சனாதனம் குறித்த உதயநிதி பேச்சு; உச்சநீதிமன்றத்தின் கருத்து சரியா?
தமிழ்நாட்டு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சிற்கு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சியளிக்கிறது. ஒரு அமைச்சரே இப்படி சனாதனத்தை எதிர்க்கலாமா? என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், கருத்து சுதந்திரத்தை முறைகேடாக பயன்படுத்துவதாக கருத்து தெரிவித்துள்ளது.
சனாதனம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது. சனாதன தர்மம் என்றால் என்ன? என்பதை விவாதித்து விளக்கமளிக்காத உச்சநீதிமன்றம், ஒட்டுமொத்தமாக சனாதன தர்மத்தை எதிர்க்க கூடாது, அது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துவது என்று கூறுவது சற்றும் நியாயமற்ற ஒரு வாதமாகும்.
சனாதன தர்மத்தை வாழ்க்கை முறை என்கிறார்கள். ஆனால் வேத பண்டிதர்கள் முதல் சங்கராச்சாரியார் வரை சனாதனம் என்பது வர்ணாசிரம தர்மம் தான் என்று கூறியுள்ளனர். பிராமணன் – சத்திரியன் – வைசியன் – சூத்திரன் என்ற நான்கு பிரிவுகளை உள்ளடக்கியது தான் சனாதன தர்மம் என்று கூறுகிறார்கள். கீதையிலே கிருஷ்ணனும் இந்த நான்கு வர்ணத்தை காப்பாற்றுவதற்கு தான் நான் அவதாரம் எடுத்தேன் என்று கூறுகிறான். இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. அரசியல் சட்டம் குடிமக்கள் அனைவரும் சமம், பிறப்பின் அடிப்படையில் பேதம் காட்டக்கூடாது என்று கூறுகிறது. இந்த சனாதன தர்மம் தான் நம்முடைய வாழ்க்கையின் இலட்சியமாக இருக்க வேண்டுமென்றால் இந்தியாவில் நாடாளுமன்றம், நீதிமன்றம், அரசியல் சட்டங்கள் எதுவும் இருக்கக் கூடாது.
அரசியல் சட்டம் சனாதனத்தை காப்பாற்றுவதற்கு அல்ல, சனாதனத்தின் பெயரால் பாகுபாடு காட்டுகிற போது அனைவருக்கும் சமமான நீதியை வழங்கி அந்த பாகுபாடுகளை தகர்த்தெறிவது தான் அரசியல் சட்டத்தின் கடமை. சனாதன வாழ்க்கைமுறை தான் இந்த நாட்டில் கணவனை இழந்த பெண்ணை நெருப்பில் தள்ளியது. பெண் குழந்தைகள் பிறந்தால் அவற்றை கொலை செய்ய வேண்டும் என்று கூறியது. விதவைகள் திருமணம் செய்துகொள்ள கூடாது, அவர்களுக்கு வழிபாட்டு உரிமை இல்லை என்று கூறியது இந்த சனாதன வாழ்க்கைமுறை. இவைகளை எல்லாம் எதிர்த்து நீதிமன்றங்கள் – சட்டங்கள் வழியாகத்தான் சமத்துவம் நிலைநாட்டப்பட்டது.
சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்ல அனுமதி மறுத்தது சனாதன தர்மம். ஆனாலும் பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் செல்லலாம் என்று கூறியது இதே உச்சநீதிமன்றம் தான் என்பதை மறந்துவிடக் கூடாது. அரசியல் சட்ட வரைவுக்குழுத் தலைவராக இருந்த புரட்சியாளர் அம்பேத்கர் கூட சனாதனத்தை கடுமையாக எதிர்த்தார். அதற்காக அரசியல் சட்டத்தை எழுதிய அம்பேத்கரை ஒருபோதும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியாது.
வள்ளலார் முதல் வேத மரபில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறுகிற அனைவரும் சனாதன எதிர்ப்பாளர்கள் தான். தன்மானமும் சுயமரியாதையும் உள்ள எவரும் சனாதன தர்மம் கூறுகிற கோட்பாட்டை ஏற்க மாட்டேன் என்று தான் கூறுவார்கள். இதுதான் சனாதன தர்மத்தினுடைய எதிர்ப்பின் உள்ளடக்கம். இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஒரு அமைச்சர் இப்படி பேசலாமா? என்று உச்சநீதிமன்றம் கருத்து கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது அவருடைய சொந்த கருத்தாக இருக்கலாமே தவிர ஒரு போதும் சட்டத்தின் கருத்தாக இருக்க முடியாது.
கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் வாட்ஸ் ஆப் பதிவு (05.03.2024)
பெரியார் முழக்கம் 07032024 இதழ்