33. கடல் குமுறுது!

காற்றடிக்குது கடல் குமுறுது! கண்ணைத்திறவாய் நாயகமே என்று பாடிய கவியின் கருத்தை, சென்னை சென்ற ஞாயிறன்று, மிகமிக அழகாக எடுத்துக்காட்டிற்று. அன்று பெரியார் வரவேற்புக் கூட்டம் மிக ஆடம்பரமாக திருவல்லிக்கேணி கடற்கரையில் கொண்டாடப்பட்டது. கடல் அலை ஒலிக்கு சக்தி அதிகமா அன்றி தமிழரின் முரசொலிக்கு சக்தி அதிகமா என்று போட்டி நடந்து அன்று. கடற்கரையில் எங்கு நோக்கினும் தமிழர்கள்! தமிழ்ப்பெண்கள்! தமிழ் வாலிபர்கள்! தமிழ்த் தலைவர்கள்! 1000-க்கு மேற்பட்ட வெளியூர்த் தமிழர்கள் அக்கூட்டத்திற்கு வந்திருந்தனர். ஆச்சாரி சர்க்காரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு சிறைசென்று மீண்ட தாய்மார்க்ள் ஒரு புறமும், தொண்டர்கள் மற்றொரு புறமும் அமர்ந்திருக்க உயரமாக எழுப்பப்பட்ட மேடைமீது மின்சார விளக்கொளியுடன் நீதிக்கட்சிச் சின்னமாகிய திராசு மின்னவெண்ணிறத்தாடி கடற்காற்றால் ஆடி அசைய, பிரகாசிக்கும் கண்கள் அங்குமிங்கும் பாய்ந்து நோக்க, பெரியார் மேடைமீது அமர்ந்த காட்சியை தமிழர் என்றும் மறவார்! அன்று கண்ட தமிழரின் உற்சாகத்தை பெரியாரும் என்றும் மறவார். அக்காட்சியை, சரிதமும் மறவாது.

இதுவரை அவ்வளவு பெரிய கூட்டம் சென்னைக்கடற்கரையில் கூடியதில்லை என மெயிலும், திரளான கூட்டம் என மெல்லவும் மாட்டாது விழுங்கவும் மாட்டாது தேசீயத் தாள்களும் கூறின.

நகரின் தமிழர் அங்கு தான் அன்று இருந்தனர். இதற்கு முன்பு அமைக்கப்பட்டிருந்ததைவிட அதிகப்படியான ஒலிபெருக்கி வசதிகள் அன்றைய கூட்டத்திற்குத் தேவையாக இருந்தன என்றால் கூட்டத்தின் அளவைப்பற்றிக் கூறவும் வேண்டுமோ!

அன்று சென்னை நகரிலேயே திருநாள் கொண்டாட்டந்தான்! தோரணங்கட்டுபவரும், கொடி ஏற்றுபவரும், கோலமிடுபவரும், ஆடை திருத்தி அணிவகுப்பவரும், எங்கே பெரியார், எப்போது வருவார் என்று கேட்டபடி சென்னை சென்டரல் ஸ்டேஷனுக்கு மாலைகளைத் தூக்கிக்கொண்டு மகிழ்ச்சியுடன் போகிறவர்கமாக தமிழர்கள் காணப்பட்டனர்.

வானமும், காங்கிரசைத் தாமே தாங்கிக் கொண்டிருப்பதாகக் கருதும் சில பேர்வழிகளின் முகமுமே கருத்துக்காணப்பட்டது! சிறு தூரலும் பெய்தது. பரிமளப்பனி நீர் எனக் கருதி, பெரியாரின் பவனியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர். கடற்கரையில் கூடினர்! கவிகள் பாடினர்! பாரும் எம்பெரியாரை என பூரித்துக்கூறினர்! வரவேற்புகளும், வாழ்த்துக்களும், ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டு ஓடோடி வந்தன. புன்னகை பூத்த முகத்துடனே, ஒவ்வொன் றையும் வாங்கி வாங்கிக் குவித்தார் பெரியார். பிறகு 1001 ரூபாய் பணமுடிப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. பெரியாரின் சேவையைப் பாராட்டிப் பலர் பேசினர். கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உள்ளத்தில் ஊடுருவிப் பாயும் படியான உணர்ச்சி மிக்க சொற்பொழிவாற்றினார் பெரியார்!

அதே நேரத்தில், அதே சென்னையில், கோடியிலுள்ள ராயபுரத்தில், ஒரு பார்க்கில் சில ஆயிரமக்கள் முன்னிலையில், மாகாண முதலமைச்சர் கனம். ஆச்சாரியார், கொசுக்கடி?மூட்டைப் பூச்சிகளால் வரும் தொந்தரவைப் பற்றிக் கதை கூறிக் கொண்டிருந்தார்.

கடற்கரையில் பெரியார், வெற்றி விழா கொண்டாட்டம் நடத்தினார். பார்க்கிலே ஆச்சாரியார், தொல்லைகள் அந்தாதி பாடினார்!

கடற்கரையிலே ஒரு இலட்சம் பேர் கூடி, தலைவரின் கட்டளை யாது எனக் கேட்டனர். பார்க்கிலே, கூடியோரிடம் தாம் படும் பாட்டைப் பற்றிப் பேசினார் முதலமைச்சர்!

சர்க்காரின் பிடிவாத குணத்தால், சிறை செல்ல நேர்ந்த பெரியார், தமது சிறைவாசக் கஷ்டத்தைப்பற்றி, கடற்கரையில் பேசவில்லை மந்திரி வேலையில் அமர்ந்து, திருவடி துதிபாடும் திருக்கோஷ்டி புடை சூழ கொலு வீற்றிருக்கும் ஆச்சாரியார், மந்திரி பதவியால் வந்த தொல்லைகளைப் பற்றிப் பேசாதிருக்க வில்லை!

கடற்கரையில், பெரியார் 1001 தமிழர்களைச் சிறையிட்டு வந்த கனம். ஆச்சாரியாரைப் பற்றி ஒரு வார்த்தைகூட கடிந்துரைக்கவில்லை. தேசீயத்தின் பேரால் பொது மக்களை மயக்கி இன்று ஏகாதிபத்தியத்தின் ஏஜண்டிடம் ஏவலாளியாக கனம் ஆச்சாரியார் இருப்பதைக் கூடக்கூறவில்லை. ஆனால் கனம் ஆச்சாரியார் மட்டும், பொதுவுடமைப் பிரச்சாரம் செய்த பெரியார் இன்று ஜமீன்தாருடன் சேர்ந்து கொண்டார் எனக் கூசாது பொய் பேசினார்.

கடற்கரைக் கூட்டத்திற்கு குமார ராஜா தலைமை வகித்தார். அவரை நோக்கிப் பெரியார் இன்று எனக்குக் கொடுத்த 1001 ரூபாய்களும் ஒவ்வொரு ரூபாயாக வந்தது என்பது எனக்குத் தெரியும். எப்படி இதைச் சேர்க்க முடிந்ததோ, அதே போல தலைவர் குமாரராஜா போன்றவர்கள் வெளியில் பிச்சைக்குப் போகவேண்டும். அவர் மேல் துண்டை எடுத்து நீட்டிப் பிச்சை கேட்டால் பதினாயிரம், லட்சக் கணக்கில் சேர்க்கலாம் என்று கூறினார். இப்படிப்பட்ட பேச்சுப் பேசிய பெரியாரை பொதுவுடமையை மறந்து ஜமீன்தாருடன் சேர்ந்துகொண்டர் எனக் கூறுவது எவ்வளவு ஆபாசமான புளுகு என்பதை மக்கள் உணரவேண்டுகிறோம்.

கனம் ஆச்சாரியாருக்கு பொது உடமை என்றால் இனிப்பும், ஜெமீன்தாரர் என்றால் கசப்பும் உண்டு என யாராவது கூற முடியுமா? சாதாரண, தீவிரவாதத்தைக் கண்டாலே, பயந்து, வெறுத்து ஓதுக்கும், அடக்கி அழிக்கும் ஆச்சாரியார், பொது உடமையிடம் அன்பு கொண்டவர் போலவும், பெரியார் பொது உடமைக்கு எதிரி போலவும் திரித்துக் கூற முற்பட்டது, மிக மிக வேடிக்கையேயாகும்.

ஜாதீயம், வர்ணாஸ்ரமம் என்ற பழமைப் பித்து தலைக்கேறி, நந்தன் கதையும், திருப்பாணாழ்வார் புராணமும் பாடி தீண்டாமையை ஒழிக்க முன்வராதிருக்கும், கனம் ஆச்சாரியார் பெரியாரை நோக்கி, நீர் ஏன் பொது உடமையை மறந்து விட்டீர் எனக் கேட்பது, பொருத்தமானதாகுமா! அப்படித்தான் என்ன, பெரியார் பொது உடமை விரோதியா?

பொது உடமைபேசிய, பண்டித ஜவஹரின் வர்ணஸாரமப் பற்று வெளியாக்கப்பட வில்லையா!

ஜெமீன்தாரர்களுடன் பெரியார் சேர்ந்து கொண்டதாகக் கூறுவது ஏழை மக்களை ஏய்க்க பஜாஜ், பிர்லா, டாடா, போன்ற கோடீசுரருடன் குலாவி, மன்னர்களிடம் மண்டியிட்டு, திவான்களிடம் பேரம் பேசி, ஜெமீன்தாரருக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு வாழும் காங்கிரஸ்காரரின் வாடிக்கையான  வித்தையாகும் குமார மங்கலம் ஜெமீந்தார், கன் டாக்டர் அப்புராயனை பிறந்து விட்டு கனம் ஆச்சாரியார் அன்று பேசினார் போதும் ஜெமிந்தாரைத் தேடிப் பிடித்து மயக்கியும் பிரட்டியும், நம்மிடம் சேர்த்து வைத்துக் கொண்டிருந்திடும் காங்கிரஸ்  கூட்டத்தினரா பெரியாரைக் குறைகூற யோக்கியதை உள்ளவர்?

முதலாளி ஜெமீன்தாரருடன் கூடிக்குலாவிக்கொண்டு தொழிலாளி உழவரை, உதாசீனம் செய்வதாக காங்கிரசை நாள்தோறும் தீவிர வாதிகள் கடிந்து கொண்டிருக்க, அன்று பெரியார் கூறியது போல, இன்று காந்தியாரிடம் வடநாட்டு முதலாளிகள் பலர் தொகை குறிக்காது செக்கில் கையெழுத்திட முன் வருவர். பிரதி பலனாக காந்தியாரின் பிரச்சாரத்தால் மில் துணிகள் விற்பதன் மூலம் பல லட்சக்கணக்கில் பணம் சேர்ப்பர் என்ற நிலையில் காங்கிரஸ் இருக்க, அதை மறைத்து, ஒரே அடியாக ஜெமீன்தாரருடன் குலாவுகிறார் பெரியார் என கனம் ஆச்சாரியார் கூறுவது அடுக்குமா எனக் கேட்கிறோம்.

சின்னாட்களுக்கு முன்னால் ஜெமீன்தாரர்களுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு சர்தார் படேல் பிருந்தா வனத்திலே பேசியபேச்சு, காங்கிரஸ் இன்று ஜெமீன்தாரரின் காலடியில் இருப்பதையன்றோ காட்டுகிறது! உண்மை இதுவாக இருக்க ஒரு மாகாண முதலமைச்சர் தன் கட்சி மீதுள்ள குற்றத்தை பெரியார் மீது ஏற்றி, பொய்ப் பிரச்சாரம் செய்வதென்றால், அரசியலோ, நாடோ முன்னேறுமா? எனக் கேட்கிறோம்.

ஜெமீன்தாரர் மீது, கனம். ஆச்சாரியாருக்கு, உள்ளபடி கசப்பு இருக்குமானால், காங்கிரசில் ஒரு ஜெமீன்தாரரும் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என முடிவு செய்யவேண்டும்! மந்திரி சபையிலே, இடம் காலியாகும்! மாகாண காங்கிரஸ் கமிட்டிகள், முதல் கிராம காங்கரஸ் கமிட்டி ஈறாகவும், சட்டசபை முதல் பஞ்சாயத்து சபைவரையிலும், இன்றுள்ள காங்கிரஸ்காரர்களில் எத்தனை பேர் வெளி ஏறவேண்டி வரும்! காங்கிரசுக்கு பணமுடை உவ்வளவு ஏற்படும் என்பதையும், அன்று தெள்ளெனக் காணலாம்.

முன் வருவாரா, கனம். ஆச்சாரியார், இதைச்செய்ய எனக்கேட்கிறோம்.

களியாட்டத்திலும், வீண் வேலையிலும், காசைக் சுருகிக்கொண்டு, கருத்தைப் பாழாக்கிக்கொண்டிருந்த, ஜெமீன்தாரர், பணக்காரர், ஆகியோரை, பொது வாழ்விற் புகுத்தி, பணியாற்ற வைத்து, அவர்களின் நேரமும், முயற்சியும், சக்தியும், செல்வமும் பொது மக்களுக்கு உபயோகமாகுமாறு, செய்த பெருமை நீதிக்கட்சிக்கே உண்டு! ஆனால் நீதிக்கட்சி ஜெமீன்தாரரிடம் சிக்கி அவர்களின் கைக்குழந்தையானதில்லை. ஆனால் காங்கிரசோ என்றால், பொதுவாழ்வை ஏணியாகவும், போர்வையாகவும் உபயோகிக்கும் சுயநல முதலாளிகளின் கோட்டையாகி விட்டது. இதுவே உண்மை! இதைக்காட்ட புள்ளி விவரங்கள் பலப்பல உள்ளன. இன்றைய காங்கரசின் அமைப்புவேலைத்திட்டம், இதையே காட்டுகிறது. எனினும் கனம் ஆச்சாரியார் உள்ளதை மறைத்து இல்லாததைக் கற்பித்துப் பேசுகிறார். ஏன்? தொல்லைதாங்க மாட்டாது தான்! என்ன தொல்லை? எங்கு நோக்கினும் எதிர்ப்பு!

தமது முன்னாள் நண்பரும் சின்னாட்களுக்கு முன்புவரை தமது சர்க்காரின் கைதியாகவு மிருந்த பெரியார் மீது பழி சுமத்தியாவது அவருக்குள்ள செல்வாக்கைக் குறைக்கலாம் என கனம் ஆச்சாரியார் எண்ணினர் போலும்!  அந்த எண்ணம் ஈடேராது தமிழ் நாட்டிலே ஈரோட்டு வாடை வீசுகிறது! தமிழ் நாட்டிலே கிளர்ச்சிக கடல் குமுறுகிறது. கண்களைத் திறந்துவிட்டனர். திறந்து விட்டனர்! கச்சையை வரிந்து கட்டி வந்து விட்டனர் போருக்கு! போரும் அதோ நடந்துகொண்டே இருக்கிறது. பித்தலாட்ட பிரச்சாரத்தால் ஆச்சாரியார் எதையும் சாதித்துவிட முடியாது!

எனது ஆப்த நண்பராக அன்னாள் இருந்து வந்த பெரியாரே, இன்று எனக்குப் பெரிய விரோதியாகி விட்டார் என்று சோகத்தோடு செப்பினாராம், கனம் ஆச்சாரியார். உண்மைதான்! கனம் ஆச்சாரியாரின் போக்கு நண்பரையும் விரோதியாக்கி விடுகிறது! நட்பு முறையை கனம் ஆச்சாரியார் எண்ணியிருப்பின் கட்டாய இந்தியை எதிர்த்து பெரியார் கிளர்ச்சி செய்தபோது யாது செய்தார்? அவரைக் கலந்து பேசினாரா? அவர் வார்த்தைகளை கூர்த்து நோக்கினாரா? இல்லை. யாரோ ஒரு ராமசாமியும் ஒரு பாரதியும் இந்தியை எதிர்க்கிறார்கள் என எவ்வளவு அலட்சியமாகப் பேசினார் சட்டசபையில்.

எது கனம் ஆச்சாரியாருக்கு பிரமாதமானதாகப் பட்டது? தமது முன்னாள் நட்பா, இன்னாள் மோகமா? எதை எண்ணினார், ஆச்சாரியார்? ஈ.வெ.ராவுடன் கலந்து வேலை செய்த காலத்தின் சிறப்பையா? அன்றி இன்று கவர்னரோடு விருந்துண்ணும் களிப்பு கிடைத்ததையா? எதை உபயோகித்தார்? கனம் ஆச்சாரி யார்? அன்பையா! அடக்கு முறையையா? எங்கு அழைத்தார் பெரியாரை? கலந்து பேசுவோம் என தம்மிடமா? அன்றி சிறைக்கா?

இவ்வளவும் செய்து விட்டு இன்று என் நண்பரே எனக்கு விரோதியானார்? எனக் கூறுவதை பாட்டிமார் நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்றே கூறுவர். அதையார் பொருட்படுத்துவர். அன்று வானம் தெளித்த நீரைக்கண்டு தமிழர்கள் எப்படி பொருடபடுத்தாது தமது தலைவரைக்காண அவர் மொழிகேட்க, அதன்படி நடக்க. பல்லாயிரக் கணக்கில், கடற்கரையில் கூடினரோ அதே போலத்தான் ஆச்சாரியாரின் சோகச் சொட்டுகளையும் யாரும் பொருட் படுத்தமாட்டார்கள்.

குடிஅரசு, தலையங்கம் – 25.06.1939

You may also like...