இளவரசனைத் தொடர்ந்து கோகுல்ராஜ் ஜாதி ஆணவக் கொலை: கழகம் கடும் கண்டனம்

‘கவுரவக் கொலை’ என்ற பெயரில் ஜாதி வெறிக் கொலை சம்பவங்கள் தமிழகத்தில் தலைதூக்கி வருவது தமிழ்நாட்டுக்கே தலைகுனி வாகும். 2013ஆம் ஆண்டு இளவரசன் என்ற தலித் இளைஞர், திவ்யா என்ற வன்னியப் பெண்ணை காதலித்து திருமணம் செய்த ‘குற்றத்துக்காக’ அவர்களை ஜாதி வெறியர்கள் கட்டாயப்படுத்தி அச்சுறுத்திப் பிரித்தனர். கடைசியில் இளவரசன் உடல் தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தது. இப்போது பொறியியல் பட்டதாரியான தலித் இளைஞர் கோகுல் ராஜ், அதே ‘கதிக்கு’ ஆளாகியுள்ளார். ‘உயர்ஜாதி’ என்று சொல்லிக் கொள்ளும் ‘கவுண்டர்’ ஜாதிப் பெண்ணை காதலித்து, திருமணம் செய்ததால் அவர் ஜாதி வெறியர்களால் கடந்த 23ஆம் தேதி கடத்தப்பட் டுள்ளார். 24ஆம் தேதி தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் பள்ளிப்பாளையம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே இரயில் தண்டவாளத்தில் அவர் பிணமாகக் கிடந்தார்.
திருச்செங்கோடு மலைக் கோயிலுக்கு கோகுல் ராஜ், ஒரு மாணவியுடன் சென்று சாமி கும்பிடுவது கண்காணிப்புக் காமிராவில் பதிவாகியுள்ளது. கடைசியாக 7 பேர் கொண்ட ஒரு கும்பல், கோகுல் ராஜை கடத்திச் செல்வதும் காமிராவில் பதிவாகி யுள்ளது. கவுண்டர் ஜாதியைச் சார்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக ‘தினத்தந்தி’ நாளேடு செய்தி கூறு கிறது. கோகுல்ராஜ் தலை மட்டும் துண்டிக்கப்பட் டுள்ளது. உடலில் எவ்வித காயங்களும் இல்லை. எனவே, இரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை. இது திட்டமிட்ட படுகொலையே ஆகும். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் கட்சி, சி.பி.அய். (எம்.எல்.) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், சேலம் உயர் சிகிச்சை சிறப்புப் பிரிவு மருத்துவமனைக்கு எதிரே தொடர்ந்து போராடி வருகின்றன. ‘திராவிடர் விடுதலைக் கழகம்’ இந்த ஜாதி வெறிக் கொலையை வன்மையாகக் கண்டிக்கிறது. கொலைக்கு திட்டமிட்டு நடத்தி முடித்த ஜாதிவெறிக் கும்பலைக் கைது செய்து கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் வழக்கை சி.பி.இ.அய்.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் வற்புறுத்துகிறது.
– கொளத்தூர் மணி
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

பெரியார் முழக்கம் 02072015 இதழ்

You may also like...

Leave a Reply