தொண்டாற்ற வருவது என்பது, இன்றைய சமூகச் சூழலில் மிக மிக அபூர்வம். பெரியாரின் இலட்சியச் சுடரை ஏந்தி, ஜாதி ஒழிப்புக்காக களமாடும் பெரியார் இயக்கத்தின் தன்னலமற்ற தோழர்கள், இதைச் செய்ய முன் வருகிறார்கள். அவர்களின் பரப்புரைகளை ஒரு பக்கம் தடுத்துக் கொண்டு, மற்றொரு பக்கம் காவல்துறை ஜாதி எதிர்ப்புப் பரப்புரை செய்வது, இரட்டை அணுகுமுறை மட்டுமல்ல; காவல்துறையின் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கிவிடுகிறது என்பதை வேதனையுடன் சுட்டிக் காட்டுகிறோம்.
காவல்துறையின் அணுகுமுறை மாறவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!

பெரியார் முழக்கம் 02072015 இதழ்

You may also like...

Leave a Reply