வெறுப்புணர்வை தூண்டும் காஷ்மீர் பைல்ஸ்- சர்வதேச விழாவில் கண்டனம்

விவேக் அக்னிகோத்ரி இயக்கிய காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் மார்ச் 11ஆம் தேதி வெளியானது. இசுலாமிய மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வை உமிழ்ந்த இத்திரைப்படத்தை இந்துத்துவா அமைப்புகள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடின. குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் கேளிக்கை வரியில் இருந்தும் இத்திரைப்படத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டது. இந்த படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்ததாகவும் இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி கூறியிருந்தார். ஆனால் இது வெறுப்புணர்வை பரப்பும் படம் என்று சர்வதேச திரைப்பட விழாவில் அதன் தேர்வுக்குழு தலைவர் நடாவ் லேபிட் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

53வது சர்வதேச கோவா திரைப்பட விழா நவம்பர் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்றது. 79 நாடுகளை சேர்ந்த 280-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்பட்டன. இதில் இந்திய பனோரமாவில் 25 திரைப்படங்கள், 20 பிற படங்கள் திரையிடப்பட்டன. அதில் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படமும் ஒன்று. விழாவில் இறுதி நாளில் பேசிய, தேர்வுக்குழு தலைவர் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த நடாவ் லேபிட், காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். கவுரவம் வாய்ந்த சர்வதேச திரைப்பட விழாவில், இத்தகைய படத்தை திரையிட்டது அதிர்ச்சியை தருகிறது என்றார். வெறுப்பை விதைக்கும் பிரசார தன்மை கொண்ட இப்படத்தை திரையிட்டது மன உளைச்சலைத் தருகிறது என்றும், இதற்காக வெளிப்படையாக அதிருப்தியைத் தெரிவிப்பதாகவும் மேடையிலேயே கூறினார். பாஜகவினரும் இந்துத்துவா அமைப்புகளும் கொண்டாடிய ஒரு படத்தை, பாஜக அமைச்சர்கள் முன்னிலையிலேயே சர்வதேச திரைப்பட விழாவின் தேர்வுக்குழு தலைவர் கடுமையாக விமர்சித்து பேசித் தீர்த்தார். அங்கு கூடியிருந்த எவராலும் நடாவ் லேபிட்டின் பேச்சிற்கு மறுப்பு கூட தெரிவிக்க இயலவில்லை.

 

பெரியார் முழக்கம் 01122022 இதழ்

You may also like...