பேராவூரணியில் பெரியார் நினைவுநாள் கருத்தரங்கம் ; பெரியார் முழக்கத்திற்கு ரூ.15,000 நன்கொடை

தஞ்சாவூர் : பேராவூரணி சேதுபாவாசத்திரம் கழக சார்பில் தந்தை பெரியார் 50வது நினைவு நாள் – புரட்சியாளர் அம்பேத்கர் 67வது நினைவு நாள் – வைக்கம் போராட்ட நூற்றாண்டு எது திராவிடம்? எது சனாதனம்?  கருத்தரங்கம்  பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தஞ்சை மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம் தலைமை வகிக்க,  பேராவூரணி ஒன்றிய செயலாளர் உதயகுமார் வரவேற்புரையாற்றினார். பாடகர் பள்ளத்தூர் நாவலரசன் பகுத்தறிவு பாடல்களுடன் கருத்தரங்கம் தொடங்கியது.

 

தமிழக மக்கள் புரட்சிக் கழக ஆறு நீலகண்டன், காங்கிரஸ் சேக் இப்ராம்சா,  சிபிஐ பன்னீர்செல்வம், மதிமுக பாலசுப்பிரமணியன், விசிக ஆத்ம ஆனந்தகுமார், அறநெறி மக்கள் கட்சி ஆயர் த.ஜேம்ஸ் மற்றும் பேராசிரியர் சண்முகப்பிரியா, கழக நகரச் செயலாளர் தா. கலைச்செல்வன், கழக மாவட்டச் செயலாளர் பாரி, தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

தொடர்ந்து “பெரியாரும் திருக்குறளும்” என்ற தலைப்பில் தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் தலைவர் சின்னப்பத்தமிழரும், “எது திராவிடம்? எது சனாதனம்?” என்ற தலைப்பில் கழக மாவட்ட தலைவர் சாக்கோட்டை இளங்கோவனும், “வைக்கம் போராட்ட வரலாறு” குறித்து கழகப் பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரனும் சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் கழக வார ஏடான “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழுக்கான சந்தா ரூ.15,000 பரப்புரைச் செயலாளரிடம் வழங்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 28.12.2023 இதழ்

You may also like...