பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் 29-5-22 அன்று நடைபெற்ற செஞ்சட்டைப் பேரணி- வர்க்க வருண ஒழிப்பு மாநாட்டின் தீர்மானங்கள்…

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின்
29-5-22 அன்று நடைபெற்ற
செஞ்சட்டைப் பேரணி-
வர்க்க வருண ஒழிப்பு மாநாட்டின் தீர்மானங்கள்…

1
பொதுவுடைமைக் கருத்துகளைப் பரப்பல் செய்யும் கருத்தாளர்களாகவும், பொதுவுடைமைக் கட்சித் தோழர்களாகவும் இருந்து களம் கண்டு எதிரிகளால் அழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஈகியர்களுக்கு இம் மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது..
மொழி உரிமைகளுக்காகவும், இந்தி, சமஸ்கிருத, ஆங்கில மொழித் திணிப்புகளை எதிர்த்து வீரச்சாவு எய்தியவர்களுக்கும் இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.. சாதிய வன்கொடுமைகளை எதிர்த்தும், பார்ப்பனிய மற்றும் மதவெறிகளை எதிர்த்தும் களமாடி உயிர் ஈந்த எண்ணற்ற ஈகியர்களுக்கும் இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.. மேலும், தமிழீழ மண்ணின் உரிமைகளுக்காகப் போராடி உயிர் ஈந்த இலக்கக் கணக்கானவர்களுக்கும் இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது..

2
தமிழ்நாட்டிற்குள் செயல்படுகின்ற காப்பீட்டுக்கழகம்( எல் ஐ சி) உள்ளிட்ட பொதுத் நிறுவனங்களையெல்லாம் அம்பானி, அதானி உதுறைள்(உள்ளிட்டத் தனியார்துறை நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துவரும் இந்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.. தனியாருக்குத் தாரை வார்க்கப்படும் எல்ஐ சி, தொடர்வண்டித் துறை நிலையங்கள், வானூர்தி – நிலையங்கள், கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் என அனைத்தும் தமிழ்நாடு அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டே இயங்குதல் வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது..

3
நெல், கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட அனைத்து வேளாண் பொருள்களுக்குமான
(பால் உள்ளிட்ட பொருள்களுக்கு) விலை உறுதிப்பாட்டை (நிர்ணயத்தை)யும் தமிழக உழவர்களின் முழு ஒப்புதலோடு குறைந்த அளவு ஆதார விலையை உறுதிசெய்ய வேண்டும் எனத் தமிழ்நாட்டரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது..

4
தமிழ்நாட்டில் உள்ள வெளிநாட்டு மற்றும் ரிலையன்சு, டாட்டா உள்ளிட்ட கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் தொழிற்சாலைகளைப் படிப்படியாக நிறுத்தி, அவற்றைத் தமிழக அரசே தமிழக மக்களின் பங்கு முதலீட்டில் நடத்திட முன் வரவேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டு நிலங்களை, சுற்றுச் சூழலை நாசப்படுத்துகிற மீத்தேன், ஐட்ரோ கார்பன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் மற்றும் அணுமின் நிலையங்களைத் தடுத்து நிறுத்திடத்  தமிழக அரசு அமைச்சரவை ஒப்புதலுடன் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றிட வேண்டும் என இம் மாநாடு
வலியுறுத்துகிறது.

5
சமூக நீதியில் அரசும் மக்களும் கவனம் செலுத்துவது சிறப்புடையது போலவே சமஅறவுணர்வுடன் முழுநலன் சார்ந்த தொழிலாளர் நலச்சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.. இருந்த பத்தொன்பது தொழிலாளர் உரிமைச் சட்டங்களை நான்காகக் குறைத்தும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நிறைய வாய்ப்பு ஏற்படுத்தித் தந்துமுள்ளது இந்தியப் பாசிச கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அரசு..  அவ்வகையில் ஓராண்டுக்கும் மேற்பட்ட பயிற்சித் தொழிலாளர்கள் அனைவரையும் நிலைப்படுத்திட வேண்டும்.. என்றும், தொழிலாளர்களை நிலைப்படுத்தாத தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  இம்மாநாடு வலியுறுத்துகிறது..

6
தமிழ்நாட்டு வணிகர்களை நசுக்கும் வகையில் தமிழ்நாட்டிற்குள் நுழைந்திருக்கிற, நுழைய இருக்கிற வெளிநாட்டு மற்றும் ரிலையன்சு போன்ற இந்தியப் பெரு முதலாளிகளின் வணிக நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இயங்க
வழிவிடக்கூடாது என இம் மாநாடு கட்டாயப்படுத்துகிறது. அதேபோல்
வணிகர்களைப் பாதிக்கும் ஜி.எஸ்.டி உள்ளிட்ட இந்திய அரசின் அனைத்து
வரிகளையும்  மறுத்து, தமிழக அரசே உச்ச நீதிமன்றம் அறிவிப்பின்படி மாற்றி அமைத்திட வேண்டும் என இம் மாநாடு தீர்மானிக்கிறது.

7
நெடுஞ்சாலைகள் அனைத்திலும் வழிப்பறிக் கொள்ளையர்கள் போல
இந்திய அரசு, எடுபிடிகளையும், அடியாட்களையும் வைத்துக் கொண்டு சுங்கச்சாவடிகள் அமைத்து வெகுமக்களிடம் வரிகள் பிடுங்கிக் கொண்டிருப்பதை இம்மாநாடு மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது. ஏற்கனவே வண்டிகள் வாங்கும்போதே சாலை வரிகள் கட்டப்பட்டிருக்கும் நிலையில் சாலை, சுங்க வரிகள் என வரிகள் பிடுங்கும் செயல்கள் உடனடியாக நிறுத்தப்படவும் சுங்கச்சாவடிகள் இழுத்து மூடப்பட வேண்டுமாய் இம் மாநாடு வலியுறுத்துகிறது.

8
தமிழகத்தின் பல்கலைக் கழகங்கள். உயர்கல்வி நிறுவனங்கள், கல்வி  மொழியியல் தொடர்புடைய இயக்ககங்கள், தொல்லியல் தொடர்புடைய துறைகள் என அனைத்து அதிகாரங்களும், அந்தந்தத் துறைகளுக்கான பணியாளர்கள் அமர்த்த அதிகாரங்களும் தமிழக அரசிடமே இருத்தல் வேண்டும்.
அவற்றில் தமிழ் வழிக் கல்விக்கு முதன்மையும் முன்னுரிமையும் தரப்பட வேண்டும் எனவும், தமிழ் வழி படித்தவர்க்கே கல்வியில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரவேண்டும் எனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது..

9
தமிழ்நாட்டில் இயங்கும் அஞ்சல் துறை, தொடர்வண்டித்துறைகளின் பணியாளர்கள் அனைவருக்கும் கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்..தமிழ் தெரியாதவர்களைப் பணியில் அமர்த்தவே கூடாது..
இந்திய அரசின் அனைத்து  நிறுவனங்களிலும், தனியார்துறை நிறுவனங்களிலும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கே முன்னுரிமை தரப்படவேண்டும்.. தமிழ் தெரியாத எவரையும் பணியில் சேர்க்கக் கூடாது.. அதேபோல் தமிழ்நாடு அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், தொழில் வேலைவாய்ப்புகள் அனைத்திலும் தமிழ் வழி படித்தவர்களுக்கே முன்னுரிமை தரவேண்டும்.. தமிழ் தெரியாதவர் தமிழர்களாக இருந்தாலும்கூட இடம் அளிக்கக்கூடாது..

10
தமிழ்நாட்டில் அண்மைக் காலமாகத் தொடர்ந்து நடந்து வரும் சாதி ஆணவப் படுகொலைகளில் ஈடுபட்டு வரும் சாதி வெறியர்களை இம் மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. அப்படியானவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்திட தனிச்சட்டம் இயற்றிட வேண்டும் என்றும் அதற்கென அதுகுறித்த உயர்நீதி மன்ற தீர்ப்பைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது. மேலும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குத் தனிச் சிறப்புத் திட்டத்தின் வழி கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளித்திட வேண்டும் என்றும், அவர்கள் சாதி சமயமற்றவர்கள் என்று பதிந்துகொள்கிற வகையில் அரசு ஆவன செய்ய வேண்டும் என்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.

11
அறிவியல் பெரிய அளவில் முன்னேறியிருக்கிற இக்காலத்தில் மலக்குழிக்குள் இறங்குவதும், கையால் மலம் அள்ளுவதுமான பணிகளில் மனிதர்களே ஈடுபடும் நிலைக்கு மாற்று வழிமுறைகளைக் கண்டறிந்து உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இம் மாநாடு வலியுறுத்துகிறது.

12
சென்னை உயர்நீதி மன்றத்தைத் தமிழ்நாடு உயர்நீதி மன்றம் என மாற்றுவதோடு, தமிழ்நாட்டிற்கான உச்ச நீதிமன்றக் கிளை தமிழ்நாட்டிலேயே அமைந்திட வேண்டுமான வகையில் அமைப்பை ஏற்படுத்தவும், தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தில் தமிழே வழக்காடு மொழியாகிறபடியான அமைப்பு முறையைத் தமிழக அரசும், மக்களும், கட்சிகளும், இயக்கங்களும் முன்னின்று போராடி மாற்ற வேண்டுமென இம் மாநாடு வலியறுத்துகிறது.

13
ஒரே நாடு, ஒரேமக்கள், ஒரே சட்டம், ஒற்றைப் பண்பாடு, ஒரே கல்வி என ஒற்றை அடையாளம் என்கிற வகையில் பார்ப்பனிய அதிகார வெறிகொண்டு இயங்குகிற இந்திய அரசு, இந்தியாவிற்குள் அடக்கப்பட்டுள்ள பல்வேறு மொழித்தேசங்களின் வரலாற்றையும், பண்பாட்டையும், அடையாளங்களையும் மறுக்கிறது. இந்நிலையைக் கண்டிப்பாக மறுப்பதுடன், அந்தந்த மாநில மக்கள் தங்களின் தேசிய இன அடையாளங்களை உரிமையோடு பதிந்து கொள்ளவும், பாதுகாத்துக்  கொள்ளவும் ஆவன செய்ய வேண்டுமென இம் மாநாடு வலியுறுத்துகிறது.

14
மாநில உரிமைகளை நசுக்குவதற்காகவே ஆங்கிலேயர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஆளுநர் என்கிற அதிகார வடிவம் இன்றும் தொடர்ந்து கொண்டு மொழித் தேசங்களான மாநிலங்களை அடக்கி ஆள்கிற நடைமுறையை இக்கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே ஆளுநர் என்போர் மாநிலங்களுக்குத் தேவையில்லை என இம் மாநாடு தீர்மானிக்கிறது..அப்படி ஆளுநரே தேவையில்லை எனவும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும் எனவும் இம்மாநாடு தமிழ்நாட்டு அரசை வலியுறுத்துகிறது.

15
காவல்நிலையங்களில் அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.. காவல் நிலையக் கொலைகள் நடந்து வருகின்றன.. இவற்றைக் கட்டுப்படுத்தியாக வேண்டும்.. காவல்நிலையங்களில் கண்காணிப்புப் படக்கருவி (கேமரா) வைக்க வேண்டும்.. என்பதோடு, மக்கள் சமூக நலம் சார்ந்த உணர்வுடன் செயல்படுகின்ற இயக்கத்தவர்களைக் குற்றவாளிகள் போல் நடத்துவதும், அரம்பர்( ரவுடி) பட்டியலில் சேர்ப்பதுமான நடவடிக்கைகளைக் காவல் துறை மாற்றிக் கொள்ள வேண்டும் என இம் மாநாடு வலியுறுத்துகிறது..இந்தியப் புலனாய்வுத் துறையும்( சிபிஐ),  தேசியப் புலனாய்வு முகமை( என் ஐ ஏ) என்கிற அமைப்புகள் தமிழ்நாட்டு அரசின் இசைவில்லாமல் நுழையக் கூடாது என்றும், போராட்ட, ஆர்ப்பாட்ட, அரங்கக்கூட்ட உரிமைகள் அண்மையில் தடுக்கப்படுவதையும் இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது..

16
நீர்நிலைகளில் கட்டடங்கள் கட்டக்கூடாது என்பது சரியானதே ஆயினும் அதைக் காரணமாகக் காட்டி ஐம்பது ஆண்டுகள், நூற்றாண்டுகள் பழமையில் உரிமையுள்ளவர்களின் இடங்களைத் தகர்ப்பது மிகவும் கொடுமையான செயல்கள்.. இவற்றை மக்களுக்கு  இழப்பு இல்லாதபடி அரசு ஒழுங்கு செய்து  செயல்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது..

17
(செயல் தீர்மானம்)
நெய்வேலி நிலக்கரி, நரிமணம் கன்னெய் (பெட்ரோல்),சேலம் இரும்பு
உள்ளிட்ட தமிழ்நாட்டுக் கனிமவளங்கள், கடல் வளங்கள் எல்லாம் தமிழ்நாட்டிற்கே சொந்தமான நிலையில் தமிழ்நாட்டுக் கனிமவளங்களை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்துச் சூறையாடிக் கொண்டு செல்லும் இந்திய அரசின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்..அந்தத் துறைகளின் அனைத்து அதிகாரங்களும் தமிழ்நாட்டு அரசிடமே இருத்தல் வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது..  பிற மாநிலங்களில் எடுக்கப்பட்டுவரும் கனிம வளங்களுக்குக் கொடுக்கப்பட்டுவரும் மதிப்புத்தொகை ( ராயல்டி) போல் நெய்வேலி நிலக்கரித்துறையிலிருந்து  1956 முதல் எடுத்துச் செல்லப்பட்டுள்ள மொத்த நிலக்கரிக்கும் தமிழ்நாடு அரசிடம்  15 விழுக்காடு மதிப்புத் தொகை (ராயல்டி)யை இந்திய அரசு கொடுத்தாக வேண்டும் என்றும், நெய்வேலி நிலக்கரிக்கு மட்டுமன்றி,  நரிமணம் கன்னெய் (பெட்ரோல்)  நிறுவனம், சேலம் இரும்பாலை நிறுவனங்களுக்கும் மதிப்புத்தொகையை இந்திய அரசு தந்தாக வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.. அதை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாட்டு மக்களைத் திரட்டி மிகப்பெரும் தொடர் போராட்டங்களைப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு செய்யும் என இம்மாநாடு அறிவிக்கிறது..

18
(செயல் தீர்மானம்)
இந்திய அரசின் அடக்குமுறைச் சட்டங்களால் 2018 இல்  சிறையிலடைக்கப்பட்டுள்ள  பீமா கோரேகான் வழக்கின் ஆனந்த் டெல்டும்ப்டே, கௌதம் நவ்லகா,  வரவர ராவ், சுதா பரத்வாஜ், வெர்னோன் கன்சால்வஸ் உள்ளிட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது..
தமிழ்நாட்டில் எழுவர் சிறைப்படுத்தத்தில் அண்மையில் விடுதலை செய்யப்பெற்ற பேரறிவாளன் விடுதலைக்குத் தமிழ்நாடு அரசு எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு மகிழ்ச்சி தெரிவிப்பதோடு அதேபோல் மற்ற ஆறு பேர்கள் விடுதலைக்கும் மற்றும் மிக நீண்ட காலச் சிறையடைப்பில் உள்ள இசுலாமிய சிறையாளர்கள்  உள்ளிட்ட நீண்ட காலச் சிறையாளர்கள் அனைவரின் விடுதலைக்கும் தமிழ்நாடு அரசு முயற்சி எடுத்து விடுதலை செய்ய வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது..
மேற்கண்ட சிறையாளர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்திப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மிகப் பெரும் ஆர்ப்பாட்டம் செய்யும் என இம்மாநாட்டில் அறிவிக்கிறது..

 

You may also like...