எதையுமே அழுத்தமாகப் பேசுபவர் அறிஞர் அண்ணா! – கொளத்தூர் மணி

கோவை மாவட்டக் கழக சார்பில் 02.03.2024 அன்று கோவை அண்ணாமலை அரங்கில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை:-
அண்ணாவின் பொதுவுடைமை சிந்தனை
அண்ணாவின் நினைவுநாளில் அவரைப் பற்றி பேசுவதும், அவரின் சிந்தனைப் போக்கும் செயல்பாடுகளும் என்னவாக இருந்தன என்பதைப் பற்றி சிலவற்றை பகிர்ந்து கொள்வது நமக்கு நன்மை பயக்கும் என்ற கருத்தில்தான் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கை ஏற்படுத்தியிருப்பார்கள் என்று கருதுகிறேன்.
1930-களில் எம்.ஏ என்பது உயர்ந்த படிப்பாக பார்க்கப்பட்டது. ஆனால் அந்த உயர்ந்த படிப்பை முடித்துவிட்டு அரசுப் பணிக்கோ, மற்ற வேலைக்கோ செல்லாமல் சமூகப் பணிக்கு வந்தார் என்பதே அண்ணாவை பற்றிய ஒரு பெரிய மதிப்பை நம் மனதில் ஏற்படுத்தும். அறிஞர் அண்ணா எளிய குடும்பத்தில் பிறந்து முதுநிலை கல்வியை முடித்தவர். அரசியலில் சமூகப்பணியில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் அவர் பெரியாரிடம் வந்த பிறகு ஏற்பட்டது என்று கூட நான் சொல்ல மாட்டேன்.
ஏனென்றால் அண்ணா 1934 திருப்பூர் செங்குந்தர் மாநாட்டில்தான் பெரியாரை முதல்முறையாக சந்திக்கிறார். அந்த மாநாட்டில் பெரியார் சமதர்மம் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். பொதுவுடைமை ஏன் தேவை என்பதை பற்றிய உரை அது. அந்த உரையை கேட்டுத்தான் அவர் பொதுவாழ்விற்கு வந்திருப்பாரா என்றால் இல்லை. அதைப்பற்றிய சிந்தனைப் போக்கு அவரிடம் ஏற்கனவே இருந்திருக்கிறது. கல்லூரி மாணவராக இருந்தபோது நடைபெற்ற கட்டுரைப் போட்டி ஒன்றில் அண்ணா தேர்ந்தெடுத்த தலைப்பு ‘Moscow Mob Parade’. மாஸ்கோவில் நடைபெற்ற ஒரு பெரும் பேரணியைப் பற்றி எழுதினார். அதில் இந்த நாட்டிற்கு கொடுத்த சிந்தனைகளைப் வரிசைப் படுத்தி எழுதுகிறார். சுதந்திரம் – சமத்துவம் – சகோதரத்துவம் கன்ற கருத்தியலை நமக்கு ரூசோ வழங்கினார். அதற்கு பிறகு புதிய அரசியல் தத்துவத்தை மார்க்ஸ் கொடுத்து பெரும் சிந்தனைப் புரட்சியை உருவாக்கியவர் என்று அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

1934இல் பெரியாரின் சமதர்மப் பேச்சுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னாலே பொதுவுடைமை குறித்த சிந்தனை அண்ணாவின் மனதில் இருந்திருக்கிறது. வறுமையால் சிரமமுற்றிருக்கிற மக்கள், கொடுங்கோன்மையால் நசுக்கப் பட்டிருக்கும் மக்கள் நடத்திய தடுக்க முடியாத பேரணி அது என்று சொல்லி, முதலாளித்துவக் கொடி இறங்கட்டும்! பாட்டாளிக் கொடி உயரட்டும்! என்று அந்த கட்டுரையை முடிக்கிறார்.
பொதுவாக அண்ணாவை பற்றி பேசும்போது பலரும் அவரது ஆங்கிலப் புலமை பற்றி கூறுவார்கள். அது உண்மைதான், ஆனால் எந்தெந்த இடத்தில் எதை சொல்ல வேண்டும் என்பதை அழுத்தமாக சொல்வார் என்பதும் அதைவிட சிறப்பு. முக்கியமாக நாடாளுமன்றத்தில் அவரது உரைகள் எப்படி இருந்தன என்பதை குறிப்பிட வேண்டும். 1962-இல் மாநிலங்களவைக்கு அண்ணா தேர்ந்தெடுக்கப்படுகிறார். 1962 மே 1ஆம் தேதி தனது முதல் உரையை மாநிலங்களவையில் ஆற்றினார். முதல் உரையில் I Belong to The Dravidian Stock என்று குறிப்பிட்டுப் பேசினார். “நான் திராவிட இனத்தில் இருந்து வருகிறேன். திராவிட இனத்தவன் என்று சொல்லுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். அதற்காக நான் மராத்திக்கோ, குஜராத்திக்கோ எதிரி அல்ல, அவர்கள் எல்லாம் என் நண்பர்கள் தான், ஆனால் திராவிடர்களாகிய நாங்கள் இந்த உலகிற்கு தனித்துவமான கொடைகளைக் கொடுத்துள்ளோம். சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தவர்கள் என்ற பெருமையோடு நான் உங்கள் முன் பேசுகிறேன். எங்களுக்கு சுய நிர்ணய உரிமை வேண்டும்” என்று சொல்கிறார். 1969-இல் மாநில சுயாட்சி பற்றி பேசிய அவர், 1962இல் சுய நிர்ணய உரிமை பற்றி மாநிலங்களவையில் பேசினார்.
‘திராவிட நாடு’- அண்ணாவின் இலக்கணம்
மிகப்பெரிய பணக்காரர்கள் தான் நீதிக்கட்சியை தொடங்கினார்கள். அவர்களை ஜரிகை தலைப்பாகைகள் என்று சொல்லுவதுதான் வழக்கம். ஆனால் அவர்கள் ஏழை மக்களை பற்றி சிந்திப்பவர்களாக இருந்தார்கள். அதுதான் திராவிட இயக்கத்தின் சிறப்பு. நீதிக்கட்சியை தொடங்கியவர்களில் ஒருவரான டாக்டர் டி.எம் நாயர் MD படித்தவர், பிரான்ஸில் ENT முடித்தார். பிறகு இங்கிலாந்தில் மருத்துவராக பணியாற்றிய பின்னர் இந்தியாவிற்கு வருகிறார். இந்தியாவிற்கு வந்த பின்னர் தான் அந்த இயக்கத்தில் இணைந்து பணியாற்ற தொடங்குகிறார். அப்போதுதான் ஜஸ்டிஸ் என்ற ஒரு ஆங்கில ஏடு தொடங்கப்படுகிறது. அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார் டி.எம்.நாயர்.
அப்போது தலையங்கத்தில் இந்த இயக்கம் எதற்காக தொடங்கப்பட்டது என்று எழுதுகிறார். இந்தியாவில் தனித்த இறையாண்மை கொண்ட சகோதர மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றின் நாடுகளை கொண்ட பிரிந்து செல்லும் உரிமையுள்ள ஒரு குடியரசை நிறுவ விரும்பி நாங்கள் இயக்கம் தொடங்கியிருக்கிறோம் என்று 1917-இல் ஜஸ்டிஸ் ஏட்டின் தலையங்கத்தில் எழுதுகிறார். தந்தை பெரியார் 1938-இல் இதே கருத்தை வலியுறுத்திப் பேசியுள்ளார்.
இருக்கிற பார்ப்பனர்கள் எல்லாம் நேரடியாக மத்திய ஆசியாவில் இருந்து வந்தவர்கள் என்று நான் சொல்ல வரவில்லை என்பார் பெரியார். “அவர்கள் குறைவான பெண்களோடுதான் வந்தார்கள். பின்னர் இந்த நாட்டு பெண்களைத்தான் திருமணம் செய்துகொண்டனர். நம்மவர்கள் கேள்வி கேட்கும் போது திரௌபதி கதையை எழுதி சமாளித்துவிட்டனர். ஆனால் நான் ரத்த பறீட்சை செய்து அவர்களை ஒதுக்கவில்லை. இவர்களுடைய ஆஷ்டான அனுஷ்டானங்கள் நமக்கு நேரெதிராக இருக்கிறது. அதில் நாம் வேறுபடுத்திக் காட்டுவதால் நம்மோடு விலகி நிற்கிறார்கள். அதனால்தான் அவர்கள் வேறு, நாங்கள் வேறு என்று நினைத்துக் கொள்கிறோம். அவ்வளவு தான். அதை மாற்றிக் கொள்வதில் எனக்கு என்ன சிக்கல்?” என்றார் பெரியார்.
ஒருவர் நீங்கள் பார்ப்பனர்களை திட்டுகிறீர்கள், பூணூல் அணிவதை விமர்சிக்கிறீர்கள், பூணூலை அகற்றிவிட்டால் ஒத்துக்கொள்வீர்களா? என்று பெரியாரிடம் கேட்டார். உடனே பெரியார் உனக்கு கீதை பெரிதா? குறள் பெரிதா? என்று கேட்பேன். வேதம் பெரிதா? குறள் பெரிதா? என்று கேட்பேன். குறள்தான் பெரிதென்றால் அவனிடம் எனக்கு என்ன பிரச்சனை. தமிழ் உயர்ந்ததா? சமஸ்கிருதம் உயர்ந்ததா? என்று கேட்பேன், தமிழ்தான் உயர்ந்தது என்றால் அவனோடு எனக்கு என்ன சிக்கல், அவனையும் சேர்த்துக் கொள்ளப்போகிறேன். அதையும் சொல்லிவிட்டு நான் தமிழன் என்றால் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்றார் பெரியார். அதையேத்தான் அண்ணாவும் சொன்னார். திராவிட நாடு என்ற போது அண்ணாவை நகையாடினர் சிலர். “இனவழி கூடி மொழிவழி பிரிந்து, பிரிந்து செல்லும் உரிமையோடு கூடிய சமதர்ம கூட்டரசாக திராவிட நாடு இருக்கும்” இதுதான் அண்ணாவின் திராவிட நாடு. இப்படியான சிந்தனையை கொண்டவராகத்தான் அண்ணா இருந்திருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் அண்ணாவின் சவால்
1963-இல் சி.பி.ராமசாமி அய்யர் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டுக் குழு என்ற ஒன்று அமைக்கப்பட்டது. இவர் திருவாங்கூர் திவானாக இருந்தபோது, இந்தியா விடுதலை பெற்ற சமயத்தில் “நாங்கள் ஒருநாளும் இந்தியாவோடு சேர மாட்டோம், தனி சுதந்திர நாடாக செயல்படுவோம், பாகிஸ்தானோடு உடன்படிக்கைக்கு பேசிக்கொண்டிருக்கிறோம்” என்று சொன்னார். ஆனால் அடுத்த பத்து ஆண்டுகளில் தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவுக்கு தலைவராகி விட்டார். பாகிஸ்தானோடு போகிறேன் என்று சொன்ன ஐதராபாத் நிஜாமை இன்னமும் எதிரியாக பார்க்கிறான். ஆனால் சி.பி. ராமசாமி அய்யரும் அதைத்தான் சொன்னார். அவர் தேசிய ஒருமைப்பாட்டுக் குழுத் தலைவரானார்.
வேட்பாளர் விண்ணப்பத்தில் நான் இந்திய ஒருமைப்பாட்டை ஏற்றுக்கொள்கிறேன் என்று கையொப்பம் போட வேண்டும். அதுதான் அந்த சட்டம். கையெழுத்து போட்டுவிட்டால் இனி தனி நாடு கேட்க முடியாது. அதற்காகத்தான் அந்த சட்டம். இப்போது திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றிய அரசோடு கூட்டு சேர்ந்துட்டது, இந்தியாவிற்கு அடிமையாகிவிட்டார்கள் என்று தமிழ்தேசியவாதிகள் கூறிவருகிறார்கள். ஆனால் இந்த தமிழ்தேசியவாதிகள் அனைவருமே தேர்தலில் நிற்பதற்காக, இந்திய ஒருமைப்பாட்டை ஏற்றுக்கொள்கிறேன் என்று கையொப்பம் போட்டுவிட்டுதான் தேர்தலில் நிற்கிறார்கள். நான் உங்களிடம் ஒரு உறுதிமொழியை தருகிறேன் என்று அண்ணா சொன்னார். “சட்டத்தின் அடக்குமுறையைக் கொண்டு எங்களை அடக்கி தேர்தலில் நிற்க வைக்காமல் செய்தால், அடுத்த ஆளுங்கட்சி நாங்கள்தான் என்று 1963-இல் நாடாளுமன்றத்தில் அண்ணா சொன்னார். அந்த நம்பிக்கையோடுதான் இந்த சட்ட திருத்தத்தை அண்ணா ஏற்றுக்கொண்டார்.
வீடு இருந்தால் தான் ஓடு மாற்ற முடியும். ஆட்சி மாற வேண்டுமென்றால் கட்சி இருக்க வேண்டும். ஆனால் நாங்கள் திராவிடர் கழகத்தில் இருந்து வந்தவர்கள். எங்களை தடுத்துவிட்டீர்கள், திராவிடர் கழகத்தை என்ன செய்ய போகிறீர்கள், என்ன திட்டம் உங்களிடம் உள்ளது? அவர்களிடம் உங்கள் சட்டம் செல்லுமா என்று கேட்டார் அண்ணா. ஒவ்வொரு இடத்திலும் தனது அழுத்தமான கருத்தை பதிவு செய்வதில் தவறியதில்லை அவர். நாடாளுமன்றத்தில் ஒருநாள் “நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்! நான் பிரிவினையை கேட்டதற்கான காரணங்கள் அப்படியே இருக்கிறது” என்று சொன்னார். திராவிட நாடு கோரிக்கையைத்தான் கைவிட்டுள்ளோம், காரணங்கள் அப்படியே இருக்கும் வரை கோரிக்கை எழும். அதை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் டெல்லி அரசின் வேலை என்று சொன்னார் அண்ணா.
(தொடரும்)
தொகுப்பு : விஷ்ணு

பெரியார் முழக்கம் 15032024 இதழ்

You may also like...