கோயில் கொள்ளை எங்கள் உரிமை!

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தில் காளிகோயில் சுடுமண் சிலைகளை ஒரு மர்ம நபர் உடைத்து விட்டார். இதைப் பிடித்துக் கொண்டு வேறு மதத்தினர் மீது பழி போட்டு அரசியல் நடத்தத் துடித்த பா.ஜ.க. வாயில் மண் விழுந்து விட்டது. இடித்தவர் நாதன் என்ற ‘இந்து’ என்று தெரிந்ததும், அண்ணாமலையின் அரசியல் ஆட்டம் கண்டு விட்டது. யு.டியூப் சேனல் நடத்தும் பா.ஜ.க.வின் கார்த்திக் கோபிநாத் என்ற புடம்போட்ட ‘ஆன்மீகக் கொழுந்து’ பக்தி உணர்ச்சி பொங்கி எழுந்ததால் தானே நிதி திரட்டி, சிலை புனரமைப்பு செய்யப் போவதாக அறிவித்து பல இலட்சம் நிதியையும் ‘கோபிநாத் கேர்’ நிதிக்கு திரட்டத் தொடங்கினார். அறநிலையத் துறை உடைக்கப்பட்ட சிலைகளை சீர் செய்யத் தொடங்கிய பிறகு அரசுத் துறையின் பெயரில் பணம் வசூல் செய்வது பக்கா மோசடி. அதனால் இப்போது ‘ஆன்மீகம்’ கைது செய்யப்பட்டவுடன் ‘நானும் ரவுடிடா’ அரசியலைத்  தொடங்கியுள்ளார் பா.ஜ.க. பேர்வழி அண்ணாமலை கைதைக் கண்டித்து கம்பு சுத்துகிறார். இனி பாலம் கட்டுவது, ரோடு போடுவது போன்ற அரசு வேலைகளுக்குக்கூட பா.ஜ.க.வினர் மக்களிடம் போய் வசூல்  கொள்ளை நடத்தினாலும் ஆச்சரியமில்லை. கேட்டால் எங்கள் இந்து நாட்டில் நாங்கள் கொள்ளை அடிக்க உரிமையில்லையா? எங்கள் இந்துக் கோயிலில் நாங்கள் வாரிச் சுருட்ட தடையா? அதோ, அங்கே சாலையில் ஓரமாக நடந்து போகும் இஸ்லாமியரைக் கைது செய்வாயா? தேவாலயத்துக்குப் போகும் கிறிஸ்துவர் மீது கை வைக்க துணிவு உண்டா? என்று வீரம் பேசக் கிளம்பி விடுவார்கள்.

இதேபோல் தில்லை நடராசர் கோயிலுக்குச் சொந்தம் கொண்டாடும் தீட்சதர்கள், கோயில் வரவு செலவு கணக்குகளை ஒழுங்காக வைத்திருக்கிறார்களா என்று ஆராய அறநிலையத் துறை ஒரு குழுவைப் போட்டிருக்கிறது. சும்மா சொல்லக் கூடாது; அமைச்சர் சேகர் பாபு வைக்க வேண்டிய இடத்தில் செம்மையாக வைக்கிறார், ஆப்பு!

‘இது நடராசனுக்கே அடுக்காது; எங்களிடம் கணக்கு வழக்கு கேட்கக் கூடாது; தீட்சதர்களாக நாங்கள் சிவபெருமானோடு வானுலகத்திலிருந்து வந்த பூதேவர்கள்; தின்று கொழுக்க வேண்டிய எங்கள் உரிமை. வாரிச் சுருட்ட இறைவன் எங்களுக்கு பட்டயம் எழுதிக் கொடுத்திருக்கிறார். இதோ, உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பார்!” என்று ‘திருத்தாண்டவம்’ ஆடுகிறார்கள்.

இந்த சுருட்டலும் ஊழலும் பல நூற்றாண்டு பாரம்பர்யம். இதில் கை வைக்க தி.மு.க.வுக்கு மட்டுமல்ல; அந்த ஆண்டவனுக்கே உரிமை கிடையாது. மு.க. ஸ்டாலின் முதலில் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் திருட்டைத் தடுக்காதே; கொள்ளை அடிப்பதை முடக்காதே என்று மக்களைத் திரட்டி முற்றுகையிடுவோம். திருவாரூரைத் தொடர்ந்து சிதம்பரம் மாடல் போராட்டம் நடக்கும்” என்று அண்ணாமலை கூவினாலும் ஆச்சரியமில்லை.

அண்ணே; அண்ணாமலை அண்ணே; உங்க ‘தலைமைப் புரட்சி’ புல்லரிக்குதுண்ணே…

– கோடங்குடி மாரிமுத்து

 

பெரியார் முழக்கம் 02062022 இதழ்

You may also like...