சாக்கடைக் குழியில் இறங்குவதில்; தண்டனைக் குறைப்பில்; இலவசங்களை எதிர்ப்பதில் ஒன்றிய ஆட்சியின் ‘மனுதர்மம்’

ஒன்றிய ஆட்சி  – ஆட்சி சட்டங்களை விதிகளை மனு தர்மத்துக்கு ஏற்ப முறைகேடாகப் பயன்படுத்தி வருகிறது.

இஸ்ரேல் நாட்டின் உளவுக் கருவியான ‘பெகாசஸ்’ – இந்தியாவில் முக்கிய புள்ளிகளை உளவுப் பார்க்கப் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு, நாடாளு மன்றத்தையே முடக்கியது நினைவிருக்கலாம். இலண்டனிலிருந்து வெளிவரும் கார்டியன், அமெரிக்கா விலிருந்து வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் மற்றும் இந்தியாவிலிருந்து வெளி வரும் ‘ஒயர்’ இணைய இதழ் 2021 ஜூலையில் இதை அம்பலப்படுத்தின. 50000 உளவு பார்க்கும் தொலைபேசி  எண்களும் வெளியிடப்பட்டன.

பாரீசிலிருந்து இயங்கும் தகவல் காப்பகம் – ‘ஃபர்பிடன் ஸ்டோர்ஸ்’ (Forbidden Stores) மற்றும் ஆம்னஸ்ட்டி இன்டர்நேஷனல் அமைப்பிடம் இந்தத் தகவல் சேமித்து வைக்கப்பட்டிருப்பதை ஏடுகள் சுட்டிக்காட்டின. இஸ்ரேல் நாட்டின் சக்தி வாய்ந்த இந்த உளவுக் கருவியை அரசுகள் மட்டுமே வாங்க முடியும் என்று இஸ்ரேல் சட்டம் கூறுகிறது. இஸ்ரேல் நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றபோது இஸ்ரேலுடன் இந்தக் கருவிகளைப் பெற 2 பில்லியன் டாலருக்கு மோடி ஒப்பந்தம் போட்டார் என்று ‘நியூயார்க் டைம்ஸ்’ (ஜன.28, 2021) கட்டுரை வெளியிட்டது. இஸ்ரேல் நாட்டுக்கு பயணம் செய்த முதல் இந்திய பிரதமர் மோடி தான். இஸ்ரேல் நாட்டின் ‘ஜியோனிச’ இனவாதக் கொள்கைக்கும் பார்ப்பனியத்துக்கும் நெருக்கமான ஒற்றுமைகள் உண்டு. இந்த இஸ்ரேல் பயணத்துக்குப் பிறகு தான் இந்தியா – பாலஸ்தீனப் பிரச்சினையில் அது வரை பின்பற்றி வந்த ஆதரவுக் கொள்கையை தலைகீழாக மாற்றிக் கொண்டு இஸ்ரேலை தீவிரமாக ஆதரிக்கத் தொடங்கியது. அதன் காரணமாகவே அய்.நா. பொருளாதார மற்றும் சமூகக் கவுன்சிலிலில் பாலஸ்தீன மனித உரிமைக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் குறித்த வாக்கெடுப்பில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பாலஸ்தீனத்தை எதிர்த்து வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றம் முடங்கிய நிலையில் உச்சநீதி மன்றம் இந்தப் பிரச்சினையை விசாரணைக்கு ஏற்று இது குறித்து ஆராய முன்னாள் நீதிபதி ரவீந்திரன் கண்காணிப்பில்

3 தொழில்நுட்ப வல்லுனர்கள் கொண்ட குழுவை நியமித்தது. இது குறித்து விரிவான பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்ய அரசுக்கு தலைமை நீதிபதி எஸ்.வி. ரமணா ஆணை பிறப்பித்தார். நாட்டின் பாதுகாப்புக் கருதி தாக்கல் செய்ய முடியாது என்று ஒன்றிய ஆட்சி மறுத்து விட்டது. இந்த நிலையில் குழு 29 அலைபேசிகளை சோதித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. உளவுக் கருவி பொருத்தப்பட் டிருப்பது உண்மை தான் என்று உறுதி செய்த குழு, அது இஸ்ரேலிடமிருந்து பெறப்பட்ட ‘பெகாசஸ்’ கருவி தானா என்பது இன்னும் உறுதியாகவில்லை; ஆராய்ந்து வருகிறோம் என்று அறிக்கையில் கூறியிருப்பதோடு இந்த ஆய்வுக்கு ஒன்றிய அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று குற்றம்சாட் டியிருக்கிறது.

இது குறித்து மேலும் விரிவாக ஆராய சிறப்பு சைபர் புலன் விசாரணை அமைப்பை அரசு அமைக்க வேண்டும் என்று குழுவின் தலைவர் முன்னாள் நீதிபதி ரவீந்திரன் வலியுறுத்தியுள்ளார். குழுவின் அறிக்கையை ஏற்க மாட்டோம்; அது ஒரு சார்பாகவே இருக்கும் என்று  அடம் பிடிக்கும் ஒன்றிய ஆட்சி, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதோடு, பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் மறுப்பதால் ஒன்றிய ஆட்சி உளவு பார்த்தது உண்மை என்பது உறுதியாவதாகவே இருக்கிறது.

‘ஏகாம்பரசாமிக்கு’ பட்டை நாமம்

கோயில்களில் அரசு தலையீடு கூடாது என்று சங்கி கள் கூப்பாடு போடுகிறார்கள். அரசுக் கட்டுப் பாட்டில் இருக்கும் போதே பார்ப்பன அர்ச்சகர்கள் அடிக்கும் ஊழல் கொள்ளைகள் அம்பலமாகி வருகின்றன.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதன் கோயிலின் ‘பிரம்மோற்சவ’ விழாவின் வரவு செலவு குறித்து காஞ்சிபுரத்தைச் சார்ந்த டெல்லி பாபு என்பவர் தகவல்  அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. 2018இல் – 34.45 இலட்சம்; 2019இல் – 33.86 இலட்சம்; 2021இல் – 38.70 இலட்சம் செலவாகியுள்ளதாக கோயில் நிர்வாகம் கணக்கு காட்டியுள்ளது. காய்கறி மளிகை பொருள்களுக்கு 62 ஆயிரம் செலவு செய்ததாகக் கூறும் அர்ச்சகர்கள், காவல்துறை – மின்வாரிய ஊழியர்களுக்கு சாப்பாடு போட ரூ.4 இலட்சம் கணக்கு காட்டியிருக்கிறார்கள். இவர்கள் 50 பேருக்கும் குறைவு. அப்படியானால் சாப்பாட் டுக்கு மளிகைப் பொருள் வாங்கியது ஏன்? ‘சுவாமி’க்கு ரூ.70,000 செலவில் வஸ்திரம் (துண்டு) வாங்கியிருக்கிறார்கள். ஆனால் ஏற்கனவே வஸ்திரம் கோயிலில் இருக்கிறது. வெல்வெட் துணியைத் தான் வஸ்திரமாகப் போர்த்தி இருக்கிறார்கள். பார்ப்பன அர்ச்சகர்கள் ‘சாமிக்கு’ மேல் குடைபிடித்துக் கொண்டு ரதத்தில் வருவார்கள். அது ‘பகவான்’ சேவை. அதற்கும் 56000 ரூபாய் கூலியாக வாங்கியிருக்கிறார்கள். ஆகம விதிகள் இப்படி ஊழல் கொள்ளை அடிக்கலாம் என்று கூறுகிறதா? ஆகமவிதிப்படி அர்ச்சகர் ஊதியமே வாங்கக் கூடாது; ஆகமக் கோயிலில் ஆகம விதிகளை மீறவே கூடாது என்று நீட்டி முழங்குவோர் இதற்கு என்ன பதில் கூறப் போகிறார்கள்; இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே! ‘தினமலர்’ தான் இந்த செய்தியையே வெளியிட்டுள்ளது.

தண்டனைக் குறைப்பில் மனுதர்மம்

குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது 2002இல் இஸ்லாமியருக்கு எதிராக நடந்த இனப் படுகொலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரை குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்துள்ளது. பரீசிலனைக் குழுவில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் சி.கே. ராவோல்ஜி, “குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிராமணர்கள். அவர்கள் நல்ல ஒழுக்கமானவர்கள்” என்று கூறியிருக்கிறார். பிராமண ஒழுக்கம் – பிக்கிஸ் பானு என்ற 21 வயது கர்ப்பிணி இஸ்லாமிய பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்முறை செய்யச் சொல்கிறதா? அவரது குழந்தையை சுவரில் அடித்து சாகடிக்கச் சொல்கிறதா? ‘மனு தர்மப் படி’ இது பிராமணர்களுக்கான ஒழுக்கம் என்கிறார் களா? அது தவிர 14 இஸ்லாமியர்களை படுகொலை செய்துள்ளனர். குஜராத்தில் விசாரணை நடந்தால் தப்பி விடுவார்கள் என்பதால் மகாராஷ்டிராவுக்கு உச்சநீதி மன்றத்தால் மாற்றப்பட்டு அம்மாநில நீதிமன்றம் தான் ஆயுள் தண்டனை விதித்தது.

சிறைவாசிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட வேண்டும்; சிறை சீர்திருத்தக் கூடம் தான் என்பதில் நமக்கு முழு உடன்பாடு உண்டு. ஆனால் இந்த வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்வ தற்கான ஒழுங்கு முறைகள் பின்பற்றப்பட்டிருக்கிறதா?

பேரறிவாளன் வழக்கில் முன்கூட்டியே மாநில அரசு விடுதலை செய்யும் முடிவை எடுத்தபோது ஒன்றிய ஆட்சி சி.பி.அய். விசாரித்த வழக்கில் ஒன்றிய அரசு தான் முடிவெடுக்க முடியும் என்று வாதிட்டது. இந்த வழக்கும் சி.பி.அய். விசாரித்ததால் தண்டனை சட்டம் 435ஆவது பிரிவின்படி ஒன்றிய ஆட்சியைக் கலந்து ஆலோசித்து ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், குஜராத் ஆட்சி அப்படி கலந்து ஆலோசிக் காமல் தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளது.

சம்பவம் நடந்தது குஜராத்தில் தண்டனை வழங்கியது மகாராஷ்டிர நீதிமன்றம். இதில் தண்டனைக் குறைப்பு செய்யும் உரிய அதிகாரம் குஜராத்துக்கா? மகாராஷ்டிரத்துக்கா? என்ற கேள்விக்கு விடை தேடாமல் குஜராத் அரசே தனக்குத் தான் உரிமை என்று கூறுகிறது.

தண்டனைக் குறைப்பு வழங்குவது பற்றி பரிசீலிக்கும் குழுவில் உள்துறை அல்லது சட்டத் துறை அதிகாரிகள், மாவட்ட நீதிபதி, மாவட்ட காவல்துறை மற்றும் மறுவாழ்வுத் துறை அதிகாரிகள் மட்டுமே இடம் பெற்றிருக்க வேண்டும். மாறாக இந்தக் குழுவில் இரண்டு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இது குழுவின் விதிகளுக்கு எதிரானது.

குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரி விடுதலைக் குத் தெரிவித்த எதிர்ப்புப் புறந்தள்ளப்பட்டுள்ளது. இவர்கள் தண்டிக்கப்பட்ட ஆண்டு 2008. அப்போது முன் கூட்டியே விடுதலை செய்வதற்கான 1992ஆம் ஆண்டு விதிகள் தான் பொருந்தும். பாலியல் கொலைக் குற்றங்களுக்கு தண்டனைக் குறைப்புக் கூடாது என்று கூறுகிறது இந்த விதி. வழக்கை மகாராஷ்டிரா நீதிமன்றத் துக்கு மாற்றி உச்சநீதி மன்றம் பிறப்பித்த உத்தரவிலேயே இது தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது; அந்த விதி மீறப்பட்டுள்ளது.

75ஆவது சுதந்திர நாள் கொண்டாட்டத்தை யொட்டி சிறைவாசிகளின் தண்டனைக் குறைப்புக்கான விதிகள் உருவாக்கப்பட்டது. அதில் பாலியல் வன்முறைக் குற்றத்துக்கு தண்டனை குறைப்புக் கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. இவ்வளவு விதிமீறல்களையும் செய்து ‘பிராமண பாலியல் வன்முறையாளர்கள்’ விடுதலையாகி யுள்ளனர். அவர்களுக்கு வரவேற்பு விழா நடத்துகிறது பா.ஜக.

இஸ்லாமிய கைதிகள் என்றால் தண்டனைக் குறைப்புக் கிடையாது. ஆனால் ‘பிராமணர்’ என்றால் எந்தச் சட்ட முறையையும் பின்பற்ற மாட்டார்கள்.

சாக்கடைக் குழியும் ஆன்மீகமும்

ஆன்மீகம் பேசுகிறார்கள், சனாதனம் பேசுகிறார்கள் புண்ணிய பூமி என்கிறார்கள் இங்கே இந்துராஷ்டிரத்தை அமைப்போம் என்கிறார்கள், திருக்குறள் பக்தி நூல் அதை மொழிபெயர்த்த ஜி யு போப் பக்தியை விட்டு விட்டார் என்று ஆளுநர்கள் புலம்புகிறார்கள். இவ்வளவும் நடந்து கொண் டிருக்கிற இந்த தேசத்தில் தான் மலக்குழியிலும் சாக்கடைக் குழியிலும் மனிதர்கள் இறங்கி  சுத்தப் படுத்துவதும் விஷக்காற்றில் மூழ்கி மலக்குழிக்குள் மரணிப்பதும் நடந்து கொண்டு இருக்கிறது.

இதற்காக ஆன்மீகம் பேசுகிறவர்கள், சனாதனம் பேசுகிறவர்கள் வெட்கப்படுவதே இல்லை. ஆகம விதிகளைக் காட்டி நீதிமன்றத்திற்கு போகிறார்கள் பார்ப்பன அர்ச்சகர்கள், கடவுள்கள் தங்களுக்குத் தான் சொந்தம் கடவுள்களை தங்களால் தான் நெருங்க முடியும் என்று கடவுளுக்கு உரிமை கொண்டாடுகிறார்கள். ஆனால் மலக்குழியும் இந்த சாக்கடை குழிகளும் ‘தீண்டப்படாதவர்களுக்குத்’ தான் சொந்தம் என்று அதிலே இறக்கி விடப்படுகிறார்கள். இது எப்படி புண்ணிய பூமி ஆகும் ?

தமிழ்நாட்டில் இந்த சாக்கடை குழிக்குள்ளும் மலக்குழிக்குள்ளும் மனிதர்கள் இறக்கப்படுவதை தடை செய்து 2013 ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின் விதிகளில் சில திருத்தங்களை செய்து தமிழ்நாடு அரசு கடந்த வாரம் அறிவித்து இருக்கிறது. அதன்படி இயந்திரங்களை வைத்து என்னதான் மலக்குழியிலும் சாக்கடை குழியிலும் சுத்தம் செய்கின்ற வேலைகளில் நாம் ஈடுபட்டாலும் கூட சில தவிர்க்க முடியாத சூழலில் மனிதர்கள் தான் இறங்க வேண்டும் எந்திரங்களை பயன்படுத்த முடியாது என்ற நிலையில் அதை பயன்படுத்த வேண்டி இருக்கிறது, என்று சட்டம் விதிவிலக்கு தருகிறது. அப்படி மலக்குழியிலும் சாக்கடைக் குழியிலும் இறங்குகின்ற மனிதர்களுக்கு எத்தகைய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்று  நீண்ட பாதுகாப்பு உபகரணங்களின் பட்டியலை இந்த புதிய விதி கூறுவதோடு அந்த உபகரணங்களைப் பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்றும் இந்த விதி உறுதி செய்கிறது.

1993 ஆம் ஆண்டு ஒன்றிய ஆட்சி இதற்கு தடை செய்து சட்டம் இயற்றினாலும் 93 லிருந்து இதுவரை மலக்குழியிலும் சாக்கடை குழியிலும் இறங்கி மூச்சு திணறி இறந்தவர்களுடைய எண்ணிக்கை தமிழகம் முழுவதும் 971 என்று ஒன்றிய சமூகநீதி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் கூறுகிறது. இது உண்மை தானா என்ற சந்தேகம் சமூக ஆர்வலர் களுக்கு இருந்தாலும் இதுவே நாட்டிற்கு ஒரு மிகப்பெரிய அவமானம்.

நீதிபதிகளுக்கு இலவசம் தரலாமா?

பதவி ஓய்வு பெறும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி களுக்கு ஏராளமான அரசு சலுகைகளை வழங்கி ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. இதற்காக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு முறை சட்டங்கள் திருத்தி அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஒரு அறிவிப்பு வந்தது, அதில் ஓராண்டுக்கு மட்டும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. மேலும் கடந்த வெள்ளிக்கிழமை இந்த சட்டத்தில் மேலும் திருத்தங்கள் செய்யப்பட்டு, நீதிபதிகள் வாழ்நாள் முழுதும் இந்த சலுகைகள் கிடைக்கும் என்று இப்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

வீட்டு உதவியாளர்கள், வீட்டு சமையல் காரர்கள், அரசு உதவியாளர்கள் மற்றும் அவர்களுக்கான இலவச வீடுகள், தொலைபேசி மற்றும் இன்டர்நெட் கட்டணங்களுக்கு மாதம் 4200 ரூபாய் என்று அவர்கள் வாழ்நாள் முழுவதும் பெறலாம் என்று இப்போது மீண்டும் ஒருமுறை திருத்தி இந்த சலுகைகளை வாரி வழங்கி இருக்கிறது.

பதவி ஓய்வுக்குப் பிறகு அரசு சலுகைகள் இப்படி கிடைக்கும் பொழுது நீதிபதிகள் அரசுக்கு எதிராக செயல்படுவர்களா என்ற வாதங்கள் இப்போது எழுந்து நிற்கின்றன. எந்த ஒரு நீதிபதியும் எனக்கு இத்தகைய அரசு உதவிகள் பதவி ஓய்வுக்குப் பிறகு வேண்டாம் என்று சொல்லுவதற்கும் தயாராக இல்லை. அதே நேரத்தில் இலவசங்கள் வழங்கக் கூடாது, இலவசங்கள் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விடுகிறது என்று இதே உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ரமணா தான் கூறினார். பிரதமர் மோடியும் அதையே தான் கூறினார்.

மற்றொரு செய்தியையும் குறிப்பிட்டாக வேண்டும் காவல் துறை அதிகாரிகளுக்கு ஆர்டர்லி என்ற பெயரில் அதே துறையில் பணியாற்றும் கடை நிலை போலீசார் வீட்டு, வேலைக்கும், வீட்டு சேவகத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தார்கள் இந்த முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவைப் பிறப்பித்து கடந்த வாரம் அதற்கு காலக்கெடுவையும் நிர்ணயத்தில் இருக்கிறது. நியாயமான ஒரு முடிவு தான் நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டியது தான்.

ஆனால் காவல்துறை அதிகாரிகளுக்கு இப்படி அரசு சம்பளத்தில் வழங்கப்படுகின்ற இந்த சலுகைகள் ஓய்வு பெறுகின்ற நீதிபதிகளுக்கு மட்டும் பெறுவது என்ன நியாயம் இருக்கிறது ? என்கிற கேள்வியையும் நாம் சேர்த்து எழுப்ப வேண்டி இருக்கிறது.

இப்போதெல்லாம் நீதிபதிகள் பதவி ஓய்வு பெற்றவுடன் மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் ஆளுநர் பதவிகளும் அவர்களுக்காக காத்திருக்கின்றன. நீதிமன்றத்தை அரசின் பிடிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளாக தான் இதனை பார்க்க வேண்டி இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் இப்போது 30 நீதிபதிகள் இருக்கிறார்கள், அவர்களின் தலித் பிற்படுத்தப்பட்டோர் பிரதிநிதித்துவம் என்பது அனேகமாக இல்லை என்ற நிலையில்; உயர் குலத்தில் பிறந்த அத்தனை பேருக்கும் இத்தகைய சலுகைகள் வாரி வழங்கப்படும் போது அது இலவசம் கசநந நெந என்ற திட்டங்களுக்குள் வரவில்லை, சமூக நலத்திட்டம் என்ற பட்டியலுக்குள்ளும் வரவில்லை.

பெரியார் முழக்கம் 01092022 இதழ்

You may also like...