ஜல்லிக்கட்டு வீரத்தின் அடையாளமா?
கிராமியக் கலாச்சாரம், கிராமியப் பண்பாடு இவைகளி லெல்லாம் புனிதம் கற்பிப்பதோ, பெருமைபடுவதற்கோ ஒன்றும் இல்லை. இவைகளெல்லாம் சாதி கட்டமைப்பில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
மூட நம்பிக்கைகள், சடங்கு கள், கிராமத் திருவிழாக்கள், செத்தப் பிணங்களைக் கூட பொது சுடுகாட்டிற்குள் புதைக்க அனுமதி மறுக்கப்படுகின்ற மனிதாபிமானமற்ற கொடு மைகள், சாதி மறுப்புத் திருமணம் செய்தோருக்கு அபராதம் என்றெல்லாம் கிராமியக் கலாச் சாரம் பழமைப் படுகுழிக்குள் மூழ்கிப் போய் கிடக்கின்றது.
அதன் காரணமாகத்தான், கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கி நகர்ப்பெயர்வுகள் அதிகமாக இருக்கின்றன.
இந்தியாவிலேயே கிராமத்தி லிருந்து நகரத்தை நோக்கி வரு கின்றவர்களின் எண்ணிக்கை யில் முதலிடம் பெற்ற மாநிலமாக (63 சதவீதம்) தமிழ்நாடு இருக்கின்றது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கிருஷ்ணகிரி அருகே தொகரப் பள்ளி என்று ஒரு கிராமம், இந்த கிராமத்தில் காதல் செய்வது என்பதே குற்றம்.
அதிலும் ஒரே சமூகத்தில் காதலித்தால்கூட அது குற்றமாகக் கருதப்பட்டு அபராதம் விதித்து ஊரை விட்டே ஒதுக்கி வைத்து விடுகிறார்கள்.
அண்மையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் காதலித்தது குற்றம் என்று கூறி அவர்களுக்கு அபராதம் விதித்த தோடு ஊரை விட்டும் ஒதுக்கி வைத்து விட்டார்கள். அவர்கள் வீட்டில் நடைபெறும் நல்லது கெட்டதுகளில் ஊர் மக்கள் யாரும் பங்கேற்பது கிடையாது.
இதே போல் அங்கு ஆறு குடும்பங்கள் விலக்கி வைக்கப் பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
இந்த கிராமியக் கலாச் சாரங்களில் ஒன்று தான் தற்போது பெருமையாகப் பேசப் படும் ஜல்லிக்கட்டு என்பதாகும்.
மிருகங்களோடு மனிதர்கள் மோதுவது என்பது இந்த நவீன காலத்திலும் ஏற்புடையது தானா? ஜல்லிக்கட்டிலும் ஜாதி இல்லாமல் இல்லை.
தமிழர் பண்பாடு, தமிழரின் வீரம் என்பது உடலின் வீரத் திலும், உடலின் வலிமையிலும் இருப்பது அல்ல. அது அறிவின் வலிமையிலும், சுயமரியாதை யிலும் சக மனிதரை மதிப்பதிலும் தான் இருக்கிறது என்பதை
நாம் புரிந்து கொண்டாக வேண்டும்.
அதனால் தான் பெரியார், “கிராமங்கள் சூத்திர நிலையிலும், நகரங்கள் பிராமணர்கள் நிலையிலும் இருக்கிறது, கிராமம் என்ற ஒன்றே இருக்கக் கூடாது” என்று துணிவுடன் கூறிய ஒரு தலைவராக இருந்தார்.
அவர் கூறியது எவ்வளவு உண்மை என்பதை நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் மெய்ப் பித்துக் கொண்டிருக்கின்றன.
பெரியார் முழக்கம் 15122022 இதழ்