வி.பி.சிங் சிலை : தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றை அறிவித்திருக்கிறார். சமூக நீதி காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு சென்னையில் முழு உருவச் சிலை அமைக்கப்படும் என்று 110 விதியின் கீழ் அவர் அறிவித்திருக்கிறார். சட்டமன்றத்தில் பாஜக உட்பட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இதை மகிழ்ச்சியுடன் வரவேற்றிருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒன்றாகும்.
“இந்திய அரசியலில் ஓர் அதிசயம் வி.பி.சிங்”, தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளாமல் தன்னுடைய ஆட்சி அதிகாரத்தை சமூக நீதிக் கொள்கைக்காக பலிகடாவாக கொடுத்தவர் வி.பி.சிங். நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானத்தை அவர் கோரும் போது 27ரூ மக்களின் சமூக நீதி ஆணையின் அடிப்படையில் நான் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை கோருகிறேன். இதில் நம்பிக்கையுள்ளவர்கள் எனக்கு வாக்களிக்கட்டும், எதிர்ப்பவர்கள் என்னை எதிர்த்து வாக்களிக்கட்டும். பிரதமர் பதவியைத் தூக்கியெறிந்து விட்டு நான் வெளியே வரத் தயாராக இருக்கிறேன் என்று நாடாளுமன்றத்திலே பிரகடனப்படுத்தி அதன் வழியாக பதவியைத் தூக்கி எறிந்து விட்டு சமூக நீதியை காப்பாற்றியவர் வி.பி.சிங்.
அவர் ஆட்சி காலத்தில் செய்த எத்தனையோ சாதனைகள் வரலாற்றில் இருட்டடிக்கப்பட்டுள்ளது. வி.பி.சிங் அவர்களுக்கு மனம் கவர்ந்த மாநிலம் தமிழ்நாடு, கலைஞர் அவர்களின் இதயத்தில் இடம் பிடித்த தலைவர் அவர், வி.பி.சிங் பதவியில் இருந்து இறக்கப்பட்ட பிறகு தமிழ்நாடு முழுவதும் வி.பி. சிங் அவர்களை அழைத்து மக்கள் திரளைக் கூட்டி உங்களுக்குப் பின்னால் எவ்வளவு மக்கள் சக்தி இருக்கிறது என்பதை உணர்த்திக் காட்டியவர் கலைஞர்.
அந்த வழியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இந்த அறிவிப்பை கோடான கோடி ஒடுக்கப்பட்ட
மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். இதன் மூலம்
தமிழர்களின் நன்றியுணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார் தமிழக முதல்வர்.
சென்னையில் வி.பி.சிங், சிலையாக கம்பீரமாக நிற்கப் போகிறார் என்பது தமிழ்நாட்டிற்கு பெருமை, வி.பி.சிங் தத்துவம்
வாழ்க!
பெரியார் முழக்கம் 27042023 இதழ்