‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற பாஜக திட்டத்துக்கு அம்பேத்கர் தரும் பதில் இந்தியா இன்றும் ஒரே தேசமாக உருவாகவில்லை – கொளத்தூர்மணி
இந்தியா முழுவதும் ஒரே தேர்தல்’என்ற முழக்கத்தை முன்வைக்கிறது பாஜக. ஆனால் இந்தியா இன்னும் ஒரே தேசமாக இருக்கவில்லை என்கிறார் அம்பேத்கர் என்று உறுதியாக கூறியதோடு வடநாடு பிற்போக்கானது, தென்னாடு முற்போக்கானது என்றும் தெளிவுப்படுத்தியிருப்பதை கழகத் தலைவர் எடுத்துக் காட்டினார்.
சூலூரில் 30.0.2023 அன்று நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நிறைவுப் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி.
அம்பேத்கர் 1955இல் ‘மொழி வழி மாநிலங்கள் பற்றிய சிந்தனைகள்’ என்ற ஒரு புத்தகம் எழுதுகிறார். அதுவரைக்கும் ஒன்றுபட்ட இந்தியா, இந்தி ஆட்சி மொழி என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த அம்பேத்கர், அந்த நூலில் இந்த நாட்டில் எவ்வளவு வேறுபாடுகள் உள்ளன, கன்னியாகுமரியில் இருப்பவர்களுக்கு டெல்லி வெளிநாடு போல் தெரிகிறது. எனவே இந்தியாவிற்கு இரண்டாவது தலைநகரம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று எழுதுகிறார். இரண்டாவது தலைநகரமாக ஹைதராபாத்தை பரிந்துரைக்கிறார். எப்போதும் இந்தியாவுக்கு இரண்டாவது தலைநகர் வேண்டும், ஆங்கிலேயர் இருந்தபோது இரண்டாவது தலைநகரமாக சிம்லா இருந்தது; முகலாயர் ஆட்சியில் ஸ்ரி நகர் இருந்தது. என்ற ஒன்று.
மற்றொன்று இந்தி மொழிக்காக பேசுபவர்களுக்கு ஒன்றை சொல்கிறார். இப்போது நான் பேசுவது ரகசிய காப்பு பிரமாணத்தை முறித்ததாக பொருள் ஆகாது. நான் அரசியல் நிர்ணய சபை தலைவர் என்கிற முறையில் பல இடங்களுக்கு செல்கிற வாய்ப்பு உண்டு. அப்போது பெரிதும் காங்கிரஸ் காரர்கள் தான் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களாக இருந்தனர். எனவே இந்தி ஆட்சி மொழி பற்றி முடிவு செய்வதற்காக காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திற்கும் சென்றிருக்கிறார். அரசியல் நிர்ணய சபையில் இந்திக்கு ஆதரவாக போட்ட வாக்குகளில் ஒரு வாக்கு தான் அதிகம். காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும் சம வாக்குகள் வந்தன, கட்சித் தலைவராக இருந்த பட்டாபி சீதாராம் இந்திக்கு ஆதரவாக வாக்களித்ததால் இந்திக்கு ஒரு வாக்கு அதிகம். எனவே இந்தி பேசும் மக்களே இந்தி இந்த நாட்டின் அலுவல் மொழியாக ஒரு வாக்கு வித்தியாசத்தில் தான் வந்தது என்பதை மறந்து விடாதீர்கள். இல்லையென்றால் இந்தியாவின் பிரிவினைக்கு இது அடிப்படையாக அமைந்து விடும் என்று எழுதினார்.
அந்த நூலில் மற்றொரு செய்தியையும் குறிப்பிடுகிறார், தென்னிந்தியாவும் வட இந்தியாவும் எப்படி ஒன்றாக இருக்க முடியும் என்ற ஒரு கேள்வியையும் முன் வைக்கிறார்.
1. வடநாட்டில் நிர்வாண சாமியார்கள் திரிகிறார்கள், தென்னாட்டில் அப்படி திரிய முடியுமா?
2. இங்கு உடன்கட்டை ஏறுதல் தடையில்லாமல் நடக்கிறதே, அது தென்னாட்டில் நடக்குமா?
3. இந்த நாட்டின் பிரதமராக நேரு வந்ததற்காக பார்ப்பனர்கள் மகிழ்ந்து போய் அவரை யாகத்தில் உட்கார வைத்து பூஜைகள் செய்து கையில் தண்டாவை கொடுக்கிறார்கள், அதே மாதிரி தென்னிந்தியாவில் செய்ய முடியுமா?
4. இந்த நாட்டின் குடியரசுத் தலைவர் காசிக்குச் சென்று ஐந்து பார்ப்பனர்களின் கால்களை தாம்பாலத்தில் வைத்து கழுவினாரே, அது தென்னிந்தியாவில் நடக்குமா? இது மட்டுமல்லாமல் தென்னிந்தியர்கள் முற்போக்கு சிந்தனையுடையவர்கள், வட இந்தியர்கள் பிற்போக்கு சிந்தனை யுடையவர்கள். தென்னிந்தியர்கள் கல்வியில் முன்னேறியவர்கள், வட இந்தியர்கள் கல்வியில் பின் தங்கியவர்கள். தென்னிந்தியர்களின் பண்பாடு என்பது நவீனத்துவமானது, வட இந்தியர்களின் பண்பாடு பழமையானது. எப்படி இரண்டும் ஒன்றாக இருக்க முடியும் என்ற கேள்வியை அம்பேத்கர் எழுப்புகிறார்.
இதையெல்லாம் எழுதிவிட்டு, நான் அண்மையில் கவர்னர் ஜெனரலோடு உரையாடிக் கொண்டிருந்த போது இந்தியா ஒரு நாடாக இருக்கக் கூடாது. இரண்டு கூட்டாட்சிகள் நிறுவப்பட வேண்டும், ஒன்று தென்னிந்திய மாநிலங்கள் மட்டும் (Federation of the South) மற்றொன்று வட இந்திய மாநிலங்கள் (Federation Of the North) இரண்டு பகுதிகளிலும் சம எண்ணிக்கையில் உறுப்பியம் கொண்ட பெருங்கூட்டமைப்பு (Confederation India) ஒன்றை உருவாக்கி விடலாம். இந்தியா தொடர்ந்து ஒரே நாடாக இருக்க வேண்டுமென்றால் இவைகளை பின்பற்றினால் தான் சரியாக இருக்கும் என்பது என் கருத்து என்று அந்த நூலின் எழுதுகிறார்.
மாநில சுயாட்சியும் அதைத்தான் வலியுறுத்துகிறது. முதன் முதலில் அரசியல மைப்பு சபை உருவாக்கப்பட்ட போதும் அதேதான் கருத்து. அதில் தீர்மானங்களை முன் மொழிந்த நேரு, ஐந்து அல்லது ஆறு அதிகாரங்கள் மட்டும்தான் மைய அரசுக்கு இருக்க வேண்டும், (வெளியுறவுத் துறை, இராணுவம், நாணயம், தொலைத்தொடர்பு) மீதி அத்துணை அதிகாரங்களும் மாநிலங்களுக்குத்தான் என்று முன்மொழிந்தார்.
அதை எழுதி கொடுத்தது கிரிப்ஸ் குழு, அதன் அடிப்படையில் தான் இந்திய அரசியலமைப்பு சபை கூடுகிறது. இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே 1946ல் அரசியலமைப்பு அவை கூடிவிட்டது. அப்போது பணக்காரர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் உறுப்பினர்களாக முடியும். 10 விழுக்காட்டினருக்கு மட்டுமே வாக்குரிமை இருந்த காலம். எனவே அந்த நேரத்தில் அதை அம்பேத்கர் சொன்னார்.
அரசியல் சட்டத்தை எழுதி மக்கள் முன் வைத்த போது, முதல் கருத்தாக 26.11.1949ல் தான் அரசியல் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 25ம் தேதி அரசியல் சட்டத்தை முன்மொழிந்து அவர் பேசிய போது, நான் எழுதிய அரசியல் சட்டம் இந்த தலைமுறைக்கானது. அப்போது அமெரிக்காவை சேர்ந்த ஜெஃபர்சனை மேற்கோள் காட்டி, ஒவ்வொரு தலைமுறையையும் ஒரு தேசமாக கருத வேண்டும், இது இப்பொழுது இருக்கிற தலைமுறையினருக்காக எழுதியது, இது எந்த காலத்திற்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. அடுத்தது ஜனநாயகம் என்பது முற்போக்கானது தான், அதில் மிகப்பெரிய வெற்றியடைவது என்பது சர்வாதிகாரத்திற்கு இட்டுச் சென்று விடும் என்று சொல்கிறார். “எவ்வளவு மோசமான அரசியல் சட்டமாக இருந்தாலும், அதை நிறைவேற்றுபவர் சிறந்தவராக இருப்பாரேயானால் அது சிறப்பாக வேலை செய்யும், எவ்வளவு உயர்ந்த அரசியல் சட்டமாக இருந்தாலும் அதை நிறைவேற்ற வருபவர்கள் மோசமான ஆட்களாக இருந்தால் அது ஒன்றுக்கும் பயனில்லாமல் ஆகிவிடும்” என்ற ஒன்றைச் சொல்கிறார். அதைத்தான் தற்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
மற்றொன்றையும் குறிப்பிடுகிறார், நான் அரசியல் சட்டத்தின் முகப்புரையில் எழுதினேன், இந்திய மக்களாகிய நாம் என்றுதான் தொடங்கும், அரசியல் உணர்வு மிக்க நண்பர்கள் ஏன் இது எல்லாம் எழுதுகிறீர்கள், இந்திய தேசத்தாராகிய நாம் என்று எழுதுங்கள் என்று கேட்டனர். அம்பேத்கர் உடனே, “நாம் எங்கு தேசமாக இருக்கிறோம். நாம் இனிமேல் தான் தேசமாக வேண்டும். ஆயிரக்கணக்கான ஜாதிகளாக பிரிந்திருக்கிற நாம் எப்படி தேசமாக முடியும், இனிமேல் தான் தேசமாக முடியும்” என்று சொன்னார்.
ஜாதிகள் என்பவை தேச விரோதமானது என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார். ஆனால் ஒன்றிய அரசு எதையெதையெல்லாம் தேச விரோதம் என்று பேசி வருகிறது. எனவே புரட்சியாளர் அம்பேத்கர் என்ன கருத்தைக் கொண்டிருந்தாலும், பின் நாட்களில் அவற்றை நம்முடைய கருத்துகளாகத்தான் மாற்றிக் கொண்டிருக்கிறார். மாநில சுயாட்சி என்பது மிக விரிவாக பேச வேண்டிய ஒன்று, அது எவ்வளவு சிறந்த அம்சங்களை கொண்டிருக்கிறது என்பதும் பேசவேண்டிய ஒன்று, ஆனால் பேரறிஞர் அண்ணா இறுதியாக பொங்கல் விழா உரையில் செய்திகளை மட்டும் எழுதினார். கலைஞர் அதை உருவாக்கி, அதை அனைத்து மாநிலங்களையும் பேச வைத்து, அதற்காக இந்திரா காந்தி நீதிபதி சர்க்காரியா தலைமையில் ஒரு குழுவை போட்டார். பின்னாளில் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் நீதிபதி பூன்ச் தலைமையில் மாநில சுயாட்சி குறித்து அதற்காக ஒரு குழு அமைக்கப் பட்டது. ஆனால் அதையெல்லாம் பேசாமல் போய்விட்டது. பேசியது தமிழ்நாடு மட்டும்தான் என்ற காரணத்தால் தமிழ் நாட்டு முதல்வர் இந்தியாவில் இருக்கிற எல்லா மாநிலத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அல்லாத கட்சிகளை வெறும் தேர்தல் கூட்டணியாக இல்லாமல் கொள்கை கூட்டணியாக அமைத்துக் கொண்டிருக்கிற தமிழ்நாடு முதல்வரின் முன்னெடுப்பில் இவைகள் நிறைவேற வேண்டும், நிறைவேறும் என்ற எதிர்பார்ப்போடு அந்த மாமனிதர் கலைஞருக்கு எனது தலை தாழ்ந்த வணக்கங்கள்.
பெரியார் முழக்கம் 07092023