புதிய கல்விக்கொள்கை – பாஜக பதில் சொல்லுமா? – ர.பிரகாசு

கல்வித் தரத்தில் இந்தியாவில் உயர்ந்து நிற்கும் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய 5 மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி தர மறுப்பதாக தி இந்து பத்திரிகையில் செப்டம்பர் 9ஆம் தேதி ஆதாரத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. அந்த செய்தியை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “புதிய கல்விக்கொள்கையை ஏற்க மறுப்பதால் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் தண்டனை. ஒன்றிய பாஜக அரசு தரமான கல்வி மற்றும் சமத்துவத்தை ஊக்குவிப்பது இப்படித்தானா? இதை முடிவு செய்ய நம் தேசம் மற்றும் நம் மக்களின் அறிவுக்கே விட்டுவிடுகிறேன்” என்று காட்டமாகப் பதிவிட்டிருந்தார்.

ஒன்றிய அரசு நியாயமாக நடந்துகொள்வதென்றால் நிலுவை நிதியை விடுவித்திருக்க வேண்டும். ஆனால் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானோ, முதலமைச்சரின் பதிவைப் பகிர்ந்து சில அபத்தமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
புதிய கல்விக்கொள்கையை எதிர்ப்ப தென்றால்,
1. தமிழ் உள்ளிட்ட தாய்மொழிக் கல்வியை எதிர்க்கிறீர்களா?
2.தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தேர்வு நடத்துவதை எதிர்க்கிறீர்களா?
3.தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடத்திட்டங்களை உருவாக்குவதை எதிர்க்கிறீர்களா?
4. முழுமையான, சமத்துவமான, ஒழுங்குபடுத்தப்பட்ட, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தை எதிர்க்கிறீர்களா?
என்ற அவர் எழுப்பியிருக்கும் கேள்விகள் முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயல்வது போன்ற முட்டாள்தனமானவை.
புதிய கல்விக்கொள்கை மும்மொழித் திட்டத்தை வலியுறுத்துகிறது. உள்ளூர் தொடர்புக்கு தாய்மொழி, உலகத்தொடர்புக்கு ஆங்கிலம் இருக்கும்போது, மூன்றாவதாக ஒரு மொழியை வலிந்து கற்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வருகிறது? அது மாணவர்களின் விருப்பத் தேர்வு என்றால், ஒரு பள்ளியில் – ஒரே வகுப்பில் சில மாணவர்கள் பீகாரியும், சில மாணவர்கள் குஜராத்தியும், சில மாணவர்கள் மராட்டியும், சில மாணவர்கள் கன்னடமும், சில மாணவர்கள் மலையாளமும், சில மாணவர்கள் தெலுங்கும், சில மாணவர்கள் இந்தியும் கற்க விரும்பினால் அதற்குரிய தனித்தனி ஆசிரியர்களைப் பணியில் அமர்த்துவது நடைமுறைச் சாத்தியம்தானா?
மூன்றாவது மொழிக்கு இந்தியா முழுமையும் இந்தி ஆசிரியர்கள் மட்டுமே அதிகம் இருக்கிறார்கள். அதனால் இந்தி ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட வாய்ப்பும், நடைமுறைச் சாத்தியமும் உள்ளது. எனவே இந்தி மட்டுமே மூன்றாவது விருப்ப மொழியாக கட்டாயமாகத் திணிக்கப்படும். அனைவரும் இந்தி படித்துவிட்டால் தாய்மொழிக்குத் தேவை இருக்காது. வடமாநிலங்களில் பல பிராந்திய மொழிகள் இப்படித்தான் அழிக்கப்பட்டு, இந்தி மட்டுமே இன்று பேச்சிலும், எழுத்திலும் புழக்கத்தில் இருக்கிறது. இந்தித் திணிப்பு எதிர்ப்பை நூறாண்டுக்கு முன்பே எச்சரிக்கையோடு எதிர்த்து, விழித்துக்கொண்ட தமிழ்நாட்டிடம் இப்போது தாய்மொழியைக் கற்றுக்கொடுக்கத்தான் புதிய கல்விக்கொள்கை என்று காதில் பூ சுற்றுவதா? அல்லது அதை நம்பி ஏமாறும் அளவுக்கு தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள் என்று பாஜக கருதுகிறதா?
அதுமட்டுமல்ல, தற்போதுள்ள 10, +2 பாடத் திட்ட முறை மாற்றப்பட்டு, 5 + 3 + 3 + 4 ஆண்டு பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தப்படும் என்கிறது புதிய கல்விக்கொள்கை. மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவதும் திட்டம். அதேபோல மாணவர்கள் கல்லூரிப் படிப்பை முழுமையாக மூன்று ஆண்டுகள் படிக்க வேண்டிய அவசியமும் இல்லை. முதல் ஆண்டில் வெளியேறினால் ஒரு சான்றிதழ், இரண்டாவது ஆண்டில் வெளியேறினால் டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படும். இது எதற்காக என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இடைநிற்றலை அதிகரித்து, கல்வியில் இருந்து பிற்படுத்தப்பட்ட- பட்டியல் – பழங்குடி சமூகங்களை வெளியேற்றுவதுதான் இதன் நோக்கம்.
மேலும், உயர்கல்வியில் சமஸ்கிருதம் மாணவர்களின் விருப்பப் பாடமாக இருக்கும் என்றும் புதிய கல்விக்கொள்கை கூறுகிறது. செத்த மொழி சமஸ்கிருதத்தை ஏன், எதற்கு மக்கள் படிக்க வேண்டும்? வருணாசிரம தர்மத்தை நிலைநிறுத்தி, சமூக ஏற்றத்தாழ்வுகளைத் தக்கவைக்கத்தானே? உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தை 2035ஆம் ஆண்டுக்குள் 50 விழுக்காடு அடைவோம் என்பது புதிய கல்விக்கொள்கையின் இலக்கு. இன்னும் 10 ஆண்டுகள் கழித்து இந்தியா அடைய வேண்டிய இலக்கை தமிழ்நாடு எட்டி ஆண்டுகள் பல ஆகிவிட்டன. எனவே தமிழ்நாடு எந்த கல்வி நடைமுறையைப் பின்பற்றுகிறது என்று ஆராய்ந்து, அதைச் செயல்படுத்துவதுதான் அறிவார்ந்த செயலாகும்.
மருத்துவ மற்றும் சட்டப் படிப்புகளைத் தவிர ஒட்டுமொத்த உயர் கல்விக்கும் ஒரே முதன்மை அமைப்பாக இந்திய உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படும் என்றும் புதிய கல்விக்கொள்கை வரைவறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கல்வி பொதுப்பட்டியில் இருக்கிறது என்பதை மறந்துவிட்டு, மெல்ல மெல்ல ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் குவிக்கும் ஆபத்தான போக்கு இது. ஏற்கெனவே திணிக்கப்பட்டிருக்கும் ‘நீட்’ போன்ற தகுதித்தேர்வுகளே அதற்கு நல்ல எடுத்துக்காட்டு.
கல்வித் துறையில் பொதுமுதலீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 விழுக்காட்டை விரைவில் எட்ட மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பணியாற்றும் என்றும் புதிய கல்விக்கொள்கை கூறுகிறது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கல்வித்துறைக்கு ஒட்டுமொத்த பட்ஜெட்டில் 3.16 விழுக்காடு ஒதுக்கப்பட்ட நிலையில், அதை படிப்படியாகக் குறைத்து நடப்பு நிதியாண்டில் 1.53 விழுக்காடாக சுருக்கிவிட்டது ஒன்றிய பாஜக அரசு. ஆக, கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று பாஜக அரசு கூறுவதை விட மிகப்பெரிய நகைப்பு வேறெதுவும் இருக்காது.
எனவே தர்மேந்திர பிரதானோ அல்லது வேறு பாஜகவினரோ, எந்த வடிவில் புதிய கல்விக்கொள்கையைத் தூக்கி வந்தாலும் தமிழ்நாடு அதை ஒருபோதும் ஏற்காது. கல்வியில் இருந்து தமிழர்களை விலக்கிவைக்க முயற்சிப்பது, பாஜகவைத் தமிழ்நாட்டு மக்கள் விலக்கி வைத்திருக்கும் அகலத்தை அதிகரிக்கவே பயன்படும் என்பதை உணர வேண்டும்.

பெரியார் முழக்கம் 12.09.2024 இதழ்

You may also like...