தொடர் கொலைகள், கலவரங்கள்… மதவெறிக்கு இரையாகிறது கர்நாடகா!

தகவல் தொழில்நுட்பம், பொறியியல், ஆய்வுத்துறைகளில் வேகமாக வளர்ந்து வந்த கர்நாடகம் இப்போது வடமாநிலங்களைப் போல கலவரங்களுக்கு புகழ்பெற்றதாக மாறி வருகிறது. இந்துக்கள் மற்றும் சிறுபான்மை மதத்தினரை பிளவுபடுத்தி, அவர்களிடையே நிலவும் ஒற்றுமையை சீரழித்து அதன்மூலம் இந்தியாவை இந்துநாடாக்க ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் கூட்டங்கள் துடிக்கின்றன. இதில் வடநாட்டில் ஓரளவு வெற்றி கண்டுவிட்ட அவர்கள், இப்போது தென்னிந்தியாவிலும் அதே யுக்தியை கையாள திட்டமிட்டு செயல்பட முயல்கிறார்கள் என்பதைய கர்நாடகத்தின் இன்றைய நிலை காட்டுகிறது.

இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என பள்ளிக் குழந்தைகளின் மனதில் மதவெறி நஞ்சை திணித்து, கர்நாடகத்தின் ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தையும் இந்துக்கள், இஸ்லாமியர்கள் என மத ரீதியாக இந்துத்துவ அமைப்புகள் பிளவுபடுத்தின. சமூக ஒற்றுமையை போதிக்க வேண்டிய கல்விக்கூடங்கள் மதவெறி மோதலுக்கான மைதானங்களாக மாறி கர்நாடகமே கலவரக் காடானது. இஸ்லாமிய மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாமல், தேர்வு எழுத முடியாமல் படிப்பைத் தொடர்வதே சவாலானது.

ஹிஜாப் சர்ச்சைக்குப் பிறகு கர்நாடகாவில் மத ரீதியான மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்து கோயில்களுக்கு வெளியே இஸ்லாமியர்கள் கடை வைக்க அனுமதிக்கக் கூடாது என பஜ்ரங் தள் போன்ற இந்துத்துவ அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன. பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் வைத்திருந்த சிறு சிறு கடைகள் கூட அகற்றப்பட்டன. புனரமைப்பு பணிக்காக இடிக்கப்பட்ட, மங்களூரு வில் உள்ள மதானி ஜும்மா மசூதியில் இந்துக் கோயில் இருப்பதாக இந்துத்துவ அமைப்புகள் பரப்புரையில் ஈடுபட்டன. புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள விடாமல் நீதிமன்றத்தில் தடையாணையும் பெற்றனர். ஸ்ரீரங்கபட்டினத்தில் திப்பு சுல்தானால் கட்டப்பட்ட ஜாமியா மசூதியும் இந்துக்கோயிலின் மீது கட்டப்பட்டதாக சர்ச்சையை கிளப்பினர். மசூதிகளை கைப்பற்ற இந்துத்துவ அமைப்பினர் நடத்திய தொடர் போராட்டங்களால் கர்நாடகாவில் அமைதி பறிபோனது.

தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேலாக நிலவிவரும் அமைதியற்ற போக்குக்கு கடந்த ஒருவாரத்தில் மட்டும் 3 பேர் உயிரை பறி கொடுத்துள்ளனர். மங்களூருவில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ள பெல்லாரியில் ஜூலை 21ஆம் தேதி புலம்பெயர் தொழிலாளியாக இருந்த 19 வயது இஸ்லாமிய இளைஞர் மசூத் கொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஜூலை 26ஆம் தேதி மசூத் வீட்டில் இருந்து 8 கிமீ தொலைவில் பாரதிய ஜனதா இளைஞரணி நிர்வாகியும், உள்ளூர் தொழிலதிபருமான பிரவீன் நெட்டாரு கொலை செய்யப்பட்டார். இதனால் தட்சிண கர்நாடகா முழுவதும் பதற்றமான சூழல் உருவாகி, கலவரங்களும் வெடித்தன. பிரவீன் நெட்டாரு கொல்லப்பட்ட 48 மணிநேரத்தில் மகமது ஃபசீல் என்ற மற்றொரு இஸ்லாமிய இளைஞர் கொல்லப்பட்டார். இந்துத்துவ அமைப்புகள் தரப்பிலும், இஸ்லாமிய அமைப்புகள் தரப்பிலும் இதுவரை 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பலர் பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவர்கள்.

இந்துத்துவ அமைப்புகளின் தொடர் வெறியாட்டங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய கர்நாடக அரசோ, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்யக் கோரி ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்துத்துவ மதவெறிக்கு கர்நாடகம் இரையாகி வருகிறது என்பதையே இவை நமக்கு உணர்த்துகின்றன. இந்துத்துவ அமைப்புகளின் வளர்ச்சி சமூக அமைதிக்கு பேராபத்தை விளைவிக்கும் என்பதை கர்நாடகம் வெளிச்சமிட்டு காட்டுகிறது. இன்றைய கர்நாடகத்தின் நிலைமையைப் பார்க்கும் எவரும் அதனைப் புரிந்து கொள்வார்கள்.

பெரியார் முழக்கம் 04082022 இதழ்

You may also like...