பெரியார் சிலை அகற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை

காரைக்குடியில் கழகத் தோழர் இளங்கோவன் புதிதாகக் கட்டிய தனது இல்ல வளாகத்துக்குள் பெரியார் மார்பளவு சிலை ஒன்றை நிறுவி, அதன் திறப்பு விழாவுக்காக கழகத் தலைவர் கொளத்தூர் மணியை அழைத்திருந்தார்.

ஜன. 29 அன்று இல்லத் திறப்புக்கு முன்பே சிலையை அதிகாரிகள் அகற்றி விட்டனர்.

காவல்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் விரைந்து வந்து அனுமதியின்றி சிலை வைக்கப்பட்டுள்ளது; அகற்றுமாறு கோரினர்.

வீட்டின் வளாகத்துக்குள் சொந்த இடத்தில் வைத்துள்ள சிலையை ஏன் அகற்ற வேண்டும்? எதற்காக அனுமதி? என்று கேட்டு நீதிமன்றத் தீர்ப்புகளையும் கழகத் தோழர் எடுத்துக் காட்டினார்.

அதிகாரிகள் அது பற்றி கேட்காமலேயே சிலையை அகற்றி மூட்டையில் கட்டி வருவாய்த் துறை அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனர். பெரியார் சிலை அகற்றப் பட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. பிரச்சினை உடனடியாக அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

கோட்டையூரில் கழகத் தோழர் இல்லம் அருகே தான் பா.ஜ.க.வின் எச். ராஜா பண்ணை இல்லம் இருக்கிறது. அவரது பண்ணை இல்லம் அருகே  பெரியார்  சிலை அமைக்கப்பட்டதை சகிக்க முடியாத பா.ஜ.க.வினர் காவல் துறைக்குப் புகார் தெரிவித்ததால் இந்த நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின் தொடர்பு : செய்தி அறிந்தவுடன் இளைஞர் நலத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் தொடர்பு கொண்டு பேசினார். அரசின் கவனத்துக்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்றிருப் பதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி கூறினார்.

இல்லத் திறப்பு விழா நிகழ இருக்கும் நேரத்தில் திடீரென்று சிலையை அகற்ற வேண்டாம்; வேண்டுமானால் சிலையை மூடி வைத்து விடுகிறேன் என்று கழகத் தோழர் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியும் அதிகாரிகள் கேட்கத் தயாராக இல்லை.

நடவடிக்கை: பெரியார் சிலையை அகற்றிய காரைக்குடி வருவாய் வட்டாட்சியர் இரா. கண்ணன், உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சிவகங்கை வனத் திட்ட அலுவலர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். இதற்கான ஆணையை மாவட்ட ஆட்சித் தலைவர் பிறப்பித்தார். தேவகோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணேஷ் குமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

கோரிக்கை மனு : சொந்த இல்ல வளாகத்தில் பெரியார் சிலையை அனுமதிக்குமாறு காரைக்குடி அருகே கோட்டயம் உதயம் நகரைச் சார்ந்த கழகத் தோழர் இளங்கோவன் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்துள்ளார்.

பெரியார் முழக்கம் 02022023 இதழ்

You may also like...