பெரியார் பல்கலை முறைகேடுகளைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்
20.07.2022 புதன் காலை 11.00 மணி அளவில் பெரியார் பல்கலைக்கழகத்தின் சட்ட விதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து கண்டன கோரிக்கை ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.
பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், திராவிட பண்பாட்டு நடுவத்தின் பொறுப்பாளர் முல்லை வேந்தன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
நிறைவாக கொளத்தூர் மணி கண்டன உரையில், பெரியார் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறையின் வினாத்தாளில் ஜாதி குறித்து கேட்கப்பட்டமையைக் குறித்தும், மாநில அரசின் அறிவுரைகளை மதிக்காமல் புதிய கல்வி கொள்கையை நேரடியாகவும், மறைமுகமாகவும் செயல்படுத்தி வரும் துனணவேந்தரின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் உரை நிகழ்த்தினார்.
சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் இரா. டேவிட் நன்றியுரை கூற ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டத்தை விளக்கி பொது மக்களுக்கு துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் ஏற்காடு, சேலம், கோவை, திருப்பூர், இளம் பிள்ளை, நங்கவள்ளி, மேச்சேரி, மேட்டூர் சுள, மேட்டூர் நகரம், கொளத்தூர், காவலாண்டியூர், ஆத்தூர், தருமபுரி, மல்லிகுந்தம் ஆகிய பகுதிகளில் இருந்து பொறுப்பாளர்களும், தோழர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 28072022 இதழ்