தலையங்கம் ‘பெரியார்’ மண்ணா? ‘ஆன்மீக’ மண்ணா?
பெரியார் தமிழ்நாட்டில் தோற்றுப் போய் விட்டார்; மக்கள் ஆன்மீகம் நோக்கி திரும்பி வருகிறார்கள் என்ற கருத்து தமிழ்நாட்டில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களால் பரப்பப்பட்டு வருகிறது.
‘பெரியார் மண்’, ‘ஆன்மீகம்’ என்பதற்கான மதிப்பீடுகளை எவ்வாறு வரையறுப்பது? இந்த கேள்விகளுக்கான விடையில் தான் தெளிவு பெற முடியும்.
ஆன்மீகம் என்பது ஒவ்வொரு மனிதரும் தனக்குள் உருவாக்கிக் கொள்ளும் ஒரு சிந்தனைப் போக்கு. அது வழிபாடுகளிலும் சடங்குகளிலும் இல்லை. ஆனால், ‘ஆன்மீகம்’ என்பதை பார்ப்பனியம் தனக்கான முகமூடிக் கவசமாக்கிக் கொண்டு தன்னை உயிர்ப்பிக்கத் துடிக்கிறது. வைதீக வேத மரபில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட பார்ப்பனர்கள், யாகங்கள், சடங்குகளை, உயிர்ப் பலிகளைக் கேள்வி கேட்ட திராவிடர்களை அழித்தொழிக்க வரலாறு நெடுக சூழ்ச்சிகளை படுகொலைகளை நடத்தியதோடு அதற்கு அவதாரம், புராணம், இதிகாச கற்பனைகளை உருவாக்கி, வெகுமக்களை நம்ப வைத்தனர். உருவ வழிபாடு வழக்கம் இல்லாத அவர்கள் பிற்காலத்தில் கோயில் களையும் சிலை வழிபாட்டையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ‘இந்து’ என்ற போர்வைக்குள் பதுங்கினர்.
இந்து மதத்தோடு தொடர்பே இல்லாத புத்தம், சைவம், சமணம், வைணவம் உள்ளிட்ட அனைத்து மதப் பிரிவுகளையும் இந்து
மதம் என்ற குடுவைக்குள் திணித்து அதற்கு சட்டப் பாதுகாப்பு களையும் தேடிக் கொண்டனர். இதை எதிர்த்து வைதீக சமூகக் கொடுமைகளை கேள்விக்கு உட்படுத்தியவர்களின் அடையாளங்களை அழித்ததோடு ஊடுறுவி சீர்குலைத்து தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டவர்கள் தான் இப்போது ‘ஆன்மீகம்’ என்ற போர்வைக்குள் பதுங்கி நிற்கிறார்கள்.
இதற்கு அரசியல் வடிவம் கொடுக்க அரசியல் சட்டத்தின் கட்டமைப்புகளில் ஓட்டைகளைப் போட்டு ‘தேசபக்தி’, ‘தேசியம்’ என்பதையும் இணைத்துக் கொண்டு ஒற்றை இந்தியா என்ற பார்ப்பன ‘சாம்ராஜ்யம்’ நோக்கி நாட்டை இழுத்துச் செல் கிறார்கள். அதிகாரத்தைக் கைப்பற்றி அரசு நிறுவனங்கள் அனைத்தையும் முறைகேடாகப் பயன்படுத்தி பார்ப்பனிய ஆட்சியை உருவாக்கிட இவர்களுக்கு இப்போது ஆன்மீகமும் திராவிட எதிர்ப்பும் கட்டாயமாகிறது. ஒரு பக்கம் தங்களை தமிழின் பற்றாளர்கள் என்றும் பக்தி இலக்கியங்களே தமிழை வளர்த்தன என்றும் கூறிக் கொண்டு மற்றொரு பக்கம் – சமஸ்கிருதப் பெயர் சூட்டலும், சமஸ்கிருத வேத சடங்குகளை தமிழர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்றும் பெரியார் இயக்கம் தோற்று விட்டது என்றும் முரண்பாடாகப் பேசிக் கொண்டிருக் கிறார்கள்.
‘நாங்கள் சூத்திரர்; பஞ்சமர் என்பதை ஏற்கிறோம்; அதுவே கடவுள் – மதம் விதித்த தர்மம்’ என்ற கருத்தை ஏற்றுக் கொண்டு தான் வெகுமக்கள் கடவுள் – மதத்தை நம்புகிறார்களா? கோயிலுக்கு போகும் தமிழர்கள் சடங்கு வழிபாடுகளில் மூழ்கியுள்ள தமிழர்கள் தங்கள் வாழ்வுரிமையை, கல்வி உரிமையை, வேலை வாய்ப்பு உரிமையை, சுயமரியாதை உரிமையை ‘ஆன்மீக’ நம்பிக்கைகளே காப்பாற்றி விடும் என்று நம்பிக் கொண்டு இருக்கிறார்களா? நிச்சயமாக இல்லை. ‘ஆன்மீகம்’ சடங்குகளாக குறியீடுகளாக பழக்கமாக மாறிப் போய் நிற்கிறதே தவிர, அது மட்டுமே தங்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது என்று நம்புகிற ஒற்றை மனிதரையாவது இவர்களால் அடையாளம் காட்ட முடியுமா?
இந்த சிந்தனை மாற்றத்துக்கு அடித்தள மிட்டது பெரியார் திராவிட இயக்கம் அல்லவா? பெரியார் கூறிய இடஒதுக்கீடு உரிமையை அவர்களும் பேசுகிறார்கள். பெரியார் வலியுறுத்திய மொழி உணர்வை இவர்களும் பேச வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். சாஸ்திரங்களால் மறுக்கப்பட்ட பெண் கல்வி உரிமையை இப்போது இவர்களால் நியாயப்படுத்த பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கேட்க முடியுமா? பெரியாரின் கடவுள் – மத மறுப்பின் அடிப்படை என்ன? சமத்துவத்தின் தடைக்கல்லாக அவை குறுக்கே நிற்பதால் எழுந்த எதிர்ப்பு; அவைகள் இனி உரிமைகளில் குறுக்கிட முடியாது என்ற கருத்துக்கு சமூகம் வந்து விட்டது. இது பெரியாரின் வெற்றியா? ஆன்மீகத்தின் வெற்றியா? அனைத்து இந்துக்களும் அர்ச்சகராக முடியாது; பிராமண உயர்சாதி உட்பிரிவுக்கு மட்டுமே அந்த உரிமை என்று என்று வெளிப்படையாகப் பேச முடியாமல் ‘ஆகமம்’ என்ற பெயரைப் பயன்படுத்தி பதுங்க வைத்திருப்பதே பெரியாருக்குக் கிடைத்த வெற்றி தானே?
வேதகாலத்தில் தொடங்கிய ஆரிய – திராவிட (அசுரப்) போராட்டம் வேறு வடிவங்களில். இப்போது அந்தக் களம் கூர்மையடைந்து வருகிறது. ‘வர்ணாஸ்ரமம்’, ‘சனாதனம்’ என்பவற்றுக்கு மாற்றாக ‘ஆன்மீகம்’, ‘தேசியம்’, ‘தேச பக்தி’ என்று பேசிக் கொண்டு இன எதிரிகள் களத்தில் நிற்கிறார்கள். ஆன்மீகம் தேய்பிறையாகவும் பெரியாரும் திராவிடமும் வளர்பிறையாகவும் வளர்ந்து வருகிறது. இதுவே வரலாற்றின் இயங்கியல் போக்கு!
பெரியார் முழக்கம் 15092022 இதழ்