அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு பதிலடி ஒன்றிய ஆட்சியால் புறக்கணிக்கப்படும் தமிழ்நாடு

 

ஒன்பது ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு ஒரு சிறப்புத் திட்டம் கூட அளிக்கவில்லை என அமித் ஷா ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாக திமுக எம்.பி டி.ஆர்.பாலு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் கேட்ட கேள்விக்கு ஆக்கப்பூர்வமாக பதில் சொல்ல முடியாத  ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முழுக்க முழுக்க கற்பனைக் கதையை உருவாக்கி, தமிழ்நாட்டிற்குப் பல திட்டங்களை அள்ளி வீசியது போல் “கானல் நீர்” தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்திருக்கிறார். தமிழ்நாடு, பாஜக ஆட்சியில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது  அக்மார்க் உண்மை என்பதை அமித்ஷாவே புரிந்து கொண்டு, திசை திருப்பி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றலாம் என நினைக்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்ட ணியில் திமுக பங்கேற்றிருந்த போது தமிழ்நாட்டிற்கு சாதித்த திட்டங்களை மிக அழகாக பட்டியலிட்டார் முதலமைச்சர். அதுபோன்ற சாதனை மிக்க சிறப்புத் திட்டங்கள் ஒன்று கூட இந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சி யில் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு கொடுக்கவில்லை என்பதுதான் எங்கள் அடிப்படயான குற்றச்சாட்டு. தன்னுடைய பேச்சில் அப்படி யொரு சிறப்புத் திட்டத்தை சுட்டிக் காட்ட முடியாமல் திணறிப் போன உள்துறை அமைச்சர், வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ எனப் பேசி, “தமிழ்நாட்டிற்கு பாஜக ஆட்சியில் ஒரு சிறப்புத் திட்டமும் நிறைவேற்றவில்லை” என்று வேலூரில் வெளிப் படையாகப் பேசிக் கைவிரித்துள்ளார்.

 

உள்துறை அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ள நிதி ஒதுக்கீடுகள், மானி யங்கள், ஒன்றிய அரசு மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய அரசியல் சட்டக் கடமை. அது பாஜக ஆட்சியில் இருப்பதால் வந்தது இல்லை. எந்த அரசு ஒன்றியத்தில் இருந்தா லும் அதைக் கொடுக்காமல் இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக ஜி.எஸ்.டி மூலம் தமிழ்நாட்டிலிருந்து அதிக வருவாய் ஒன்றியத்திற்குக் கிடைக்கும்போது கூட தமிழ்நாட்டை ஏறெடுத்துப் பார்க்கவில்லை.

 

அதற்கு பதில், தமிழ்நாட்டில் வசூலித்து உ.பி.யிலும்- பாஜக ஆளும் மாநிலங்களிலும் செலவழிப்பதுதான் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி!

 

தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்கெனவே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருக்கி றது. அதற்கும் பாஜக அரசு ஒன்றும் பங்களிப்பு செய்திடவில்லை. ஏதாவது ஒரு நெடுஞ் சாலைத் திட்டத்தைக் கொண்டு வந்தால் கூட ஆந்திரா, கர்நாடக பயன்பெற்று அதில் மீதி தமிழ்நாடு பயன்பெறும் வகையில்தான் ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டதே தவிர,  தமிழ்நாட்டிற்கு என்று பிரத்தியேகமாக எந்த நெடுஞ்சாலை சிறப்புத் திட்டத் தையும் அளிக்கவில்லை.

 

இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களை முன்பு முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடுவின் அழுத்தத்திற்கு பயந்து மாற்றி – தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்ததுதான் ஒன்றிய பாஜக அரசு.

 

தமிழ்நாட்டை எப்படி ஒன்றிய அரசு வஞ்சித்துள்ளது என்பதற்கு சில எடுத்துக்காட்டுகளை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன். ஒன்றிய வரிகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிதி ஆணையம் பகிர்ந்தளிப்பது குறைக்கப்பட் டுள்ளது பாஜக தலைமையிலான ஒன்றிய ஆட்சியில்தான்! ஒன்றிய வரி வருவாய்க்கு தமிழ்நாடு அளிப்பது 1.6 லட்சம் கோடி  ரூபாய். ஆனால் அந்த ஒன்றிய வரி வரு வாயிலிருந்து தமிழ்நாட்டிற்குப் பகி ர்ந்தளிப்பது வெறும் 41 ஆயிரம் கோடி ரூபாய். இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒன்றிய  வரி வருவாய்க்கு 100 ரூபாய் தமிழ் நாடு கொடுத்தால், பாஜக ஆட்சி தமிழ் நாட்டிற்கு 20 ரூபாய் திருப்பிக் கொடு க்கிறது. எதிர்காலத்தில் இதைவிட மோசமாக நிதி ஒதுக்குவோம் என   அமித்ஷா கூறுகிறார்.

 

தமிழ் நாட்டிற்கு கடந்த 9 வருடத்தில் இரண்டு லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாயைப் பிரதமர் அளித்ததாக கூறும் பொழுது, அதே கால கட்டத்தில் உத்தரப்பிரதேசத்திற்கு 10 லட்சத்து 73 ஆயிரம் கோடியை அள்ளித் தந்ததை ஏன் மறைக்க வேண்டும்? நிதிப் பகிர்வில் முக்கியத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தலைநகர் தில்லி தமிழ் நாட்டை வஞ்சிக்கிறது.

 

9 ஆண்டுகால பாஜக ஆட்சி என்பது, சென்னை மாநகரத்திற்குப் பேரிடர் மேலாண்மைக்காக நிதி ஆணையம் பரிந்துரைத்த 500 கோடி ரூபாய் நிதியை இரண்டு ஆண்டு களாக கொடுக்காத ஆட்சி. 2015-இல் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை இதுவரை கட்டாத  ஆட்சி. இதுவரை அதற்கு நிதி கூட ஒதுக்காமல் அநீதி இழைக்கும் ஆட்சி.    சென்னை மெட்ரோ ரயில்-2 ம் கட்ட  திட்டத்திற்கு 2019 இல் நிதி கேட்டும் இன்று வரை ஒப்புதல் வழங்காத ஆட்சி. தூத்துக்குடி துறைமுக விரி வாக்கத்திற்கான கோரிக்கையைக் கிடப்பில் போட்டு வைத்துள்ள ஆட்சி.  ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டின் ரயில் திட்டங்க ளுக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணித்த ஆட்சி. இவையெல்லாம்தான் பாஜக ஆட்சி தமிழ்நாட்டிற்கு தந்த வேதனைகள்! குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், 2023-2024 பட்ஜெட்டில் தமிழ்நாட்டு ரயில் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 2.5 விழுக்காடு. கடந்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ரயில் திட்டங்களுக்கு தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி 18 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால் 2023-24 ஒரு நிதியாண்டில் மட்டும் உத்தரப்பிர தேசத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி 17,500 கோடி ரூபாய். மாற்றாந்தாய் மனப் பான்மையோடு தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதே பாஜக ஆட்சியில்தான் என்பதற்கு இதை விட உதாரணம் தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

 

பெரியார் முழக்கம் 15062023 இதழ்

You may also like...