“யாருடைய தயவுக்கோ, சுயநல வாழ்வுக்கோ ‘குடிஅரசு’ இல்லை” பெரியாரின் உருக்கமான கட்டுரை

சகோதர வாசகர்களே !
நமது “குடி அரசு” ஆரம்பமாகி இரண்டு வருஷம் முடிந்து மூன்றா வது வருஷத்தின் முதல் இதழ் இன்று வெளியாகிறது. “குடி அரசு” ஆரம்ப இதழில் “குடி அரசு” என்று ஒரு தலையங்கமும், ஆறு மாதம் கழிந்து “நமது பத்திரிகை” என்று ஒரு தலையங்கமும் ஒரு வருஷம் முடிந்து இரண்டாவது வருஷ ஆரம்பத்தில் “நமது பத்திரிகை” என்று ஒரு தலையங்கமும் எழுதி இருக்கிறோம்.

இப்போது இரண்டு வருஷம் முடிந்து மூன்றாவது வருஷ ஆரம்ப முதல் இதழிலும் அவ்வாறே “நமது பத்திரிகை” என்று தலையங்கமிட்டு ஒரு குறிப்பு எழுத ஆசைப்படுகிறோம்.

நமது நாட்டு மக்களுக்குள் சுயமரியாதையும் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உண்டாக்கக் “குடி அரசு” என்னும் ஒரு பத்திரிகை யை ஆரம்பிக்க வேண்டும் என்பதாக முதல் முதல் நானும் எனது நண்பர் ஸ்ரீமான் தங்கப்பெருமாள் பிள்ளையும் 1922ல் கோயமுத்தூர் ஜெயிலில் சிறைவாசம் செய்யும் போதே நினைத்தோம். அதுபோலவே வெளியில் வந்த கொஞ்ச நாட்களுக்குள் “குடி அரசு” என்று ஒரு வாரப் பத்திரிகையும், “கொங்கு நாடு” என்று ஒரு மாதாந்திரமும் நடத்தப் போவதாய் 19.1.23 தேதியில் சர்க்காரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது.

இவ்விஷயத்தை முதலில் ஸ்ரீமான் திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் அவர்களிடம் சொன்னேன். அவர் எனது கொள்கையை கேட்டவுடன் சந்தோஷப்பட்டு “இப்படி ஒரு பத்திரிகை வேண்டியது தான். அதற்கு நீயே சரியானவன். நீ ஆரம்பித்தால் தமிழ் நாட்டிலேயே பதினாயிரக்கணக்கான சந்தாதாரர்கள் சேருவார்கள். ஆனால் அதிக நாள் நிலைக்காது. ஒரு கூட்டத்தார் எப்படியாவது அதை ஒழித்து விடுவார்கள். ஆனாலும், நடந்த வரை லாபம், நடத்துங்கள்” என்றார். பிறகு ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்களிடம் சொன்னேன். அவரும் மிகச் சந்தோஷப்பட்டு “சீக்கிரத்தில் வெளியாக்க வேண்டுமென்று விரும்புவதாகவும், வெளியாகத் தாமத மேற்பட்டால் அதுவரை தனது பத்திரிகையில் வேண்டுமானாலும் எழுதி வரும் படியும் சொன்னார்.” பிறகு ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்களிடம் சொன்னேன். அவர் “இந்தச் சமயம் இப்படிப்பட்ட பத்திரிகை கூடாது. அல்லாமலும் மகாத்மா ஜெயிலில் இருக்கும்போது இதை விட்டு விட்டு நீ பத்திரிகை நடத்தப் போவது சரியல்ல. உன்னுடைய சேவை இது சமயம் மிகவும் அவசியமானது ஆனதால் கண்டிப்பாய்ப் போகக் கூடாது” என்று சொல்லி விட்டார். அதன் பேரில் அந்த எண்ணத்தை ஒத்தி வைத்து விட்டு மறுபடியும் ஒத்துழையாமைக்காகவே உழைத்தேன். தற்செயலாய் வைக்கம் சத்தியாக்கிரகம் ஏற்பட்டது. ஸ்ரீமான் ஜார்ஜ் ஜோசப் அவர்களும் வைக்கத்திலிருந்து “என்னை பிடிக்கப் போகிறார்கள். நான் இதோ ஜெயிலுக்குப் போகிறேன். வேறு யாரும் இல்லை. நீ வந்து ஒப்புக்கொள்” என்று எழுதின கடிதமும் தந்தியும் என்னைக் குடும்பத்துடன் வைக்கத்திற்குப் போகும்படி செய்து விட்டது. அங்கு ஜெயிலில் இருக்கும்போதும் இதே எண்ணம்தான். அதாவது வெளியில் போனதும் பத்திரிகை நடத்த வேண்டும் என்கிற ஆவல் அதிகமாயிற்று. அதுபோலவே வெளியில் வந்ததும் பத்திரிகை ஆரம்பிக்கத் தீர்மானித்து விட்டேன். அதற்கேற்றாற்போல் திருப்பாப்புலியூர் ஞானியார் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சிவஷண்முக மெய்ஞான சிவாச் சார்ய சுவாமிகளும் கோயம்புத்தூருக்கு வந்திருக்கிறார்கள் என்று கேள்விப் பட்டு அவர்களை இங்கு அழைத்து அவர்களைக் கொண்டே ஆரம்ப விழா நடத்திவிடலாம் என நினைத்து, கோயம்புத்தூர் சென்று அழைத்ததும், யாதொரு ஆக்ஷபணையும் சொல்லாமல் அவர்கள் ஒப்புக்கொண்டு ஈரோட்டிற்கு வந்து, ஆரம்ப விழா நடத்திக் கொடுத்தார்கள். அது சமயம் பத்திரிகாலயத்தைத் திறந்து வைக்கும்படி ஞானியார் சுவாமிகளை கேட்டுக்கொண்ட போது, “அநேக பத்திரிகைகள் நமது நாட்டிடை இருந்தா லும் அவைகள் தங்கள் மனச்சாக்ஷிக்கு உண்மை என்று பட்டதை தெரிவிக்க அஞ்சுகின்றன. அதனால்தான் நான் இப்பத்திரிகை ஆரம்பிக்கிறேன். மற்றப் பத்திரிகை போலல்லாமல் மனதில் பட்டதைத் தைரியமாய் பொது ஜனங்களுக்கு உள்ளது உள்ளபடி தெரிவிக்க வேண்டுமென்பது எமது நோக்கம்” என்று சொல்லி இருக்கிறேன். ஞானியார் சுவாமிகளும் பத்திரிகாலயத்தைத் திறக்கும்போது, நமது நாட்டில் பல பத்திரிகை இருந்தும் இப்பத்திரிகை போன்ற கருத்துடைய பத்திரிகை வேறொன்றுமில்லை.

“உயர்வு தாழ்வு என்கிற ஆணவம் மிகுந்திருக்கிறது.” “சமத்துவம் என்ற உணர்ச்சி எங்கும் பரவ வேண்டும்.” “குடி அரசின்” கருத்து இதுவே என நான் அறிந்துகொண்டேன்.

“சமயத்திலிருக்கும் கேட்டை முதலில் ஒழிக்க வேண்டும்.” “இவை குடிஅரசின் முதல் கொள்கையாய் விளங்க வேண்டும்.” இப் பத்திரிகையில் ஸ்ரீமான் நாயக்கருக்கு எவ்வளவு சிரத்தை உண்டோ அவ்வளவு எனக்கும் உண்டு” என்று ஆசிர்வதித்திருக்கிறார். முதல் இதழ் தலையங்கத்திலும் நமது நோக்கத்தை வெளியிட்ட தலையங்கத்திலும் நாம் குறிப்பிட்டிருப்பதாவது,

“ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும்”. “இதை அறவே விடுத்து வெறும் தேசம், தேசம் என்று கூக்குரல் இடுவது எமது பத்திரிகையின் நோக்கமன்று.”

“மக்களுக்குள் சுயமரியாதையும் சமத்துவமும் சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும்.”

“உயர்வு தாழ்வு என்ற உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்து வரும் ஜாதிச் சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால், இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிர் ஒன்றென்றெண்ணும் உண்மை அறிவு மக்களிடம் வளர வேண்டும்.” இன்னோறென்ன பிற நறுங்குணங்கள் நம் மக்கள் அடையப்பாடுபடுவது நமது நோக்கமாகும்.”

“எவர் எனக்கு இனியர் இவர் எனக்கு இன்னார் என்ற விருப்பு வெறுப்பின்றி,”

“நகுதற் பொருட்டன்று நட்டல், மிகுதிக் கண்மேச் சென்றிடித்தற் பொருட்டு” என்ற வாக்கைக் கடைபிடித்து நண்பரே யாயினுமாகுக. அவர்தம் சொல்லும் செயலும் கேடு சூழ்வதாயின் அஞ்சாது கண்டித்தொதுக் கப்படும்……..” என்று எழுதி இருக்கிறோம். இவையாவும் 2-5-25 தேதி குடிஅரசில் காணலாம்.

அடுத்தபடி ஆறு மாதம் முடிந்த இதழில் ‘நமது பத்திரிகை’ என்னும் தலையங்கத்திலும்,

“குடி அரசு” குறிப்பிட்ட கருத்தைப் பிரசாரம் செய்யும் பத்திரிகையே அல்லாமல் வெறும் வர்த்தமானப் பத்திரிகை அல்லவாதலால் ………பிரதி வாரமும் ‘குடி அரசு’ தனது ஆத்மாவை வெளிப்படுத்தும் (தத்துவத்தை விளக்கும்) போது கண்ணீர் கொட்டாமலிருக்க முடிவதே இல்லை. இதன் பலனால் உயர்ந்தோர் என்று சொல்லிக் கொள்வோராகிய பிராமணர் முதலிய சமூகத்தாருக்கும், ராஜீயத் தலைவர் என்று சொல்வோராகிய பல ராஜ தந்திரி களுக்கும் விரோதியாகவும் அவர்களுடைய சூழ்ச்சிகளுக்கும் நமது ‘குடி அரசு’ ஆளாக வேண்டியிருப்பதால் இது சீக்கிரத்தில் பாமர ஜனங்களின் செல்வாக்கைப் பெற முடியாமலிருப்பது ஆச்சரியமல்ல என்றும்,

“உண்மையில் ‘குடிஅரசுக்கு’ எந்த பிராமணனிடத்தும் குரோதமோ வெறுப்போ கிடையாது. ஆனால் பிராமணன் உயர்ந்தவன் என்றும், மற்றவர்கள் தீண்டாதவர்கள், தெருவில் நடக்கக் கூடாதவர்கள் என்பன போன்ற இழிவான மிருக உரிமைக்கும் பாத்திரமில்லாதவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் எண்ணத்தினிடத்திலும், தங்கள் வகுப்பார் தான் முன்னணியில் இருக்க வேண்டும், மேன்மையுடன் பிழைக்க வேண்டும், மற்றவர்கள் என்றென்றைக்கும் தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அதற்காகச் செய்யும் சூழ்ச்சிகளிடத்திலும் தான் குடிஅரசுக்குக் குரோதமும் வெறுப்பும் இருப்பதுடன், அதை அடியோடே களைந் தெறிய வேண்டும் என்ற ஆவல் கொண்டு உழைத்து வருகிறது” என்றும்,

“குடி அரசு” ஏற்பட்டு ஆறுமாத காலமாகியும், அது வரை ஆயிரத்துச் சில்லரை சந்தாதாரர்களே சேர்ந்திருக்கிறார்கள், அதனைப் படிக்க வேண்டிய அளவு ஜனங்கள் படிக்கவில்லை என்றும், பாமர ஜனங்கள் சரியானபடி குடி அரசை ஆதரிக்கவில்லையானால் அது தானாகவே மறைந்து போகவேண்டி யதுதான் அதன் கடமையே அல்லாமல் வியாபார தோரணையாய் நடந்து வராது” என்றும் எழுதியிருந்தது, (இதை 1-11-25 தேதி இதழிற் பார்க்கலாம்).

பிறகு ஒரு வருஷம் முடிந்து, இரண்டாவது வருஷ ஆரம்ப இதழில் “நமது பத்திரிகை” என்ற தலையங்கத்திலும், “இதுவரை நமக்குள்ள 2000 சந்தாதாரர் களில் நால்வர் அதிருப்திக்கே ஆளாகிறோம் என்று எழுதிவிட்டு, “குடி அரசு” எவருடைய தயவுக்கோ, முகஸ்துதிக்கோ, சுயநல வாழ்வுக்கோ, கீர்த்திக்கோ, நடைபெற வில்லை. யோக்கியமாய் உண்மையாய் நடக்கக் கூடிய காலம் வரை நடக்கும். அவ்விதம் நடக்க அதற்கு யோக்கியதை இல்லையானால், அது தானே மறைந்து விடுமே யல்லாமல், மானங்கெட்டு விலங்குகளைப் போல் வாழாது, “குடிஅரசு” தோன்றிய பிறகு அது ராஜீய உலகத்திலும், சமூக உலகத்திலும், பெரிய மாறுதல் ஏற்பட்டிருக்கிறது, என்று பலர் நமக்கு எழுதியிருப்பதை நாமும் உபயோகப்படுத்திக் கொள்ளுகிறோம், என்றும் எழுதி இருக்கிறோம்.

ஆகவே, இப்போது இரண்டு வருடங்கள் முடிந்து மூன்றாவது வருடம் ஆரம்ப இதழில் அதே தலையங்கத்துடன் ஒரு குறிப்பு எழுத ஆசைப்படு கிறோம். முதலாவதாக, ஒரு விஷயத்தைத் தெரியப்படுத்துகிறோம். அதாவது “குடிஅரசு”க்கு ஆறு மாதத்தில் ஆயிரம் சந்தாதாரர்களும், ஒரு வருஷத்தில் இரண்டாயிரம் சந்தாதாரர்களும் இப்போது இரண்டு வருஷத்தில் நாலாயிரத்து ஐந்நூறு சந்தாதாரர்களும் இருப்பதால் கூடுமான வரையில் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று இருக்கிறது என்பதை சந்தோஷத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

(தொடரும்)

பெரியார் முழக்கம் 12.09.2024 இதழ்

You may also like...