வீரப்பனிடம் இருந்து ராஜ்குமாரை மீட்டதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் பங்கு – மூத்த பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியம் விவரிக்கிறார் (2)
23.06.2024 அன்று கொளத்தூரில் நடைபெற்ற கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் 77வது பிறந்தநாள் விழாவில் மூத்த பத்திரிகையாளர் சிவசுப்ரமணியம் ஆற்றிய வாழ்த்துரை. கடந்த இதழின் தொடர்ச்சி…
காலை 7:30 மணிக்கு தொடங்கி மாலை 5:30 மணி வரைக்கும் இருவரும் பேசினார்கள். அந்த பேச்சில் ராஜ்குமார் கடத்தப்பட்டது தொடர்பாக எதுவும் இல்லை. முழுக்க முழுக்க உக்கம்பருத்திக்காடு, செங்கப்பாடி என சுற்றுவட்டார ஊர்களைப் பற்றியே பேசினார்கள். கடைசியாக மணி அண்ணன், ராஜ்குமாரை எப்போது வெளியில் விடுவீர்கள் என்று வீரப்பனை பார்த்து கேட்டார். நீங்கள் வேண்டுமானால் இப்போதே கூட்டிச் செல்லுங்கள் என்றார் வீரப்பன். அப்போது அண்ணன், வேண்டாம் நான் வந்ததே யாருக்கும் தெரியாது. தமிழ் (சிவசுப்பிரமணியம்) வரச் சொன்னார் என்று வந்தேன். நாம் சந்திச்சதுக்கு அடையாளமாக ஆடியோ கேசட் மட்டும் பேசி பதிவு செய்து கொடுங்கள் என்று மணி அண்ணன் கேட்டுக்கொண்டார். கேசட்டை வாங்கிக் கொண்டு அண்ணன் புறப்பட்டார்.
கொளத்தூர் மணியின் அணுகுமுறை
வீரப்பனின் இந்த அணுகுமுறை மணி அண்ணனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. வீரப்பனுக்கும் மணி அண்ணனின் அணுகுமுறை மிகவும் பிடித்துவிட்டது. அடுத்ததாக கர்நாடகா முதலமைச்சரை சந்தித்த போது அவருக்கும் மணி அண்ணனின் அணுகுமுறை பிடித்துவிட்டது. இது சாத்தியமாகும் என்பதற்கு பிறகு அடுத்தடுத்த நகர்வுகள் கிட்டத்தட்ட 50 நாட்கள், ஒவ்வொரு நாள் இரவும் சத்தியமங்கலம் காட்டிற்கு செல்வோம். விடியற்காலை 4 மணி வரைக்கும் வீரப்பனோடு பேச்சுவார்த்தை நடக்கும். காலை 4:30 மணிக்கெல்லாம் புறப்பட்டு விடுவோம். அண்ணன் பெங்களூரு சென்று விடுவார். மீண்டும் இரவு வந்து சந்திப்புகள் நடைபெறும். இதேபோல தொடர்ந்து 50 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக எந்தவொரு பிரச்சனையுமின்றி அந்த விசயத்தை வெற்றிகரமாக முடித்தார்.
இதற்கிடையில் வீரப்பன் கடத்தி வைத்திருந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் உதவியாளர் நாகப்பா, கொடுவாள் எடுத்து வீரப்பனின் தலையில் வெட்டுகிறார். 6 தையல் போடுமளவுக்கு பலமான வெட்டு மற்றும் கை நரம்புகள் துண்டித்து விட்டது. இந்தச் சிக்கலை நாங்கள் மருத்துவ முறையில் சரி செய்தோம். அப்போது வீரப்பனின் கையில் மூன்று விரல்கள் சரிவர செயல்படவில்லை. இதற்கு தீர்வு என்னவென்று யோசிக்கும் போது, அது குறித்து அண்ணனிடம் தெரிவித்தேன். அண்ணனும் நானும் கவனித்தேன். மருத்துவரிடம் ஆலோசித்தேன். நோய் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே அந்த மூன்று நரம்புகளையும் இணைத்து தைக்க வேண்டும் என்றார்.
சேலத்தில் பிரபலமான நரம்பியல் மருத்துவர் ஒருவரை சந்திக்கச் சென்றோம். மருத்துவமனையில் காத்திருந்தோம். நாங்கள் காத்திருப்பதைப் பார்த்துவிட்டார். உடனே அண்ணனை வரச் சொல்லுங்கள் என்றவுடன். நாங்கள் சென்று பேசினோம். அவர் ஏற்கனவே புலிகள் அமைப்பை சார்ந்தவர்கள் பலருக்கும் சிகிச்சையளித்தவர் என்ற அடிப்படையில் என்ன பிரச்சனை என்று கேட்டார். கையில் ஒருவருக்கு வெட்டுப்பட்டுவிட்டது. நரம்பு துண்டாகிவிட்டது. மூன்று விரல்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்றோம். எப்போது என்று சொல்லுங்கள். இரவு 11 மணிக்கு நான் வந்துவிடுகிறேன். பிளாஸ்டிக் சர்ஜன் வசதி என்னிடம் இல்லை. எனக்கு தெரிந்த மருத்துவர் ஒருவர் வைத்திருக்கிறார். 11 மணிக்கு மேல் அறுவை சிகிச்சை அரங்கிற்குள் செல்வோம். இரண்டு மணிநேரத்தில் சிகிச்சை முடிந்துவிடும். ஒருநாள் தங்கியிருந்தால் போதும். பின்னர் அவரை அனுப்பி விடலாம் என்றார்.
அண்ணனும் எதார்த்தமாக அவரை வீட்டுக்கெல்லாம் கூட்டிச் செல்ல முடியாது காட்டிற்கு தான் கூட்டிச் செல்ல வேண்டும் என்றார். ஆனால் வீரப்பன் அந்த விசயத்தில் கொஞ்சம் பயந்துவிட்டார். வந்தால் சிக்கலாகி விடும். அதனால் மருந்துகளிலே சரி செய்து கொள்ளலாம் என்று கூறினார். அதேபோல சரி செய்தோம்.
இழப்பீடு பெற்றுத்தந்த கொளத்தூர் மணி
அந்த கடைசிக் கட்ட நிகழ்வுகளில் கூட வீரப்பன் 13 கோரிக்கைகளை முன்வைத்தார். ஆனால் அதில் ஒரு கோரிக்கை கூட நிறைவேறவில்லை. இந்த கோரிக்கைகளை எல்லாம் மணி அண்ணன் நிறைவேற்றித் தருவார் என்ற நம்பிக்கையில் ராஜ்குமாரை அனுப்பிவைத்தார். அதன் பிறகு தொடர்ந்து ஆறு ஏழு ஆண்டுகாலம் போராட்டம். அதில் குறிப்பாக நீதிபதி சதாசிவம் கமிசன். அது முழுமையாக நடந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வீரப்பன் தேடுதல் வேட்டையில் தமிழ்நாடு கர்நாடக அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தொடர்ந்து எட்டாண்டு காலம் இதற்காக மக்களைத் திரட்டி, போராடி கிட்டத்தட்ட 89 பேருக்கு இழப்பீடு பெற்றதற்கு காரணமாக அமைந்தவர் மணி அண்ணன். இந்த வகையில் தன்மேல் வைக்கும் நம்பிக்கையை சிறிதும் குறையாத வண்ணமே அவரது பொது வாழ்வு இருக்கிறது.
குறைந்த சொத்துமதிப்பு
என்னுடைய 32 ஆண்டு பத்திரிகை உலக வாழ்க்கையில் தலைவர் என்று சொல்லக்கூடிய ஒவ்வொருவருமே அந்த சொல்லை பயன்படுத்த ஆரம்பித்த ஒவ்வொரு வாரமும் அவர்களது சொத்து மதிப்பு உயர்ந்து கொண்டே செல்லும். ஒரு ஜாதி சங்கத் தலைவரின் இன்றைய சொத்து மதிப்பு ஆயிரம் கோடியை தாண்டும். ஆனால் தலைவர் என்ற தகுதியில் இருந்து தன்னிடம் இருந்த சொத்து மதிப்பு குறைந்து ஒரு சுருங்கிய வட்டத்துக்குள் நின்ற தலைவர் யாரென்றால் அது அண்ணன் கொளத்தூர் மணி மட்டும் தான்.
மணி அண்ணனின் வாழ்வியல் நிகழ்வுகளைப் பற்றி அறிந்து கொள்ள உக்கம்பருத்திக்காடு சென்ற போது அங்கு ஒரு புதிய ஊர் உருவாகியிருந்தது. அந்த புதிய ஊர் முழுவதும் கொளத்தூர் மணி அண்ணனின் நிலத்தில் உருவானது. இது எப்போது நிகழ்ந்தது என்று விசாரிக்கும் போது, நகரத்தில் இருந்து யாராவது ஊருக்குள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அந்த இடத்தை மணி அண்ணன் எழுதிக் கொடுத்துவிடுவார். பழனிச்சாமி அண்ணன் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிடுவார். இப்படி மணி அண்ணன் அவர்களால் இலவசமாக இடம் கொடுக்கப்பட்டு உருவான ஊர்தான் இது என்றனர். இப்படி தன்னுடைய சக்தி முழுவதையும் இந்த இனத்திற்காகவும், இன மக்களுக்காகவும் கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர் கொளத்தூர் மணி அண்ணன்.
கொளத்தூர் மணியின் உயர்ந்த பண்பு
இவரது வரலாறுகளை முழுமையாக தொகுக்கும் பணிகளை மேற்கொண்டுவருகிறேன். இதே நேரத்தில் கொளத்தூர் மணி அண்ணன் காவல்துறைக்கு எதிரானவர் என்ற ஒரு பேச்சும் வழக்கத்தில் உள்ளது. ஆனால் இவர் காவல்துறையின் நம்பிக்கைக்கு உரியவராக, ஒரு சகோதரராகத்தான் இருந்து வருகிறார். குறிப்பாக இரண்டு நிகழ்வுகளைக் குறிப்பிட விரும்புகிறேன். அதில் ஒன்று. திராவிடர் விடுதலைக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி அவர்கள் ஒரு நிகழ்வை சொன்னார். நாங்கள் வேலூர் சிறையில் 18 மாதங்கள் இருந்தோம். எங்கள் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்று கூறி தள்ளுபடி செய்தனர். இந்த சமயத்தில் அண்ணனிடம், இந்த வழக்கை பொய்யாகப் பதிவு செய்த காவல்துறை மீது வழக்கு தொடுத்து இழப்பீடு பெறலாம் என்று கூறியிருக்கிறார். அதற்கு அண்ணன் நான் வழக்குப் போட மாட்டேன் என்றார். ஏன் என்று கேட்ட போது, ”விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தோம், பயிற்சி கொடுத்தோம். இப்படி எல்லாமே செய்து கொண்டு இருக்கிறோம். இது இந்திய அரசியலமைப்புப்படி தவறானது. தண்டனைக்குரியக் குற்றம். நம்மை போலீசு பிடித்தார்கள், நீதிமன்றத்துக்கு கொண்டுவந்தார்கள், ஆனால் அவர்களால் நிரூபிக்க முடியவில்லை. அதனால் நாம் செய்யவில்லை என்று பொருள் இல்லை. அதற்கு எப்படி அவர்கள் மேல் புகார் தர முடியும்?. விட்டுவிடுங்கள்” என்றவுடன் இரத்தினசாமியும் இதை விட்டுவிட்டார். இதுதான் அண்ணனின் எதார்த்தமான நிலைமை.
கொளத்தூர் மணி அண்ணன் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிகாரிகள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் கிட்டத்தட்ட 40, 50 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பார்கள். அவர்கள் போட்டது உண்மையான வழக்காக இருக்கும், ஆனால் வெளியில் வரும்போது பொய் வழக்கு என்று ஆகிவிடும். இது அவருடைய புத்திசாலித்தனம். அந்த சூழ்நிலையிலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்ற மனநிலையில் தான் அண்ணன் இருந்துவருகிறார்.
உளவுத்துறைக்கு உதவியவர்
வீரப்பன் உயிரோடு இருந்த காலகட்டத்தில் (2002-2004) அண்ணன், நான், கொளத்தூரில் இருந்து சில பேர் கொல்லேகால், சாம்ராஜ்நகர் வழியாக மைசூரு நீதிமன்றத்துக்குச் செல்வோம். அப்போது எங்களைக் கண்காணிப்பதற்காக கர்நாடக அதிரடிப்படையினர் 4,5 பேரை உளவுத்துறையினர் பணியில் அமர்த்தியிருந்தார்கள். பாலாறு, மாதேஸ்வரன் மலை, யானை திம்பம், தாளபெட்டா, ஆசனூர் உள்ளிட்ட ஒவ்வொரு இடங்களிலும் எங்களது நடவடிக்கைகளை கண்காணிப்பார்கள்.
அங்கு பாபு என்றொருவர் இருப்பார். அவர் இப்போது நம்முடன் தான் இருக்கிறார். அவரிடம் அண்ணன், ஏன் இவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்கிறீர்கள். நீங்கள் பாலாறுக்கு வந்து விடுங்கள், அங்கு உங்களை ஏற்றிக் கொள்கிறோம். திருப்பி பாலாறில் இறக்கி விட்டு விடுகிறோம். அனைத்தையும் நீங்களே கண்காணித்துக் கொள்ளுங்கள் என்றார். அதற்குப்பிறகு 2 ஆண்டுகாலம் அவரும் எங்களுடனேயே வந்தார். அன்றில் இருந்து அவர்தான் எங்கள் வண்டிக்கு ஓட்டுநரே. இப்படி உளவுத்துறைக்கும் உதவி செய்யக்கூடிய ஒரு மாண்பும், மனித நேயமும் அவருக்கு மட்டும்தான் உண்டு. கடந்த காலத்திலாகட்டும், நிகழ் காலத்திலாகட்டும் ஒரே மாதிரியான குணத்தைக் கொண்டவர் அண்ணன் கொளத்தூர் மணி. அவர் நூறாவது பிறந்தநாளை கொண்டாட வேண்டும், அதில் நாமும் கலந்து கொண்டு வாழ்த்த வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.
(நிறைவு)
பெரியார் முழக்கம் 11.07.2024 இதழ்