பாஜகவின் சவப்பெட்டிக்கு ஆணி அடிக்கிறார் ஆளுநர்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மீண்டும் ஒரு நாடகத்தை சட்டப்பேரவையில் அரங்கேற்றி இருக்கிறார். அரசு எழுதிக்கொடுத்த உரையை படிக்காமல் தனது உரையை இரண்டு நிமிடத்திற்குள்ளாகவே முடித்துக் கொண்டார். அவர் எதையுமே முழுமையாக படிப்பதில்லை. அது திராவிடம் என்றாலும் சரி, வள்ளுவர் என்றாலும் சரி, சனாதனம் என்றாலும் சரி எதையும் அவர் முழுமையாக படிக்காமல் தனக்கு தெரிந்ததையெல்லாம் பேச வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஒருவர். அதேபோல அரசே எழுதிக்கொடுத்து சட்டப்படி படிக்க வேண்டிய ஆளுநர் அதில் எனக்கு முரண்பாடு இருக்கிறது என்று கூறி தானே ஒரு உரையை எழுதிப் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார் போல.
அப்படியானால் தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் எதாவது ஒன்றில் போட்டியிட்டு வெற்றிபெற்று முதலமைச்சராகி, அவர் அமைக்கிற அமைச்சரவையில் ஒரு உரையை தயாரித்த பின்னர் அவர் விரும்புகிற உரையை படிக்கலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி, அமைச்சரவையின் வழிகாட்டுதலில் செயல்படக்கூடிய ஒரு ஆளுநர் தமிழ்நாடு அரசின் உரையில் தனக்கு முரண்பாடு இருக்கிறது என்று பதிவு செய்திருப்பது என்பது அப்பட்டமான சட்ட விரோத, அவை மரபை மீறிய ஒரு நடவடிக்கை என்றுதான் எதிர்காலம் பதிவு செய்யும்.
இதற்காக சபாநாயகர் அப்பாவு, சிறந்த பட்டம் ஒன்றை அவருக்கு வழங்கியிருக்கிறார். அதாவது கோட்சே வழியிலும், சாவர்க்கர் வழியிலும் வந்தவர் என்ற பட்டத்தை அவருக்கு கொடுத்தார். அந்த பட்டத்தோடு ஆளுநர் வெளியேறி இருப்பது என்பது தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாண்பை மேலும் உயர்த்தியிருக்கிறது.
சட்டமன்றம் தொடங்குவதற்கு முன்பே தேசியகீதம் பாட வேண்டும் என்கிறார். கூட்டம் தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து, கூட்டம் நிறைவடையும் போது தேசியகீதம் பாடுவது தான் தமிழ்நாடு சட்டப்பேரவையின் மரபு. ஆனால் ஆளுநரோ கூட்டம் தொடங்குவதற்கு முன்பே தேசியகீதம் பாட வேண்டும் என்ற தனது அதீத தேசபக்தியை வெளிப்படுத்தி, அதை சட்டமன்றம் பின்பற்ற வேண்டும் என்கிறார். ஏற்கெனவே பின்பற்றிவரும் ஒரு மரபை மீறி ஏன் ஒரு கருத்தை திணிக்க வேண்டும்?
தமிழ்த்தாய் வாழ்த்திலும் திராவிடம் வருகிறது. தேசிய கீதத்திலும் திராவிடம் வருகிறது. இரண்டிலும் வருகிற திராவிடம் ஆளுநருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. ஆனாலும் அவர் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே அவையை விட்டு வெளியேறியது அவர் தேசிய கீதத்தையும் அவமத்திருக்கிறார் என்பதைத்தான் காட்டுகிறது. இவருடைய தேசபக்தி திமுக அரசுக்கு குடைச்சல் தருவது மட்டும்தான்.
ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ் மாளிகையாக மாற்றிக்கொண்டு அரசியல் சட்டத்திற்கு விரோதமான கருத்துக்களை பேசிக்கொண்டே தேசபக்தி நாடகம் போடுவதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆளுநரின் இத்தகைய செயல்பாடுகள் தமிழ்நாட்டு பாஜகவின் சவப்பெட்டியில் மேலும் ஆணியை அடித்துக்கொண்டே இருக்கிறது. இதற்காகவே ஆளுநர் ரவியை நாம் பாராட்ட வேண்டும்.
விடுதலை இராசேந்திரன் வாட்ஸ் ஆப் பதிவு 13.02.2024
பெரியார் முழக்கம் 15.02.2024